புதிதாக கட்டிய தனிப்பங்களா மாதிரியான குடியிருப்பு ஒன்றிற்கு புதிதாக வந்தவள்தான் புனிதா. வருவதற்கு முன்பாக அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் பெங்களூரில் வசித்து வந்தாள். அங்கு நிறைய தென் மாநிலத்து மக்கள் குடியிருந்ததால், பண்டிகைகளில் கலகலப்பும் கொண்டாட்டமும் அதிகம். எல்லாருடைய குழந்தைகளும் வித்தியாசமில்லாமல் ஒரே வீடுமாதிரி பழகியதால், பண்டிகை காலங்கள் எல்லாமே மிகுந்த சந்தோஷத்துடனும் தினமும் ஒவ்வோரு வீட்டிற்குச் சென்று விதவிதமான அலங்காரங்கள், விளக்கு அமைப்புகள் எனப் பார்க்கவே கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
புதிதாக வந்த இடத்தில் இன்னும் நிறைய மக்களுடன் பழகவும் இல்லை. இந்த அமைப்பில் இந்தியாவில் எல்லா மானிலத்து மக்களும் நிறையவே வாழ்கிறார்கள். எல்லாருடைய வீட்டிலும், குழந்தைகள், பெரியவர்கள் என நிறைந்துதான் இருந்தார்கள். ஆனாலும், புதிதாக வந்ததால், இன்னும் பிறருடன் கூடி பேசிப் பழகவும் காலம் ஆகவில்லை.
பண்டிகை நாளில் அக்கம் பக்கத்து மக்களுடன் இனைந்துபழக வேண்டுமென்ற ஆவலும் அவளுக்குள் இருந்தது. கணவரிடம் கேட்டாள் “இந்த வருஷம் இங்குதான் நவராத்திரி கொலு அடுக்க வேண்டும். இங்கு இன்னும் அதிகம் பேருடன் பழக வில்லையே. யாரைப் போய்க் கூப்பிடுவது.ஒன்றும் புரியவில்லையே” என தன் மன வருத்தத்தைச் சொன்னாள்.
கணவரும் சிரித்துக் கொண்டே “அசடுமாதிரி சின்ன விஷயத்துக்கெல்லாம் கவலைப் படுவதே உன் பழக்கமாச்சே? போய் உள்ளே இருக்கும் என் அத்தையைக் கேட்டுப் பார். அவர் தன்னுடைய அனுபவத்தைச் சொல்லுவார்” எனச் சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டுப் போய் விட்டார்.
குழப்பத்துடனே புனிதாவும் அத்தையைத் தேடிப் போனாள். வந்தவளைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே, “என்னம்மா வேணும் உனக்கு” எனப் பரிவாகக் கேட்டார். “அத்தை வரும் திங்கட்கிழமைமுதல் நவராத்திரி ஆரம்பம். நாம் பழைய குடியிருப்பில் வருஷா வருஷம் நன்றாகவே வைத்து, எல்லாரையும் கூப்பிட்டு தாம்பூலம், சின்னப் பெண்களுக்கும் பரிசுகள் என வகை வகையாகக் கொடுத்தோம். ஆனால், இங்கு வந்து இரு மாதங்கள் கூட ஆகவில்லை. இன்னும் அதிகம் பேருடன் பழகவும் இல்லை. இங்கு வைத்து, எப்படி யாரைக் கூப்பிடுவது, கூப்பிட்டால் தப்பாக நினைக்காமல் வருவார்களா, நம் கலாச்சாராத்தை அவர்கள் புரிந்து கொள்வார்களா என்றெல்லாம் குழப்பமாக இருக்கு. உங்கள் மருமகரிடம் கேட்டால் வழக்கம்போல் என்னை அசடு எனச் சொல்லிச் சிரிக்கிறார். உங்களிடம் வந்தால் நீங்கள் உங்களின் அனுபவத்தைச் சொல்வீர்கள் என்றார். என்னவென்று சொல்லுங்கள் அத்தை” எனவும் கேட்டுக் கொண்டே, அத்தையுடன் அமர்ந்தாள்.
