செய்தி கேட்டு ஹாஸ்பிடலுக்கு ஓடினேன்..
ஜெனரல் வார்ட் கட்டிலில் சோர்வாகப் படுத்திருந்தான் மாசிலாமணி.. அருகில் கவலையான முகத்துடன் அவன் மனைவி..
என்னைப் பார்த்ததும் கைகளைப் பற்றிக் கொண்டு அழ ஆரம்பித்து விட்டான்..
“சார்.. சார்..”
அதற்கு மேல் பேச்சு வரவில்லை..
ஆசுவாசப் படுத்த முயன்றேன்..
“அழாதீங்க.. கொஞ்சம் கூட அலட்டிக்கக் கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்காரு”
அவன் மனைவி கலவரத்துடன் கெஞ்சினாள்..
மாசிலாமணியைப் பார்த்தேன்..
காலை ஒன்பது மணிக்கே எல்லாருக்கும் முன்னதாக அலுவலகம் வந்து எல்லா மேஜைகளையும் சுத்தப் படுத்தி, தண்ணீர் பிடித்து வைத்து, மற்றவர்கள் வந்ததும் அவர்கள் இடும் கட்டளைகளை உடனே செய்து முடித்து, கூடவே பேங்க் சென்று செக் டெபாஸிட் செய்து, மாலையில் பொது மேலாளர் கிளம்பும் வரை முகம் சுளிக்காமல் காத்திருந்து அவர் கிளம்பிய பிறகு அலுவலகத்தைப் பூட்டி.. இப்படி பம்பரமாகச் சுழலும் மாசிலாமணி இப்போது ஹாஸ்பிடல் கட்டிலில் துவண்டு கிடக்கிறான்..
“ரெண்டு சிறுநீரகமும் வேலை செய்யலையாம்.. டாக்டர் சொல்லிட்டாரு.. உடனே ஆபரேஷன் பண்ணி மாற்று சிறுநீரகம் பொருத்தலைன்னா..”
முடிக்க முடியாமல் மாசிலாமணியின் மனைவியின் குரல் கம்மி தாரை தாரையாகக் கண்ணீர்..
அந்தத் தருணம் என்னை என்னவோ செய்தது.. மனதில் பாரம் ஏறியது போலிருந்தது..
”கவலைப்படாதேம்மா.. மாசிக்கு ஒண்ணும் ஆகாது.. ஆபரேஷன் முடிஞ்சு நல்லபடியா எழுந்து வந்துருவான்”
“எப்படிங்க.. எப்படி ஆபரேஷன் பண்ண முடியும்.. லட்சக்கணக்குல செலவாகுமாமே.. அவ்வளவு பணத்துக்கு நான் எங்க போவேன்?”
இதைக் கேட்டு சற்று யோசித்தேன்.. பிறகு ஒரு தீர்மானத்துடன்..
“ஆபீஸ்ல நாங்க ஏற்பாடு பண்ணறோம்.. டாக்டரை டோனர் பார்க்கச் சொல்லு.. நான் நல்ல செய்தியோட வரேன்”
மறுநாள் அலுவலகம் சென்றவுடன் பொது மேலாளரை சந்தித்து விவரம் சொன்னேன்..
“சார்.. ஆபீஸ்ல எவ்வளவு பணம் ரிலீஸ் பண்ண முடியும்?”
பொது மேலாளர் யொசித்து..
“நான் ரெகமெண்ட் பண்ணி ஒரு லட்சம் வரை வாங்கித் தரேன்.. அதைத் தவிற என்னால முடிஞ்ச அளவுக்கு லோன் சேன்க்ஷன் பண்ணறேன்.. மே பி.. இன்னொரு அம்பதாயிரம்”
“போறாதே..”
“அதுக்கு மேல முடியாது.. கம்பெனி ரூல்ஸ்”
“ம்ம்..”
“என்ன பண்ணலாம்?”
