(குழந்தைக் கண்ணனைக் கொல்லக் கோகுலம் வந்த சகடாசுரன், வண்டிச் சக்கரத்துள் புகுந்து மறைந்து கொண்டு காத்திருந்தான்)
சகடாசுரன் காத்திருத்தல்
உள்ளும் புறமும் உறைவானை
உலகம் எல்லாம் நிறைவானை
அள்ளும் அமுதம் அனையானை
ஆற்றும் மூன்று வினையானை
வெள்ளத் தரவில் கிடப்பானை
வேதம் நான்கும் கடப்பானைக்
கள்ளத் தனமாய்க் கொல்வதற்குக்
காலின் உள்ளே காத்திருந்தான்.
(மூன்று வினை – ஆக்கல், காத்தல், அழித்தல்)
( காலின் உள்ளே – சக்கரத்தின் உள்ளே)
குழந்தை அழுதல்
பாலை விரும்பிக் கேட்பதைப்போல்
பச்சைக் குழந்தைக் கண்ணனவன்
ஓலம் இட்டுக் குரலெழுப்பி
உரக்க அழுதும் பயனில்லை
மேலும் வீட்டில் எழுகின்ற
விருந்தின் ஓசை அதையடக்கக்
காலை உதைத்து மிகவீசிக்
கதையை முடிக்க முடிவெடுத்தான்.
குழந்தை, காலால் உதைக்க வண்டி உடைந்து சக்கரம் நொறுங்குதல்
கிடுகிடு கிடுவெனப் பதத்தினைக்
கிளர்வுறு மதலையும் பதிக்கவே
விடுவிடு விடுவென முடிக்கவே
விரைந்திடும் விதத்தினில் உதைக்கவே
படபட படவென முறிந்ததே
படியினி லடுதுயர் இரிந்ததே
இடியென ஒலிமிக வெடித்ததே
இயங்கிடும் சகடமும் பொடித்ததே
(படியினில் – பூமியில்)
( இரிந்ததே- விலகியதே)
சகடாசுரன் இறந்து வைகுந்தம் சேர்தல்
அஞ்சி வந்த ஆயர்கள்
அங்கே உடைந்த வண்டிகண்டார்.
கொஞ்சும் சதங்கை மணியொலிக்கக்
குழந்தைக் கண்ணன் மலர்போன்ற
பிஞ்சுப் பாத உதைபட்டுப்
பிரிந்த அரக்கன் உயிர்சென்று
தஞ்சம் என்று வைகுந்தன்
தாளைப் பற்றி உய்ந்ததம்மா
கம்சன் திருணாவர்த்தனை அனுப்புதல்
தோற்றான் தொலைந்தான் சகடனென்று
துன்பம் அடைந்த கொடுங்கம்சன்
சீற்றம் கொண்ட பேரரக்கன்
திருணா வர்த்தப் போரரக்கன்
காற்றாய் வந்து கலங்கடித்துக்
கடிதில் கொல்லும் ஒரரக்கன்
கூற்றாய் மாறிக் கொன்றுவரக்
கூறி விடுத்தான் வென்றுவர.
நண்பன் சகடாசுரன் மறைவுக்குப் பழி தீர்க்கக் கூறுதல்
தோழமை உனக்குப் பூண்டான்
தோள்வலி சகடன், காட்டு
வேழமாய் ஆற்றல் கொண்டான்
வீழ்ந்ததை அறியாய் கொல்லோ?
வாழுநாள் வீணே அன்றோ,
வன்பழி தீர்க்க விட்டால்?
சூழுமோர் சூறைக் காற்றாய்ச்
சூரனே, செல்வாய், கொல்வாய்!
திருணாவர்த்தனைக் கண்ட கண்ணன் தன் எடையைக் கூடச் செய்தல்
கொல்லவே எண்ணம் கொண்டு
கோகுலம் அரக்கன் சென்றான்
அல்லெனும் மனத்தான் காற்றாய்
அலைவதைக் கண்ட கண்ணன்
மெல்லவே சிரித்துச் சின்ன
மேனியின் எடையைக் கூட்டி
நல்லவள் வருந்தித் தூக்க
நாடகம் ஆடி னானே!
(அல்லெனும் மனத்தான் – இருள்/ தீய மனத்தான்)
( நல்லவள்,– யசோதை)
எடை அதிகரித்த கண்ணனை யசோதை கீழே விட்டதும் புயலாய் வந்த அரக்கன் தூக்கிச் செல்லுதல்
குழந்தையை மடியில் வைத்துக்
கொஞ்சிய அன்னை, யாக்கை
அழுந்தவே, எடையும் கூட
அஞ்சியே தரையில் விட்டாள்.
