இரண்டு வயது குழந்தை எங்கள் மகள் இந்து, அம்பத்தூர் ராக்கி தியேட்டரில் உள்ளே முழுமையாக உட்கார்ந்து திரைப்படத்தைப் பார்க்க விடவில்லை. உள்ளே இருப்பதும், வெளியே சமாதானப்படுத்த அழைத்து வருவதுமாக கண்ணாமூச்சி. என்னப்பா…முக்கியமான சீன்ல எழுந்து போயிடறீங்க என்று அன்று பலமுறை சொல்லிக்கொண்டே இருந்தார் இணையர் ராஜி. அடுத்த நாட்களில் படத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார். அது ஆண்டு 1994. கருத்தம்மா மறக்க முடியாத திரைப்படம்.
வையம்பட்டி முத்துச்சாமியின் ‘பொண்ணு பொறுக்குமா ஆணு பொறுக்குமா…பத்து மாசமா போராட்டம், இதுவும் பொண்ணாப் பொறந்தா கொன்னுடுவேன்னு புருஷன் பண்ணுறான் ஆர்ப்பாட்டம்’ என்கிற உள்ளத்தை உருக்கி வார்க்கும் இசைப்பாடலை அண்மையில் மறைந்த திரைக்கலைஞர் ‘பூ’ ராமு அவர்கள் சைதாப்பேட்டை ரயில் நிலையம் அருகில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கலை இரவு மேடையில் பாடியது ஜனவரி 1993 விடியலில்! ‘……அருமை மாமி உறுமுறா அம்மிக் குழவியால் அடிக்கிறா, ஆகாசத்துக்கும் பூமிக்கும் அவ எகிறி நின்னே குதிக்கிறா, நாத்தி பழிக்கிறா ஏத்தி இறைக்கிறா, பரம்பரையே வம்புக்கிழுக்கிறா, ஆத்திரம் கோபமா எழுது, அவை அத்தனையும் கண்ணீர் விழுது….’ என்று போகும் அந்தப் பாடலை, வைகறை கோவிந்தனின் உருக்கமான குரலில் யூ டியூபில் இப்போதும் கேட்க முடியும்.
பொட்டல்பட்டியின் கடுமையான உழைப்பாளி ஏற்றம் இறைத்துக் கொண்டிருக்கிறார். அரசியல்வாதியின் மகனை ஃபெயில் போட்டதற்குத் தண்டனை மாற்றலில் அந்த ஊருக்கு வரும் ஆசிரியர் அவர் மூலமாக ஊரைப் பற்றி அறிய உரையாடலில் அமர்ந்து, அதிர்ச்சியான ஒரு சமூக நடப்பைக் கேட்டு திடுக்கிட்டுப் போகிறார். அந்த ஏழை விவசாயி, இதெல்லாம் சர்வ சாதாரணம் என்று சாதிக்கிறார். தூளியில் அழுவதும், அதை ஆட்டித் தூங்க வைத்துக் கொண்டிருப்பதும் இரண்டும் பெண் குழந்தைகள், இப்போது மனைவி ஐந்தாவது பிரசவத்திற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறாள், கோடங்கி அடித்துச் சொல்லி இருக்கிறான், இந்த முறை ஆண் தான் என்று! அப்படி என்றால் இடையே மூன்றாவதும், நான்காவதும் எங்கே என்று ஆசிரியர் கேட்க, இரண்டுமே பெண் சிசு என்பதால் கள்ளிப்பால் ஊற்றிக் கொல்லச் சொன்னது எந்த பாதிப்பும் காட்டிக் கொள்ளாதவாறு சொல்ல முடிகிறது மொக்கையனுக்கு.
இப்படித் தான் தொடங்குகிறது கருத்தம்மா திரைக்கதை. மனைவிக்கு ஐந்தாவது குழந்தை பிறக்கும் நேரத்தில், சினைப்பட்டிருக்கும் வீட்டு மாடும் கன்று போடுகிறது. ‘சாமக் கோடங்கி குடித்துவிட்டுக் குறி சொல்லிட்டான்’ போலிருக்கு என்று அலுப்போடு பேசும் செவிலி மூலி, மொக்கையனுக்கு ஐந்தாவதும் பெண் குழந்தை தான் என்று சொல்லிவிடுகிறாள். பெண் கன்று எதிர்பார்க்கும் மாடோ ஆண் கன்றை ஈனுகிறது. மாட்டை விற்றுப் போடு என்கிற வேலையாளிடம், அதை விக்கலாம், பெண்டாட்டிய எங்க விக்கறது என்று விக்கித்துப் பேசுகிறார் மொக்கையன். கன்று விற்ற காசை மூலியிடம் கொடுத்துச் ‘சின்ன உசுரு கதையை முடிச்சி வுட்ரு’ என்கிறார்.
