ஆதிபகவன், வாலறிவன், மலர்மிசை ஏகினான், இறைவன், எண்குலத்தான், வேண்டுதல் வேண்டாமைஇலான், தனக்குவமை இல்லாதான், ஐந்தவித்தான், அறவாழி அந்தணன் அனைவரும் ஒருவரா? சுந்தரராஜன் சியேட்டில்
திருக்குறள் அதிகாரத் தலைப்பு “கடவுள் வாழ்த்து “ தானே ! அது ஒருமையில்தான் இருக்கிறது. எனவே அவை ஒரே கடவுளையே குறிக்கிறது . ஒரு கடவுளின் பல பண்புகள் .அது மட்டுமல்ல வள்ளுவர் எங்கெல்லாம் தெய்வத்தைக் குறிக்கிறாரோ அவை ஒரே கடவுளையே குறிக்கின்றது. “ தெய்வம் மடிதற்றுத் தான் முந்துறும் “ என்னும் போதும் “வகுத்தான் வகுத்த வகையல்லால்” எனும் போதும் ,ஒரே கடவுள் என்ற பேராற்றலைத்தான் அவர் கூறுகிறார்
- . இன்று கவிஞர் என்று அறியப்படுபவர்களில் யாரைச் சிறந்த கவிஞராகத் தாங்கள் கருதுகிறீர்கள்? ( ராமமூர்த்தி அமெரிக்கா)
மரபில் காலுன்றிப் புதுக்கவிதையின் பல வடிவங்களிலும் செழுமை அழியாமல் எழுதிக் குவித்துள்ள எனது இனிய நண்பர் எண்பதைத் தாண்டிய பேராசிரியர் கவிஞர் தமிழன்பன் , புதுக்கவிதையின் ஆற்றலை , அழகியல் கெடாது சின்னச் சின்னச் வரிகளில் சித்திரமாய்ப் படைத்துள்ள கவிஞர் எஸ்.வைத்தீஸ்வரன் ஆகிய இருவரையும் இன்று வாழும் கவிஞரில் சிறந்தவராகக் கருதுகிறேன் .
- ஒரு மண்டலம் என்பதை சிலர் 48 நாட்கள் என்றும், சிலர் 45 நாட்கள் என்றும், சிலர் 40 நாட்கள் என்றும்கூறுகிறார்களே! (அன்னபூரணி )
ஒரு மண்டலம் என்பது மூன்று பட்சங்களைக் கொண்டது. ஒரு பட்சம் 15 நாட்களைக் கொண்டது. ( பிரதமை முதல் அமாவாசை அல்லது பவுர்ணமி வரை) எனவே 45 நாட்கள் சாத்திரப்படி சரியானது. சித்த மருத்துவத்தில் ஒரு மண்டலம் மருந்து உட்கொள்ள வேண்டுமென்றால் அது 48 நாட்களைக் குறிக்கும். மருந்து பூரணமாக செயல்பட மூன்று நாட்களை அதிகமாகச் சேர்த்துள்ளார்கள் என எண்ணுகிறேன் . நான் பல ஆண்டுகள் சபரிமலை சென்று தரிசனம் செய்துவந்தவன். வழிபட்டு முறையில் என் குருசாமி எனக்குச சொன்ன மண்டலம் என்பது 41 நாட்கள். இதிலே 40 எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை
- கிளியோபாத்ராவின் மூக்கு மட்டும் சற்றேவளைந்திருந்தால், உலக சரித்திரமே மாறி இருக்கும் என்ற மேற்கோளைப் பற்றி உங்கள் கருத்து என்ன? தேர்தல் முடிவுகள்வரும் போதெல்லாம் , கருணாநிதி இதைக் கூறுவார் (தென்காசி கணேசன்) .
அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைக்கக் கூடாது என்பது என் கருத்து. அதுவும் அழகிகள் விஷயத்தில்..நெவர்.! மூக்கு எப்படியிருந்தாலும், சீஸர் ஆண்டனி ஆகிய இருவர் கண்களுக்கும் அவள் பேரழகிதான். நீங்கள் குறிப்பிட்ட மெற்கோளை சொன்னவர் ப்ளேஸ் பாஸ்கல் ( Blaise Pascal)
(“The nose of Cleopatra: if it had been shorter, the whole face of the earth would have changed” ~ Blaise Pascal, )
- பாலன் தேவராயன் சுவாமிகள்எழுதியுள்ள கந்தர் சஷ்டி கவசத்தில், “சொக்கு சொக்கு சூர் பகை சொக்கு சூலை சயம் குன்மம் சொக்கு சிரங்கு என்ற வரிகளில் வரும் சொக்கு என்ற சொல்லின் பொருள் என்ன? மேலும், தூக்கம் கண்ணை சொக்கும், சொக்கும் அழகு! இந்த இரண்டு வாக்கியங்களில் வரும் சொக்கு என்ற சொற்கள் இரண்டும் ஒன்றா? இந்த சொற்களுக்கும் கந்தர்சஷ்டி கவசத்தில் வரும் சொல்லுக்கும் உள்ள ஒற்றுமை உண்டா ? (அன்னபூரணி ,சென்னை )
சொக்கு என்பதற்கு அழகு, மயக்கம் என இரு பொருள் உண்டு. கந்தர் சஷ்டிக் கவசத்தில் “சொக்கு சொக்கு சூர்ப்பகை சொக்கு” என்பதற்கு “மயக்கம் தரக்கூடிய பகையை மயக்கில் ஆழ்த்துவாய் எனப் பொருள் கொள்ளலாம். சொக்குச் சிரங்கு என்பது இணையாயின்றி மயக்கம், சிரங்கு என்று இரண்டாகப் பிரிந்து பொருள் தரும்.
- இது வரை வெளியாகி உள்ள பாரதியின் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளில் எந்த புத்தகம் சிறந்தது (வத்சலா , சென்னை )
இராஜாஜி, சேக்கிழார் அடிப்பொடி டி.என்.ஆர்; முனைவர் பிரேமா நந்தகுமார், டாக்டர் சுந்தரம், உஷா ராஜகோபாலன் ( பாஞ்சாலி சபதம் முழுவதும்) போன்ற பலர் அங்குமிங்குமாக பல பாடல்களை மொழிபெயர்த்துள்ளனர். முழுமையான தொகுப்பு இன்னும் வரவில்லை. தமிழ் தெரிந்தால் தமிழில் படிப்பதே சிறந்தது. எந்தக் கவிஞனுடைய கவிதையையும் அவன் எழுதிய மொழியிலேயே படித்தால்தான் அவற்றை முழுமையாக உணர முடியும்
பாரதியை ஆங்கில மொழிபெயர்ப்பில் படிப்பதற்குமுன், பாரதி அவரே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள அவரது கவிதைகளையும், அவர் எழுதிய ஆங்கிலப் படைப்புகளையும் படித்துப் பாருங்கள் என்பது எனது வேண்டுகோள். அதற்கான குறிப்பு கீழே கொடுத்துள்ளேன்.
Mahakavi Subramania Bharati’s English writings, which includes his journalistic pieces, letters and translations, edited by Mira T. Sundara Rajan, the poet’s great-granddaughter and brought out by Penguin, is a sincere attempt to place him within the literary atlas of ‘Indian’ literature.