யோசித்தோம்.. தர்மசங்கடமான மௌனம்..
சட்டென்று நான்..
“ஆபீஸ்ல எல்லார் கிட்டயும் கலெக்ட் பண்ணலாம் சார்.. மாசிக்குன்னு சொன்னா யாரும் தயங்க மாட்டாங்க.. உடனே கொடுப்பாங்க”
“ஓக்கே.. கோ அஹட்.. அந்த லிஸ்டுல முதல்ல என் பேரை எழுதிக்குங்க.. நான் இருபத்தஞ்சாயிரம் ரூபாய் கொடுக்கறேன்”
பொது மேலாளருக்கு நன்றி தெரிவித்து விட்டு வெளியே வந்தேன்..
உடனே மாசிலாமணியின் நிலமையையும் தேவையையும் குறிப்பிட்டு இயன்ற அளவு பண உதவி செய்யக் கோரி அலுவலகத்தில் எல்லோருக்கும் சுற்றரிக்கை அனுப்பினேன்..
நான் நினைத்தபடியே மாசிலாமணிக்கு என்றவுடன் மேனேஜர், டெபுட்டி மேனேஜர், கணக்கதிகாரி, அக்கௌண்டண்ட், குமாஸ்தாக்கள்.. இவ்வளவு ஏன் மீதி இருந்த இரண்டு பியூன்கள் கூட தங்களால் இயன்ற அளவு தயங்காமல் பணம் கொடுத்தனர்..
மாசிலாமணிக்கென்றால் யார் தான் கொடுக்க மாட்டார்கள்?
அந்த பண்பு கலந்த மரியாதை.. அனாவசிய வம்பு தும்புகளுக்குப் போகாத பக்குவம்.. எதையும் பாஸிடிவாக யோசிக்கும் குணம், நடக்காததையும் சாமர்த்தியமாகப் பேசி நடத்தி முடிக்கும் லாவகம்..
மொத்தத்தில் மாசிலாமணி எங்கள் அலுவலகத்தின் மாபெறும் சொத்து.. அவனை இழக்க யாரும் தயாராக இல்லை என்பது எல்லோரும் தயங்காமல் செய்திருக்கும் பண உதவியில் நிரூபணமாகியது..
நாங்கள் நினைத்ததை விட அதிகமாகவே வசூலாகியிருந்தது.. வசூல் பட்டியலை ஒரு முறை பார்வையிட்டேன்..
அதில் இன்வெண்டரி பிரிவு சேகரின் பெயர் மட்டும் இருக்கவில்லை.. ஒரு வேளை அவன் நான் அனுப்பிய சுற்றரிக்கையைப் பார்க்கவில்லையா.. அல்லது அப்புறம் பணம் கொடுக்கலாம் என்று நினைத்து மறந்து விட்டானா?
எதற்கும் கேட்டுவிடுவது நல்லது..
சேகர் மும்முரமாக கம்ப்யூட்டரில் ஸ்டாக் லிஸ்ட் பார்த்துக் கொண்டிருந்தான்..
“சேகர்.. மாசிலாமணியோட கண்டிஷன் தெரியும்ல?”
“ம்ம்.. தெரியும்.. பாவம்பா”
“அவனுக்கு கிட்னி டிரான்ஸ்பிளாண்ட் ஆபரேஷனுக்கு பண உதவி பண்ணச் சொல்லி சர்குலர் அனுப்பியிருந்தேனே.. பார்த்தியா?”
மறுபடியும் மானிட்டரில் பார்வையை செலுத்தி..
“ம்ம்…”
“லிஸ்டுல உன் பேர் இல்லையே”
சேகர் பதில் சொல்லாமல் மானிட்டரை வெரித்தான்..
“சேகர்.. உங்கிட்டத் தான் கேட்கறேன்.. லிஸ்டுல உன் பேர் இல்லையே”
சட்டென்று திரும்பி கொஞ்சம் கடுப்பாக..
