(யார் இவர்கள்? கதையின் கடைசியில் பாருங்கள் )
“அப்பா, தப்பாட்டம் ஆட்றாம்ப்பா! ரெண்டுக் கட்டத்தைத் தாண்டி ஏறி வந்து பழம் எடுக்கறாம்ப்பா.”
‘நீ மட்டும் ஒழுங்கோ? தாயம் விழாமலே நொழஞ்சவன் தான நீ?’
அம்மா சிரித்தாள். ‘அப்ப, அண்ணன் தம்பி ரெண்டு பேரும் ஃப்ராடு. அந்தச் சொக்கட்டான்ல பெரியப்பா புள்ள, சித்தப்பா புள்ள சண்ட போட்டாங்க. ஒரு வயித்துப் புள்ள நீங்க. எதுக்கெடுத்தாலும் அடிச்சுங்கிறீங்க; சந்தி சிரிக்கப் போகுது குடும்பம்.’
இரண்டு பேரும் விருட்டென்று காய்களைக் கலைத்துவிட்டு முறைத்துக் கொண்டு நின்றனர். அவர்களின் ஆங்காரம் தணிய ஐந்து நாட்களாகியது.
அவள் சொன்னது எவ்வளவு சரியாக இருக்கிறது. ஆம், சந்தி சிரிக்க வைத்துவிட்டார்கள். சக்கர நாற்காலியில் அமர்ந்து வருகையில், இதைத் தள்ளும் கைகள் தங்கள் மகனுடையதாக இருக்கக்கூடாதா என்ற ஏக்கம் அவருள் எழாமலில்லை. மேடும், பள்ளமுமான அந்தச் சாலையில் அவரால் சக்கர வண்டியை இயக்க முடியவில்லை. அது மிகப் பழைய மாடல். தன்னிடம் காசிருந்தால் அவர் புதிதாக மோட்டார் பொருத்தப்பட்ட ஒன்றை வாங்கி இருப்பார். இது அவர்கள் தங்கியிருக்கும் முதியோர் இல்லத்தில் அவர்கள் கொடுத்துள்ள இலவசம். இதற்கு மேல் அவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. உதவி செய்ய கூட வந்துள்ள பையன் தாறுமாறாகத் தள்ளுகிறான். இடுப்பில் பொருத்தப்பட்டுள்ள செயற்கை எலும்பு நடு நடுங்குகிறது. இவனை ஏதாவது சொல்லிவிட்டால் நாளைக்கு வரமாட்டான்.
எதிரே குழந்தையை ‘ப்ராமில்’ தள்ளிக் கொண்டு வந்த பெண் சற்று ஒதுங்கி வழி விட்டாள். அது குறுகலான பாதை. மிகக் கவனத்துடன் குழந்தையைக் கையில் எடுத்துக் கொண்டு அவள் குழந்தையின் தள்ளுவண்டியை ஒதுக்கினாள். தன்னை அறியாமல் அவருக்குக் கண்களில் நீர் திரண்டது. எத்தனை முறை அவரும், அவளும் தங்கள் மகன்களை இப்படியெல்லாம் அழைத்துச் சென்றிருப்பார்கள்! இரு தோள்களிலும் இருவரையும் ஏற்றிக்கொண்டு வானத்தையும், மரங்களின் மேற் கிளையிலுள்ள பூக்களையும், பழங்களையும், பறவைகளையும், நிலவையும், நட்சத்திரங்களையும், கறுக்கும் மேகங்களையும் காட்டுவார். பள்ளி, கல்லூரி கட்டணங்களைத் தவிர, பியானோ, வயலின் என்று எவ்வளவு கட்டண வகுப்புகளுக்கு அவர்களுக்காகச் செலவிட்டார். அவர் பணி செய்த அலுவலகம் மற்றொருவர் கைகளுக்கு மாறிய பின்னர், இந்தப் பிள்ளைகளுக்காக அவர் தன் தகுதிக்கேற்ற வேலையில்லை என்ற போதிலும் கிடைத்த வேலையில் தொற்றிக் கொண்டாரே.
