இம்மாத சிறந்த சிறுகதை :
ஒத்திகைக்கான இடம் – ஜிஃப்ரி ஹாசன் சொல்வனம் 11.09.2022
———————————————————————————————————————–
கசம்- தெரிசை சிவா சொல்வனம் செப்ட் 25
வட்டார பேச்சு முறையில் பின்னப்பட்ட அற்புத சித்தரிப்பு. விவரிப்பான கதை. கடவுள் நம்பிக்கையையும் விட்டு வைக்கவில்லை. எதிர்பார்க்காத தளம் எதிர்பார்க்காத முடிவு.
கல்யாணக் கணக்கு – அசோக் ராஜ் ஆனந்த விகடன் செப்ட் 28
அவள் ஓர் தொடர்கதை பாணி கதை. கதைக் கரு மிகவும் பழையது. ஆனால் கூறப்பட்டுள்ள விதம் சற்றே வித்யாசப்படுகிறது. எங்கோ நம்முள் ஒரு சோகத்தை அது தூண்டி விடுகிறது.
அவள் வாசம் -சி. சி முருகபாரதி – ஆனந்தவிகடன் செப்ட். 21
திரைப்பட தொழிலில் முன்னணிக்கு வராதவர் படும் அவஸ்தைகளை மிக அழகாகக் காட்சிப் படுத்தப்பட்டிருக்கிறது.கதை உரையாடல் பாணியில் கூறப்படாமல் விவரிப்புக்களால் கூறப் பட்டுள்ளது. இந்தத்துறையில் சாதித்துக்காட்டவேண்டும் எனும் கட்டாயத்தோடு வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் பலர். அதில் கதையின் நாயகனும் ஒருவர். திரைப்படத்துக்காரர்களுக்கு ஏற்படும் பல அசெளகர்யங்களில் வீடு வாடகைக்குக் கிடைக்காமல் போவது. இதற்காக நாயகன் சொல்லும் ஒரு பொய் தான் கதையின் முக்கியமான அம்சம். எதிர்பாராத முடிவு கதையை அழகுபடுத்துகிறது.
நல்ல துப்பாக்கி – அ.முத்து லிங்கம் காலச்சுவடு செப்ட் 2022
அவ்வளவாக நாம் அறிந்திராத களத்தில் கதை நகர்வது சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகிறது. சற்றே நடந்த சரித்திரத்தையும் உள்ளடக்கிக் கதை சொல்லப்பட்டிருக்கிறது. கதை செல்லும் போக்கு தாலிபான் இயக்கத்தின் அடாவடி நடவடிக்கையில் சென்று முடியும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்த, முடிவு தடக்கென்று எங்கோ சென்று நிற்கிறது. விவரிப்புக்கள் மிகத் தெளிவு, சுவாரஸ்யம்.
திருநடம் – ஆதித்ய ஸ்ரீநிவாஸ் சொல்வனம் செப்ட். 11
வட்டார வழக்கு முறைகள் வட்டார பேச்சில் அழகாகக் கூறப்பட்டிருக்கிறது. சென்னை மழைக்கால சோகங்களை அவ்வளவு எளிதாக மறக்க முடியாது. இந்தக்கதையில் மழைதான் கதாநாயகன். சற்றே வளர்ச்சி அடையாத கிராமம் ஒன்றில் இந்த மழையால் மக்கள் படும் அவஸ்தைகள் தான் கரு.இந்த அவஸ்தைகள் வழியே வெளியிடப்படும் தன்னலம், பெருந்தன்மை, உண்மை, கற்பனை என்ற கலவையான உணர்ச்சிகள். இவை மிக நேர்த்தியாகக் கோர்க்கப்பட்ட விதம் கதாசிரியருக்கு ஒரு ஷொட்டை பெற்றுத்தருகிறது. கதையின் முடிவு உலகம் உருண்டை…. ஆரம்பித்த இடத்திலேயே வந்து முடியும் என்பது போல் முடிக்கப்பட்டுள்ளது.
