சில ஆண்டுகளுக்கு முன்பு திடீரென்று நான்கைந்து தினங்களுக்கு ஜப்பான் செல்ல வாய்ப்புக் கிட்டியது. நான்கு தினங்களில் என்னதைப் பெரிதாகப் பார்த்து விட முடியும் என்று மனது எண்ணினாலும், ‘நம் வயதில் தினப்படி காலை முதல் இரவு வரை தொடர்ச்சியாக அலைய முடியாது அப்பா,’ எனும் எண்ணமும் எழுந்தது. ‘சரி, முடிந்ததைப் பார்க்கலாமே,’ எனக் கிளம்பியாயிற்று.
வழக்கமான ஹோட்டல்களுக்குப் பதிலாக, ஒரு சிறிய அபார்ட்மென்ட் (AIR BNB) வாடகைக்குக் கிடைத்தது. புதுமையான அனுபவம்! இணையதளம் மூலமாகத்தான் பதிவு செய்தோம். ஒரு சின்ன ஹால், சமையலறை, பாத்திரங்கள், ஃப்ரிஜ், பாத்ரூம், படுக்கையறையில் மெத்தைகள் தரையில் தான்! நம்மூரில் தரையில் படுக்க எத்தனை அலட்டல் செய்வோம்!
எனக்கோ முழங்கால் மாற்று அறுவைச் சிகிச்சை செய்த கால்! தரையில் அமரவே முடியாது. பின் எப்படி படுப்பது? எண்ணித் துணிக கருமம் என்று துணிந்து வந்தாயிற்று. பின் எண்ணுவது இழுக்கல்லவா? தினம் இரவு ஒருவிதமான சர்க்கஸ் செய்து படுக்கையில் விழுவதும் பின் காலையில் வேறுவிதமான பிரயத்தனம் செய்து எழுவதுமாக இருந்தது. கவலை எதற்கு? தினம் காலையில் கையைப் பிடித்து இழுத்து எழுப்பக் கணவர் (கை கொடுக்க தெய்வம்!) தயாராக இருந்தார். ஆனால் நம் சுய கௌரவம் இடம் தரவில்லையே! எப்படியோ சமாளித்தேன் என்று சொல்ல வேண்டும்.
மேலும் இங்கு நமக்கு அவர்கள் வைக்கும் இன்னொரு சின்ன வேண்டுகோள்- அதாவது காலணிகளை அபார்ட்மென்டினுள் நுழைந்ததுமே, வெளியிலேயே கழற்றி வைத்து விட வேண்டும். வீட்டினுள் அணிந்து கொண்டு போகக் கூடாது என்பது தான் அது. ‘யாராவது பார்க்கப் போகிறார்களா என்ன’ என்று யாருமே இந்த வேண்டுகோளைப் புறக்கணிப்பதில்லை. நுழைந்ததும் காலணிகளைக் கழற்றி வைத்து விட்டு அவர்கள் வைத்துள்ள மென்மையான துணிச் செருப்புகளை அணிந்து கொண்டு விடுவோம்.
சமையலறையில் சமைக்க வசதி இருந்தது. ஆனால் எங்களுக்கு நேரம் தான் இல்லை. தேநீர் (அவசர முறையில் தான்! ஜப்பானிய முறையில் அல்ல) தயாரித்துக் கொள்வதுடன் சரி. கொண்டு போன MTR- ரவை உப்புமா, அவல் உப்புமா பாக்கெட்டுகளை வெந்நீர் ஊற்றித் தயார் செய்து டப்பாவில் எடுத்துக் கொண்டு தன் வெளியே கிளம்பினேன்.
