ஒரு சென்டிமீட்டர் சீனமொழியில் -பிஷுமின் – தமிழில் : தி.இரா.மீனா

(சென்ற இதழ் தொடர்ச்சி )

One Centimeter by Bi Shumin - Summary and Details in Hindi - YouTube

“இல்லை. அவன்அந்த உயரம் இல்லை” அவள் இன்னமும் சிரித்தபடி இருந்தாள். அங்கிருந்தவர்கள் அந்தத் தாயைச் சந்தேகத்தோடு பார்த்தார்கள்.
“அவன் அந்தக் கோட்டைக் கடந்து விட்டான். நான் நன்றாகப் பார்த்தேன்” உறுதியாகச் சொல்லி சுவரில் இருந்த சிவப்புக் கோட்டை காட்டினான். பெரிய மழைக்குப் பிறகு மண்புழு சாலையைக் கடக்கும் போது இருப்பது போல அது சிறிய கோடாக இருந்தது.

“அம்மா!ஏன் இவ்வளவு நேரம்? உங்களைத் தொலைத்து விட்டேனோ என்று நினைத்தேன்.” அன்பாகச் சொன்னபடி தாயை நோக்கி ஓடி வந்தான், அவனுடைய மிகப் பிரியமான பொம்மையைப் பார்க்க வந்தது போல
இப்போது சாட்சி இருக்கிறது. உண்மை தெரிந்து விடும்.இளைஞன் லேசாகக் கலங்கினான். அவன் தன் வேலையைச் செய்கிறான்.அவனுக்குத் தான் செய்தது சரி என்றுதான் தோன்றுகிறது.ஆனால் இந்தப் பெண் ரொம்பவும் நம்பிக்கையாக இருக்கிறாளே.

டாவ் அமைதியாக இருந்தாள்.யீக்கு இது மாதிரியான வேடிக்கை பிடிக்கும். இது எப்படி போனாலும் அவனை உற்சாகப்படுத்தும்.

“இங்கே வா” என்று இளைஞன் அழைத்தான். கூட்டம் மூச்சைப் பிடித்துக் கொண்டு நின்றது.

அம்மாவைப் பார்த்தான். அவள் தலை அசைத்தாள்.கூட்டம் கவனிக்க தன் கோர்ட்டைச் சரி செய்தபடி, கனைத்தபடி அவன் இளைஞனை நோக்கிப் போனான். கூட்டம் அவனை ஒரு கதாநாயனைப் போல பார்க்க அவன் புழு அருகே போனான்.

பிறகு.. அந்தப் புழு அவன் காது வரை வந்ததைக் கூட்டம் பார்த்தது.
எப்படி இது சாத்தியமானது?

யீங் அவளுக்கு அருகில் இருந்தான். அவள் கை அவன் தலையில் பலமாக சத்தத்துடன் விழுந்தது..

அவன் அம்மாவை வெறித்தான். அழவில்லை.வலியால் அதிர்ச்சியானான். அதுமாதிரி அவன் அடிக்கப் பட்டதில்லை.

கூட்டம் மூச்சு விட்டது.

“ குழந்தையைத் தலையில் அடித்தது கொஞ்சமும் சரியில்லை.எப்படி ஒரு தாய் அப்படி நடந்து கொள்கிறாள்…இன்னொரு டிக்கெட் வாங்கினால் என்ன?நம் தவறுகளுக்கு குழந்தைகளை அடிப்பது அநாகரிகம் ..” ஒவ்வொருவருக்கும் ஓர் அபிப்ராயம் இருந்தது.

அவளுக்குக் கோபம் வந்தது. யீயை அடிப்பது அவள் நோக்கமல்ல.அவன் தலையைச் சரி செய்யவே நினைத்தாள். அவன் வழுக்கையாக இருந்தால் கூட இந்த சந்தர்ப்பத்தில் அந்தப் புழுவை தாண்டி இருப்பான்.

“ யீ ! விரல்களால் நிற்காதே” கடுமையாகச் சொன்னாள்.

