சிவசங்கரி – குவிகம் சிறுகதைத் தேர்வு – ஆகஸ்ட் 2022
இம்மாத சிறந்த கதை
- புதுத்திண்ணை – 29-Aug– ஊமைச்சாமி- ஷியாமளா கோபு
- அந்திமழை ,.அமுதசுரபி ,. அம்ருதா . ஆனந்த விகடன்
- உயிர் எழுத்து உயிர்மை கலைமகள் . கல்கி கணையாழி
- காலச்சுவடு .குங்குமம் . குமுதம் . குவிகம் . சொல்வனம்
- தினமணி கதிர், தினமலர் , பதாகை , புதுத்திண்ணை , புரவி
- பூபாளம், விருட்சம், தளம், சங்கு, சிறுகதை
ஆகஸ்ட் மாதம் சிவசங்கரி – குவிகம் சிறுகதைத் தேர்வு செய்யும் பணி எனக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஒருவர் கதையைத் தேர்ந்தெடுக்கும்போது அவரது விருப்பு வெறுப்புகள் (SUBJECTIVITY) வராமல் தேர்ந்தெடுக்க முடியாது என்பது என் எண்ணம்.
நான் நிராகரித்த கதைகள் மற்ற அமைப்பில் முதல் பரிசும் பெறலாம். நான் தேர்ந்தெடுத்த கதைகளை மற்றவர்கள் நிராகரிக்கவும் செய்யலாம்.
எந்தத் தேர்விலும் தனி மனிதனுடைய தனிப்பட்ட உணர்வுகள், கோட்பாடுகள், எண்ணம், விருப்பு, வெறுப்பு ஆகியவை கலக்கத்தான் செய்யும் என்று நான் கருதுகிறேன்.
இருந்தபோதிலும் என்னால் முடிந்தவரை SUBJECTIVITY எண்ணங்களைக் குறைந்து OBJECTIVITY அதிகரிக்கும்படி தேர்ந்தெடுத்திருக்கிறேன்..
அதுமட்டுமல்லாமல் கதையின் தன்மையை மட்டும் ஆராய்ந்து கதை எழுதியவர் தெரிந்தவரா நண்பரா வேண்டியவரா என்ற எண்ணம் கலவாமல் தெரிவு செய்தேன் என்ற உறுதிப்பாட்டை மட்டும் இங்கே தர இயலும்.
ஒருபக்கக் கதைகள் , நீண்ட நெடுங்கதைகள் ஆகியவற்றைத் தவிர்த்து இம்மாதம் சிறுகதைத் தேர்விற்கு எடுத்துக் கொண்ட கதைகள் : மொத்தம் 69.
இவற்றுள் 39 கதைகள் சுமார் வகையைச் சேர்ந்தவை. இவையெல்லாம் நான் நிராகரித்தவை ! இந்தக் கதைகளில் முடிச்சு நன்றாக இருந்தால் நடை படு சுமார். நடை நன்றாக இருந்தால் கதையின் கருத்து மிகவும் சாதாரணம்
கிட்டத்தட்ட 22 கதைகள் ‘பரவாயில்லை நன்றாக இருக்கிறதே’ என்று சொல்ல வைக்கும் ரகம். இப்போது வரும் சிறுகதைகளில் தரம் இல்லை என்று சொல்பவர்களின் வாயை அடைக்கும் வகையான கதைகள். மக்கள் வித்தியாசமாகச் சிந்தித்து புதுவித நடையில் எழுதுகிறார்கள். .