டெம்புரா (Tempura) எனும் ஒரு பதார்த்தம் மிகவும் பிரசித்தம். மதிய உணவு சமயம் எல்லாரும் இதை ஒரு கை பார்க்கிறார்கள். எண்ணையில் நீச்சலடித்து வறுபட்ட மீன் முதலான சமாச்சாரங்கள். ஆனாலும் ஒரு பிரபல உணவகத்தில் காய்கறிகளைப் போட்டும் தயார் செய்திருந்தனர். அதனுடன் சாப்பிட என்னவெல்லாமோ ‘ஸாஸ்’ வகையறாக்கள். சும்மா சொல்லக் கூடாது; நன்றாகவே நம்மூர் பஜ்ஜி மாதிரி இருந்தது. இருந்தாலும் எத்தனை தான் சாப்பிடுவது? எண்ணைப் பதார்த்தம் அல்லவா? சத்தம் போடாமல் கொஞ்சம் வெள்ளை சாதம் (white rice) ஆர்டர் செய்து, கையோடு கொண்டு போயிருந்த புளியோதரைப் பவுடரை அதில் கலந்து (யாரும் ஆட்சேபிக்கும் முன்- வெளி உணவுக்கு அனுமதி இல்லை!) ஐந்தாறு வாய்கள் சாப்பிட்டதும் தான் திருப்தி ஆயிற்று.
அன்று ஒரே மழை! நல்ல வேளையாக அன்று நாங்கள் பார்க்க வேண்டியவை எல்லாமே கட்டிடங்களுக்குள் தான். டோக்கியோவின் ஐந்து நட்சத்திர இம்பீரியல் ஹோட்டலில் ஜப்பானின் பிரபலமான, கலாச்சாரப் பெருமை வாய்ந்த ‘தேநீர் உபசாரச் சடங்கி’னைக் (Tea ceremony) கண்டு அதில் பங்கு கொள்ளச் சென்றோம் (!?).
இதைப்பற்றி ஒரு அறிமுகம் தேவை!
தேநீர்ச் சடங்கு என்பது, ‘விருந்தினரும் அவரை உபசரிப்பவரும் தினசரி வாழ்க்கையின் பழகிப்போன சுவையற்ற நடப்புகளிலிருந்தும் வழக்கமான பரபரப்புகளிலிருந்தும் விலகி நின்று, சிறிது அவகாசம் எடுத்துக் கொண்டு, சம்பிரதாயமானதும் மிகவும் நாகரிகமானதுமாகக் கருதப்படும் இந்த நிகழ்வில் பங்கெடுத்து, அதன் மூலம், ஆன்மீக ரீதியான ஒருவகை மனநிலையை அனுபவிப்பது,’ என்பதாகும். வாழ்வின் முறையற்ற மன அழுத்தங்களிலிருந்து விடுபட இது ஒரு வடிகால் போன்றதாம். இத்தகைய ஒரு எண்ணத்தைத் தழுவி, முழுமையானதும், சிக்கலானதுமான ரசிகத்தன்மை நிறைந்த இந்தச் சடங்கு உருவாக்கப்பட்டது என்கிறார்கள்.
இது 1500-களில் நடைமுறைக்கு வந்ததாம். ஜப்பானியர்கள் சீனர்களிடமிருந்து பசுமையான தேநீர் (Green tea) அருந்துதலை தங்கள் வழக்கமாக ஏற்றுக் கொண்டதை அடுத்து ஜென் புத்த (Zen Buddha) மதத்தின் நம்பிக்கையாக இந்தத் தேநீர் சடங்கு உருவாயிற்று. 1521-1591 வரை வாழ்ந்த சென் நோ ரிக்யு (Sen no Rikyu) என்பவர் ஜப்பானின் தேநீர் சடங்கைத் துவக்கி வைத்த முக்கியமான ஒருவராவார்.
சம்பிரதாயமான தேநீர் சடங்கானது, தேநீர் என ஒரு பானத்தை அருந்துவது மட்டுமல்ல; அது ஆன்மீக பூர்வமான ஒரு அனுபவம் – அது ஒற்றுமை, மற்றவர் மேல் மரியாதை, தூய்மை, அமைதியான மனநிலை இவை அனைத்தும் சேர்ந்த கலவையான ஒருவிதமான அனுபவம்.