“ இல்லையம்மா..” அழ ஆரம்பித்தான்..உண்மைதான்.அவன் அப்படி நிற்கவில்லை.அந்தப் புழு அவனுடைய இமைகளைத் தழுவவதாக இருந்தது.
இளைஞன் சோம்பல் முறித்தான். அவன் கண்கள் கூர்மையானவை. டிக்கெட் வாங்காமல் ஏமாற்றியவர்களில் சிலரைக் கண்டு பிடித்திருக்கிறான். “ போய் டிக்கெட் வாங்கி வா” கத்தினான். கௌரவம் புழுவால் தகர்க்கப் பட்டுவிட்டது.

“ என் மகன் 110 செ.மீ விடக் குறைந்தவன்.” தனியாக நின்ற போதும் டாவ் உறுதியாகச் சொன்னாள்.

“ காசு கொடுக்காமல் தப்பிக்க விரும்புபவர்கள் எல்லோரும் அப்படித்தான் சொல்வார்கள். இவர்கள் எல்லாம் உன்னையும், என்னையும் நம்புவார்கள் என்று நினைக்கிறாயா? இது எல்லோராலும் அங்கீகரிக்கப் பட்ட அளவு கோல். பிளாட்டினத்தால் உருவாக்கப் பட்ட சர்வதேச அளவு கோல்.பாரீசில் இருக்கிறது. அது உனக்குத் தெரியுமா?”

அவளுக்குத் தெரிந்ததெல்லாம் இரண்டு மீட்டர் எண்பது சென்டிமீட்டர் அவள் ஆடைக்குத் தேவை என்பதுதான். சர்வதேச அளவுகோல் எங்கே இருக்கிறது என்பதெல்லாம் தெரியாது. அவள் ஆச்சர்யப்பட்டதெல்லாம் புத்தர் சில நிமிடங்களுக்குள் அவள் மகனை எப்படி சில சென்டி மீட்டர்கள் வளரச் செய்தார் என்றுதான்.

“ இப்போதுதான் பஸ்சிலிருந்து வந்தோம்.அவன் அவ்வளவு உயரமாக இல்லை..”

“ சந்தேகம் வேண்டாம்.அவன் பிறந்த போது உயரமாக இருந்திருக்க மாட்டான்” இளைஞன் பரிகாசம் செய்தான்.கூட்டத்தின் மத்தியில் நின்று கொண்டிருந்த டாவ் முகம் அவள் டிக்கெட்டைப் போல வெளுத்திருந்தது.

“ அம்மா! என்ன ஆயிற்று?” அளவு பார்த்து விட்டு வந்த யீ அம்மாவின் உறைந்த கையைப் பற்றிக் கொண்டு கேட்டான்.

“ ஒன்றுமில்லை! அம்மா உனக்கு டிக்கெட் வாங்க மறந்து விட்டேன்” அவள் பேச முடியாமல் சொன்னாள்.

“ மறந்து விட்டீர்களா? சொல்வதற்கு அழகாகத்தான் இருக்கிறது. உங்களுக்கு பையன் இருக்கிறான் என்பதையும் நீங்கள் ஏன் மறக்கக் கூடாது?” இளைஞன் கேட்டான்.சில நிமிடங்களுக்கு முன்னால் அவளிடம் இருந்த அமைதியான நம்பிக்கையை அவன் மன்னிக்கத் தயாராயில்லை.

“ உனக்கு என்ன வேண்டும்?” அவள் கோபம் அதிகமானது. குழந்தையின் முன்னால் தன் கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

“ உனக்கு தைரியம்தான். நீ கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும்.இந்த டிக்கெட் உனக்கு எப்படிக் கிடைத்தது என்பது கடவுளுக்குத்தான் தெரியும். டிக்கெட் இலவசமாகக் கிடைத்தது போதாதென்று இன்னொரு ஆளையும் நீ உள்ளே நுழைக்கப் பார்க்கிறாய். உனக்கு வெட்கம் இல்லையா? நீ தப்பித்து விட முடியும் என்று நினைக்கிறாயா? போ, ஒரு செல்லுபடியாகும் டிக்கெட்டை வாங்கி வா” சுவரில் சாய்ந்து கூட்டத்தைப் பார்த்தபடி ஏதோ உத்தரவு போல சொன்னான்.

