எழுத்தாளர் சிவசங்கரி- குவிகம் சிறுகதைத் தேர்வு – ஜூலை 22
இம்மாத சிறந்த கதை
“பாலியல் அத்துமீறல் இல்லாத பிரதேசத்திலிருந்து ஒரு வெளியேற்றம் ’ என்னும் கதை மிக அருமை, அபாரம். கதாசிரியர் திரு சுப்ரபாரதிமணியன். (இதழ் உயிர்மை ஜூலை 2022)
கிட்டத்தட்ட 60 கதைகள் படித்தேன். பாதிக்குமேல் சுமார் ரகம். தானாகத் துணையைத் தேடுதல், கிராமத்தில் வயதான அப்பா-அம்மா நகரத்தில் அல்லது வெளிநாட்டில் பிள்ளை, வரதட்சிணைக் கொடுமை … etc etc என ஏற்கனவே சொல்லப்பட்ட கதைகளின் மாற்றுப் பிரதிகள்.
பல கதைகள் அபாரமாக இருக்கின்றன. மிகச் சிறந்த எழுத்து, அருமையான பாத்திரப் படைப்பு, யதார்த்தமான நடை இவை அந்த இடத்திற்கே நம்மைக் கொண்டுசெல்கின்றன.
அவற்றில் சில கதைகள் மிக மிகப் புதிய கதைக்களத்தைக் கண்முன் கொண்டு வருகின்றன. சில கதைகளில் இந்தப் பாத்திரங்களை எங்கோ பார்த்திருக்கிறோமே என்று தோன்றியது. இன்னும் சில கதைகளில் பாத்திரங்கள் இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களா, இப்படியும் நடக்கிறதா, இவ்வளவு பிரச்சினைகளுடன் மனிதர்கள் வாழ்கிறார்களா என மனதைச் சங்கடப்படுத்தின.
இந்திரா பார்த்தசாரதி, வண்ணதாசன், டாக்டர். பாஸ்கரன் இவர்களின் அபாரமான எழுத்துகளைப்பற்றி நான் என்ன சொல்ல?
- தன்னறம் சு. வெங்கட் ( சொல்வனம் 10.7.22)
சரியான் பேப்பர் ஆதாரம் இல்லாத வெளிநாட்டவர் வேலை தேடவும், செய்யவும் படும் கஷ்டம். பெரிய ஸ்டோரில் வேலைசெய்யும் ஷான்சிங் கடை அடுத்த தலைமுறையின் கைகளுக்கு மாறும்போது உண்டாகும் பிரச்சனைகள். ஒரு இடம் வரும் அதில். ‘’நான் CCTV வைத்திருக்கிறேன் அதனால் எல்லோரும் நன்றாக வேலை செய்வார்கள்’ என்று புதிய தலைமுறை முதலாளி சொல்லுவார். பதிலாக சிங், ‘அதற்கு உங்க அப்பா வேறு ஒன்று வைத்திருந்தார்’ என்பார். அது என்ன என்பதைச் சொல்லாமல் விட்டுவிடுவார்.. அது ‘நம்பிக்கை’ என்பது நமக்கும் புரியும்
- டாக்டர் ஜே பாஸ்கரனின் ‘பனித்துளி’ (தினமணி கதிர் 10.7.22)
கேன்சர் நோயாளி வந்து சிகிட்சை பெரும் இடம்.. அதிலும் ஏழைகள். ஒருவர் காட்டும் அன்பு, செய்யும் உதவிகள் மனதைத் தொடுகின்றன. really touchinng
- கார்த்திக் ஸ்ரீனிவாசின் ‘மாணப்பெரிது’ ( விகடன் 22.07.22)
