பல்லாண்டு வாழ்க! என்று மனதிற்குள் வாழ்த்தியபடியே உள்ளே நுழைந்தேன். பல் டாக்டராச்சே! அப்படித்தானே வாழ்த்த வேண்டும்.
இன்று மகத்தான நாள் என்பதால் கூட ஒருவரை கட்டாயம் அழைத்துக் கொண்டு வரவேண்டும் என்று ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்தார்கள். என் கணவரை கட்டாயப்படுத்தி என்னுடன் இழுத்துக் கொண்டு போனேன். அவருக்கு ஆஸ்பத்திரி என்றாலே அலர்ஜி. ரத்தத்தைப் பார்த்தால் மயக்கம் வந்து விடும். இங்கேயும் ரத்தம் வரும். ஆனால் உங்களால் பார்க்க முடியாது என்றெல்லாம் சமாதானம் சொல்லி அழைத்து வந்து டாக்டருக்கு பின்பக்கம் ஒரு சோஃபாவில் உட்கார்ந்தார். அங்கேயிருந்து பார்த்தால் என்ன நடக்கிறதென்று தெரியும்.
இன்று முக்கியமான நாள். ‘ரூட் கெனால்’ என்று சொல்லப்படும் பல்லின் வேர் சிகிச்சை எனக்கு செய்யப் போகிறார்கள், இரண்டு அடுத்தடுத்த பல்லுக்கு. அதற்கு நடுவே ஒரு சின்ன இடைவெளி இருக்கிறது. அதை இரண்டு முறை பில்லிங் முறையில் நிரப்பியாயிற்று. ஒன்றும் பலிக்கவில்லை. நிற்கமாட்டேன் என்கிறது. அவ்வப்போது விழுந்து விடுகிறது. டாக்டர் இந்த சிகிச்சை பற்றி மிகச் சுருக்கமாக ஓரிரு வார்த்தைகளில் சொன்னார். பல் சொத்தையானது அஸ்திவாரம் வரை சென்று விட்டால் அதை சரி செய்ய இந்த ‘ரூட் கெனால்’ சிகிச்சை செய்வார்கள். பல் கூழ் வரை ‘டிரில்’ செய்து பல்லில் இருக்கும் சொத்தை, சீழ் ஆகியவற்றை அகற்றிவிட்டு, அங்குள்ள நரம்பையும் வெட்டிவிடுவார்களாம்.
“அப்போ பல் செத்துப் போய் விடுமே டாக்டர்!” என்று வெகுளித்தனமாகக் கேட்டேன் நான். இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் ஒரு கணம் முழித்த டாக்டர் சுதாரித்துக் கொண்டு, “அதனாலென்ன? அந்தப் பல்லைத் தான் காப்பாற்றி விடுகிறோமே?” என்றார்.
‘செத்த பல்லுக்கு காரியங்கள் செய்து அனுப்பி வைக்காமல், காப்பாற்றுவாராமே?’ என் மைண்ட் வாய்ஸ் தான் – என்று இகழ்ச்சியுடன் அவரைப் பார்த்தேன். அவருக்கு அது கேட்டு விட்டதோ?
‘அம்மா! உங்களுக்கெல்லாம் சிகிச்சை செய்யணும்னா, நான் இன்னோருமுறை டாக்டருக்குப் படித்து விட்டு வந்தால் தான் உண்டு!’ இது டாக்டருடைய மைண்ட் வாய்ஸ். அவர் முகபாவத்திலிருந்து நான் புரிந்து கொண்டது.
‘இந்த முறையாவது சரியாகப் படித்து விட்டு வாருங்கள்!’ இது கீழ் உதடை சுழித்து நான் என் மைண்ட் வாய்ஸில் பதிலளித்தது.