டாவின் கைகள் நடுங்கின.அவள் என்ன செய்ய வேண்டும்?இன்னொரு விவாதம் செய்ய வேண்டுமா? அவள் சண்டைக்கு வெட்கப்படுபவள் இல்லை. ஆனால் தன் குழந்தை இதில் சாட்சியாவதை விரும்பவில்லை. அவனுக்காக அவள் விட்டுத் தரத்தான் வேண்டும்.

“ அம்மா டிக்கெட் வாங்கி வருகிறேன். நீ இங்கேயே இரு.ஓடி விடாதே” சிரிக்க முயன்றாள். வெளியில் வருவது என்பது அபூர்வம்தான். என்ன நடந்தாலும் தன் பொறுமையை இழக்கக்கூடாது .எல்லாவற்றையும் சரி செய்ய முடிவு செய்தாள்.

“ அம்மா! உண்மையாகவே நீங்கள் டிக்கெட் வாங்கவில்லையா?” நம்பாமலும், வியப்பாகவும் யீ அவளைப் பார்த்துக் கேட்டான்.அவன் பார்வை அவளுக்கு பயம் தந்தது.

அவள் அந்த டிக்கெட்டை இன்று வாங்க முடியாது.அவளால் தன் நிலையை மகனிடம் விளக்கவும் முடியாது.

“வா போகலாம் “ அவள் யீயை தள்ளிக் கொண்டு போனாள்.நல்ல வேளை குழந்தை எலும்பு பலம் உள்ளவன்.இல்லாவிட்டால் விழுந்திருப்பான்.

“ பார்க்கில் போய் விளையாடலாம் .” மகனை மகிழ்ச்சிப்படுத்த விரும்பி னாள். ஆனால் அவன் அமைதியாகி விட்டான். திடீரென்று அவன் வளர்ந்து விட்டான்.

நடக்கும் போது ஐஸ்கீரிம் விற்பவன் அருகே நின்று “ அம்மா! சிறிது பணம் கொடுங்கள் !” என்றான்.அவள் கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டு கடையின் பின்புறம் இருந்த முதிய பெண்மணியின் அருகே ஓடினான். “என் உயரத்தைப் பாருங்கள் ”, அவன் சொன்ன பிறகு தான் டாவ் உடல் உயரம், எடை காட்டக் கூடிய அளவு கோலோடு ஒரு முதியவள் உட்கார்ந்திருந்தைப் பார்த்தாள். அந்தப் பெண்மணி அளவு கோலை மெல்ல விரித்தாள்.

“ ஒரு மீட்டர் ,பதினொன்று” என்று யீங்கைப் பார்த்துச் சொன்னாள். ஏதாவது பிசாசு அவளுடன் சண்டை போடுகிறதா ?அல்லது ஒவ்வொரு முறை அவள் பார்க்கும் போதும் யீ உயர்கிறானா என்று வியந்தாள்.

யீயின் கண்கள் கசிந்தன.அவன் அம்மாவைத் திரும்பிப் பார்க்காமல் ஓடினான். ஒரு கணம் பறவையாய் காற்றில் பறப்பது போல ஓடி விழுந்தான். அவனைத் தாங்கிப் பிடிக்க அவள் போவதற்குள் எழுந்து ஓடி விட்டான். டாவ் பின் தொடர்வதை நிறுத்தி விட்டாள்.அவள் பின் தொடர்ந்தால் அவன் விழுந்து கொண்டே இருப்பான்.மறையும் தன் மகனின் நிழலைப் பார்த்து மனம் உடைந்தது. “ யீ !அம்மாவைப் பார்க்க மாட்டாயா?”

