அலாரம் அடித்தவுடன் சட்டென்று எழுந்து பல் விளக்கி குளித்து சீருடை அணிந்து கண்ணாடியில் முகம் பார்த்து தலை சீவிக் கொண்டே சமையலறையை நோட்டமிட்டான் ஜனா..
தலையில் கை வைத்து தரையில் வெற்றுப் பார்வையுடன் புவனா..
“நேரமாச்சு.. பஸ் வந்துரும்.. காப்பி கொடு”
நிமிர்ந்து அவனைப் பார்த்தவள்..
“பொடி இல்லை..”
ஜனாவுக்கு சலிப்பு..
“பக்கத்து வீட்டுல கேட்க வேண்டியது தானே?”
“நிறைய கேட்டு வாங்கியாச்சு.. பேச்சும் கேட்டாச்சு.. இனிமே முடியாது”
ஜனாவுக்கு சுர்ரேன்று ஏறியது..
“வாங்கற சம்பளத்துக்குள்ள குடும்பம் நடத்தத் துப்பில்லை”
“குடும்பம் நடத்தற மாதிரி நீ சம்பாதிச்சுக் கொடு.. அப்புறம் பேசு.. கொடுக்கற சல்லிக் காசு மாசத்துல நாலு நாளைக்கே தாங்க மாட்டேங்குது”
“ஏய்.. ரொம்பப் பேசறே.. இப்பக் காப்பி கொடுக்கப் போறயா இல்லையா?”
“இனிமே என்னால பக்கத்து வீடு எதிர்த்த வீடுன்னு போய் பிச்சை எடுக்க முடியாது.. இல்லைன்னா இல்லை.. அவ்வளவு தான்”
புவனாவின் குரலில் தீர்மானம் தொனித்தது.
இயலாமை ஆத்திரத்தில் கையிலிருந்த சீப்பை அவள் மீது வீசி எறிந்த ஜனா வெளியே விரைந்தான்..
ஷாப் புளோரில் எல்லோரும் வேலையில் மூழ்கியிருக்க லேத்தை இயக்கிக் கொண்டிருந்த ஜனாவுக்கு மனது சஞ்சலித்தது..
“குடும்பம் நடத்தற மாதிரி நீ சம்பாதிச்சுக் கொடு.. அப்புறம் பேசு”
புவனாவின் குரல் எதிரொலித்து அவனை தொந்தரவு செய்தது..
“இனிமே என்னால பக்கத்து வீடு எதிர்த்த வீடுன்னு போய் பிச்சை எடுக்க முடியாது”
உடன் இருந்த சரவணனிடம் பார்த்துக் கொள்ளும்படி பணித்து ஷாப் புளோர் வாசலுக்கு வந்து சிகரெட் பற்ற வைத்தான்..
புவனா சொல்வது நியாயம் தான்.. சம்பளத்தில் பாதியை தங்கையின் கல்யாணத்துக்கு வாங்கின கடனுக்கு தாரை வார்த்து விட்டு மீதியில் அவன் செலவு போக சொச்சத்தை அவளிடம் கொடுப்பான்.. அதில் அவள் வீட்டு வாடகை கொடுப்பாளா.. மளிகை வாங்குவாளா.. குழந்தைக்கு வைத்தியம் பார்ப்பாளா.. புரிந்தாலும் அவனால் எதுவும் பண்ண முடியவில்லை.. இந்த வேலையை விட்டால் வேறு வேலை கிடைப்பது குதிரைக் கொம்பு தான்.. அப்படியேக் கிடைத்தாலும் இப்போது வாங்கும் சம்பளம் நிச்சயம் கிடைக்காது.. அவனுடைய இந்த இயலாமை தான் வீட்டில் ஆத்திரமாகவும் கோபமாகவும் வெளிப்படும்.. சில சமயம் அது எல்லை மீறி புவனாவின் மீது கை ஓங்குவதிலும் முடியும்..
ஒரு முறை தாக்குதல் காட்டுமிராண்டித்தனமாக மாற.. மறுநாளே தொழிற்சாலை பொது மேலாளரை பிரயத்தனப் பட்டு சந்தித்து கண்ணீருடனும் இடுப்பில் குழந்தையுடனும் புகார் செய்தாள் புவனா.. பொது மேலாளரும் ஜனாவைக் கூப்பிட்டு விசாரித்தார்.. உடன் பொது மேலாளரின் பி.ஏ. ஷாலினியும் இருந்தாள்.. அது தான் சாக்கென்று தன் இயலாமையை எடுத்துச் சொல்லி சம்பள உயர்வு கேட்டான் ஜனா.. ஆனால் அதற்கெல்லாம் ரூல்ஸ் இடம் கொடுக்காதென்று மறுத்த பொது மேலாளர் அவனுக்கு உபதேசம் செய்து இருவரையும் சமரசம் செய்து அனுப்பி வைத்தார்.. ஜனாவை தான் கவனித்துக் கொள்வதாக புவனாவுக்கு தைரியம் சொன்னார்..