உதாரணமாக,
தனிமையில் இருக்கும் அம்மா தனக்குத் துணை தேவை பற்றி மகனுடன் பேசுவது,
போர்க்கைதியாகித் துவண்ட பெண் 3 தீர்மானங்கள் போட்டு செயல் படுத்துவது
கிராமப் பெண் ஒரு கொலைகாரன் மேல் சபலப்படுவது
சீனாவில் உயரமான கட்டிடங்களைத் துடைக்கும் கிராமத் தொழிலாளி பணம் சம்பாதிக்க தற்கொலை செய்து கொள்வது
வேலைக்காரன் முதலாளியின் அம்மாவின் உடலுக்கு ஆளுயர மாலை போடுவதை விரும்பாத முதலாளி
ஏழை நடிகனுக்கு பழைய பணக்கார நண்பன் உதவ மறுக்க புதியதாய் சந்தித்த உதவி இயக்குனர் உதவுதல்
அம்மா இறந்தபிறகு அவளின் புடவை சொத்தே போதும் என்ற பெண்
தொழிலின் சிரமத்தை நினைத்து அழும் பெண் டாக்டர் தன் உதவியால் பிழைத்த நோயாளியைப் பார்த்து மகிழ்தல்
தோழியின் மீன் தொட்டியைப் பராமரித்தல்-வெறுப்பு பிரியமாக மாறுவது
ரேடியோ கேட்கக்கூடாது என்ற அப்பாவின் கண்டிப்பு தன்னுடைய காது பிரச்சினை போவதற்கு என்று பின்னால் உணறுதல்
லஞ்சம் வாங்குவதை விரும்பாத மலைவாசி மக்கள்
வெறுப்புக்காட்டும் கணவனை விட்டு நண்பனுடன் செல்லும் பெண்
மாணவனைப் பழி வாங்கத் துடிக்கும் ஆசிரியரைத் திருத்தும் சக ஆசிரியர்
கயாவில் அம்மாவின் பெருமை பற்றி வாத்தியார் சொல்வது
கடல் ஆமை இளவரசியை அதன் குடும்பத்தில் சேர்க்கும் பேண்டசி
கடவுளும் அவர் துணைவனும் வந்து ஒருபெண்ணின் உடலில் புகுந்து கொள்ளும் மேஜிகல்
கணவன் சரியில்லாததால் ஆறுதல் வார்த்தை தேடும் பெண்ணை ஒதுக்கும் பள்ளி நண்பன்
கொரானா காலத்தில் பையனுக்கு முடி வெட்டிவிடும் அப்பா
மதிக்காத மருமகள் – எச்சில் இலை சாப்பிடும் பெரியம்மா
கணவன் மீது சந்தேகப்படும் மனைவி தூக்குப்போட்டுக்கொண்டு சாவது
அடகுக் கடை ஆச்சி கணவன் செத்தாலும் நகைக்குரிய ரசீதைத் தருதல்
செய்வினை – குறளிவித்தை பற்றியது
இனி சிறப்பாக இருப்பதாக நான் கருதும் எட்டுக் கதைகளின் கதைச் சுருக்கம்.
- அம்ருதா- உணர்வோடு விளையாடும் பறவைகள்- பொ கருணாகரமூர்த்தி
ஜெர்மனியில் ஒரு இந்தியனும் ஜெர்மானியப் பெண்ணும் காதல் ,திருமணம் செக்ஸ் பற்றியெல்லாம் பேசுகிறார்கள். அவன் காதல் எண்ணம் எல்லாம் கொண்ட கட்டுப்பாடுடன் இருக்கும் ஆண். அவள் பாஷையில் துறவி மாதிரி . இருவரும் திருமணம் செய்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கும்போது அவள் வேறு ஒருவனைத் திருமணம் செய்துகொள்கிறாள்.
- புதுத்திண்ணை – 29-Aug– ஊமைச்சாமி- ஷியாமளா கோபு
அக்காவைக் காப்பாற்றக் கொலை செய்தவன் அதேபோல் அவனே இன்னொரு பெண்ணைக் கெடுக்க முயல அவள் சாகிறாள். பயந்துபோய் திருவண்ணாமலையில் ஊமைச்சாமியாக வேடம் போடுகிறான். அவனை மக்கள் வணங்கி வழிபடுகிறார்கள். அப்படி வணங்கும் ஒரு சிறுமியைக் காப்பாற்றக் கொடியவன் ஒருவனைக் கொன்று சித்தராக இறக்கிறான்.
- ஆனந்த விகடன் – 22.08.22 – சஞ்சனா காத்திருந்தாள் எம் கி கன்னியப்பன்
வேலையில்லா ஒரு எழுத்தாளன் ஒரு முதலிரவுக் கதையை எழுத விடாமல் மனைவி அவனைத் துப்பில்லாதவன் என்று வார்த்தையால் சுட்டு, எழுத்துத் தொழிலுக்கு முடிவுகட்டச் சொல்கிறாள். – எழுத்தாளன் சஞ்சனா காத்திருக்கும் கதையை விட்டு மனைவியைத் துப்பாக்கியால் சுடும் கதையை எழுதத் துவங்குகிறான்.