“என்னால முடியாதுப்பா”
எனக்கு அதிர்ச்சி..
“என்னப்பா சொல்றே? கல்யாணத்துக்கு மொய் எழுத உங்கிட்டப் பணம் கேட்கலை.. ஒரு உயிரைக் காப்பாத்த.. நம்ம மாசியைக் காப்பாத்த.. ஆபீஸ்ல எல்லாரும் கொடுத்திருக்காங்க”
“தெரியும்.. அதே சமயத்துல என் நிலமையும் உனக்கு நல்லாவேத் தெரியும்.. எங்கப்பா என் பொறுப்புல விட்டுட்டுப் போன மூணு தங்கைகளுக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுத்திட்டு அந்த கடன் சுமைகளோட பிடில மூச்சு திணறிட்டிருக்கேன்”
”சரிப்பா.. யாருக்குத் தான் பணப் பிரச்சனை இல்லை? எனக்குக் கூடத் தான் ஏகப் பட்ட கமிட்மெண்ஸ்.. அதுக்காக ஒரு நூறு ரூபா கூடவா கொடுக்கக் கூடாது?”
“என்னால முடியாது”
“டேய்.. வெறும் நூறு ரூபாய்”
“அந்த நூறு ரூபா இல்லைன்னா பத்து நாளைக்கு நான் ஆபீசுக்கு நடந்து வரணும்.. இதப் பாரு.. இதுக்கு மேல என்னை வற்புருத்தாதே.. என்னால பணம் கொடுக்க முடியாது”
“சே.. நீயெல்லாம் ஒரு மனுஷனே இல்லை.. மிருகத்தை விட கேவலமானவன்.. மிருகங்களுக்குக் கூட மத்த உயிர் மேல பரிவு.. பாசம் உண்டு.. ஆனா நீ.. சே போடா..”
சேகரைப் பார்க்கவே எனக்கு வெறுப்பாக இருந்தது..
உடனே என் சீட்டுக்குப் போனேன்..
இன்னும் படபடப்பு அடங்கவில்லை..
“சே.. என்ன மனுஷன்.. கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாம.. மாசியை அந்த ஸ்டாக்கைப் பாரு.. இந்த ஸ்டாக்கைப் பாருன்னு எப்படியெல்லாம் வேலை வாங்குவான்.. ஆனா இப்ப அந்த மாசிக்காக நூறு ரூபாய் கூடக் கொடுக்கத் தாயாரா இல்லை.. எப்பப் பாரு தன்னைப் பத்தியே யோசிச்சிண்டு.. எப்பவும் சுய பச்சாதாபம்.. சே.. இவனை மாதிரி ஆளுங்க இருக்கறதே வேஸ்ட்”
மனதுக்குள் புலம்பினேன்..
சேகர் உதவாவிட்டாலும் பொது மேலாளரின் சிபாரிசின் பேரில் அரிமா சங்கம் வேற ஓரளவு உதவ முன் வந்திருந்தார்கள்..
மாசிலாமணியிடமும் அவன் மனைவியிடமும் விஷயத்தைச் சொன்னதும் ரொம்பவே உணர்ச்சி வசப்பட்டார்கள்..
“சார்.. உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை.. நீங்க தெய்வம்”
காலில் விழப்போனவளைத் தடுத்து..
“என்னம்மா நீ.. என் காலுல போய் விழுறே?.. நான் எதுவும் பண்ணலை.. எல்லாம் மாசியோட நல்ல மனசுக்கு தானா நடந்திருக்கு.. எனக்கு ரஜினிகாந்த் சொன்ன டைலாக் தான் நினைவுக்கு வருது.. கடவுள் நல்லவங்களை சோதிப்பான்.. ஆனா கை விட மாட்டான்.. இப்ப மாசி கேஸ்ல அது எவ்வளவு உண்மையா இருக்கு பாரு”
இதற்கு நடுவில் நர்ஸ் வந்து மாசிக்கு இஞ்சக்ஷன் போட்டுக் கொண்டே..