டாக்டர் மரத்துப் போகப் போடப்படும் ஊசி போடும் முன்பே சொல்லி விட்டார். இந்த மருந்து வேலை செய்ய ஆரம்பித்தால் உங்களால் பேச முடியாது. ஏதாவது சொல்ல வேண்டுமானால் கையை தூக்குங்கள் என்று. அதைச் சொல்லும்போது அவர் சந்தோஷமாக சொன்னது போல எனக்கு ஒரு பிரமை. சற்று நேரம் இந்த அம்மா நம்மைக் கேள்வி கேட்டுக் குடையமாட்டார்களேயென்ற சந்தோஷம்.
நரம்பை அறுத்து பல்லின் உயிர் போய் விட்டாலும் அந்த இடத்தை நன்கு சுத்தப்படுத்தி குழியை நிரப்பிவிட்டு மேலே ஒரு மூடியைப் போட்டு விடுவார்களாம். ஈறிலேயே ஊசி போட்டு அந்த இடத்தை மரக்க வைத்தார். வாயை நன்றாகத் திறந்து வைத்துக் கொள்ளச் சொல்லி விட்டு டாக்டர் வேறு வேலையாக உள்ளே சென்று விட்டார்.
சுபாவத்திலேயே எல்லோருக்கும் ஓயாமல் அறிவுரைகள், ஐடியாக்கள் சொல்லும் வழக்கமுள்ள என் கணவருக்கு அந்த நேரத்தில் என்னிடம் நிறைய பேச வேண்டும் என்னும் துடிப்பு ஏற்பட்டது. முக்கியமாக நான் அங்கே எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி. கையை ஆட்டி ஆக்ஷன் செய்து சப்தம் வராமல் உதடுகளை மட்டும் அசைத்து எனக்கு ஏதோ புரிய வைக்க முயன்றார்.
ஆஸ்பத்திரியில் சப்தம் போடக் கூடாது என்பதாலும், என்னால் பேச முடியாததாலும் அங்கே ஒரு ‘மன் கீ பாத்’ செஷன், அதாங்க ‘மைண்ட் வாய்ஸ் செஷன்’, ஆரம்பித்தது.
மூட முடியாமல் திறந்த வாயுடன் இருந்த எனக்கு உதட்டை சுழித்து, “நீங்கள் சொல்வது எனக்கு புரியவில்லை” என்று கூட பாவனையாக சொல்ல முடியவில்லை. கையை விரித்து கீழும் மேலும் அசைத்து என் நிலைமையை சொன்னேன்.
அதற்குள் உள்ளே போன டாக்டர் வந்து விட்டார். “ஊம்! இன்னும் பெரிசா… இன்னும் பெரிசா….” என்று வாயை அகலப் பிளக்க வைத்தார். சர்க்கஸில் சிங்கத்தின் வாய்க்குள் புகும் நிபுணரின் நினைப்பு தான் எனக்கு வந்தது.
அப்புறம் ஆரம்பித்தது தான் கொடுமை. ஏதோ கூர்மையான இன்ஸ்ட்ருமெண்ட்டை உள்ளே விட்டு ராவும் வேலை ஆரம்பித்தது. நாக்கை வேறு மிகக் கஷ்டப்பட்டு ஒரு பக்கமாகவே வைத்துக் கொள்ள வேண்டியிருந்தது. மூடவே முடியாத வாய்! ஒரு பக்கமாக நாக்கு! நான் எப்படி இருக்கேன்னு கண்ணாடியில் பார்க்கலாமான்னு ஒரு நெனைப்பு வேறு மனதில் ஓடிற்று. டாக்டர் அசந்தர்ப்பமாக என்னைப் பார்த்து பெரிதாக ஒரு புன்னகை பூத்தார்.
“உங்களுக்கு க்ரௌன் வைக்கப் போறோமே!” என்றார் பெருமிதமாக. எனக்கு சத்தியமாக ஒன்றும் புரியவில்லை. நான் எந்த அழகிப் போட்டியிலும் கலந்து கொள்ள வில்லையே, அப்படியிருக்க ஒரு கிரீடம் எனக்கு எப்படி சாத்தியம்? என்ற கேள்வி என் அகல விரிந்த கண்களில் வியப்பாகத் தொக்கி நிற்க, அதைக் கண்டு பிடித்த என் கணவர், ‘இப்படியெல்லாம் வேற உனக்கு ஆசையா?’ என்று மைண்ட் வாய்ஸ் ஒலிக்க, ஏளனமாக முகத்தில் ஒரு பாவம் காட்டினார்.
