பார்த்திருக்க கூடுமோ
இரவினை கவ்வி ஓடி
ஒருவன் வேண்டியபடி
ஒருவனுக்கு மரணத்தை பரிசளிப்பதை
இரட்டை குதிரை பூட்டி
அழுத்தி நகர்த்தும் அத்தேரில்
நூறாயிரம் கொலையாளிகள்
ஈம விளக்கின் ஔியில்
வரும்படியாகவோ
செல்லும்படியாகவோ
சக்கரங்களை பழுதுபார்த்தபடி
அறுபட்ட முண்டங்களும் துண்டங்களும்
காதல் தோல்வி பெயரிலோ
தனித்து விட்டதின் பெயரிலோ
விரக்தியின் பெயரிலோ
பித்தின் பெயரிலோ
மரிக்கும் எல்லாமரின்
சுயகொலைகளின் ஆப்ஷனாகி விடுகிறததுவே
நூற்றவரை இழுத்து வருபவனுக்கு
எதிரே நிற்கும்
அவ்வொருவன் மீதேன் போகிறது இரக்கமற்று
பழுதடைந்து பாதியிலேயே நின்றிட கூடாதேன் நகர்வற்று
அச்சிறு நிமிடங்களில் ஈம விளக்கில்
கரைகிறது சுயத்தின் ஆன்மா
வழக்குகள் தொடுக்கவியலா
கொலைகளை வழங்கியபடி
கொன்று குவித்த சடலத்தில்
சுகித்து கிடக்க முடியுமோ
அச்சடலத்தின் மீதேறி
எப்படி கடந்தேகியிருப்பான்
அவ்விரவை
மனைவியிடமோ பிள்ளைகளிடமோ
கபாலம் பிளந்து கதறி அழுது முடிக்கிறான்
இரவு அவனை மெல்ல மூடுகிறது
அம்மா..ர்ர்ர்….கீங்ங்ங்
துவங்கிறது கதறல்
ஒன்றுமில்லை
அடுத்த நாள்
அதே ரயில்
அதே கொலையாளிகள்
எதிர்பாராதபடி ஒரு மரணன்
இந்நேரத்திலும் ஒருவன்