இம்மாதக் கவிஞர் – கவிஞர் பூவை செங்குட்டுவன்
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்,
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்
திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும்
எதிர்ப்பவரை முருகா உன் வேல் தடுக்கும்
நான் உங்கள் வீட்டுப் பிள்ளை
இது ஊர் அறிந்த உண்மை
தாயிற் சிறந்த கோயிலுமில்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
ஆயிரம் உறவினில பெருமைகள் இல்லை
அன்னை தந்தையே அன்பின் இல்லை
ராதையின் நெஞ்சமே
கண்ணனுக்கு சொந்தமே
காலம் நமக்குத் தோழன்
காற்றும் மழையும் நண்பன்
இப்படி, காலத்தால் அழியாத காவியப் பாடல்களைத் தந்தவர் தான் கலைமாமணி கவிஞர் பூவை செங்குட்டுவன். கவிஞர்கள் திரு கண்ணதாசன், திரு மருதகாசி, திரு வாலி, திரு சுரதா என எல்லோரும் பாராட்டிய கவிஞர்.
ஏ பி நாகராஜன் அவர்கள் கூறுவார்கள் – திரு பூவை செங்குட்டுவன் என்னைத் தேடி வரவில்லை. திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் என்ற பாடலைக் கேட்டு நான் தான் சென்றேன். உவமைக் கவிஞர் சுரதா கூறுவார் – இங்கே சிரித்தால் அங்கே எதிரொலிக்கும் என்பது அற்புத கற்பனை நயம். கண்ணதாசன் அவர்கள், இந்தப் பாடல் இந்தப் படத்தில் இருக்கட்டும் என்றாராம்.
திரு பூவை செங்குட்டுவன் அவர்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஆரம்பத்தில் இருந்தே இருந்து வந்தவர். லட்சிய நடிகர் எஸ் எஸ் ராஜேந்திரன் அவர்களுக்கு உதவியாளர் , திமுக நாடகங்கள
மற்றும் பாடல்கள் , மு க முத்து, ஸ்டாலின் அவர்கள் நடித்த நாடகங்கள் என பலவற்றில் இவரின் பங்களிப்பு நிறையவே உண்டு.
இவர் எழுதிய,
கருணையும் நிதியும் ஒன்றாய்ச் சேர்ந்தால்
கருணாநிதியாகும் ,
என்ற பாடல் பட்டி தொட்டியெல்லாம், திமுக பொதுக்கூட்டங்களில் ஒளிபரப்பப்பட்டது. எம்எஸ்வி இசையில், பி சுசிலா அவர்கள் பாடியது.
இப்படியெல்லாம் இருந்தபோதிலும், அவரை வெளியில் தெரிய வைத்தது – கந்தன் கருணை படத்தில் வந்த திருப்பரங்குன்றத்தில் பாடல் தான். அதனால் தான், அதே இயக்கத்தில் இருந்த மற்றொரு கவிஞர் ஆலங்குடி சோமு கூறினார் .
கழகம் காட்டாத கருணையை, கந்தன் காட்டினான், என்று,
இயக்குநர் ஶ்ரீதர், வானொலியில் தேன் கிண்ணம் நிகழ்வில், இந்தப் பாடலின் வரிகள், மற்றும் இசை, தனது ஆன்மாவை தொட்டது என்று கூறினார்.
திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும் என்ற பாடலில் வரிகள் மிக அருமை. தயாரிப்பாளர் திரு வேலுமணி மிகவும் பாராட்டியதுடன், தனது கௌரி கல்யாணம் திரைபடத்தில் அதை உடனே பயன்படுத்திக்கொண்டார்.
நீ கொடுத்த தமிழ் அல்லவா
புகழ் எடுத்தது – அந்தத்
தமிழ் கொடுத்த அறிவல்லவா
தலை சிறந்தது.
கந்தன் எனும் பெயர் எடுத்ததால்
கருனையானவன் – அந்தக்
கருணையினால் தொண்டருக்கும்
தொண்டனானவன்
அதேபோல,
வணங்கிடும் கைகளின்
வடிவத்தைப் பார்த்தால்
வேல்போல இருக்குதடி
ஒரு வித்தியாசமான ஆனால் உண்மையான கற்பனை அல்லவா இது ?
கடவுள் மறுப்புக் கொள்கையில் இருந்து வந்தவரின், ஆன்மிக வரிகள் பிரமிக்கவைக்கிறது அல்லவா? வயலின் மேதை திரு குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள் தான், கவிஞரை, ஆன்மிகத்திற்கு அழைத்து வந்தார் என்று நன்றியுடன் கூறுவார் கவிஞர்.