- உயிர் எழுத்து – எங்களூர்புளியமரத்தின் கதை மகாலெட்சுமி
ஒரிஜினல் புளியமரத்தின் கதையைப் போல ஊரையே காப்பாற்றும் ‘புளியாமரம்’ – வெள்ளத்தில் பல குடும்பத்தைக் காப்பாற்றுவது , வாயும் வயிருமா இருக்கிறவ செத்தா அதுக்குப் பரிகாரமாக புளியாமரத்தின் அடியில் சுமைதாங்கிக் கல் வைக்கவேண்டும். அதை பிசாசு என்று பயப்படும் குழந்தைகள், விற்குமுன் ஆட்டு வயிற்றில்தண்ணீர் ரொப்பும் இடம் புளியாமரம். கஜா புயலில் புளியாமரம் சாய்ந்துவிட்டது. அதன் நினைவுகள் மட்டும் பலர் மனதில் இருக்கிறது
- குங்குமம் – 19.08.22 -பைரவ சாமியார் – எஸ் எல் நாணு
கிராமத்திலிருந்து குறைவான விலைக்கு அபூர்வ ஓவியம் வாங்கி லட்சக்கணக்கில் அதை விற்க முயலும் பேராசைக்கார நண்பனை அது ஆபத்து தரும் பைரவ சாமியாரின் படம் என்று சொல்லி அதைத் திருப்பிக் கொடுக்கவைத்து அதற்கான உண்மையான விலையைப் பெற்றுத்தரும் கதை
- காலச்சுவடு -பியானோ – சிவ பிரசாத் தன் அமெரிக்கப் பேத்தி பரத நாட்டியம் கற்றுக்கொள்ளுவதை விட்டு பியானோ வாசித்து அமெரிக்கரைத் திருமணம் செய்து கொள்வாளோ என்று கோபம் கொள்ளும் பாட்டி . பின் இசையின் பெருமை அறிந்து திருந்துவது
- சொல்வனம் – விடுதலை – பிரபு மயிலாடுதுறை
காட்டில் , பேசாமலேயே மனதால் புரிந்து கொள்ளும் சீடர்களை வைத்து குருகுலம் நடத்தும் குடிலுக்குத் தன் குடும்பம் உறவினர் அனைவரும் தீவிரவாதிகளால் கொல்லப்படுவதைக் கண்ட ஒருவன் வலிப்பு நோயுடன் வருகிறான். ஸந்யாஸம் வாங்கிக் கொள்ளத் தயங்கும் அவனிடம் கடைசியில் தனது தண்டத்தைக் கொடுத்துவிட்டு குரு வெளியேறுகிறார். குரு சீடர் அமானுஷ்யக் கதை
- புதுத்திண்ணை 15-Aug – முடிவை நோக்கி -ஜெயபரதன்
அமெரிக்காவில் அணு ஆயுதம் தயாரிக்கும் விஞ்ஞானக் கூடம். அரசு உத்தரவுப்படி ஹிரோஷிமா நாகசாகி மீது அணு குண்டு வீசி அழித்த 15 வது நாளில் அதன் தலைமை விஞ்ஞானிக்குக் கதிரியக்கம் தாக்குதல் –நடந்து என்ன சிகிச்சை அளித்தும் பயனின்றிக் கொடூரமான முறையில் துடிதுடிக்கிறார். ஐன்ஸ்டீன் மற்றும் தன் சகாக்களை அழைத்து இனி அணுவாயுதம் செய்யும் அரசை எதிர்க்க விஞ்ஞானிகள் தயாராக வேண்டும் என்று கூறிவிட்டு இறக்கிறார்.
இந்த எட்டில் எது முதல் படியை எட்டும்?
எட்டும் வித்தியாசமானவைதான்.
முதல் சுற்றில் அணுவாயுதம், குரு -சீடர் அமானுஷ்யம் , பியானோ மூன்றும் விலகிக் கொள்ளலாம்.
இரண்டாவது சுற்றில் சஞ்சனா, புளியமரம் ஒதுங்கிக் கொள்ளலாம்
இருப்பவை மூன்று
.1. அம்ருதா – உணர்வோடு விளையாடும் பறவைகள்- பொ கருணாகரமூர்த்தி
- புதுத்திண்ணை – 29-Aug– ஊமைச்சாமி- சியாமளா கோபு
- குங்குமம் – 19.08.22 -பைரவசாமியார் – எஸ் எல் நாணு
இவற்றுள் ‘பைரவா சாமியார்’ முடிவு கொஞ்சம் சினிமாடிக் ஆக இருப்பதால் அது வெற்றிமேடையில் மூன்றாவது இடத்தைப் பிடிக்கிறது.
‘உணர்வோடு விளையாடும் பறவைகள்’ சிறப்பாக இருந்தாலும் கதைக்களம் ஜெர்மனியாக இருப்பதால் மனதைத் தொடுவதில் சற்று தூரத்திற்குச் செல்கிறது. அதனால் இரண்டாம் இடத்தைப் பெறுகிறது.
எந்தவித தயக்கமின்றி ஊமைச்சாமியை முதல் இடத்தில் வைக்கிறோம்.
வாழ்க்கையில் எத்தனை தவறுகள் புரிந்தாலும் இறைவனை மனதில் நிறுத்தி நம்பிக்கையோடு ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி வணங்கினால் உலப்பிலா ஆனந்தம் அளித்து இறைவன் தன்னைச் சிக்கெனப் பிடிக்கும் வரம் தருவான் என்று கூறும் கதை. ‘Every Saint has a past and every sinner has a future’ என்ற கருத்துக்கு உயிர் கொடுக்கும் கதை!
இந்த மாதத்தின் சிறந்த கதை! சியாமளா கோபுவிற்கும், வெளியிட்ட புதுத் திண்ணைக்கும் வாழ்த்துகள்!
-சுந்தரராஜன்
அருமையான ஒரு தேர்வு. விளக்கம் அபாரம்.
வாழ்க
LikeLike