அத்தையும் சிரித்துக் கொண்டே “மிகவும் பழைய சம்பவம். இப்ப நடப்பதுபோல்தான் இன்னும் என் மனதில் பசுமையா இருக்கு. எனக்கு இருபது வயதில், என் அப்பா வழியில் ஒருவருக்கு வாக்கப்பட்டேன். முதலில் அவர் கொச்சினில் ஒரு அமெரிக்க நாட்டு கம்பெனியில் வேலை பார்த்தார். கலியாணம் ஆன உடனேயே, அவருக்கு அந்தக் கம்பெனியில் தலைமை இடமான அமேரிக்காவுக்கு மாற்றல் கிடைத்து விட்டது. அவருக்கு வேலை செய்யும் ஊரான ஹூஸ்டன் என்று ஒரு இடம். எல்லா நாட்டு மக்களும் நிறைந்து வாழும் ஒரு சின்ன அழகான ஊர்தான். கூடவே என்னையும் கூட்டிக் கொண்டு போக வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டு, என்னையும் அழைத்துக் கொண்டு போய் விட்டார்.
காலேஜில் ஒரு வருடம் படித்திருந்தாலும், சரளமாக என்னால் ஆங்கிலம் பேச கஷ்டப்பட்டேன். என் கணவர்தான் எனக்கு முறையாக மற்றவர்களுடன் ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும் சொல்லிக் கொடுத்தார். தினமும் என்னைக் கட்டாயப்படுத்தி அங்கு இருக்கும் பார்க்குக் கூட்டிக் கொண்டு போவார். அங்கு வரும் மற்றவர்களுடன் சிரித்தபடியே முகம் காட்டி எப்படி அறிமுகம் செய்து கொள்ளவேண்டும், எப்படிப் பேச வேண்டும் எனவும் கற்றுக்கொடுத்தார். கொஞ்சம் கொஞ்சமாக நானும் அவர்களுடன் பழகவும் ஆரம்பித்தேன். அவர்களுக்கு என் பெயர் திரிபுரசுந்தரி எனக் கூப்பிடுவது கஷ்டமாக இருக்கும். அதனால் அவர்கள் என்னை “த்ரீ த்ரீ” என்றே அழைக்கவும் செய்தார்கள். முதலில் எனக்குக் கஷ்டமாக இருந்தது. அதே சமயம், என்னுடைய பெயரை அவர்களால் உச்சரிக்க கஷ்டமாக இருப்பதால், என்னைக் சுலபமாகவும் சினேகமாகவும் கூப்பிட த்ரீ த்ரீ எனறழைக்கலானார்கள். எப்படிக் கூப்பிட்டாலும் அதில் உள்ளார்ந்த அன்பும்பாசமும் இருந்ததுதான் முக்கியம்.
அன்று மாலையிலேயே, நாங்கள் பக்கத்தில் இருக்கும் ஒரு பெரிய மாலுக்குப் போனோம். அங்கே இந்தியா என்றே ஒரு பிரிவும் இருந்தது. அதில் விதவிதமான கடைகளும், அதில் இருந்த பொருட்களையும் பார்த்து நான் முதலில் சென்னைக்கு வந்து விட்டோமோ எனவும் பிரமித்து நின்றேன். பக்கத்தில் இருந்தவர் என்னிடம் “என்ன பார்க்கிறாய், இருப்பது ஹூஸ்டனில்தான். இங்கும் இந்தியர்கள் அதிகமாக இருப்பதால், இங்கும் இந்திய வியாபாரிகள் தங்களின் பொருட்களை வியாபாரத்திற்காக அனுப்பி வைப்பார்கள். இங்கும் இதே போல் பல இடங்களில், இந்தியா டிபார்மென்டல் ஸ்டோர் என இந்தியாவில் கிடைக்கும் அத்தனை தரமான உணவுப் பொருட்கள், பூஜைக்குத்தக்கவாறு சந்தனம், ஊதுபத்தி, விளக்குகள் என எது வேண்டுமானாலும் கிடைக்கும். உனக்கு நவராத்திரிக்குத் தேவையான எல்லாவற்றையுமே இங்கேயே பார்த்து வாங்கிக் கொள்” எனவும் சொன்னார்.
