சில சமயங்களில் மட்டுமே டாக்டர் இவ்வாறு செய்வதுண்டு. நோயாளியைப் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே என்னை அழைத்துக் குறிப்பிட்ட நபரைப் பார்க்கச் சொல்வதுண்டு. அன்றும் அங்கு உட்கார்ந்திருந்த இளம் பெண்ணை காண்பித்து, “இவ மித்ரா, உன்னைப் பார்க்கச் சொல்லி இருக்கிறேன். நீ ஸைக்காட்ரிக் ஸோஷியல் வர்க்கர் என்றதையும் தான். இரண்டு வருஷமா. ஆன்ட்டி கன்வல்ஸன்டஸ் (Anticonvulsants) எடுத்துண்டு இருக்கா.” மித்ரா பக்கத்தில் இருப்பவரைக் காண்பித்து “மித்ராவின் அம்மா, வசந்தா” என்றார். அம்மா அலங்காரத்துடன் பளிச்சென்று இருந்தாள். மித்ரா மிகச் சாதாரணமாக! நாளைக் குறித்துக் கொடுத்தேன்.
குறித்த நேரத்திற்கு மித்ராவுடன் அலங்காரமாக வசந்தாவும் வந்தாள். முதல் முறை என்பதாலும் மித்ராவின் இன்னல்கள் என்னவென்று தெரியாததாலும், குடும்பத்தினரையும் பார்க்க வேண்டும் என்பதாலும் அனுமதித்தேன்.
வசந்தா துவங்கினாள். முப்பத்து நான்கு வயது இல்லத்தரசி, டப்பர்வேர் பொருட்கள் விற்பனை. மித்ராவை நன்றாகப் பார்த்துக் கொள்வதாகவும், சில மாதங்களாக ஆன்ட்டி கண்வல்ஸண்ட்ஸை மித்ரா நேரத்திற்கு எடுத்துக் கொள்வதில்லை என்றும் கூறினாள். அதனால் போன மாதம் மறுபடியும் ஒரு முறை வலிப்பு வந்தது, அப்படி வரும்போது மித்ரா ஒரே இடத்தைப் பார்த்தபடி இருப்பாள் என்றாள்.
மித்ராவை அருவருப்பாகப் பார்த்து, டாக்டர் வலிப்பைப் பற்றித் தெளிவுபடுத்தியதை, தனக்குப் புரிந்ததை விவரித்தாள். மூளை நரம்புகளின் இடையே தகவல் பரிமாற்றம் செய்வதற்கு இயல்பாகவே உடலில் மிகச் சிறிய அளவில் மின்சாரம் உற்பத்தியாகும். அபரிமிதமாக உற்பத்தியானால் மின் புயல் போலாகி, உறுப்புகளின் இயக்கம் மாறுபட்டு, வலிப்பாகச் சில நிமிடங்களுக்குத் தோன்றும். மித்ரா கல்லூரியில் சேரும் போது இது ஆரம்பித்தது என்றாள். தானும், மித்ராவின் அப்பா ரகுவும், டாக்டர் சொன்னபடிச் செய்வதாகவும் சொன்னாள். மித்ராவை எந்த வேலையையும் செய்ய விடுவதில்லை என்றாள். இருவரின் உடல்மொழி உறவில் பாசம் இல்லாததைக் காட்டியது.
ஒரு நிமிட இடைவேளை கொடுத்து, வசந்தாவிடம் மித்ராவைத் தனியாகப் பார்க்க வேண்டும் என எடுத்துச் சொல்லி வெளியே உட்காரப் பரிந்துரைத்தேன்.
அம்மா வெளியேறியதும், கண்கள் தளும்பி இருந்த மித்ராவிடம் அவள் பகிர்வதைத் தேவையின்றி யாரிடமும் சொல்ல மாட்டேன் என்ற எங்கள் தொழில் தர்மத்தை விளக்கினேன். இன்னல்களின் விவரிப்பைக் கேட்கும் போது, மூன்றாம் மனிதரிடம் பகிரப் பலருக்கு சங்கோஜமாக இருக்கும். மித்ராவைத் தன் இன்னல்களை முழுமையாகப் பகிரப் பரிந்துரைத்தேன்.
சில நிமிடங்களுக்குப் பின், டாக்டர் வலிப்பு குணமாகும் வரை கூறிய எச்சரிக்கைகள்: நீச்சல், வண்டி ஓட்டுவது, நெருப்பு அருகே போகக்கூடாது என்பதையெல்லாம் கடைப்பிடிக்கிறேன் என்றாள். ஆரம்பத்திலிருந்து ஆன்ட்டி கண்வல்ஸண்ட்ஸ் சாப்பிடுவது தன் பொறுப்பாகத் தான் இருந்தது. ஆறு மாதமாக, அம்மா அதைத் தன் பொறுப்பாக்கினாளாம்.