காலகாலமாக நஞ்சு புகட்டி இப்படி பெண் சிசுக்களை வழியனுப்பிய அதே திசையில், ‘தாய்ப்பால் நீ குடிக்கத் தலையெழுத்து இல்லையடி, கள்ளிப்பால் நீ குடிச்சுக் கண்ணுறங்கு நல்லபடி’ என்று தாலாட்டுப் பாடத் தொடங்குகிறாள் கணவனாலும் மகனாலும் கைவிடப்பட்ட மூலி. அங்கே தற்செயலாக வருகிற ஆசிரியர், குழந்தையைத் தனக்குப் பிச்சை போடுமாறு கேட்டுப் பெற்றுக் கொள்கிறார்.
பிழைக்க வழியில்லாத மக்கள், அதன் காரணம் இவை எனும் அறிவுமிலார் என்றிருக்க, பெண் குழந்தைக்கு ‘சீரு செனத்தி செஞ்சி சீரழிவதற்குப் பதிலாகப்’ பிறப்பிலேயே அதன் கதையை முடித்துவிடுவது என்று தலைமுறை தலைமுறையாக வழக்கப்படுத்திக் கொண்டு விடுகிற சமூக அவலத்தை பாரதிராஜா, ஓர் உண்மைக் கதையின் தாக்கத்தில் இருந்துதான் படமாக எடுத்து முடித்தார் என்று சொல்லப்படுகிறது.
நகரங்களில் கூட இப்போதும், பெண் குழந்தையின் வருகை எப்படி வரவேற்கப்படுகிறது என்பது உரத்த உண்மை. நண்பர்களுக்கு வெறும் செய்தி மட்டும் சொல்லி இனிப்பு தராது நகரும் இளம் தந்தையர் இருக்கவே செய்கின்றனர்.
திரைக்கதையில், தாயும் மரித்துவிட, பொழுதன்றைக்கும் பெண் பிள்ளைகளைக் கரித்துக் கொண்டிருக்கும் தகப்பனுக்குக் கஞ்சி காய்ச்சி வீட்டைப் பராமரித்து வரும் பெண் குழந்தைகள் வளர்ந்து ஆளானதும், முதலாமவளைத் தங்கை மகனுக்குத் தாரை வார்க்கிறார் மொக்கையன். பேராசை பிடித்த கொடுமைக்கார மாமியாருக்கு வாய்க்கும் இந்த மருமகள் அடுத்தடுத்துப் பெண் குழந்தைகளையே பெற்றுப் போடுகிறாள். மூன்றாவதும் பெண் என்றானதும் வீசும் புயல் சூறாவளியாகி அவள் உயிரையும் குடித்துவிடுகிறது.
உயிருக்குயிரான அக்கா மரணத்திற்கு அப்பனையும் அழைத்துக்கொண்டு அடித்துப் பிடித்துக்கொண்டு வந்து கதறும் இளையவள் கருத்தம்மா, அக்கா உடலைக் குளிப்பாட்டும் நேரத்தில் இரத்தக்கறை பார்த்து உணர்ந்து விடுகிறாள், அது தற்கொலை அல்ல, கொலை என்று! பெரும்பாடெடுத்து அக்காவின் கணவன், மாமியார் இருவரையும் சிறைக்குள் தள்ளிவிட அவள் காதல் வயப்பட்டிருக்கும் கால்நடை மருத்துவர் ஸ்டீபன் உதவுகிறார்.
ஆனால், கிராமத் தலைவரிடம் மொக்கையன் ஏற்கெனவே பட்டிருக்கும் கடனும், கருத்தம்மா மீதே காமவெறி பிடித்தலையும் அந்தத் தலைவரது குறுக்கு புத்தியும் (பெயிலில் வரும்) அக்காவின் கணவனுக்கே அவளை இரண்டாம் தாரமாக்க சதி தீட்டி விட வைக்கிறது. கை கால்கள் செயலற்று வீழ்ந்துவிடும் மொக்கையனின் தலையசைப்பு கூடத் தேவைப்படுவதில்லை.
நோய்வாய்ப்பட்டிருக்கும் அவருக்குத் தற்செயலாக அந்த ஊருக்கு வந்து சேரும் வாத்தியார் வளர்ப்பு மகள் ரோஸி சிகிச்சை அளிக்கிறாள். அவரது சொந்தத் தந்தை தான் அவர் என்கிற உண்மையை மூலி உணர்த்திவிடுகிறாள். ஸ்டீபனின் மீதான ஒரு தலைக் காதல் தோல்வியில் துவளும் அவளை, இந்த உறவுமுறைகள் திக்குமுக்காட வைத்து ஆற்றுப்படுத்தி அவளுக்குள் இருக்கும் மருத்துவரையும், மனுஷியையும் மீட்டெடுத்துக் கொடுக்கிறது. தான் கொல்ல அனுப்பிவைத்த பெண் குழந்தை தன்னைக் குணப்படுத்த வந்து நிற்கிறாள் என்று உணர்ச்சி வசப்படும் மொக்கையன், தனக்கு கஞ்சி ஊற்றிய கருத்தம்மாவைக் கொன்று விட்டேனே என்று உடைந்து கதறுகிறார்.