பொம்மைக் கடைகள், அலங்கார விளக்குகள், நம் ஊரில் இருப்பதுபோல் விதவிதமான குத்து விளக்கு என நிறையவே இருந்தது. அவையிலாமல் நம்மூரில் இருப்பது போலவே வித்விதமான புடவைகள், பாவாடை. சின்னக் சின்னக் குழண்டைகளுக்கு ஏற்றமாதிரி ரெடிமேட் ஆசைகள் எல்லாமே இருந்தது. அவரும் அங்கேயே எனக்கு இரண்டு பட்டுப் புடவைகளும், அத்தைக்கு ஒரு புடவை எனவும் வாங்கினார். நானும் நவராத்திரிக்கு வைப்பதற்கான பொம்மை செட், அலங்கார விளக்குகள், விதவிதமான தோரணங்கள், எனவும் பார்த்துப் பார்த்து வாங்கி வந்தேன். எனக்குப் பிடித்ததெல்லாவற்றையும் வாங்கி வந்தோம்.
கொலு படிக்கும் தரமான ஒரு ஸ்டாண்டும் வாங்கி வந்தார். அதில் வீட்டில் ஒரு அறையில் கிழக்கு பக்கமாக கொலு படிகள் வைத்து, வாங்கி வந்திருந்த பொம்மைகளை வரிசை வரிசைகளாக வைத்து விட்டேன். கூடவே, சின்னச்சின்னதாக பார்க், சின்னக் சின்னக் குழந்தைகள் விளையாடுவது போல அலங்காரங்கள், மேடைகள், பூத்தொட்டிகள், வகை வகையான பறவைகள், சின்னச் சின்ன அணில், முயல், வாத்து, கிளி, குருவி, கோழி சேவல், மாடு ஆடு நாய் பூணை என எல்லா விலங்கு பொம்மைகளையும் அலங்கரித்து விட்டோம்.
பக்கத்தில் ஒரு மேஜையில் கலியாண செட், கச்சேரி செட், பரத நாட்டியம் ஆடும் பெண்கள், கிருஷ்ணருடன் கோபிகைகள் ஆடுவது, புன்னை மரத்தில் ஆடைகளைத் கட்டி விளையாடுவது போன்றவற்றையும் என் கணவர் ஆசையாகச் செய்து விட்டார். அலங்காரத் தோரணங்களையும் கட்டி விட்டோம். பார்க்கப் பிரமிப்பாக இருந்தது.
கொலு வைத்தாகி விட்டது. தினமும் இரு பெண்களையாவது அழைத்துத் தாம்பூலம் கொடுத்து தேவியைக் கொண்டாட வேண்டாமா? என்ன செய்வது எனவும் தவித்தேன். மாலையில் வழக்கம்போல் பார்க்குக்கும் போகும் போய், என் கை நிறைய ஒரு கத்தை பேப்பர்த் துண்டுகளை என் கணவர் கொடுத்தார்.நானும் அவர் சொல்லிய படியே, வழியில் பார்த்தவர்களிடம் அந்தப் பேப்பரைக் கொடுத்து விட்டு, “பிளீஸ் கம் டு அவர் ஹௌஸ் சன் டே: எனவும் அழைத்து வந்தேன். அதில் எங்கள் வீட்டில் வைத்திருக்கும் கொலு பற்றிய சிறிய விளக்கமும், நம் பண்டிகையின் சிறப்பையும் சின்னதாக எழுதியிருந்தார். நம்முடைய இந்திய கலாச்சாரத்தின் அடையாளமாக நவராத்திரி கொலு என்பதையும் குறிப்பிட்டும் எழுதி இருந்தார்.
அடுத்த நாள், என் கணவர் ஒரு சின்ன மேரிமாதா, ஏசுகிறிஸ்து, சிலுவை என கிருஸ்துவமதத்தின் பெருமையை விளக்கும் சர்ச், ஏசுநாதரின் பொம்மை என கொண்டு வந்து, அழகாவும் வைத்து விட்டார். அதைப் பார்த்து நான் அவரிடம் கேட்டேன், “என்னயிது, நம்ம சுவாமிகளுடன் அவாளுடைய ஏசு, மேரி என கொண்டு வந்து வைத்திருக்கேள்”அவரும் . சிரித்துக் கொண்டே, “இப்ப நாம் எங்கே வாழுகிறோம்? அவர்கள் நாட்டில்தானே. அவர்களுடன் வாழும் போது அவர்களுடைய கலாசாரத்தை, நம் கலாச்சாரம் மாறாத வகையில் ஏற்றுக் கொண்டு வாழ்வதுதான் நல்ல நாகரீகம். எல்லாருமே ஆண்டவனின் குழந்தைகள் தான். நாளைக்கு அவர்களை எல்லாம் நம் வீட்டிற்கு அழைத்திருக்கிறோம். அவர்கள் வந்தால், நம் இந்திய சுவாமிகள் பொம்மையை மட்டும் பார்த்தால், அவர்களுக்கு சின்ன ஏமாற்றம் வருமல்லவா? இப்ப, இந்தக் கொலுவில் அவர்களுடைய சுவாமி பொம்மையைப் பார்த்தவுடன், அவர்கள் மனதும் சந்தோஷப்படுமல்லவா? பண்டிகை கொண்ட்டாடுவதின் அர்த்தம் என்ன? எல்லாருக்கும் சந்தோஷம் கொடுக்க வேண்டும் என் பதுதானே” என எனக்குப் புரியும்படிச் சொன்னார்.