- ஐயா! விநாயகர் அகவல் சங்கப் புலவர் ஔவை பாடியது என அறிகிரோம். அதேசமயம் பல்லவ காலத்தில்பரஞ்சோதி என்ற சிறு தொண்டர் மூலம் வாதபி கணபதி முதன் முறையாக தமிழ் நாட்டில்எழுந்தியருளினார் என்கிறது ஒரு சரித்திரச் செய்தி. சற்று குழப்பமாக உள்ளதே! (சந்திரமோகன் சென்னை )
இதில் குழப்பத்திற்கு ஏது இடம் ? விநாயகர் பழந்தமிழ்க் கடவுள் என்பது தமிழ்த் தோத்திரங்கள் மூலம் சங்ககால முதல் இருந்ததை அறிகிறோம். நமது நாட்டு தெய்வங்கள் எல்லாம் பாரத மண்ணை சார்ந்தவை. அந்தந்த இடத்திற்கு ஏற்பப் பெயர்கள் மாறும். மும்பையில் பணி புரியும் இளைஞனுக்குப் பெண்ணைக் கொடுக்கும் தமிழ்நாட்டு மாமனார் “மும்பை மாப்பிள்ளை” என மாப்பிள்ளையை அழைப்பது போலத்தான் இதுவும். வாதாபியிலிருந்து வந்ததால் அவர் வாதாபி கணபதி. ஆனால் அவர்தான் தமிழ்நாட்டின் முதல் கணபதி என்று சொல்ல இயலாது.
8 இன்றைய கல்வியின் தரம் அறிவியல் வழியாக முன்னோக்கி, மாணவர்களை அழைத்துச் செல்வது போல்தோன்றினாலும், நம் காலத்தில் நம் பள்ளியில் மாணவர்களின் திறமையை ஞாபகசக்தி, சுயமாகசிந்தித்தல், சுயனம்பிக்கை, நல்ல கருத்துக்கள் நிறைந்த கட்டுரைகள், கேள்வின் பதில்கள்கலந்துரையாடல், உடனடியாக கதைகள் சொல்லுதல் என பலவகையில் மாணாக்கர்களின் திறமையை, மன உறுதியை, ஒற்றுமையை, அன்பு என்ற சங்கிலியால் ஒன்றாக இணைந்து வளர்ந்தோம். நம் காலத்தில்மாணவர்களுக்கு கிடைத்த இத்தனை நல்ல வழிகளில் இன்றைய மாணவர்களின் பயணம் இல்லாமல்இருப்பது போல் எனக்குள் ஒரு ஏக்கம். ஆசிரியராக தங்களின் கருத்தும் தீர்மானமும் சொல்லுங்கள். (ஜெயரமணி. பங்களூர் )
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை. இதே கருத்தைப் பல மேடைகளில் நான் பகிர்ந்துகொண்டுள்ளேன். ஏற்கனவே நல்லொழுக்கம் சொல்லித்தரப் படாத சூழலில் வளரும் இளைய தலைமுறை தற்போது , குறிப்பாகத் தமிழகத்தில் மதுவுக்கும் போதைப் பொருளுக்கும் அடிமையாகிக் கொண்டு இருக்கிறார்கள் என்பது ,கூடுதல் கவலையாகும். விழிப்புணர்வு நிகழ்ச்சிகளே இதற்கு விடை.
- சங்கப் புலவர்கள் முதல் நாமறிந்த கண்ணதாசன், வைரமுத்து வரை திறன் வாய்ந்த புலவர்கள்மன்னனாலும் மக்களாலும் பாராட்டப் பட்டு பொன்னும் பொருளும் பரிசாகப் பெற்று மதிப்போடுவாழ்ந்ததாக அறிகிறோம். இடையே நம் பாரதிக்கு மட்டும் ஏன் வறுமை நிலை? (மோகன், மணப்பாறை)
பொன்னையும் பொருளையும் தங்களைப் புகழ்ந்து மகிழ்வித்த புலவர்களுக்கு அக்கால அரசர்கள் கொடுத்ததைப் போல் ,பாரதி வாழ்ந்த காலத்தில் இருந்த குறுநில மன்னர்களும் ஜமீந்தார்களும் தம்மைப் பாடி மகிழ்வித்த புலவர்களுக்குப் பொருள் கொடுத்து வளர்த்தார்கள்.. மக்களாட்சி மலர்ந்த பிறகு திரைப்படங்கள் மூலம் மக்களை மகிழ்விக்கும் கவிஞர்களுக்கு பேரும், செல்வமும், புகழும் கிடைத்துக் கொண்டுதான் இருக்கின்றன.