சொன்னது போலவே சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ஜனாவை தனியாக அழைத்து பொது மேலாளர் விசாரித்தார்.. அவர் கூடவே இருக்கும் ஷாலினியும்..
”ஜனா”
ஷாப் புளோர் சூப்பர்வைசர் குமாரின் அதட்டல் குரல்..
“வேலை நேரத்துல இங்க என்ன பண்ணிட்டிருக்கே?”
“இல்லை சார்..”
“என்ன இல்லை சார்.. நானும் கவனிச்சிட்டு தான் இருக்கேன்.. வர வர நீ வேலைல கவனமாவே இருக்க மாட்டேங்கறே.. நேத்து உன் அஜாக்ருதைனால நூறு பீஸ் கேஸ்கட் ஸ்பெசிபிகேஷன் மாறி விழுந்திருக்கு.. நான் மேலிடத்துக்கு ரிபோர்ட் பண்ணிட்டேன்..”
“என்ன சார்.. அது என் தப்பு இல்லை.. கூட சரவணன்..”
“சரவணன் அப்ப அங்க இல்லை.. நான் சொல்லி ஸ்டோருக்குப் போயிருந்தான்..”
“வந்து சார்..”
“என்ன வந்து போயி.. எதுவும் நடக்காது.. மேலிடம் உன்னைக் கூப்பிட்டு விசாரிக்கத் தான் போகுது.. அநேகமா அந்த நூறு பீசோட விலையை உன்னைக் கட்டச் சொல்லுவாங்க.. இல்லை மாசா மாசம் உன் சம்பளத்துல பிடிக்க உத்தரவு போடுவாங்க”
இதைக் கேட்டு ஜனாவுக்குப் பதட்டம்..
ஏற்கனவே வீட்டில் அநியாய பற்றாக் குறை.. இதில் சம்பளத்தில் கேஸ்கட் விலையைப் பிடித்தால்.. சில மாதங்களுக்கு கையில் எதுவுமே வராதே..
“சார்.. ஏதோ தப்பு நடந்து போச்சு.. இதை எதுக்கு சார் மேலிடத்துக்கு ரிபோர்ட் பண்ணீங்க?”
“ரிபோர்ட் பண்ணாம? அந்த நஷ்டத்தை யாரு ஈடுகட்டறது? நான் தானே பதில் சொல்லணும்.. இதப் பாரு.. தப்பு எங்க நடந்தாலும் உடனே ரிபோர்ட் பண்ணிருவேன்.. நீன்னு இல்லை.. அது யாரா இருந்தாலும் சரி”
“என்ன சார் பெரிய தப்பு? நான் என்ன திருடிட்டேனா? இல்லை வேலை நேரத்துல தண்ணி அடிச்சிட்டு வந்து கலாட்டா பண்ணினேனா? ஏதோ.. ஒரு தடவை வேலைல சின்ன தப்பு நடந்து போச்சு.. அதைப் போய் பெரிசு பண்ணறீங்க?”
“எது சின்ன தப்பு? நூறு கேஸ்கட் உனக்கு சின்ன தப்பா? ஒரு கேஸ்கட்டோட புரொடக்ஷன் விலை என்ன தெரியுமா உனக்கு? இது என்ன வீட்டுல குக்கர்ல மாட்டற சாதாரண கேஸ்கட்டா? இண்டஸ்ட்ரியல் கேஸ்கட்.. இதைப் போய் சின்ன தப்புன்னு சொல்றே.. நோ.. நோ.. என்னால இதை அனுமதிக்க முடியாது.. அதோட இப்ப வேலை நேரத்துல இங்க நின்னு சிகரெட் பிடிச்சிட்டிருக்கே.. இதோ.. ஷாப் புளோர்ல இருக்கிற அத்தனை பணியாளர்களும் சாட்சி.. இதையும் மேலிடத்துக்கு ரிபோர்ட் பண்ணப் போறேன்.. நிச்சயமா உன் சீட்டு கிழிஞ்ச மாதிரி தான்”
இதைக் கேட்டு ஜனாவுக்கு முணுக்கென்று கோபம் இமாலயத்தைத் தொட்டது..