நான் முன்பே இதைப்பற்றிப் படித்து சிறிது அறிந்திருந்ததால் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் போய்ச் சேர்ந்தேன். எப்படி முழங்காலிட்டு அமர்வது என்பது தான் பெரிய யோசனை. ஆனால் தற்காலத்தில் தரையில் அமர இயலாத வெளிநாட்டு (அமெரிக்க, ஐரோப்பிய) யாத்திரீகர்களுக்கு, பின் வரிசையில் நாற்காலிகள் போடப்பட்டிருக்கும் என அறிந்ததும் சிறிது நிம்மதியாயிற்று.
தேநீர்ச் சடங்கை நடத்துபவர் முன்கூட்டியே, எல்லாவற்றையும் தயார் செய்து கொள்ள வேண்டும். அவருடைய கை, கால் அசைவுகள் எல்லாமே ஒரு ஒழுங்கிற்கு உட்பட்டதாக இருப்பது முக்கியம். இதற்காகவே அந்நாட்களில் தனிப்பட்ட தேநீர் இல்லங்கள் அமைக்கப் பட்டிருந்தன. ஆனாலும், வீடுகளிலும், வெளியிடங்களிலும், தோட்டங்களிலும் கூட இதனை நிகழ்த்தலாம். எளிமையாகத் தோற்றமளிக்கும் இந்தத் தேநீர் இல்லங்கள், விலையுயர்ந்த மரவேலைப்பாடுகள், கற்கள், காகிதங்கள், கதவுகள் எனப் பலவற்றைக் கொண்டிருக்கும். பருவ காலங்களுக்கேற்ப, ஒரு பகுதியில், இகபானா (Ikebana) என்னும் மலர் அலங்காரம் செய்யப்பட்டு, ஒரு படம், தொங்க விடப்பட்டிருக்கும். சுகியா (Sukiya) முறைப்படி பகுக்கப்பட்ட மூன்று பாகங்களைக் கொண்டது இந்தத் தேநீர் இல்லம்.
விருந்தினர்கள் கற்கள் பதிக்கப்பட்ட ஒரு வளைவான பாதையில் நடந்து, தேநீர் இல்லத்தின் வாயிலை அடைய வேண்டும். குறுகிய வாயிலினுள் குனிந்து தான் நுழைய முடியும். நம்மை விருந்தோம்புபவர், பாரம்பரிய உடையணிந்து (கிமோனோ- Kimono) குனிந்து வணங்கி வரவேற்பார். எல்லாரும் வரிசையாக ஒரு பக்கம் டடாமி பாய்கள் (tatami mats) விரித்த தரையில் அமர்ந்த பின் (நல்ல வேளை, எனக்கு ஒரு சிறு மர முக்காலி கொடுத்தார்கள்!), விருந்தோம்புபவர் அனைவருக்கும் ஒரு விதமான கோணத்தில் மடிக்கப்பட்ட காகிதத்தில் வைத்து பச்சை நிற பீன்ஸ் கொண்டு செய்யப்பட்ட ஒருவிதமான அல்வாவை (Green bean pudding) உண்ண வழங்கினார். எடுத்து உண்பதற்கு ஒரு சிறு குச்சியும் கூடத் தரப்பட்டது.
பின்பு அவர் தேநீர் தயாரிப்பில் முனைந்தார். எங்களுக்கு அதற்குண்டான சாமக்கிரியைகளை ஒவ்வொன்றாகக் காண்பித்தார்- தேநீர்க் கிண்ணங்கள், தேயிலைத்தூளை எடுக்கும் கரண்டி, அதனை நீரில் கலக்கும் ஸ்ப்ரிங் (whisk) போன்ற கரண்டி- பின் அவற்றை நளினமான அமைதியான அசைவுகளுடன், அழகாகச் சுத்தம் செய்தார். ஒவ்வொரு கிண்ணம் தேநீருக்கும் மூன்று கரண்டிகள் ‘மட்சா பச்சைத் தேயிலைப் பொடி’யை (Matcha green tea powder) அளந்து போட்டார். வெந்நீரை ஊற்றி ஸ்ப்ரிங் போன்ற கரண்டியால் அதனைக் கலந்தார். இன்னும் நீரை ஊற்றிக் குடிக்கும் பக்குவத்திற்குக் கொண்டு வந்து நமக்குக் குடிக்கத் தருகிறார்.