தானும், அவளும் எத்தனையைக் குறைத்துக் கொண்டோம், இந்தப் பையன்களுக்காக. சின்னவனுக்கு டிப்தீரியா வந்த அந்த வாரம் முழுதும் மருத்துவ மனையை விட்டு அவள் ஒரு இஞ்ச் கூட நகரவில்லை. எண்ணெய் புட்டியும், கையுமாக அவனையும் தூக்கிக் கொண்டு பேருந்தில் பயணித்து கடற்கரை காலை இளஞ்சூட்டு மணலில் எண்ணெய் தடவி அவன் கால்களை மணலில் புதைத்து, உருவி உருவி ஒரு மாதம் போராடி அவனை இயல்பாக நடக்க வைத்தாள் அவள். அதற்குள், அவர் கடையில் இட்டிலி வாங்கி வந்து பெரியவனுக்கு ஊட்டி பள்ளிக்குக் கொண்டுவிட்டுவிட்டு, தான் குளித்து இரண்டு இட்டிலியை வறட்வறட்டென்று தின்றுவிட்டு அலுவலகத்திற்கு ஓடுவார். சினிமா, இசை வகுப்புகள், பிக்னிக், பிறந்தநாள் கொண்டாட்டம் எதையும் பையன்களுக்கு மறுத்ததில்லை. முன்னர் பணி செய்த அலுவலகத்தில் ஈட்டிய பணத்தில் வாங்கிய வீடும், ஐம்பது பவுன் நகைகளில் 20 பவுன் நகைகள் மட்டுமே ஒரு காலத்தில் மீந்தன. இப்போதோ சொந்த வீட்டிலிருந்து மூத்தவன் விரட்டிவிட்டு விட்டான். இளையவன் ஐந்து பவுன் நகைகளை வாங்கிக் கொண்டு போனவன்தான்; அவருக்கு இரு அறுவை சிகிச்சை நடந்தபோது கூட இருவரும் எட்டிப் பார்கவில்லை.உதவி செய்யவில்லை.
“ஐயா, பெரியவரே, கூப்ட கூப்டத் தூங்குறீங்களே? ஆமா, நா சொகுசா தள்ளிட்டு வாரேன்; காத்து இதமா வீசுது. ஏன் கண்ணயற மாட்டீஹ? இப்ப எங்கன போவோணும்- ஆசுபத்திரியா, கோர்ட்டா?”
‘மன்னிச்சுக்கப்பா, கோர்ட்டுக்கே போ. நேரத்துக்கு இல்லனாக்க வக்கீலு வேற பாடுவாரு.’
“பொறவு, கீழ்க் கோர்ட்ல ஆடினீரு. இப்ப இங்க ஆடுதீரு.”
‘வாய மூடுடா’ எனக் கத்தத் தோன்றியதை அடக்கிக் கொண்டார். என் விதி பாரு, கண்டவங்கிட்ட பேச்சுக் கேக்க வேண்டியிருக்கு என்று தன்னையே நொந்து கொள்கையில் சுய இரக்கத்தில் கண்களில் நீர் திரள்வதை உணர்ந்து அவசர அவசரமாகத் துடைத்துக் கொண்டார்.
அவருக்கு பசி வயிற்றைக் கிள்ளியது. நேற்றிரவு அவளை மருத்துவமனையில் பார்த்தபோது அவள் அங்கு தனக்களித்த உணவினை மீத்து இரகசியமாக அவருக்குத் தந்தாள். எத்தனை விதவிதமாக சமைத்த கைகள் அவளுடையவை. ‘ஏதோ இரசவாதம் உன்னிடத்தில்’ என்று அவர் சொல்கையில் ஒரு கணம் பூரித்து நிற்கும் அவள் முகம். பெரியவன் ஒரு நாளிரவு ‘இப்போதே வட வேணும்னு’ அடம்பிடித்து அழுத போது, கைப்பிடி உளுந்தை அம்மியில் அரைத்து உடனே வடை செய்து தந்தாளே- அது கூடவா அவனுக்கு நினைவிலில்லை? திடீர் திடீரென்று அவர்களின் நண்பர்கள் வரும் போதெல்லாம் ஏதாவது செய்து தராமல் அவள் இருந்ததேயில்லை. அவள் கையில் காமதேனு இருந்திருக்கிறாள். வறுமையே தெரியாத வளமையைக் காட்டினாள் குழந்தைகளுக்கு. அது தவறோ? அம்மாவும், அப்பாவும் நல்ல நாள்கிழமைகளில் கூட மிகக் குறைந்த விலையுள்ள ஆடைகளைத் தங்களுக்கென்றும், அந்தந்த சீசனில் எது சிறப்போ, எது பையன்களுக்குப் பிடித்தமானதோ அதை விலையைப் பார்க்காமல் வாங்கித் தந்து மகிழ்ந்ததையும் அவர்கள் பார்த்துக் கொண்டுதானே இருந்தார்கள்?