“பண்ணுங்க சார்.. ரிபோர்ட் பண்ணுங்க.. அப்புறம் நீங்க எப்படி நிம்மதியா இருக்கீங்கன்னு நானும் பார்க்கறேன்”
“ஏய்.. என்ன மிரட்டறயா? யாரு கிட்டப் பேசிட்டிருக்கே தெரியுமா?”
“போடா.. உன்னைப் பத்தி எனக்குத் தெரியாது.. மத்தவங்களை வேவு பார்த்து போட்டுக் கொடுக்கறது தானே உன் பிழைப்பே.. சாவு கிராக்கி”
“என்னது சாவு கிராக்கியா? என்ன லேங்குவேஜ் இது.. நான் இதையும்..”
குமார் முடிப்பதற்குள் அவருடைய வலது கன்னத்தில் ஜனவின் கை இடியாக இறங்கியது..
குமார் நிலை தடுமாறி கீழே விழுந்தார்..
இதை கவனித்த சக ஊழியர்களுக்கு அதிர்ச்சி.. ஷாப் புளோரே ஒரு கணம் ஸ்தம்பித்தது..
விஷயம் வைரலாக.. புரொடக்ஷன் மேனேஜர், பர்சனல் மேனேஜர் என்று சகலரும் அங்கு ஆஜர் ஆகி விட்டனர்..
என்ன செய்வதென்று புரியாத சூழ்நிலை..
அந்த சமயம் பொது மேலாளர் எதேச்சையாக அங்கு வந்தார்..
“என்ன.. எனி பிராப்ளம்?”
குமாரை ஜனா அறைந்த விவரத்தை பர்சனல் மேனேஜர் மெதுவாக விளக்க..
பொது மேலாளர் முகத்தில் கோபம்..
“ஜனா.. இங்க வா..?”
ஜனா பவ்யமாக அவர் முன் வந்தான்.
“சூப்பர்வைஸர் குமாரை நீ அடிச்சியா?”
ஜனா எதுவும் பேசாமல் தலை குனிந்தான்..
“சொல்லு.. குமாரை நீ அடிச்சியா?”
“வந்து.. ஆமா”
”அட்ராஷியஸ்.. ஏன் அடிச்சே?”
ஜனா கண நேரம் யோசித்தான்..
“சார்.. சூப்பர்வைஸர் என் குடும்பத்தைப் பத்தி தப்பாப் பேசினார்.. உடனே கோபம் வந்து..”
அவன் முடிப்பதற்குள் குமார் பதட்டமானார்..
“சார்.. பொய் சொல்லறான்.. நான் இவன் குடும்பத்தைப் பத்தி எதுவும் பேசலை.. இவன் வேலைல பண்ணின தப்பைப் பத்தித் தான் பேசினேன்”
“இல்லை சார்.. என் பொண்டாட்டியைக் கேவலமாப் பேசினார்..”
“ஐயோ இல்லை சார்”
பொது மேலாளர் பொறுமை இழந்தார்..
“ஸ்டாப் இட்”
குமாரின் கண்களை நேரிடையாகப் பார்த்தார். அதில் கலப்படமில்லாத பதட்டம் தெரிந்தது.. கொஞ்சம் விட்டால் அழுது விடுவார் போல் இருந்தது..
“குமார்.. கொஞ்சம் என் கேபினுக்கு வாங்க.. ஜனா நான் சொல்ற வரை நீ ஷாப் புளோருக்குள்ள காலெடுத்து வைக்கக் கூடாது.. போங்க.. போய் எல்லாரும் வேலையைப் பாருங்க”
கோபத்தோடு அங்கிருந்து நகர்ந்தார்..
மற்றவர்களும் கலைந்தார்கள்..
பொது மேலாளர் அறைக்குள் குமார் தயங்கியபடி நுழைந்தார்..
அங்கே ஏற்கனவே பர்சனல் மேனேஜரும் ஷாலினியும் இருந்தார்கள்.
“வாங்க.. உட்காருங்க”
குமாருக்கு அது உரைக்கவில்லை..
“சார்.. என் பொண்டாட்டி குழந்தைங்க மேல சத்தியமாச் சொல்றேன்.. நான் ஜனாவோட குடும்பத்தைப் பத்தி எதுவும் பேசலை.”
அவர் கண்களில் கார் கால தாமிரபரணி..
பொது மேலாளர் அவரை அமைதியாகப் பார்த்து..