இதனித் தரப்பட்ட உடனே எல்லாம் குடித்து விடக் கூடாது. முதலில் அந்தப் பீங்கான் தேநீர்க் கிண்ணத்தின் வடிவமைப்பையும், அதில் வரையப்பட்டிருக்கும் சித்திரங்கள், முதலியனவற்றையும் பார்த்து நமது ரசிப்பையும் ஆமோதிப்பையும் தெரிவிக்க வேண்டும். பின்பு சிறிது சிறிதாகத் தேநீரை (பச்சை நிற ஸூப்பை!) அருந்த வேண்டும்! நாங்கள் உடனே கஷாயம் குடிப்பது போலக் குடித்தோம். பழக்கம் இல்லையானால் குடிப்பது கடினம் தான். ஆனால் வீணாக்கினால் விருந்தோம்புபவர் மனது வருந்துமோ என எண்ணிக் குடித்து விட்டோம்!
3-4 மணி நேரம் நடப்பதாகக் கூறப்படும் இந்தச் சடங்கு, இங்கு 30 நிமிடங்களிலேயே முடிந்து விட்டதால், நிறைய சம்பிரதாயங்கள் குறுக்கப் பட்டோ, மறக்கப்பட்டோ (மறுக்கப்பட்டோ?) விட்டன! பின்பு, இந்தக் கிண்ணங்களை அவர் நம்மிடமிருந்து வாங்கி, நிதானமாகக் கழுவி வைப்பதும் ஒரு கலை! அப்போது அதைக் காண நம்மை இருக்கச் சொல்லவில்லை!!
தேநீர் அருந்தி முடித்த பின்பு, விருந்தினர்கள் திரும்பக் குனிந்து வணங்கி விட்டு வெளியே செல்ல வேண்டும். ஒரு வயதான அம்மையார் இவ்விதம் தேநீரைத் தயாரித்து எங்களுக்கு வழங்கினார். வெளியே செல்லும் போது அணிந்து கொள்ள வாகாக எனது காலணிகளைத் திருப்பி நேராக வைத்தார். எனது உள்ளம் பதறி விட்டது. நான், “எங்கள் கலாச்சாரப்படி, ஒருவர் காலணியை மற்றவர், எடுத்துக் கொடுக்கக் கூடாது, அவ்வாறு நான் எதிர்பார்ப்பது மரியாதை ஆகாது,” எனக் கூறிப் புரிய வைத்தேன்.
மிகுந்த எதிர்பார்ப்புடன் சென்ற ஒரு நிகழ்வு, சுமாராகவே இருந்ததால் எங்கள் அனைவருக்கும் ஏமாற்றம் தான். எல்லாமே பணத்திற்காக ஓடும் இந்த அவசர உலகில், இந்த ஆன்மீக உணர்வு ததும்புவதாகக் கூறப்படும், அமைதி நிறைந்த தேநீர்ச் சடங்கும் குறுக்கப்பட்டு, அவசர கதியில் நடத்தப்பட்டதைக் கண்டு வருத்தம் தான் மேலிட்டது.
இந்த உணர்வுடனே நாங்கள் அடுத்த நிகழ்ச்சியான கபுகி (Kabuki) என்னும் ஜப்பானிய இசை நாடகத்தைக் காணச் சென்றோம்.
(நன்றி – தாரகை மின்னிதழ்)
(தொடரும்)
_