அவ்வையார் பள்ளி – ஆயிஷா இரா நடராசன். குங்குமம் செப்ட் 30
ஒரு அக்மார்க் சயன்ஸ் ஃபிக்க்ஷன் கதை. அழகாகச் சொல்லப் பட்டிருக்கிறது. டைம் ட்ராவல் தான் கரு. சாதாரணமாக இவ்வாறான கதைகள் சந்தோஷமாகவே முடிக்கப்படும். ஆனால் முடிவு ஒரு கேள்விக்குறியோடு நம் சிந்தனைக்குத் திறந்து விடப்பட்டிருக்கிறது. மிக நல்ல முயற்சி. ஆனால் அவ்வளவு சிறிய பள்ளிக்கூடத்தில், தொழில்நுட்ப உதவிகள் ஏதுமில்லாமல் டைம் மெஷின் கண்டுபிடித்தாக சொல்லப்படுவது சற்றே சிரிப்பை வரவழைக்கிறது. ஒரு வேளை இதைப்போன்ற கேள்விகள் எழக்கூடாது எனும் எண்ணத்தில் தான் தமிழாசிரியர், அவ்வையார் என்று திசைதிருப்புதல் இருக்கிறதோ?
வானோர்கள் – ரகுராமன் சொல்வனம் செப்ட் 25
மற்றும் ஒரு விஞ்ஞானம் தொழில்நுட்பத்தை அடிப்படையாக வைத்துக் கதை. ஸ்டார் கேசிங் அதாவது மேகத்தில் நீந்தி வரும் பலபல கோள்களையும் நட்சத்திரங்களையும் பார்ப்பது. பலர் தற்போது இதைப்போன்ற அற்புதங்களைக் காண ப்ளானடோரியத்திர்க்கு குழந்தைகளை அழைத்துச் செல்கிறார்கள். ஆனால் இந்த வசதி இல்லாத ஒரு காலகட்டத்தில் தன் மொட்டை மாடியை நட்சத்திரங்களைப் பார்க்கும் தளமாக மாற்றிய சிறுவன் மற்றும். நண்பனைப்பற்றிய கதை. SLV3 விண்ணில் செலுத்தப்பட்ட காலகட்டத்தைத் தொட்டுச்செல்கிறது. கதை கூறப்படும் விதம் மிகச் சுவாரஸ்யம். ஆனால் முடிவு.. அனைவரும் சராசரி மக்களே…. பணமும். பதவியும் தான் இவர்களுக்குப் பிரதானம் என்று ஒரு நெகடிவ் டோனுடன் முடிகிறது.
ஒத்திகைக்கான இடம் – ஜிஃப்ரி ஹாசன் சொல்வனம் 11.09.2022
குழந்தைகள் ஆசைப்படுவதற்கும் பெற்றோர்களின் ஆசைகளுக்கும் ஏற்படும் முரண்பாடு, அதனால் ஏற்படும் சோகம் என்று எந்தக்காலகட்டத்திலும் யாவருக்கும் பொருந்தக்கூடிய கதைக் களம். கூடுதலாக இஸ்லாமியர்களின் பழக்க வழக்கங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.கதை முழுவதும் சோகமாக ஏதோ ஒன்று நடக்க இருக்கிறது எனும் எண்ணத்தை ஏற்படுத்தும் விதமான வார்த்தைகள். ஏதோ ஒரு காரணத்தைக்காட்டி சாஹிபு மதரசாவில் இருந்து தப்பி வரும் ஒவ்வொரு முறையும் பாவம் இந்தக்குழந்தை இந்த முறையேனும் நினைத்தவாறு இருக்கட்டும் என்று வேண்டத் தோன்றுகிறது. முடிவு, குழந்தைகளை நிர்பந்தப்படித்தினால் வேதனை பெற்றோருக்கும் என்று பொருள்படும்படியாக இருக்கிறது. படித்து முடித்தபின்னரும் மனதில் சோகம் தங்கித்தான் போகிறது.
முதலிடம் – ஒத்திகைக்கான இடம்.
தேர்வாளர் :- லதா ரகுநாதன்