“குமார்.. ரிலாக்ஸ்.. என்ன நடந்திருக்கும்னு என்னால நல்லாவே யூகிக்க முடியுது.. உங்களைப் பத்தி எனக்குத் தெரியும்.. பண்ணின தப்பை மறைக்க ஜனா பொய் சொல்றான்.. நடந்ததை ஒரு கம்ப்ளெய்ண்டா எழுதி ஷாலினி கிட்டக் கொடுங்க.. பர்சனல் மேனேஜர் கிட்ட பேசிட்டேன்.. உடனே ஜனாவுக்கு சஸ்பென்ஷன் ஆர்டர் கொடுத்து விசாரணை பண்ணிரலாம்.. எப்படியாவது வேலையை விட்டுத் தூக்கிரலாம்.. இது போல ஆளு தொடர்ந்து வேலைல இருந்தா மத்த வொர்க்கர்ஸையும் கெடுத்துருவான்”
“ரொம்ப தேங்க்ஸ் சார்”
“கவலைப் படாதீங்க.. உங்களை மாதிரி சின்ஸியர் எம்ப்ளாயி தான் இந்த கம்பெனிக்கே முதுகெலும்பு.. உங்களுக்கு எப்பவும் என் முழு ஆதரவு உண்டு.. வேலைல உங்க அவுட்புட் இஸ் வெரி குட்.. கீப் இட் அப்”
“ஓக்கே சார்”
“அடுத்த பிரமோஷன் லிஸ்டுல கண்டிப்பா உங்க பேர் இருக்கும்”
“ரொம்ப தேங்ஸ் சார்”
பொது மேலாளர் குமாரிடம் சொன்னது போலவே ஜனா சஸ்பெண்ட் செய்யப் பட்டான்..
சாதாரணமாகவே யூனியனுக்கும் அவனுக்கும் ஒத்து வராது. அதனால் இந்த விஷயத்தில் தலையிட யூனியன் ஆர்வம் காட்டவில்லை..
விசாரணையும் நடந்தது..
ஜனாவுக்கு எதிராக அவனைப் பிடிக்காத சில சக பணியாளர்களே சாட்சி சொன்னார்கள்..
ஜனாவின் பதில்கள் ஏற்கப் படாமல் அவன் டிஸ்மிஸ் செய்யப் பட்டான்..
குன்னூர் அருகே ஒரு காப்பி எஸ்டேட்..
ப்ரிட்ஜ், டிவி என்று சகல வசதிகளுடன் ஒரு வீடு..
அதில் கையில் குழந்தையுடன் மலர்ச்சியான புவனா..
அருகில் கொஞ்சம் தெளிவான ஜனா..
“என்னங்க.. எதுவும் புரியலை.. ஒரு வேலை போச்சு.. உடனே அதை விட இந்த நல்ல வேலை கிடைச்சுது.. நல்ல வாழ்க்கையும் கிடைச்சுது.. எப்படி ஏதுன்னு கேட்டா எதுவுமே சொல்ல மாட்டேங்கறீங்க.. தயவு செய்து சொல்லுங்க.. உண்மைல இது யாரோட எஸ்டேட்?”
”அவசியம் தெரியணுமா? எங்க பொது மேலாளரோட குடும்ப எஸ்டேட்”
“அவர் தானே உங்களை வேலையை விட்டுத் தூக்கினார்”
“அவர் தான் இங்க மேனேஜர் வேலையும் கொடுத்தார்”
”அதான் ஏன்?”
“நான் நல்லபடியா நாடகம் நடிச்சதுக்காக”
“நாடகமா? என்ன சொல்றீங்க?”
“சூப்பர்வைஸர் குமாரை கன்னத்துல அறைஞ்ச நாடகம்”
புவனாவுக்குப் புரியவில்லை..
“எதுக்கு?”
ஜனா அவளைப் புதிராகப் பார்த்தான்..
“பி.ஏ.வோட நெருக்கமா இருக்கணும்னா அது பேக்டரி சூப்பர்வைஸர் கண்ணுல படாம இருக்கணும்.. அப்படி அவர் கண்ணுல பட்டா இப்படித் தான் நாடகமாடி அவர் வாயை அடைக்க முடியும்.. பொது மேலாளர் தன் பி.ஏ.வோட உல்லாசம்னு புகார் கொடுக்க நினைச்ச சூப்பர்வைஸர் குமார்.. அவர் தன்னைப் பத்தி எல்லார் முன்னாலயும் பெருமையாப் பேசினதுனாலயும்.. பிரமோஷன் லிஸ்டுல அவர் பேர் இருக்கப் போறதை நினைச்சும்.. இப்ப அதே குமார் பொது மேலாளரோட தாசானு தாசன்”