அதிசய உலகம் -2
‘நடுவயது நம்பி’
இந்த நடுவயது நம்பியின் பாதி ஆயுள் முடிந்தது.
உடல் எரிய, எரிய, அவன் வாழ்க்கை தொடர்கிறது.
இன்னும் வாழும் நாட்களும் எரிந்து கொண்டு தான் வாழவேண்டும்.
யாரைச் சொல்கிறோம்?
அட, நம்ப சூரியனைத் தான்.
சூரியனுக்குப் பத்து பில்லியன் வருட ஆயுள்.
ஐந்து பில்லியன் கழிந்துவிட்டது.
ஹைட்ரஜன் தான் அவனது சாப்பாடு.
அதை பிசைந்து சாப்பிட்டு,
அந்த வெப்பத்தில் அவன் ஜொலிக்கிறான்.
பூமி அவனது வெப்பத்தில் உயிர் வாழ்கிறது.
ஆனாலும், அமாவாசைச் சாப்பாடு என்றும் கிடைக்குமா?
ஹைட்ரஜன் என்ன, எடுக்க எடுக்கக் குறையாத அமுதகலசமா?
இன்னும் ஐந்தே பில்லியன் வருடம் தான் சரக்கு.
அப்புறம் ஹைட்ரஜன் சாப்பாடு காலி.
அந்நாளில்,
சூரியன், வாழ்க்கையின் ஓரத்துக்கு வருகிறான்.
பசி.
சூரியப்பசி.
தன்னிடமிருந்து பத்து பில்லியன் வருடமுன் பிரிந்து சென்ற கோளங்களை நினைத்துப்பார்க்கிறான்.
வியாழன், சனி அனைத்தும் கையிலடங்காத தூரம் போய்விட்டது. மெர்குரி, வீனஸ், பூமி மட்டும் கையெட்டும் தூரத்தில் இருக்கிறது.
ஏ பூமியே!
எத்தனை காலம் உனக்கு உயிர் கொடுத்தேன்!
இன்று உணவுக்காக ஏங்குகிறேன்!
உயிருக்காகத் தவிக்கிறேன்!
என் தனி ஒருவனுக்கு உணவு இல்லையென்றால்,
ஜகத்தினை அழிப்பது தானே முறை!
நான் போனால், நீயும் போகவேண்டியது தான்.
உயிரே.. உயிரே.. இன்று என்னோடு கலந்துவிடு.
அணையப்போக்கும் விளக்கு பிரகாசிக்குமாமே!
நாம் மீண்டும் சேரும் போது எனது உடல் பன்மடங்கு ஒளியில் பிரகாசிக்கும்.
சேர்ந்தே பிறந்தோம்.
சேர்ந்தே மறைவோம்.
உன்னுடன் வாழ்ந்து மறைந்த உயிரினங்கள் எண்ணிலடங்கா!
அவர்கள் ஆத்மா என்னுடன் சேரட்டும்.
இன்று உன்னிடம் வாழும் உயிர்களுக்கு மறுபிறப்பு கிடையாது!
அவர்கள் பிறவிப்பெருங்கடல் கடந்தவர்கள்!
வா.. அருகில் வா!
தா.. உயிரைத் தா!
[
வானியல் ஆராய்ச்சி சொல்வது:
பத்து பில்லியன் வருட முடிவில்,
சாகும் நேரத்தில், சூரியன் – மெர்குரி, வீனஸ், பூமி கிரகங்களை விழுங்கி ஏப்பம் விட்டு, பேரொளியைச் சிந்திவிட்டு, சிவப்புக் கோளமாக மாறுமாம்.
https://www.indiatoday.in/amp/science/story/sun-solar-system-inner-planets-venus-mercury-earth-geomagnetic-storm-cme-1990904-2022-08-22
]