அவன் நீண்ட நேரம் ஓடி விட்டு நின்றான்.அம்மாவை அவள் பார்க்காத போது பார்த்தும்.. அவள் பார்க்கும் போது கண்களை விலக்கிக் கொண்டும்..
டாவுக்கு அந்தச் சம்பவம் புரிந்து கொள்ள முடியாததாக இருந்தது.அவள் அந்த முதிய பெண்மணியிடம் போனாள். “ நீங்கள் வைத்திருக்கும் அளவுகோல்..”

“என் அளவு கோல் உங்களை மகிழ்ச்சிப் படுத்தத்தான்.உங்கள் மகன் உயரமாக வளர்வதை நீங்கள் விரும்பவில்லையா ? ஒவ்வொரு தாயும் தன் மகன் உயரமாவதை விரும்புவாள்.ஆனால் அவன் வளரும் போது உங்களுக்கு வயதாகி விடும். என்பதை நீங்கள் மறக்கக் கூடாது. என்னுடைய அளவு கோல் பொய்யானது. அவ்வளவு துல்லியம் இல்லாதது.” அவள் மென்மையாக விளக்கினாள்.ஆனால் டாவ் இன்னமும் குழப்பமாகவே இருந்தாள்.

“ என்னுடைய அளவுகோல் பழையது. மிகச் சரியான அளவு உடையது இல்லை. உடல் எடையை அவர்கள் இருப்பதை விடக் குறைவாகக் காட்டும். உயரத்தையும் சிறிது அதிகமாகத் தான் காட்டும். அப்படி நான் அதை அமைத்திருக்கிறேன். இந்த நாட்களின் நாகரிகம் என்பது உயரமாகவும், மெலிதாக இருப்பதும் தான். என் அளவு கோல் பொருத்தமானது.” அந்த முதியவள் அன்பானவளாக இருக்கலாம்.ஆனால் சாமர்த்தியமானவளும் கூட.

ஓ..அதுதான் காரணமா ? யீ அந்தப் பேச்சைக் கேட்டிருக்க வேண்டும். ஆனால் அவன் வெகு தூரத்தில் இருந்தான். கேட்டிருந்தாலும் அதிலுள்ள நியாயம் அவனுக்குப் புரிந்திருக்குமா?

யீ இன்னமும் அம்மாவை சந்தேகக் கண்களோடு தான் பார்க்கிறான். வீட்டிற்குத் திரும்பிய பிறகு அவன் உயரத்தை அளந்து பார்க்க வரும்படி கெஞ்சினாள். “ வர மாட்டேன்! உங்களைத் தவிர எல்லோரும் நான் உயரம் என்று ஒப்புக் கொள்கிறார்கள். எனக்கு எதுவும் தெரியாது என்று நினைக்காதீர்கள். நீங்கள் அளந்தால் குட்டையாகத்தான் தெரிவேன். நான் உங்களை நம்ப மாட்டேன்” அவள் கையில் உள்ள டேப் விஷப் பாம்பு போலானது.

“ உங்கள் கேக்குகள் எல்லாம் கரிந்து போயிருக்கின்றன.” ஒரு வாடிக்கையாளர் கத்தினார்.அவை கரிந்திருந்தன. அவள் குற்றமாக உணர்ந்தாள். தன் வேலையில் எப்போதும் மிக கவனமாக இருப்பாள். ஆனால் இந்த நாட்களில் பல சமயங்களில் கவனம் சிதறுவதை உணர்ந்தாள்.
அவள் இதிலிருந்து விடுபட வேண்டும். யீ தூங்கிய பிறகு அவனை நீட்டிப் படுக்க வைத்து அளந்தாள் ஒரு மீட்டர் ஒன்பது சென்டி மீட்டர்

கோயில் நிர்வாகத்துக்கு கடிதம் எழுத முடிவு செய்தாள். “ அவர்களுக்கு கடிதம் எழுதுவதால் என்ன ஆகும் என்று நினைக்கிறாய்” என்று கணவன் கேட்கிறான். அதனால் ஏதாவது நடக்குமா என்று அவளுக்குத் தெரியாது. தன் மகனின் கண்ணில் உறைந்திருக்கும் பனிக்கட்டியை உருக்க அவள் ஏதாவது செய்தாக வேண்டும்.