‘போதும், இதெல்லாம் போதும். நா அப்பவே சொன்னேன், நீங்க கேக்கல. மூத்தவன் விரிச்ச வலயில விழுந்தீங்க. ஆயுசு முழுக்க அனுபவ பாத்யத, இந்த வீட்ல வாடக இல்லாம தங்கிக்கோங்க. இப்ப நாலு லக்ஷம் தாரேன். எனக்கு ‘செட்டில்மென்ட்’ பத்ரம் எழுதிக் கொடுத்திருங்க. சதீஷிக்கு ஐந்து பவுன் நகை கொடுங்க. அவன் ஒன்னும் செய்யலேல்ல.’ நம்பினீங்க- நா வேணாம்னு சொல்லச் சொல்ல கேக்கல. ஆறு மாசத்ல வாடக கேக்க ஆரம்பிச்சான்; உங்களால நஷ்டமாகுது, வெளியாருக்கு வாடகைக்கு விட்டா, உங்ககிட்ட கொடுத்த நாலு லக்ஷத்த மூணே வருஷத்ல சம்பாரிச்சுடுவேன் அப்படின்னு கழுத்தல கத்திய வச்சான்.’
‘சரி, அதெல்லாம் இப்ப எதுக்கு? உனக்கு உடம்பு சரியாகட்டம். நா அவங்கள உண்டு இல்லன்னு பண்ணிடறேன்.’
“இப்பயாச்சும் நா சொல்றதக் கேளுங்க. அப்ப நகய வித்து அவன் பணத்த விட்டெறிங்கன்னு சொன்னேன்- அது வொறவ முறிச்சுடும்னு என் வாய அடச்சீங்க. சின்னவன் சதீஷ், ‘அவனுக்குத்தான வீட்டக் கொடுத்தீங்க. உங்க அஞ்சு பவுனு கமலா பிரசவத்துக்கே போயிடுத்து. எங்க வீட்ல எங்களுக்கே இடம் பத்தல. பேசாம இங்க இருங்க. மகேஷ் உங்கள் எப்படி விரட்றான்னு நானும் பாக்கறேன்’ அப்படீன்னு ஓடிட்டான். உங்களுக்கு இடுப்புல ஆபரேஷன், அப்றம், கண்ல க்ளுகோமா. ஐம்பது பவுனு இருவதாக் கொறைஞ்சுது. நானாவது தெம்பாயிருந்தேன்- இப்ப படுத்தாச்சு. கோர்ட்டுக்குப் போங்க. செட்டில்மென்ட்டை ரத்து செய்யுங்க, அது மட்டுமில்ல, மாசாமாசம் அவனுங்க ரெண்டு பேரும் தலா பத்தாயிரம் தரணும்னு மனு போடுங்க.”
‘உளறாத. ‘செட்டில்மென்ட்டை’ எப்படி ரத்து செய்ய முடியும்?
“எல்லாம் முடியும். சட்டம்னா அது தர்மத்தோடதா இருக்கும், இருக்கணும். நாம யாசகமா கேக்கறோம்? நம்மள வீட்ட விட்டு தொரத்தினாங்க இல்ல, அதுக்கான ந்யாயம் கேக்குறோம். எத்தன அவங்களுக்காக விட்டுக் கொடுத்தோம், பட்டினி கிடந்தோம், அதுக்கான ஈடு அவங்களா தரலேன்னா, நாமா கேட்டு வாங்கணுங்க.”