ஞாயிற்றுக் கிழமை வந்தவர்கள் எல்லாருமே அவர் சொன்னபடியே அந்தக் கொலுவில் ஏசு, மேரிமாதா, சர்ச் என எல்லாம் இருப்பதைப் பார்த்து விட்டு, மகிழ்ச்சியுடன் நம் சுவாமி பொம்மைகளைப் பார்த்து ஒவ்வோன்றும் எந்த சுவாமி, பெயர், ஏன் அப்படி இருக்கு என எல்லா விபரங்களையும் ஆசையுடன் கேட்டுத் தெரிந்து கொண்டார்கள். போகும் போது நான் கொடுத்த பழங்கள், பரிசுகள் என எல்லாவற்றையுமே மிகவும் ஆசையோடும் ஒவ்வோன்றும் கொடுப்பதில் உள்ள பொருள் என்னேன்னும் தெரிந்து கொண்டார்கள். உண்மையிலேலே, நம்மூரில் கொலுவுக்கு வருபவர்களைவிட அவர்களுக்குத்தான் நம் கலாசாரத்தைத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் அதிகம் இருந்ததையும் நான் உணர்ந்து கொண்டேன்.
அதே வருஷம் கிருஸ்த்மஸ் கொண்டாட்டத்தின் போது எங்களையும் அவர்கள் வீட்டிற்கு அழைத்தார்கள். சென்று பார்த்து அசந்து விட்டேன். அவர்களும், நான் நவராத்திரி நாளில் வைத்திருந்த பொம்மைக் கொலுவைப்போலவே, கிறிஸ்து பிறந்த நாளையம் அழகாக மாட்டுத் தொழுவத்தில் அன்னை மாதாவுக்கு குழந்தை ஏசு பிறந்திருப்பதைப் போலவே அலங்காரம் செய்து த்திருந்தார்கள். எங்களைப் சிரித்துக் கொண்டே, நம் வீட்டில் வைத்த கொலுவைப் பார்த்தவுஅடனே அவர்களுக்கும் தங்களின் தெய்வக் குழந்தையான ஏசுவின் பிறந்த நாளை இப்படி புதுன்விதமாகக் கொண்டாட் வேணுமெனு அவர்களின் குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றும் விதமாக அந்த வருஷம் அவர்கள் வீட்டில் சிறிஸ்த்மஸ் அன்று கொலுவைத்துக் கொண்டாட் மகிழ்ந்தார்கள். மரபு வழக்கம் என்பதெல்லாம் நம் மன சந்தோஷத்துக்குத்தானே.புரிந்து கொண்டேன் எங்கிருந்தாலும் நாம் நாமாக இருந்தால் நமக்கும் நல்லது நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் நல்லதே. முப்பது வருஷம் அந்நய நாட்டில் வசித்தோம் எங்கிற உணர்வே இல்லாமல், இந்தியாவில் இருப்பது போலவதான் சந்தோஷமாக வாழ்ந்தோம்.
அந்த வருஷத்திலிருந்து, நாங்கள் முப்பது வருடங்கள் அங்கேயே அவர்களில் ஒருவராக வாழ்ந்து முடிந்து, இந்தியா திரும்பும் வரையில், ஒவ்வோரு வருஷமும் மறக்காமல் என்னிடம் எந்த மாதம் நவராத்திரி கொலு வரும், பொம்மைகள் வைப்பீர்கள் என்றும் ஆவலோடு கேட்பது மட்டுமல்ல, வருஷந்தோறும் அவர்களும் ஆர்வமாக வந்து, என்னுடன் எல்லா அலங்காரம், கொலு படிக்கட்டுகள் வைப்பது, விளக்குகள் ஏற்றுவது என எல்லாவற்றிலுமே பங்கும் கொண்டார்கள்.