இந்த நீண்ட பட்டியலில் இருந்து பாரதி விடுபட்டு நின்று வறுமையில் உழன்றதற்குக் காரணம், அவன் கொண்ட கொள்கை. ஆங்கிலேயருக்கு அடிமைகளாய்க் கிடந்த சிற்றரசர்களையும் ஜமீந்தார்களையும் அவன் பாடவிரும்பவில்லை.
“திமிங்கல உடலும் புன் சிறுமதியும் ஓரேழு பெண்டிரும் “ கொண்ட ஆண்மையற்ற சிறு மன்னர்களைப் பாட அவன் விரும்பவில்லை. அந்த சமஸ்தானத்திலே அப்படி அவனுக்கு என்ன வேலை ? எட்டயபுரம் ஜமீந்தாருக்கு சிருங்கார ரஸம் ததும்பும் பாடல்களைப் பாடியும், செய்தித்தாள் படித்துக் காட்டியும், இன்னபிற இன்பக் கதைகள் உரையாடியும் மகிழ்ச்சியுறச் செய்யவேண்டும். இதைச் செய்திருந்தால் பாரதி வறுமையிலே வாடியிருக்கமாட்டான்.
“காற்றடித்த பக்கமவன் சாய்ந்திருந்தால் கனகமணித் தொட்டிலிலே வாழ்ந்திருப்பான்” என்றொரு கவிஞர் பாடினார்.
- அலெக்ஸாவை நீங்கள் விரும்புகிறீர்களா ? (சாய்நாத் கோவிந்தன், சென்னை )
Jules Verne (1828-1905),H. G. Wells (1866-1946) Robert Heinlein (1907-1988), Arthur C. Clarke (1917-2008), Frank Herbert (1920-1986) Isaac Asimov (1920-1992), Ray Bradbury (1920-2012) William Gibson (1948 – ) போன்ற பல ஸயின்ஸ் ஃபிக்ஷன் எழுத்தாளர்களைப் படித்திருக்கிறேன். அறிவியல் வளர்ச்சியைச் சொல்லும் போதே அதன் அபாயங்களையும் சொன்னவர்கள் இவர்கள். அவையெல்லாம் இன்று நிஜமாகிக் கொண்டு வருகின்றன. மனித குலத்தை முழுச் சோம்பேறியாக்கும் அபாயத்தின் தொடக்கம் அலெக்ஸா. 10,000 ரூபாய்க்கு அமேஸானில் கிடைக்கும் அலெக்ஸாவை வாங்கி, ஸ்மார்ட் போன், டிவி மின்விசிறி என வீட்டிலுள்ள அனைத்து மின்சார சாதனங்களையும் அவற்றோடு இணைத்துவிட்டால் எல்லா செயல்களையும் “ரிமோட்” நிலையிலேயே இயக்கலாம்.
எல்லாம் சரிதான். உடற்பயிற்சியின்றி, நோயாளிபோல் இந்த சுகத்தில் வாழ்த் தொடங்கினால், சீக்கிரம் உண்மையான நோயாளியாகவே ஆகிவிடும் ஆபத்து காத்திருக்கிறது.
நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு பதில் “ விரும்பவில்லை”
மிக அருமையான பதில்கள். குறிப்பாக இறுதிக் கேள்விக்கான பதிலை நான் மிகவும் ரசித்தேன்.
இன்றைய மாணவர்களின் ஒழுக்க நெறியை உயர்த்த, திருக்குறளுக்குப் பள்ளிகளில் நாளும் ஒரு வகுப்பை ஒதுக்குவது நல்ல முயற்சியாகப் பலன் தரும்.
LikeLike