மாத்திரை விவரங்களை விரிவாக விளக்கச் சொன்னேன். மாத்திரையைத் தவறாமல் எடுப்பது மிக அவசியம் என மித்ரா அறிந்திருந்தாள். வசந்தா பொறுப்பேற்ற பின் மாத்திரைகள் தவறான நேரத்தில் கொடுக்கப்பட்டது. தாமதமாகிறதே என அம்மாவிடம் சொன்னால் கோபிப்பாளாம். டாக்டரிடமோ மித்ரா மாத்திரை எடுத்துக்கொள்ள மறுப்பதாகச் சொல்லிவிடுவாளாம். டாக்டர் மித்ராவிடம் அப்படிச் செய்யாதே எனச் சொல்வாராம்.
வசந்தாவைப் பார்ப்பது முக்கியமென அவளுடன் ஸெஷன்களைத் தொடங்கினேன். தனக்குக் கல்லூரிப் படிப்பு வராததால் இரண்டாவது ஆண்டிலேயே நிறுத்திக் கொண்டாள். திருமணமாகிவிடும் என எதிர்பார்த்தாள். ஆகவில்லை. வரன்கள் அமையாததால் உறவினர்கள் பேச்சு அதிகரித்தது. முப்பது வயதானது. குழந்தை மித்ராவுடன் இருந்த ரகு இரண்டாம் தாரமாக ஏற்றுக் கொண்டான். தனக்கு வரப் போகிறவன் இப்படி- அப்படி இருக்க வேண்டும் என நினைத்திருந்தபடி ரகு இல்லை. வழுக்கை, கரு நிறம், வசந்தாவின் காதுவரை உயரமுள்ள, அமைதியானவன். வசந்தா ஒப்புக்கொண்டதோ ரகுவின் வசதி, சொத்து, சம்பளம், சேமிப்பு தகவல்களை அறிந்ததும். மனதில் ஏக்கம் இருந்து கொண்டிருந்தது. மித்ராவுடன் பற்று வளராததால் அவளை பாரமாகக் கருதினாள்.
இதை அறிந்திருந்த ரகு மித்ராவை பார்த்துக் கொண்டான். கடந்த எட்டு மாதங்களாக வேலை பொறுப்புகள் அதிகரித்தது. வசந்தாவை டாக்டரிடம் மித்ராவை அழைத்துச் செல்ல விண்ணப்பித்தான்.
டாக்டரிடம் போகும் போதெல்லாம் அம்மா புதுப் புடவை, கூடுதலான அலங்காரத்துடன் வருவதும் தேவையில்லாத சந்தேகங்கள் கேட்பதும் தர்மசங்கடமாக இருந்தது என்றாள் மித்ரா. அப்பாவிடம் சொல்லலாம் என்றால் அவர்கள் உறவு அதுபோல் இல்லை. வீட்டிற்கு வந்ததும் மித்ராவை அறையிலிருந்து “படி”, “படி, டி.வி. பார்க்கக் கூடாது” என்பாளாம் வசந்தா.
மித்ராவுடன் ஸெஷனைத் தொடங்கினேன். மித்ராவிடம் கவிதை கட்டுரை எழுதும், வண்ணங்கள் தீட்டும் திறன்கள் இருந்தன. தன் எண்ணங்களை எழுதிச் சித்தரித்து, வண்ணங்கள் தீட்டுவதைச் செய்ய வேண்டும் என முடிவானது. விளைவு, கல்லூரி ஆண்டு இதழிற்கு எழுதியது பிரசுரமானது! மகிழ்ச்சியில் பொங்கினாள்.
வசந்தாவுடனும் ஸெஷனைத் தொடர்ந்தேன். தன்னைப் பற்றி விவரிக்க மறுபடி மறுபடி டாக்டரைச் சந்திக்க மனம் ஏங்கியது, அவரிடம் ஈர்ப்பு உருவானதை விவரித்தாள். மித்ரா நன்றானால் டாக்டரைப் பார்க்கக் காரணம் இல்லாமல் போய்விடுமோ எனத் தவித்தாள். ரகுவையோ பிடிக்கவில்லை. மற்றொருவனைப் பார்க்க மனம் வில்லங்கமாக யோசித்தது. மாத்திரையைத் தாமதித்தால் டாக்டரைப் பார்க்கலாம்! செய்தாள்.