எழுந்ததே பேரி ரைச்சல்,
ஈட்டியாய் அரக்கன் பாய்ந்து,
கொழுந்தினைத் தூக்கிக் கொண்டு
கொடும்புயல் உருவில் சென்றான்!
(யாக்கை– உடல்)
திருணாவர்த்தன் கொடுஞ்செயல்கள்
புழுதியை இறைத்தான் வாரி
பூமியில் மரங்கள் சாய்த்தான்
விழுதுடன் வேரும் பேர்த்தான்
வெறியுடன் ஓங்கி ஆர்த்தான்
கழுதென வீசும் காற்றால்
கலங்கவே வைத்துத் தீர்த்தான்
பொழுதுமே இரவு போன்று
போகவே இருளைச் சேர்த்தான்.
(கழுது – பேய்)
திக்குகள் இருளச் செய்தான்
சேரவே மண்ணைப் பெய்தான்
பக்கமாய் மலைகள் ஆடப்
பார்வையும் மண்ணால் மூட
ஒக்கலும் நட்பும் கூடி
ஒருவரை ஒருவர் தேடச்
சிக்கியே சூறைக் காற்றில்
சிதறவே வைத்தான் ஊரை
(ஒக்கல் – உறவினர்)
பறந்தன கற்கள் எங்கும்
பார்த்தவர் உடல்ந டுங்கும்
அறுந்துபோய்க் கொடிகள் தொங்கும்
அழுகுரல் ஊரில் தங்கும்
கறந்தபால் குடங்கள் யாவும்
காற்றினில் மேலே தாவும்
அறந்தனைக் காக்கும் அண்ணல்
அருளினால் அமைதி திண்ணம்.
தன் எடையைக் கூட்டிக் கண்ணன் அவனைக் கொல்லுதல்
தூக்கிய குழந்தை மண்ணில்
துச்சமாய்க் கீழே போட்டுத்
தாக்கியே கொல்ல எண்ணிச்
சற்றவன் முயன்றான், ஆனால்
காக்குமக் கடவுள் மேனிக்
கனமது மலைபோல் ஆக,
ஏக்கமும் நலிவும் கொண்டான்
ஏறிடும் எடையைக் கண்டான்.
பொய்யரின் துயரைப் போலப்
புண்ணியர் புகழைப் போல,
வெய்யவர், சூதும் கொண்டார்,
வீழ்ச்சியைப் போல, வாழ்வில்
மெய்யுடன் அறத்தில் நிற்பார்
மேவிடும் நன்மை போல,
ஐயகோ எடையும் கூட
அரக்கனும் உடல்ந லிந்தான்..
தப்பினால் போதும் என்று
தவித்தனன் திருணா வர்த்தன்
ஒப்பிலாக் குழந்தை மேனி
ஓங்கிய எடையும் சேர,
இப்புவி மலைகள் யாவும்
ஏறிய சுமைபோல் மாறக்
குப்புறக் கீழே சாய்ந்தான்.
குரல்வளை கண்ணன் பற்ற
காற்றென வந்தான் மூச்சுக்
காற்றினை இழந்து வீழ்ந்தான்
ஆற்றலின் ஆண வத்தால்
அழிவினைத் தேடிக் கொண்டான்
கூற்றெனக் கொல்ல வந்தான்
குலைந்துபோய் நொந்து மாண்டான்.
போற்றிய அன்னை, அன்புப்
புதல்வனை அணைத்துக் கொண்டாள்!
( தொடரும்)
விளம்மா தேமா வைத்து வித்தைகள் பலசெய் திங்கு
விளங்கிடச் சொன்ன கண்ணன் வீரதீரச் செயலை ஐய
அளந்திட முடியா துள்ளம் அன்பினில் தோய்ந்த தன்றோ
பிளந்தனன் அரக்கர் தம்மை பின்னையோர் காத்து நின்றே!
~ சுரேஜமீ
17.10.2022 காலை 11:38
LikeLike
Excellent write up
LikeLike
கண்ணனைப் பற்றிய வர்ணனை சிறப்பு.
காற்றென கடிதே வந்தான்
மூச்சு காற்றினை இழந்தே போனான்
நல்ல நயம்.
வாழ்த்துகள்
LikeLike