ஒரு பெரிய பணக்காரர் மருத்துவ மனையில் சிகிச்சை முடிந்து வெளியேறப் போகும்போது ஒரு புது நோயாளியைப் பார்க்கிறார். அதிகம் செலவாக் கூடிய ஏதோ ஒரு நோய். அவருக்கு என்று யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. அருகில் சென்று பார்க்கும்போது, எப்போதோ எங்கேயோ பார்த்த மாதிரித் இருக்கிறது. பல வருடங்களுக்கு முன் பூனாவிலிருந்து சென்னைக்கு வரும்போது – waitting list கன்ஃபர்ம் ஆகாத நிலையில்,கையில் காசும் இல்லாத நேரத்தில் உதவியவர் என்பது பின்னர் நினைவிற்கு வருகிறது அவர் பெயரைக்கூடத் தெரிந்துகொள்ளவில்லை.. எவ்வளவு செலவானாலும் தான் ஏற்றுக்கொள்வதாகச் சொல்லிவிடுகிறார். மயக்க நிலையில் இருந்தவரின் கட்டில் அருகே செண்டு அவர் பெயரைப் பார்க்கிறார்… அருமை
- தனஞ்செயனின் சமையலறையில் சிப்பிகள். (உயிரெழுத்து)
யதார்த்தமான நடை/ நிகழ்வுகள். வயதானவர்களைக் கவனித்துக்கொள்ளும் நடுவயதுப்பெண் படும் கஷ்டம். முடிவு வரி… ‘அவளால் சமையலறை ஜன்னலை மட்டுமே திறக்க முடிந்தது.
- சசியின் இரட்டை கோபுரம் (விகடன் -13.7.22)
அமெரிக்காவில் இரட்டைக் கோபுரத்தை தீவீரவாதிகள் விமானம் மூலம் தகர்த்து ஏராளமான அப்பாவிகள் கொல்லப்பட்டது ஒரு மாபெரும் சோகம்… அதை வேறு ஒரு கட்டிடத்தில் இருந்து பார்த்ததை பெருமையாக, பாக்கியமாக சொல்லும் பெரிய மனிதர்;. இரட்டைக் கோபுர கேக் செய்து அதனை தற்கும் நிகழ்வில் பங்கு பெறும் மனிதன். இவர்களை, அந்த கொடூரத்தில் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பிய, காலில் மட்டும் அடிபட்டு ஊன்றுகோலோடு நடக்கின்ற ஒருவர் எப்படிப் பார்பார்.? அந்த வெறுப்பு, கோபம் ஆகியவற்றை சொல்லும் கதை.
- மதுராவின் சடைப்பூ ( சொல்வனம் 10.7.22)
மிக நல்ல படைப்பு. தலையில் ஒரு கூடைப் பூ வைத்துக் கொள்ளவேண்டும் என ஆசைப்படும் பூப்பெய்தாப் பெண். அந்த நிகழ்வின்போதுதான் அது கிடைக்குமோ? அப்படி என்றால் என்ன? அறியத் துடிக்கும் அறியா வயது. நல்ல எழுத்து. பாட்டியின் உதவியால் கூடைப்பூ வாங்கி வைத்துக்கொண்டு எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் தலையில் பூவுடன் இருக்க விரும்புகிறாள். ஆனால், வேறு ஒரு பெண்ணிற்கும் இந்த ஆசை என்று அறிந்ததும் பூக்களை கழட்டிக் கொடுத்துவிடும் மனசு,
- ஜனநேசனின் சமத்துவர் (உயிரெழுத்து)
ஒரு ஆந்திரக்காட்டில் ஆதிவாசிகள் கொண்டாடும் திருவிழா,, அவர்களின் நம்பிக்கை, பக்தி. மிக நல்ல எழுத்து. சமத்துவர் சிலை பார்ப்பதற்கு நுழைவுக் காடணம் என்று தெரிந்ததும், சிலையைப் பார்க்காமலேயே திரும்புகிறார்கள். முடிவைத் தவிர சிறப்பான எழுத்து. நாமும் அந்த விழாவில் கலந்துகொண்ட உணர்வு.