அவள் கடிதம் எழுதி விட்டாள். தன் தொழிற்சாலையில் பணிபுரியும் ’ரைட்டர் “என்ற பட்டப் பெயர் உடைய அவரிடம் காண்பித்தாள்.அவர் சிறு சிறு கட்டுரைகள் எழுதுபவர். படித்து விட்டு “ இது ஓர் அலுவலகச் செய்தி போல உள்ளது. உற்சாகம் தரும் செய்தியாக இல்லை. “என்றார். அவள் ஒப்புக் கொண்டாள்.

“ வலிமையான,உரிமைகளை வெளிப்படுத்தும் தன்மையில் செய்திகள் இருந்தால் தான் அது பத்திரிகை ஆசிரியரைக் கவரும். பிரசுரம் செய்யப் படும். செய்தி மனதைத் தொடுவதாக இருக்க வேண்டும்.’ வருந்தும் சிப்பாய்கள் தான் எப்போதும் வெற்றி பெறுவார்கள் ’ என்ற பழமொழியைக் கேள்விப் பட்டதில்லையா?” என்றார். அவள் தலை ஆட்டினாள். கடிதம் இப்படித் தொடங்கட்டும். ’ புத்தரின் சக்தி நிச்சயமாக எல்லையற்றது. கோவில் வாசலைத் தொட்டவுடன் ஒரு ஐந்து வயது சிறுவன் இரண்டு சென்டி மீட்டர் உயரமாகி விட்டான். அதே நேரத்தில் புத்தரின் சக்தி எல்லை உடையதும்தான். சிறுவன் வீட்டிற்குத் திரும்பிய பிறகு இரண்டு சென்டி மீட்டர் குறைந்து பழையபடி ஆகி விட்டான்.’ இது சரியாக இல்லை என்று எனக்குத் தெரியும்.ஆனால் இந்த முறையில் யோசித்துப் பாருங்கள் ” என்றார்.

அவள் அந்த வார்த்தைகளை நினைவில் வைத்திருக்க விரும்பினாள். ஆனால் மறந்து போனது. சில மாற்றங்களைச் செய்து அனுப்பினாள்.

’ ரைட்டர்’ மதிய சாப்பாட்டு நேரத்தில் வருவார். பிரேமுக்குள் வைக்கப் பட்ட படம் போல டாவ் முகம் சிறிய ஜன்னலில் தெரியும்.ரசீதுகளைச் சேகரித்தபடி இருப்பாள். ’ ஒரு நிமிடம்’ என்று சொல்லி விட்டுப் போவாள். கேக்குகள் எரிந்திருக்கும். என்று அவருக்குத் தோன்றும். அதிகம் எரியாமல் இருந்த கேக்குகளை எடுத்து வந்தபடி அவருக்கு நன்றி சொல்வாள்.

“ இது உங்களுக்கு . சர்க்கரையும்.வெண்ணையும் அதிகமாக..” இதுதான் ஒரு கேக் தயாரிப்பவர் தன் நண்பருக்கு நன்றி சொல்லும் வகையில் தரக் கூடிய மிகப் பெரிய பரிசு..

நீண்ட காத்திருப்புகள்…

டாவ் தினமும் செய்தித்தாள்களைப் படிப்பாள் .சிறு செய்தி, விளம்பரம், படம் என்று .. ரேடியோவும் கேட்பாள். நல்ல குரலில் அறிவிப்பாளர் அவள் கடிதத்தைப் படிப்பார் என்ற கற்பனையில்.. பிறகு தபால் அலுவலகம் போவாள் தனது கடிதத்திற்கு மன்னிப்பு கேட்டு ஏதாவது பதில் வந்திருக்கிறதா என்று பார்க்க.. நூறு விதங்களில் அவள் கற்பனை..ஆனால் உண்மை நிலை…

எல்லா நாட்களும் ஒன்று போலவே கழிந்தன .யீ கொஞ்சம் பழைய நிலைக்குத் திரும்பியது போலத் தெரிந்தான். ஆனால் அவன் அதை மறக்கவில்லை என்று டாவ் நினைத்தாள்.