அச் செயலினால் ஏற்படும் விபரீத பாதிப்பைப் புரிய வைக்கப் பல ஸெஷன்கள் எடுத்தன. கட்டுரைகள், ஆய்வுப் படங்கள் படிக்க, வசந்தா மனம் குறுகுறுத்தது.
தன் மன நிலையை வெளிப்படுத்தினால் டாக்டர் தன் மேல் பரிதாபப் படுவார் என நினைத்தாள். அன்று நான் வருவதற்கு முன்பே வசந்தா வந்து டாக்டரைச் சந்தித்து, மனதில் தோன்றியதை வெளிப்படுத்த, நான் வரும்வரை வெளியே உட்காரச் சொன்னார். டாக்டர் நன்கு அறிந்ததுதான், என்னிடம் சொல்வதைப் பகிர்வதில்லை என்று. வந்ததுமே விவரத்தை அறிந்தேன். வசந்தாவும் ஸெஷனில் பகிர்ந்தாள், டாக்டரைத் தன் பக்கம் இழுக்கவே அலங்காரங்கள் செய்திருந்தும், அவர் மித்ராவை ஆசுவாசப்படுத்திப் பேசியது பொறாமையைத் தூண்டியது.
தன் சுய மரியாதையைத் தவிக்க விடுவது வரும் சந்திப்புகளில் வெளியானது. ஏக்கங்கள், எதிர்பார்ப்புகளைப் பல தரப்பில் ஆராய்ந்தோம். ஐந்து மாதங்களுக்குப் பிறகு ரகுவின் பங்களிப்பு தேவைப்பட அவனிடம் பகிர்ந்தேன்.
ரகு ஆரம்பித்தது வசந்தாவின்மேல் தனக்கு இருக்கும் விருப்பத்தைப் பற்றி. மித்ரா பிறந்த மறுநாளே முதல் மனைவி இவனுடன் வாக்குவாதம் செய்தாள். ஆண் குழந்தைக்கு ஏங்கினாள். ஆண்களிடமிருந்தே பெண்பால்-ஆண்பால் அணு வருவதால் ரகுவால்தான் பெண் பிறந்தது, ஏமாற்றம் என்று இவர்களை விட்டுச் சென்றாள்.
கைக்குழந்தை இருந்ததால் மறுமணத்திற்குப் பெண் கிடைக்காததால் மித்ராவை வெறுத்தான். பல தேடலுக்குப் பின்னரே வசந்தாவின் வரன் வந்தது. சுதந்திரம் வேண்டும், தான் இளம் வயதானவள், வெளியே செல்லும் போதெல்லாம் மித்ராவை அழைத்துச் செல்லக் கூடாது என்று வசந்தா இட்ட நிபந்தனைகளை எல்லாம் மித்ராவைப் பிடிக்காததால் ரகு ஒப்புக்கொண்டான். வெளிப்படையாக, மித்ராவின் கல்யாணத்திற்குப் பிறகு அவள் வீட்டிற்கு வரத் தேவை இருக்காது என ரகு கருதினான்.
அவசரமாக வெளிநாட்டில் வேலை என்று ரகு சென்றான்.
வசந்தா-மித்ரா உறவில் ரணங்களால் விரிசல் இருந்தது! மித்ராவால் யாரிடமும் சொல்ல முடியவில்லை.
ஸெஷன்களில் இவற்றுக்குத் தீர்வு காண, மாத்திரைப் பொறுப்பாளி மித்ரா மட்டுமே என்று வலியுறுத்த, மாற்றங்களைக் காண முடிந்தது. ஆறு மாதங்களாக மித்ரா வலிப்பு வராமல் இருந்தாள்.
இந்த சூழ்நிலையில் மித்ரா தனது கல்லூரியில் மாணவர்களைத் தேர்ந்து எடுக்கும் நிறுவனங்கள் வருவதாகச் சொன்னாள். ஒரு நாள் மாலை என்னைச் சந்திக்க நேரம் குறித்துக் கொண்டவள், பிறகு. வர இயலவில்லை எனத் தகவல் சொன்னாள். இவ்வாறு செய்தது முதல் முறை.
அவள் வராததற்குக் காரணம், கல்லூரியில் நடந்த ப்ளேஸ்மென்டிற்காக நிர்வாகத்திலிருந்து வந்தவர்கள் இன்னொருவர் வரக் காத்திருந்ததில் நேரமாகிவிட்டது.