இவை தவிர சிறுகதை ஜாம்பவான்கள் இந்திரா பார்த்தசாரதியின் ‘பிரிவு’ (உயிர்மை ஜூலை) மற்றும் வண்ணதாசனின் ‘முதலில் பார்ப்பவன்’ (அந்திமழை- ஜூலைi)
இயக்குனர் மணிபாரதியின் இரு கதைகள். இரண்டிலும் (அமுதசுரபி மற்றும் குமுதம்) நேர்மறை மனிதர்கள் பற்றியவை. எதிர்மறை எழுத்துக்களே இல்லை
சிலகதைகளில் சில குறிப்பிட்ட இடங்கள்/ வசனங்கள் மிக மிக அருமை
ஷாஜி:- “நூலகத்தில் எடுக்கும் புத்தகங்களையும் இரவல் வாங்கும் புத்தகங்களையும் படித்து விடுகிறோம், விலை கொடுத்து வாங்கிய புத்தகங்கள் படிக்கப்படாமலேயே தங்கிவிடுகின்றன,
சுப்ரபாரதிமணியனின் ‘பாலியல் அத்துமீறல் இல்லாத பிரதேசத்திலிருந்து ஒரு வெளியேற்றம்’
என்னுடைய கணிப்பில், மிக மிக புதிய கதைக் களத்தில் நாம் பார்த்திராத, அறியாத கோணத்தில் எழுதப்பட்ட “பாலியல் அத்துமீறல் இல்லாத பிரதேசத்திலிருந்து ஒரு வெளியேற்றம் ’ என்னும் கதை மிக அருமை, அபாரம். கதாசிரியர் திரு சுப்ரபாரதிமணியன். (இதழ் உயிர்மை ஜூலை 2022)
ஒரு தன்னார்வக் குழுவில் பண்காரஐம் சித்ரா, ஒரு பஞ்சாலையில் தொழிலாளர்களுக்கு சுகாதாரம் மற்றும் உடல்நலம் குறித்து பாடம் எடுக்க விரும்புகிறாள். அதற்கான ஒப்பந்தத்தில் பஞ்சாலை நிர்வாகத்தினரின் கையெழுத்தை வாங்க முயற்சிக்கிறாள்.
சுகாதாரம் தவிர, அடிப்படை உரிமைகள் பற்றி சொல்லித்தரலாம். பெண்கள் சுதந்திரமாக பாலியல் ரீதியில் தொந்திரவு இன்றி பணிபுரிய பிரச்சாரம் செய்யலாம். ஒரு பெரிய விழாவில் அந்தப் பஞ்சாலை “பாலியல் அத்துமீறல் இல்லாத பிரதேசம்’ என்று அறிவிக்கலாம் என்றெல்லாம் யோசிக்கிறாள்.
ஆனால் 17 முறை அலைந்தும் பலனில்லை. கஷ்டத்தினைப் புரிந்துகொள்ளும் நல்லவரான ஒரு காவலாளியின் உதவியால் உள்ளே செல்கிறாள். பல முயற்சிகளுக்குப் பின் ஒரு அதிகாரியைச் சந்திக்கிறாள்.
நன்றி தெரிவிக்க அந்தக் காவலாளியிடம் செல்கிறாள். இவளை உள்ளே அனுமதித்ததற்காக அந்தக் காவலாளியின் வேலை போய்விட்டது என்று அறிகிறாள். சித்ராவிற்கு அவருக்கு வேலைபோன வருத்தத்தைவிட, அடுத்த முறை வரும்போது உள்ளே செல்வது கஷ்டமாகிவிடுமே என்னும் கவலையே மேலோங்குகிறது. மனித இயல்பு.
இடையே, செக்யூரிட்டி வேலைபார்க்கும் தொழிலாளிகளின் கஷ்டங்கள் மிக அழகாக சித்தரிக்கப்படுகின்றன. நாள் முழுவதும் நிற்கவேண்டிய வேதனையை அருமையாகப் பதிவு செய்கிறார். சித்ராவின் தந்தை கால்வலியால் வேதனையுற்று இறந்துபோனது, அவள் நினைவிற்கு வருகிறது. ஒவ்வொரு நிகழ்வும் நேரில் பார்ப்பது போல, (ஒரு திரைப்படம் போல) வர்ணிக்கப்பட்டுள்ளது.
சுவாமிநாதன்