கடிதம் எழுதும் பழக்கம் அறவே தொலைந்துவிட்டது. ஆனாலும் வீட்டுக்கு வரும் தபால்கள் (கவனம், கடிதங்கள் அல்ல!) குறையவில்லை! அப்பா கைப்பட, மகனுக்கு, ‘நாங்கள் செளக்கியம். நீங்கள் செளக்கியமா? இந்த மாதம் பணம் அனுப்பவில்லையா?’, விடுதியில் தங்கிப் படிக்கும் பிள்ளை, அப்பாவுக்கு, ‘அன்புள்ள அப்பா, நான் நலமாக இருக்கிறேன். ஃபீஸ், கைச்செலவுக்கு மற்றும் டூருக்கு பணம் அனுப்பவும்’ ரகக் கடிதங்கள் வருவதற்கு வாய்ப்புகளே இல்லை! இன்னும் சொல்லப் போனால், கடிதங்கள் வரும் வாய்ப்பே இல்லை! எல்லாம் எலக்ரானிக் மயம் – வாட்ஸ் ஆப், மெயில், மெயில் டிரான்ஸ்ஃபர். அன்பு பொங்கும் கடிதங்களை மீண்டும் மீண்டும் வாசித்து மகிழ்வதும், கோபக் கனல் வீசும் கடிதங்களை வாசித்துப் பொங்குவதும் வழக்கொழிந்து விட்டன.
சில எல் ஐ சி பாலிசி அறிவிப்புகள், கார்ப்பொரேஷன் அனுப்பும் குடிநீர் மற்றும் கழிவுநீர் வரிகள் (குடிநீர் வருவதற்கும், கழிவு நீர் போவதற்கும் இந்த வரிகளுக்கும் யாதொரு சம்பந்தமும் இருப்பதில்லை!), பண்டிகைக் காலத் தள்ளுபடி விளம்பரங்கள் (அழகான நடிகை, கவர்ச்சியாகச் சிரித்தபடி
இருந்தால், அது உங்களுக்கு போனஸ் தபால்!), சுவிசேஷக் கூட்ட அறிவிப்புகள், இலவச வாரப் பத்திரிகைகள் (இவற்றுக்கும், தபால் ஆபீசுக்கும் ஸ்நானப் பிராப்தி கூட கிடையாது), ரீடர்ஸ் டைஜஸ்ட் போன்ற சஞ்சிகைகள், எப்போதாவது புத்தகப் பார்சல்கள் இவைதான் இப்போது தபாலில் அல்லது பிரைவேட் டெலிவரியில் வருகின்றன! ஜெய்சங்கர் படத்தில் வரும் ‘ஒருவர் மனதை ஒருவர் அறிய, உதவும் தேவை இது..’ என்ற பாடல் சொல்லும் கடிதங்கள் மட்டும் வருவதில்லை! கொரியர் சர்வீஸ் இதில் சேர்த்தி இல்லை, அதற்கு, பார்சலைக் கொடுத்து கையெழுத்து வாங்கும் தலையெழுத்து உள்ளது!
வாட்ச்மேன் இருந்த வரையில் எல்லாக் குப்பைகளையும் ஒழுங்காக வாங்கி, அவரவர் வீட்டில் – ஃப்ளாட்டில் – பிரித்துப் போட்டுவிடுவார்! இப்போது, தினமும் வருகின்ற குப்பைகளை கார் பார்க்கில் வீசிவிட்டுப் போகின்றார்கள். பொறுக்கி, எடுத்துக்கொள்ள வேண்டும்!
இந்த விளம்பரக் குப்பைகளைக் – அதில் 5 முதல் 10 சதவீதம் வரை தள்ளுபடிக் கூப்பன்கள் இருந்தாலும் – கிழித்துப்போடும்போது ஒவ்வொருமுறையும் ஏதோ ஒரு மரம் காகிதத்திற்காக வெட்டப்படும் ஓசை கேட்கிறது!
மாத சஞ்சிகை ஒன்று, இரண்டு மூன்று நாட்கள் கழித்து தபாலில் வந்து சேர்ந்தது! கூடவே சிதம்பரம் நடராஜா பிரசாதம், பாண்டிச்சேரி அன்னை பிரசாதக் கவர், ரீடர்ஸ் டைஜஸ்ட் இன்னும் சில அறிவிப்புகள் எல்லாம் ஒரு கத்தையாக மாடிப்படிகளின் கீழே, கிடந்தன. அப்போதுதான் தோன்றியது, ‘லெட்டர் பாக்ஸ்’ ஒன்றை வைத்தால் என்ன என்று!