இப்பத் தெரிந்து கொள். நாம் எங்கிருந்தாலும் இருப்பவர்கள் எல்லாருமே நல்லவர்கள். மனிதர்கள். கலாச்சார பரிமாற்றத்தின் மூலமே நாம் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவும், மற்ற மதத்தில் உள்ள நல்ல சத்தாக விஷயங்களைப் புரிந்து கொள்ளவும் முடியும். இப்ப என்ன, புதிதாக வந்து, இரண்டு மாதங்கள்தான் ஆயின. அதிகம் பழக வில்லை என்றுதானே உனக்கு தயக்கம். இப்பத்தான் உங்களுக்கு வாட்ஸ்யப் குரூப் என்று வசதி இருக்கே. அதன் மூலம் நம் விட்டுக் கொலுவின் படத்தை அனுப்பு, சின்னதாக நவராத்திரியின் மகிமை என்ன என்பதையும் எழுதி அப்படியே அவர்கள் எல்லாரையும் நம் வீட்டிற்கு வரும்படியும் அழைத்து விடும். அதிலேயே, வருபவர்களின் வசதிப்படி, என்று எத்தனை மணிக்கு வர முடியும் எனவும் கேட்டு, அதற்குத்தகுந்தபடி, நீயும் அவர்களுக்கு செய்ய வேண்டிய மரியாதையையும் செய்து விடு. அவர்கள் வரும்போது நீயும் அவர்களுடன் சேர்ந்து, அவர்களின் மொழியிலேயே தெரிந்த சுவாமி பாட்டுக்களைச் பாடச் சொல். உனக்கும் தெரிந்திருந்தால் கூடவே பாடு. பின் என்ன நவராத்திரியும் களைகட்டி விடும். எல்லாம் அம்பாள் துணையிருப்பான். நீ ஒன்றும் செய்வதாக எண்ணாதே, எல்லாமே அம்பாள் தன் நவராத்திரியை நடத்திக் கொள்வாள். மனதை தெளிவாக வைத்துக் கொண்டு, மேற் கொண்டு செய்ய வேண்டிய ஏற்பாடுகளைச் செய்” எனவும் பரிவோடு சொன்னார் அத்தை.
புனிதாவும் அத்தையின் புத்திமதியைக் கேட்டு, நாம் செய்வது எதுவும் இல்லை. எல்லாமே அம்பாளின் அருளால் நன்றாகவே நிறைவேறும், நாமும் நம் கலாசாரத்தின் அருமை பெருமைகளை, மற்றவர்கள் புரிந்து கொள்ளும்படி சொல்லி, அப்படியே, அவர்களுடைய பண்டிகை, கொண்டாடும் முறை என எல்லாவற்றையும் தெரிந்து கொண்டால், எல்லாருமே சந்தோஷமாக வாழலாம். பண்டிகைகள் என்பது, ஒருவரையோருவர் பாசத்துடன் அணைத்துக் கொண்டு வாழ்வதுதானே. கலாசார பரிமாற்றம் ஒன்றுதான் மனித நேயம் வளர்வதற்காக வழியாகும்.” எனவும் மனதிற்குள் நினைத்து, பெரியவர்கள் இருப்பதும் எத்தனை நன்மையாக இருக்கு எனவும் மனதிற்குள் அத்தைக்கும் நமஸ்காரமும் செய்து கொண்டாள்.
அந்த வருஷமும் புனிதா வீட்டு நவராத்திரி கொலுவும் களை கட்டியது என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன. மனித நேயம் வளருவதற்கு ஒரே நல்ல வழி, கலாசார பரிமாற்றங்கள் தான். எந்த மதமானாலும், அடிப்படை கொள்கைகள் ஒன்றுதான். மனிதன் மனிதனாக வாழ வேண்டும். அன்பு, பாசம், பரிவு போன்ற உணர்வுகளுடன் இனைந்து வாழும் வாழ்க்கைதான் பிறந்ததற்காக பயனாகும்.
ஜெயா ரமணியாரே, நீங்கள் தானே அந்தப் புனிதா?
LikeLike