அக்காவின் குழந்தைகளுக்காகவும், அப்பாவின் கையறு நிலைக்காகவும் தனது காதலைப் பொசுக்கிப் போட்டுவிட்டுப் புறப்படும் கருத்தம்மா அடுத்தடுத்த மோசமான நடப்புகளின் கொடுமைகள் தாளாது குழந்தைகளைக் காப்பாற்றிக் கொண்டு, அக்காவின் கணவனையும் ஊர்த் தலைவனையும் கொன்றுபோட்டுவிட்டுச் சிறைக்குப் போகிறவள் ஆகிறாள். அந்த ஊர் முழுக்கக் காத்திருக்கிறது அவள் திரும்பி வரும் நாளுக்கு.
ஆவணப்படமாக நின்றுவிடக் கூடாது. பரவலான மக்கள் பார்வைக்கும், விவாதங்களுக்கும், விசாரணைக்கும் இந்த சமூக அவலம் உட்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கிலேயே ஒரு குறிப்பிட்ட குடும்பத்தைச் சுற்றி நிகழும் கதையாக ரத்னகுமாரின் அருமையான திரைக்கதை வசனத்தில் கருத்தம்மாவைத் திரைக்கு வழங்கி இருக்கிறார் பாரதிராஜா.
ஆழமான கருத்தாக்கத்தை இயல்பான முறையில் வெளிப்படுத்த அவர் மேற்கொண்ட முயற்சியில் அபாரமான நடிப்பை வழங்கும் அரிய வாய்ப்பு, பல திரைக்கலைஞர்கள் ஒருசேரக் கிடைக்கப் பெற்ற படம் கருத்தம்மா.
பிறந்த வீட்டைக் குறை சொல்லும் மாமியாருக்காக குடும்பத்தோடு வந்திறங்கும் மகளைப் பார்க்கவும், இந்த முறை என்ன கேட்டு வந்திருக்காளோ என்று மொக்கையன் அஞ்சுமிடம். தனக்குத் தாயில்லாமல் போனாளே என்று புலம்பும் அக்காவிடம் உண்டியல் உடைத்துக் காசு எடுத்து நீட்டி, ‘நான் இருக்கேன் உனக்கு’ என்று சொல்லும் தங்கையைப் பார்த்து, ‘கருத்தம்மா…என்னைப் பெத்தவளே’ என்று அக்கா கரையுமிடம் என்று நெகிழ வைக்கும் இடங்களும், கண்ணீர் சிந்த வைக்கும் இடங்களும் படம் நெடுக உண்டு.
பேராசிரியர் பெரியார் தாசனுக்கு மிகவும் புகழ் பெற்றுத் தந்த பாத்திரம் மொக்கையன். கன்னச் சதைகள் துடிக்க வேண்டும் என்பதற்காக, ஓங்கி ஓர் அறை விட்டார் இயக்குநர் என்று அவரே சொன்னதாக வாசித்த நினைவு. சரண்யாவின் நடிப்பு அபாரமானது, தனது குழந்தையைக் காக்கப் போராடி உயிர்விடும் இடம் அதிரவைப்பது. கருத்தம்மா பாத்திரத்தில் அறிமுக நடிகை ராஜ்ஸ்ரீ சிறப்பாகச் செய்திருப்பார் – படம் முழுக்கவே. ரோஸியாக மகேஸ்வரியும்! மாமியாராக வில்லி பாத்திரத்தில் வடிவுக்கரசி அசத்தி இருப்பார். அவள் மகன் தவசியாக பொன் வண்ணன் மிகவும் சிறப்பாகச் செய்திருப்பார். ஜனகராஜ் வாழ்ந்திருப்பார் -நேயமுள்ள மாமனார் வேடத்தில்: ‘மருமக இல்ல, அவ மக, அவளைப் போய் வச்சிருக்கேன்னு சொல்றியே உன் நாக்குல பாம்பு கொத்த’ என்று அவர் புலம்புமிடம் உருக்கமானது.ஸ்டீபன் வேடத்தில் ராஜா அளவாகச் செய்திருப்பார். ஆசிரியர் சூசையாக இயக்குநர் சுந்தரராஜன் முக்கிய பங்களிப்பு. மூலியாக எஸ் என் லட்சுமி அபாரம். நகைச்சுவைக்கும் இடமிருக்கும் காட்சிகளில் வடிவேலு சிறப்பாக வருகிறார்.