‘அவங்க நம்ம விட்டு எப்போதைக்குமா பிரிஞ்சுடுவாங்க’
அவள் சிரித்தாள்- ‘இப்போ என்னவோ நம்மப் பிரியாத மாரி’
புன்னகை பூத்துக் கொண்டு காந்தி நீதிபதியின் இருக்கையின் மேலே தொங்கிக் கொண்டிருந்தார். மனித இனத்தின் நல்லியல்புகளின் மேல் தளராத நம்பிக்கை கொண்ட மாமனிதர்- அவனை அறவழியில் பகைமை இன்றி சீர் திருத்த முடியும் என்று நம்பிய உத்தமர். இந்த வழக்கு மன்றத்தில் அலைமோதும் இந்தக் கூட்டத்தைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருப்பார்? பேசித் தீர்க்க முடியாத பிரசனைகள் அரங்கிற்கு வருகின்றன என்றா? தத்தமது கோரிக்கைகளை நிறைவேற்றத் தகுதியான உறவோ, நட்போ, பெரியவர்களோ இல்லை என்றா?
பெரியவனும், சின்னவனும் அருகருகே அமர்ந்திருந்தார்கள். இவரைப் பார்த்து அவர்கள் எழுந்து வரவுமில்லை, அம்மாவை அவருடன் தேடவுமில்லை.
‘மனிதனுக்கும், விலங்கிற்கும் என்ன வித்தியாசம்?’ என்று பையன்களைப் பார்த்து கேட்டார் நீதிபதி. ‘சிறகு முளைத்து பறக்கத் தெரிந்த பிறகு அவைகளுக்கு தாய் தந்தை உறவில்லை. அது மீச்சிறு காலம். அவைகளின் வாழ்வு என்பது பிறத்தல், சாப்பிடுதல், இனப்பெருக்கம், மரணம் அவ்வளவுதான்.
மனிதன்? அவன் படிக்கிறான், இசைக்கிறான், புதியன கண்டுபிடிக்கிறான், உற்பத்தி செய்கிறான், சமூகமாக இருக்கிறான், நாணயமாக நடக்க வேண்டிய சூழலை உருவாக்குகிறான். தப்பைத் தட்டிக் கேட்கிறான், ஈதல், தான் அறியாதவர்களுக்கும் கூட தர வேண்டும் என்று அனைத்து மதங்களும் சொல்கின்றன. அப்படியிருக்கையில், பெற்றவர்களை இப்படி அனாதையாக விட்டுவிட்ட மகன்களை இந்த நீதி மன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது. ஒரு உழவன் தன் பசிக்காக மட்டுமே உற்பத்தி செய்தால், ஒரு நெசவாளர் தன் மானத்தை மறைக்க தனக்கு மட்டுமே ஆடை நெய்தால்… மனித இனத்தின் கதியென்ன? உங்களை அன்பாக இருக்கச் சொல்லவில்லை- பண்போடு நடந்து கொள்ளுங்கள் என்றுதான் இந்த நீதிமன்றம் கேட்டுக் கொள்கிறது.
அந்த ‘செட்டில்மென்ட் டீட்’ எந்த விதத்திலும் செல்லுபடியாகாது அது ‘வாய்ட் அப் இனிஷியோ’ அதற்காகத் தந்த பணத்தை மகேஷ் உரிமை கோர முடியாது; அதைப் போல சதீஷ் பெற்ற ஐந்து பவுனை நகையாகவோ அல்லது அதற்கு ஈடான இன்றைய தொகையாகவோ அவர் பெற்றோரிடம் தர வேண்டும், மேலும், மாதா மாதம் குறைந்த பட்சம் தலா ரூபாய் பத்தாயிரத்தை அவர்களது வங்கிக் கணக்கிற்கு அனுப்ப வேண்டும். இதை மீறினால், மூன்று வருட சிறை தண்டனை. சக்கர நாற்காலியில் ஒடுங்கி அமர்ந்திருக்கும் உங்கள் தந்தையைப் பாருங்கள்- தனியாக மருத்துவ மனையில் படுத்திருக்கும் உங்கள் அன்னையைப் பாருங்கள். உங்கள் வாழ்க்கை அவர்கள் போட்ட பிச்சை. கவனமாக இருங்கள்.’
அவள் சொன்னாள்- ‘நம் காலத்திற்குப் பிறகு நாம் இதுவரை இருந்த ஹோமிற்கு இதைக் கொடுத்துவிடலாம்.’ அவர் பனித்த கண்களுடன் அவளைப் பார்த்தார்.
( Ref : https://www.bbc.com/tamil/india-53779918 –
வேலூர்: மகன் தவிக்க விட்டதால் புகார் கொடுத்து சொத்தை மீட்ட முதியவர்கள்)
உண்மைக் கதை. உருக்கமான கதை அம்மா. அருமை.
LikeLike