“சீக்கிரம் ஆபரேஷன் பண்றது நல்லதுன்னு டாக்டர் பேசிட்டிருந்தாரு.. ஏற்பாடு பண்ணிட்டீங்களா?
கேள்வி கேட்டு பதிலை வாங்குவதற்குள் “சிஸ்டர்” என்று அபயக் குரல் ஒலிக்கவே அங்கிருந்து நகர்ந்தாள்..
“டாக்டர் எப்பம்மா வருவார்?”
மாசியின் மனைவியிடம் கேட்டேன்..
“வந்திட்டுப் போயிட்டாரு.. இனிமே நாளைக்குத் தான் வருவாரு..”
“அப்படியா? டாக்டர் வந்தா உடனே ஆபரேஷனுக்கு ஏற்பாடு பண்ணச் சொல்லு.. நாளைக்கே வந்து பணம் கட்டிடறேன்.. ஆனா உடனே டோனர் கிடக்கணுமே.. அதான் கவலையா இருக்கு”
இதைக் கேட்டு மாசிலாமணி முடியாமல் பேசினான்..
“எனக்கு மாற்று சிறுநீரகம் பொருத்தணம்னு சொன்ன அன்னிக்கே டோனர் கிடைச்சாச்சு”
எனக்கு ஆச்சர்யம்..
“அப்படியா? வெரி குட்.. வெரி குட்.. ஆமா யாருப்பா டோனர்?”
“நம்ம சேகர் சார் தான்”
எனக்கு அதிர்ச்சி..
“என்னது சேகரா?.. நம்ம சேகரா?.. என்னப்பா சொல்றே?”
மாசிலாமணிக்கு தொடர்ந்து பேசமுடியாமல் போகவே அவன் மனைவி தொடர்ந்தாள்..
“ஆமா சார்.. இவருக்கு உடம்பு முடியலைன்னு இங்க அட்மிட் ஆன உடனே சேகர் சார் தான் முதல்ல இவரைப் பார்க்க வந்தார்.. அப்பத் தான் இவருக்கு மாற்று சிறுநீரக ஆபரேசன் பண்ணணும்னு டாக்டர் வந்து சொன்னார்.. உடனே டோனர் கிடைக்கணும்னு வேற சொன்னாரா.. சேகர் சார் கொஞ்சம் கூட யோசிக்காம தன்னோட ஒரு கிட்னியைக் கொடுக்கறதா டாக்டர் கிட்டச் சொன்னார்.. டாக்டரும் ஏதோ டெஸ்ட் பண்ணிப் பார்த்திட்டு அவரு சிறுநீரகம் இவருக்கு பொருந்தும்னு சொல்லிட்டார்”
“அப்படியா?”
ஆசுவாசப் படுத்திக் கொண்ட மாசிலாமணி மீண்டும் ஆரம்பித்தான்..
“ஆமா சார்.. நான் நன்றி சொன்னப்ப சேகர் சார் என்ன சொன்னார் தெரியுமா? மாசி.. என்னால பணம் காசு கொடுத்து உதவ முடியாது.. ஏதோ.. என்னாலான சிறு உதவி.. அப்படின்னாரு.. நான் ஆடிப் போயிட்டேன்.. இவ்வளவுக்கும் கண்ணாலம் கூட ஆவாதவர்.. எப்பேர் பட்ட மனசு சார் அவருக்கு?”
சொல்லும்போதே மாசிலாமணியின் கண்கள் பனித்து விட்டன..
மறுநாள் அலுவலகத்தில் சேகரின் நேரடிப் பார்வையை சந்திக்க முடியாமல் தலை குனிந்தேன்..
குற்ற உணர்ச்சி மனதில் விஸ்வரூபம் எடுத்து நின்றது..
சூப்பரான உண்மைக் கதை!
LikeLike