இறைவன் படைத்த உலகை எல்லாம்
மனிதன் ஆளுகின்றான்
மனிதன் வடித்த சிலையில் எல்லாம்
இறைவன் வாழுகின்றான்
இரண்டு மனிதர் சேர்ந்தபோது
எண்ணம் வேறாகும்
எத்தனை கோயில் இருந்தபோதும்
இறைவன் ஒன்றாகும்
என்ற அற்புத வரிகள் தந்தவர்.
1967ல் திமுக ஆட்சிக்கு வந்தபின் நடந்த இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர் (தென்காசியில் வெற்றி அடைந்த காங்கிரஸ் வேட்பாளர் மரணம் அடைந்ததால்,)ஜெயித்து ஆகவேண்டும் என்று விரும்பிய கட்சிக்காக,வேட்பாளருக்காக, எழுதப்பட்ட பாடல். (புதிய பூமி என்ற இந்தப் படமும் தென்காசிக்காரரால் எடுக்கப்பட்டது) . நான் அப்போது தென்காசியில் படித்துக் கொண்டிருந்தேன். இந்தப் பாடல் தான் தொகுதி முழுவதும் ஒலித்தது. வேட்பாளர் கா மு கதிரவன் வெற்றியும் பெற்றார். இந்தப் பாடல் வரிகள மிக அழகு மட்டுமல்ல , வெற்றியைத் தேடித் தந்த பாடலும் கூட..
நான் உங்கள் வீட்டுப் பிள்ளை
இது ஊர் அறிந்த உண்மை
நான் செல்லுகின்ற பாதை
பேரறிஞர் காட்டும் பாதை
காலம் தோறும் பாடம் கூறும்
மாறுதல் இங்கே தேவை
ஏழை எளியோர் துயரம் போக்கும்
செயலே எந்தன் சேவை
கோவில் என்றால் கோபுரம்
காட்டும் தெய்வம் உண்டு அங்கே
உள்ளம் என்றால் உயர்ந்து காட்டும்
எண்ணம் வேண்டும் இங்கே
அகத்தியர் படத்தில் இடம் பெற்ற, தாயிற் சிறந்த கோயிலும் இல்லை பாடல் அப்போதெல்லாம் வானொலியில் தினம் பலமுறை ஒலிபரப்பாகும். திருமதி டி கே கலா அவர்களுக்கு முதல் பாடல் இது. சிறு வயதில் தாயை இழந்து, சித்தியின் கொடுமையை அனுபவித்த இயக்குநர் திரு ஏ பி நாகராஜன் அவர்களைக் கவர்ந்த பாடல். அதை விட வருத்தமான விஷயம் – தாய் இறந்த தந்தி, கவிஞர் பணி புரிந்த அலுவலகத்தில் இருக்க, மறுநாள் தான் அந்த செய்தி தெரிந்து இவர் ஊர் செல்வதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது. அந்த துயரில் எழுதிய பாடல் தான் இது என்பார் கவிஞர்.
ராஜராஜசோழன் படத்திற்காக, ஏற்கனவே நடராஜர் மீது எழுயிருந்த ஆடுகின்றானடி தில்லையிலே பாடலை அப்படியே, ஏடு தந்தானடி என்று மாற்றி எழுத, அந்தப் பாடல் அப்போது மிகப் பெரிய ஹிட் ஆனது.
காதலைக் கூட –
வசந்த காலம் தேரில் வந்ததோ
காதல் ராகம் பாடுகின்றதோ
ஓராயிரம் நூறாயிரம்
சுகமோ சுகம்
கவி கம்பனின் கவி நா நயம்
ரவிவர்மனின் உயிரோவியம்
வலையோசையில் எனதாசைகள்
வரவேற்கும் உனை என்றுமே
என்றும்,
சிந்து நதியோரம்
தென்றல் விளையாடும்
கண்ணன் வரவும் கன்னி உறவும்
காதல் கீதம் பாடும்
மொட்டவிழ்ந்த முல்லை
கட்டழகின் எல்லை
தொட்டுத் தழுவும் போது
சொர்க்கம் வேறு ஏது
என்றும் எழுதுவார்.
அதேபோல, வடிவங்கள் என்ற படத்தில்
தண்ணீரில் மீன் அழுதால்
கண்ணீரைக் கண்டது யார்
தனியாக நான் அழுதால்
என்னோடு வருவது யார்
பின்னாட்களில
இதே வரிகளை டி ராஜேந்தர் அவர்கள் தனது பாடலில் கையாண்டிருந்தார்கள்.