கடைசியாக ஒரு நாளில் “ தோழர் டாவின் வீடு எங்கே இருக்கிறது?” என்று யாரோ கேட்டு வந்தனர்.

“ வாருங்கள்.எனக்குத் தெரியும் “ யீ உற்சாகமாகச் சொல்லியபடி சீருடை அணிந்த இரண்டு முதியவர்களை அழைத்து வந்தான். “அம்மா ! யாரோ வந்திருக்கின்றனர்” என்றான்

அவள் துணிகளை துவைத்துக் கொண்டிருந்தாள். சோப் நுரை எங்கும்.
“ நாங்கள் கோவில் நிர்வாகத்தில் இருந்து வந்திருக்கிறோம்.உள்ளுர் செய்தித்தாள் உங்கள் கடிதத்தை எங்களுக்கு அனுப்பி இருந்தது. உண்மையை விசாரித்து அறிய வந்திருக்கிறோம்.”

டாவுக்கு கொஞ்சம் பதட்டமாகவும் ,சோர்வாகவும் இருந்தது.முதலாவதாக வீடு அன்று அவ்வளவு சுத்தமாக இல்லை. சுத்தம் செய்ய நேரம் இல்லை. அவள் சோம்பேறி என்று அவர்கள் நினைத்தால் அவள் மீது நம்பிக்கை வராதே.

“ யீ நீ விளையாடப் போ” இதுவரையான டாவின் கற்பனைகளில் யீ உண்மையை தெரிந்து கொள்ள தன் அறையில் இருப்பான். இன்று அந்த நேரம் வந்து விட அவள் அவன் அங்கிருப்பதை அசௌகரியமாக நினைத்தாள்.என்ன நடக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. இவர்கள் அந்த இளைஞனை வேலைக்கு அமர்த்தியவர்கள். என்ன விதமான நியாயத்தை இவர்களால் தர முடியும்?

“ நாங்கள் அந்த இளைஞனை விசாரித்தோம். அவன் தான் சரியாக நடந்து கொண்டதாகச் சொல்கிறான். நாங்கள் சிறுவனின் உயரத்தைப் பார்க்கப் போகிறோம். அவனை வெளியே அனுப்ப வேண்டாம் ” என்று இருவரில் இளையவராகத் தெரிந்தவர் சொன்னார்

யீ சுவரின் அருகே பவ்யமாய் நின்றான். அந்த வெள்ளைச் சுவர் மிக வெண்மையானதாக யீயின் ஓவியத்தை நிரப்புவது போல இருந்தது.சுவரில் அவன் சாய்ந்து நின்ற போது பழைய பயமான நினைவுகள் அவனுக்குள் வந்தன.

அவர்கள் இருவரும் மிக கவனமாக இருப்பவர்களாகத் தெரிந்தனர். யீ யின் தலைக்கு மேல் சுவரில் ஒரு கோடு வரைந்தனர். உலோகத்தால் ஆன டேப்பை தரையில் போட்டு கீழிருந்து அளவு பார்த்தனர். அந்த டேப் சூரிய ஒளியில் மின்னியது.

டாவ் அமைதியாக இருந்தாள்.

“என்ன அளவு?”

ஒரு மீட்டர் பத்து சென்டி மீட்டர் .அவ்வளவுதான்.” இளையவர் சொன்னார்.
“ இது அவ்வளவுதான் என்கிற விஷயம் இல்லை. ஒரு மாதம், ஒன்பதுநாள் தாமதமாக நீங்கள் வந்திருக்கிறீர்கள் ஒரு மாதத்திற்கு முன்னால் அவன் இவ்வளவு உயரமாக இல்லை.”

அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.அவர்கள் இந்த பேச்சை மறுக்க முடியாது.

ஐந்து டாலர் பில்லை அவர்கள் தந்தனர். அது ஒரு கவரில் இருந்தது. அவர்கள் தயாராகத்தான் வந்திருக்கின்றனர். கோவிலை விட்டுக் கிளம்புவதற்கு முன்பு அவர்கள் அந்தப் புழுவின் உயரத்தை அளந்து பார்த்து அது சரியான அளவில் வரையப்படவில்லை என்பதை உணர்ந்திருக்கின்றனர்.

“ நீங்களும் ,உங்கள் மகனும் அன்று கோவிலுக்குள் போக முடியவில்லை. அந்த சூழ்நிலையைச் சரியாக்க இது ஒரு சிறு கொடை “ இருவரில் மூத்தவர் மென்மையாகப் பேசினார்.

அவள் அசையாமல் இருந்தாள். அந்த நாளின் மகிழ்ச்சி திரும்பப் பெற முடியாதது.

“ உங்களுக்குப் பணம் தேவையில்லை என்றால் இந்த இரண்டு டிக்கெட்டுகளையும் பெற்றுக் கொள்ளுங்கள்.நீங்களும்,உங்கள் மகனும் எப்போது வேண்டுமானாலும் கோயிலுக்கு வரலாம்.” இளைய மனிதர் சொன்னார்.

இது கொஞ்சம் ஆசையைத் தூண்டும் சந்தர்ப்பம் தான். ஆனால் டாவ் தலையாட்டி மறுத்தாள். அவளுக்கும், மகனுக்கும் அந்த இடம் இனி எப்போதும் சோகமான நினைவுகளைத்தான் தரும்

“ எதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள்?” இரண்டு பேரும் கேட்டனர்.
அவளும் இந்தக் கேள்வியைத் தனக்குள் கேட்டுக் கொண்டாள்.

இயற்கையாகவே அவள் மென்மையானவள். அந்த இளைஞன் இன்று மன்னிப்பு கேட்க வந்திருந்தால் அவள் அவனைக் கண்டிப்பாக அவமதித்து இருக்க மாட்டாள்.

அவளுக்கு என்ன வேண்டும்?

அவள் யீயை அந்த அதிகாரிகளின் முன்பு தள்ளிக் கொண்டு போனாள்

“ தாத்தா சொல்லு” என்றாள் யீயிடம்.

“ தாத்தா ” அவன் இனிமையாகச் சொன்னான்.

“ ஐயா ! தயவு செய்து பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். டிக்கெட்டையும்…. அந்த இளைஞனை எதற்காகவும் தண்டிக்காதீர்கள். அவன் தன் வேலையைத்தான் செய்தான்..”

அந்த அதிகாரிகள் குழம்பினர்.”

டாவ் மகனை அணைத்துக் கொண்டாள். “ ஐயா ! அந்த நாளில் என்ன நடந்தது என்று என் மகனுக்கு நீங்கள் சொல்ல வேண்டும். அவன் அம்மா எந்தத் தவறும் செய்யவில்லை என்பதை தயவு செய்து அவனுக்குச் சொல்லுங்கள்….
————————————
பிஷுமின் என்ற சீன மொழி பெண் படைப்பாளி பதினாறு வயதில் இராணுவத்தில் சேர்ந்து மங்கோலியாவில் பணி புரிந்தவர். ஒரு மருத்துவராக நாட்டு நலப் பணி செய்ததோடு மட்டும் இன்றி இடைப்பட்ட காலத்தில் இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். சீன இலக்கியத்தில் தலை சிறந்த எழுத்தாளராக மதிப்பிடப்படுபவர். அவர் படைப்புகள் பல மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளன. சீனாவிலும், தைவானிலும் பல இலக்கிய விருதுகள் பெற்றவர். தன் அடையாளத்தை உணர்த்தும் ஒரு பக்குவப் பட்ட பெண்ணின் மன வெளிப்பாடு இச்சிறுகதை.

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.