மறுநாள் மித்ரா மூவருடன் வந்தாள். டாக்டரிடம் பேசிவிட்டு, என்னையும் சந்திக்க வந்தார்கள்.
வந்தவர்களை மித்ரா அறிமுகம் செய்தாள், கிருஷ்ணா, அவனுடைய தாயார் ரமா, மற்றும் தந்தை ராகவ் என. இவளைப் பெண் பார்க்க வந்தவர்களாம். மித்ராவைப் பிடித்து விட்டதாம்.
அன்று கல்லூரியில் நடந்ததும் தெளிவாயிற்று. மாணவர்களைத் தேர்வு செய்ய வந்தவர்களின் டீம் லீட் கிருஷ்ணா! வந்த பிறகே மித்ரா அங்கு இருப்பதை அறிந்தான். தான் அவளுடைய நேர்காணலில் இருப்பது நெறிமுறை ஆகுமா என மேல் அதிகாரிகளிடம் பேசினான். கிருஷ்ணா மித்ராவைப் பெண் பார்க்கப் போவதின் விவரம் அறிந்ததும் வேறொருவரை அனுப்பி வைத்தார்கள்.
நேர்காணலில் மித்ரா வெளிப்படையாக, நேர்மையாக தனக்கு வலிப்பு இருப்பதாகவும், மாத்திரை தவறாமல் சாப்பிட்டுவதால் எந்த பாதிப்பும் இல்லை என்றும் விளக்கினாள். எடுத்திருந்த மதிப்பெண்கள், ஓ.ஜீ.பீ.ஏ, டாக்டரின் சான்றிதழ் பார்த்துப் பாராட்டினார்கள்.
பெண் பார்க்க வருவதை அவர்கள் வர அரைமணி நேரத்திற்கு முன்பு தான் வசந்தா மித்ராவிடம் சொன்னாள். வந்தவர்களிடம் மித்ரா வலிப்பு பற்றித் தானே பகிர்ந்து கொண்டாள். மறுநாள் டாக்டரையும் என்னையும் சந்திக்கப் பரிந்துரைத்தாள்.
சந்தேகங்களைத் தெளிவு செய்ய டாக்டர் இல்லற வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படாது என்று உறுதியாகக் கூறினார். வேலை, பொறுப்பு எடுப்பதைத் தெளிவுபடுத்த, திருப்தி ஆனார்கள். வெளியேறும் போது ரமா மித்ராவின் கரத்தை இறுக்கிப் பிடித்துக்கொண்டு போனது இதமான உறவைக் காட்டியது!
மறுநாள், மித்ராவுடன் ராகவ், ரமா கிருஷ்ணா என்னைப் பார்க்க வந்தார்கள். முன்பு போல ரமா கையில் மித்ராவின் கரம்! திருமணத்தை எந்த அளவிற்கு முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் வைப்பதாகச் சொன்னார்கள். இனியும் மித்ரா இந்த நச்சு சூழலில் இருப்பதை அவர்கள் விருப்பப் படவில்லை. இந்தத் தருணத்தில், ரமா, மித்ரா அனுமதி கேட்டு உள்ளே வந்தார்கள்.
கல்யாணத்திற்காக ரகு வெளிநாட்டிலிருந்து வந்திருப்பதாகவும், மீண்டும் திரும்புவதாகவும் மித்ரா கூறினாள். ஆக, வசந்தா ரகு மேற்கொண்டு ஸெஷன்களுக்கு வருவது சாத்தியம் இல்லை. மித்ராவைச் சம்பந்தப்பட்டவை, எதற்காக முயல?
மித்ரா உறவில், சூழலில் இன்னல்களை அனுபவித்துக் கொண்டிருக்க, இந்த மூவருமே வரப்பிரசாதமே! எடுத்த எடுப்பிலேயே அக்கறை ஆசையாக இருப்பதினால் பல ரணங்களுக்கு மருந்தாகிவிடும் என நம்பினேன்.
தலைத் தீபாவளி புகுந்த வீட்டில் கொண்டாடி குடும்பத்தினருடன் வந்தாள் மித்ரா. நினைத்தது போல் அவ்வாறே வாழ்க்கை பூத்துக்குலுங்கியது! டாக்டரிடம் தனது நிலையை ரெவ்யூ செய்ய வந்திருந்தாள். இப்போதெல்லாம் வலிப்பு வருவதில்லை. பரிசோதனைகள் சரியாக இருந்தது. மாத்திரையைக் குறைக்கும் கட்டம் வந்துவிட்டதாக டாக்டர் சொன்னார். குடும்பமே மகிழ்ச்சி அடைந்தது!