எட்டாம் வகுப்பு வரை தான் படித்தவர். வசதியான குடும்ப பின்னணி கொண்டவர், திரைக் கவிஞர் ஆக வேண்டும் என்பதற்காக, மிகவும் கஷ்டப்பட்டார். ஆனாலும்,இவர் அடைய வேண்டிய நிலையை, புகழை அடையவில்லை என்பது மிக வருததமான ஒன்று. திமுகவின் ஆரம்ப கால நாடகங்கள், மற்றும் இளைய ராஜாவின் ஆரம்ப நாட்களில் உடன் இருந்தவர். பலரைக் கை தூக்கி விட்டவர். ஆனால், அவருக்கு, உரிய இடம், பொருள் கிடைக்கவில்லை. அதற்குப்பதில் – கடவுளா, காலமா, இவரின் நேர்மையான அணுகுமுறையா, பொய் உரைக்கத தெரியா மனதா – பட்டி மன்றம் தான் விடை கூறவேண்டும்.
என் வாழ்நாளில் மறக்க முடியாத சந்திப்பை திரு பூவை செங்குட்டுவன் அவர்கள் எனக்கு ஏற்படுத்தித் தந்தார்கள். அது – 1991ஆம் வருடம், நான் சென்னைக்கு பணி நிமித்தம் மாறி வந்தபோது என்னுடன் ஆட்கோவில் , கேன்டீனில் பணிபுரிந்தவர் தான்திரு முத்து சேகர். நான் நண்பர்களிடம் எப்போதும் நடிகர்திலகம் சிவாஜி பற்றிப் பேசுவதைக் கேட்ட அவர், ஒருநாள் என்னிடம் வந்து, சிவாஜியை சந்திக்க ஆசையா என்று கேட்க, நான் ஐயோ, முதலில் அதை செய்யங்கள் என்றேன். அப்போது தான் தெரியும் அவர், கவிஞரின் மருமகன என்று. உடனே ஒருநாள், கவிஞரை வீட்டில் சந்திக்க, அவர் தனது மகன் திரு தயா அவர்களை உடன் அனுப்ப, அன்னை இல்லத்தின் கதவு திறந்தது. நடிகர் திலகத்தை முதன் முதலில் சந்தித்தேன் – பேசினேன் – புகைப்படம் எடுத்துக்கொண்டேன் – அவரின் ஆட்டோகிராஃப் வாங்கினேன். பிறந்து, 30 வருடங்களாக எண்ணி இருந்த கனவு நனவானது.
திரு பூவை அவர்களின் இல்லம் எல்டாம்ஸ் சாலையில் இருக்கிறது. உள்ளே சென்றவுடன், அவரும் துணைவியாரும் அன்புடன உபசரித்தார்கள். நான் அவரிடம் உதவி கேட்டு போய் இருக்கிறேன. அவரோ என்னை விருந்தினராக உபசரித்தார். இலக்கியப் புலமையுடன், எளிமையும் அவரிடம் இருந்தது. அப்புறம் பல வருடங்கள் கழித்து அவரின் பிறந்தநாள் விழாவிற்கு சென்றேன். என்னால் மறக்க முடியாத நல்ல கவிஞர் – நல்ல மனிதர்.
இந்தக் கட்டுரையை,அவர் வரிகளையே எழுதி நிறைவு செய்கிறேன் :
அவன்
தாளத்துக்குப் பாடல் எழுதத் தெரிந்தவன்
ஆனால்
தாளம் போடத் தெரியாதவன்
அவன் பாட்டுக்கு
இப்போதும் மவுசு இருக்கிறது.
அதனால் தான்
அவன் பாட்டுக்கு எழுதிவிட்டு,
அவன் பாட்டுக்கு இருக்கிறான்.
என்ன செய்வது ? சினிமாவும் ஒரு போதை தானே !!
இவரது பாடல்களை முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா பாடி ஆல்பமாக வந்துள்ளது. அதேபோல, திருக்குறளை எளிய வடிவில் பாடல், இசையுடன் ஆல்பமாக வெளியிட்டுள்ளார்.
தாகம் என்ற படத்தில் இசை அமைப்பாளர் எம் பீ சீனிவாசன் அவர்கள் இசையில் எஸ் ஜானகி பாடிய, பாடல் அற்புத வரிகளைக் கொண்டது. அப்போது வானொலியில் அதிமாக ஒலிபரப்பப்பட்டது.
வானம் நமது தந்தை
பூமி நமது அன்னை
உலகம் நமது வீடு
உயிர்கள் நமது உறவு.
பெற்றோர் அற்ற குழந்தைகள் பாடும் பாடலில், அனாதை என்ற வார்த்தை வராமல் எழுத முடியுமா என்று கேட்க, கவிஞர் எழுதிய அற்புத வரிகள் இவை.
நன்றி. அடுத்தமாதம் இன்னொரு கவிஞருடன் சந்திப்போம்.
பூவை செங்குட்டுவன் பற்றிய அனுபவமும் அவரது நல்ல கவிதைகளின் மேற்கோள் காட்டலும் தென்காசியாரின் கட்டுரைக்கு மறக்கவியலாத பரிமாணத்தை தருகின்றன.
LikeLike