பொது மக்கள் தாங்கள் அனுப்பும் தபால்களைப் போடுவதற்கானவை ‘போஸ்ட் பாக்ஸ்’ – தெருக்களிலோ, நகரின் முக்கியமான இடங்களிலோ நின்றபடி காத்திருக்கும் தபால் பெட்டிகள்! ஆரம்ப நாட்களில் அவை பச்சை நிறமுடன் இருந்ததாகவும், பின்னர் 19 ஆம் நூற்றாண்டில், பிரிட்டிஷ் சிவப்பு நிறத்திற்கு மாற்றியதாயும் ஒரு வரலாறு உண்டு. இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில், பிரிட்டிஷ் ஆட்சியிலேயே சிவப்பு நிற தபால் பெட்டிகள் வந்திருக்க வேண்டும்!
நான் சொல்ல வரும் ‘லெட்டர் பாக்ஸ்’ தனியாக வீட்டு வாசல்களில், கேட் அல்லது வாசற்சுவற்றில் தொங்கவிடப் படுபவை! சிவப்பு நிறம் அவசியமில்லை! பல வண்ணங்களில், பல வடிவங்களில், பூட்டி வைக்கும் வசதிகளுடன் லெட்டர் பாக்ஸ் இப்போது கிடைக்கின்றன. வரும் கடிதங்கள், விளம்பரங்கள், சிறிய பார்சல்கள் போன்றவற்றை தபால்காரர் அந்தப் பெட்டிக்குள் போட்டு விடலாம். நிறைய குடியிருப்புகள் உள்ள அடுக்கு மாடிக் கட்டடங்களில், ஃப்ளாட்டுக்கொரு லெட்டர் பாக்ஸ், தரை தளத்திலேயே, சொந்தக்காரர் பெயருடனோ அல்லது ஃப்ளாட் நம்பருடனோ இருப்பதுண்டு. இவை ‘க்ளஸ்டர் மெயில் பாக்ஸ்’ எனப்படுகின்றன.
தனி வீடுகளில், சுவற்றில் ஒரு இஞ்ச் அகலத்தில், ஒரு அடி நீளத்தில் ஒரு ‘பிளவு’ விட்டிருப்பார்கள் – அதில் போடப்படும் (சில பெரிய சைஸ் தபால்கள் மடித்தும், பாதி உள்ளேயும், பாதி வெளியேயுமாய் சொருகப் படுவதும் உண்டு!) தபால்கள், சுவற்றுக்குப் பின்னுள்ள பெட்டியிலோ, துணிப்பையிலோ விழுந்து விடும்!
சில நேரங்களில், வாசலில் காலைக் கவர்பாலுக்காகத் தொங்க விடப்பட்டுள்ள பையில் தபால்கள் போடப்பட்டு, எட்டிப்பார்ப்பதுவும் உண்டு!
நாள்பட்ட லெட்டர் பாக்ஸ், கொக்கி உடைந்து, வாய் திறந்து, வளைந்து கோணலாய் தொங்க, குருவிகளின் கூடுகளாய் ஆவதும் உண்டு.
அமெரிக்காவில், பெரிய பெண்ணின் வீட்டு வாசலிலேயே, சுமார் நான்கு அல்லது ஐந்தடி உயர் ஸ்டீல் கம்பத்தின் மேல் பெரிய பிரட் ‘லோஃப்’ சைசில், அழகான புறாக் கூண்டு போன்ற மெயில் பாக்ஸ் உண்டு. ரகசிய நம்பர்களை ஒத்தித் திறந்தால், உள்ளே…. அங்கேயும் அதே குப்பைதான்! உடன் அரசின் முக்கிய தபால்களும் உண்டு.
கனடாவில் சின்னப் பெண்ணின் மெயில் பாக்ஸ், ஒரு தெரு தள்ளி திருப்பத்தில் உள்ளது. இருபதுக்கும் மேலான மெயில் பாக்ஸ் வரிசையாக லாக்கர் போல உள்ளன. இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறை, சென்று, திறந்து பார்த்து தபால்களை… அதே குப்பைகள்தான்… எடுத்து வர வேண்டும்.
‘ஆளே இல்ல, எதுக்கு பெல்லு?’ என்பது போல ‘தபாலே இல்ல, எதுக்கு வீட்டில் தபால் பெட்டி?’ – சஞ்சிகைகள், அரசு அறிவிப்புகள், பில்கள் இவற்றுக்காகவேனும், அவசியமிருப்பதாகப் படுகிது.
யார் கண்டது, பழைய எல் பி, ஈபி பாடல் ரெகார்டுகள் இப்போது மீண்டும் வருவதைப் போல, லெட்டர் பாக்ஸைப் பார்த்து, பரிதாபப் பட்டு, மீண்டும் போஸ்ட் கார்டோ, இன்லண்ட் லெட்டரோ அனுப்ப யாராவது முன்வரலாம்! அதுவரை, வீட்டு வாசலில், ஓர் அடையாளமாகவேனும் ‘லெட்டர் பாக்ஸ்’ தொங்கவிடலாம் என்றே தோன்றுகின்றது!