வாய் முழுவதும், கன்னங்கள், உதடு, நாக்கு என்று எல்லாமே மரத்துப் போக நல்ல வேளை அந்த நேரத்தில் வலி தெரியவில்லை. ஆனால் உள்ளே பெரிய ஆபரேஷன் நடந்து கொண்டிருந்தது. கண்களை மூடிக் கொண்டு உட்கார்ந்திருந்த நான் அவ்வப்போது, அந்த ராவுகிற வேலையை வெளியே இருந்து செய்கிறாரா அல்லது வாயின் உள்ளேயே வந்து விட்டாரா என்ற சந்தேகத்திற்கு மட்டும் கண்களைத் திறந்து பார்த்தேன். ஒரு அரைமணி ராவு ராவென்று ராவி விட்டு பெருமூச்சு விட்டு நிமிர்ந்த டாக்டர், “இன்னும் கொஞ்ச நேரந்தான். முடிந்து விடும்!” என்றார் என்னைப் பார்த்து ஆறுதலாக. திரும்ப ஒரு முறை உள்ளே போனார். நான் தொய்ந்து போய் சேரில் சாய்ந்தேன்.
திரும்ப உற்சாகமாக வந்த டாக்டர், “உங்க பல்லில ஒரு இடைவெளி இருக்கு இல்லே? அதனால அதையும் சேர்த்து ஒரு பிரிட்ஜ் கட்டிடலாம்னு நினைக்கிறேன்.”
எனக்கு சஸ்பென்ஸ் தாங்கவில்லை. மொதல்ல கிரௌன் என்றார், இப்போ பிரிட்ஜ் என்கிறார். திரும்ப வேடிக்கையாக மனதில் ஒரு எண்ணம். இந்த பிரிட்ஜை திறந்து வைக்க யாரைக் கூப்பிடலாம்? மந்திரி லெவல்ல யாரையாவது கூப்பிடலாமா? வாயை மூட முடியாததால் கண்களில் மட்டும் தெரிந்த என் எண்ணத்தைப் புரிந்து கொண்ட என் கணவர் வாயை இகழ்ச்சியாக வைத்துக் கொண்டு முஷ்டியை கீழ் நோக்கி குத்தி ‘ஆசையைப் பார்த்தியா இவளுக்கு?’ என்று மைண்ட் வாய்ஸில் பேசினார். நான் முடிந்த மட்டும், மூட முடியாத வாயைக் கோணி, மூக்கை விடைத்து, கண்களை அகல விரித்து என் கோபத்தைக் காட்டினேன்.
ஒரு வழியாக ‘ரூட் கெனால்’ முடிந்து அடுத்த நாள் ‘பிரிட்ஜுக்கு’ அளவெடுத்து ரெண்டு நாட்களில் ‘பிரிட்ஜ்’ கட்டி முடித்து விட்டார் டாக்டர்.
“முறுக்கு மட்டும் சாப்பிடாதீங்கம்மா! ஹார்டா எதையும் கடிக்கக் கூடாது கொஞ்ச நாளைக்கு. வேற என்ன வேணாலும் சாப்பிடலாம்!” என்று என் சந்தேகங்களுக்கு டாக்டர் விடை சொல்லிக் கொண்டிருந்தபோது அன்று நல்ல வேளை என் கணவர் வராததால்,
“இவ கிட்டே போய் சொன்னீங்களே! நல்லா தினமும் நொறுக்குத் தீனி தின்னு தின்னு பழக்கம். அதைப் போய் விட முடியுமா என்ன?” என்ற நேரடி டயலாக்கை கேட்க வேண்டிய அவசியம் டாக்டருக்கு இல்லாது போயிற்று.