டைனியின் பாட்டி – தமிழில் : தி.இரா.மீனா

 

உருதுமொழி சிறுகதை
டைனியின் பாட்டி
மூலம் : இஸ்மத் சுக்தாய் ( 1973 இல் கரம் ஹவா என்ற திரைப்படத்திக்காக சிறந்த கதாசிரியருக்கான தேசிய விருது பெற்றவர் )
ஆங்கிலம் : ரால்ஃப் ரஸ்ஸல்
தமிழில் : தி.இரா.மீனா

 

 

Tiny's Granny short story By_ Ismat Chughtai in hindi// full summary in  Hindi. - YouTube

IsmatChughtaiPic.jpg
அவள் பெயர் என்னவென்று கடவுளுக்குத்தான் தெரியும்.யாரும் அவளை பெயர் சொல்லிக் கூப்பிட்டதில்லை.சிறுமியாக இருந்து ,சந்துகளில் மூக்கு ஒழுக அவள் சுற்றிக் கொண்டிருந்தபோது அவளை ’பதான் குழந்தை’ என்றுழைத்தனர் ஜனங்கள்.பிறகு ’பஷீராவின் மருமகள்’ என்றும், ’பிஸ் மில்லாவின் தாய்’ என்றும், பிஸ்மில்லா பிரசவத்தின் போது குழந்தை டைனியை பெற்று விட்டு இறந்து போனதற்குப் பிறகு அவள் ’டைனியின் பாட்டி ’ஆனாள். அதுவே நிலைத்து விட்டது.
தன் வாழ்க்கையில் டைனியின் பாட்டி செய்யாத வேலை என்றுவுமில்லை தனது உணவிற்காகவும், உடைகளுக்காவும் விவரம் அறிந்த நாளிலிருந்தே சின்னச்சின்ன கூலி வேலைகளை அவள் செய்யத் தொடங்கி விட்டாள் கூலி வேலை என்றால் மற்ற குழந்தைகளுடன் ஆடிப்பாடி விளையாட வேண்டிய வயதில் விளையாட விடாமல் அவர்களை வேலைக்கு வைத்துக் கொள்வதாகும்.கூலிவேலை என்பதில் சுவாரஸ்யமற்ற தொட்டில் ஆட்டுதல் தொடங்கி எஜமானருக்குத் தலையைப் பிடித்து விடுவது வரை எல்லாமும் அடக்கம். அவள் வளரத் தொடங்கிய பிறகு சிறிது சமைக்கக் கற்றுக் கொண்டாள். சிலவருடங்கள் சமையல்காரியாகவும் வாழ்ந்தாள். கண்பார்வை சிறிது மங்கத் தொடங்க ஈக்களையும்,பூச்சிகளையும் போட்டுச் சமைக்க வேண்டிய நிலை வந்தபோது அதிலிருந்து ஓய்வு பெற வேண்டி யதாயிற்று. அதன்பிறகு அவள் வம்பு பேசி கோள்சொல்லியானாள்..ஆனால் அதுவும் ஓரளவுக்கு மட்டுமே ஆதாயம் தரும் வேலை..ஒவ்வொரு தெருவிலும் ஏதாவது சண்டை வந்தபடிதானிருக்கும்.யாரொருவர் அந்த விவரத்தை எதிரிகளுக்கு சென்று சொல்கிறாரோ அவர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.ஆனால் அது நீண்ட நாள் தொடராது.அதில் அப்படி ஒன்றும் பெரிதாகக் கிடைத்துவிடவில்லை என்பதால்,அவள் மெருகேறிய திறமையான பிச்சைக்காரியாக உருவாகி விட்டாள்.
சாப்பாட்டு நேரங்களில்,பாட்டி எந்த வீட்டில் என்ன சமையல் என்பதை அதன் மணத்தால் அறிந்து அங்கு போய்விடுவாள்.
“பெண்ணே, இறைச்சியோடு சேனைக்கிழங்கு சேர்த்து சமைக்கிறாயா?” என்று சாதாரணமாகப் பேசுவது போலக் கேட்பாள்.
“இல்லை,பாட்டி.இப்போது கிடைக்கும் சேனையொன்றும் நன்றாக இல்லை. அதனால் நான் உருளைக்கிழங்கு சேர்த்து சமைக்கிறேன்”.
“உருளைக்கிழங்கு!என்ன அருமையான வாசனை! பிஸ்மில்லாவின் தந்தைக்கு உருளைக்கிழங்கும்,கறியும் சேர்த்துச் சமைத்தால் மிகவும் பிடிக்கும்.எல்லா நாளும் வீட்டில் அதுதான்;சரி, நாம் உருளைக்கிழங்கையும் இறைச்சியையும் சேர்ப்போம் [லேசாகப் பெருமூச்சு விடுவாள்]நான் கறியையும்,உருளைகிழங்கையும் பார்த்தே பல மாதங்களாகிவிட்டன” என்பாள். பிறகு திடீரென “அதில் கொத்தமல்லித் தழை சேர்த்தாயோ பெண்ணே?” என்பாள்.
“இல்லை ,பாட்டி.எல்லாத் தழையும் அழுகிப் போய்விட்டது.தண்ணீர் கொண்டு வருபவனின் நாய் தோட்டத்திற்குள் போய் நாசம் செய்து விட்டது.”
“ஐயோ! சிறிது கொத்தமல்லியைக் கறியோடுசேர்த்தால் அதன் சுவையே அலாதிதான், ஹக்கீம் தோட்டத்திலிருக்கும்.”
“வேண்டாம் பாட்டி,நேற்று அவர் மகன் ஷபானின் பட்டக் கயிறை அறுத்து விட்டான்.நான் அவனை இந்தப் பக்கம் தலைகாட்டக் கூடாதென்று சொல்லி விட்டேன்.”
“நான் உனக்காகப் பறிக்கிறேன் என்று சொல்லமாட்டேன” சொல்லிவிட்டு தன் புர்காவை இழுத்து விட்டுக்கொண்டு செருப்புத் தேய ஹக்கீமின் தோட்டத்திற்குப் போவாள்.வெயிலில் சிறிதுநேரம் உட்கார வந்தாகச் சொல்லி மெல்லச் செடியருகே போவாள். தழையைச் சிறிது கிள்ளி கையில் தேய்த்து முகர்வாள்.ஹக்கீமின் மருமகள் அந்தப் பக்கம் திரும்பியவுடன் பாட்டி கொத்தாகப் பறித்து விடுவாள்.கொத்தல்லித் தழையை கொண்டு வந்து தந்த பிறகு சாப்பாடு போட மறுக்கமுடியாது.
பாட்டியின் சாதுர்யம் அவளை அப்பகுதியில் பிரபலமாக்கியது.அவள் அருகிலிருக்கும் போது யாரும் அவளை விட்டு சாப்பிடவோ ,குடிக்கவோ முடியாது.குழந்தைக்காகப் பாத்திரத்தில் வைத்திருக்கும் பாலை அவள் நேரடியாக எடுத்துக் குடித்து விடுவாள்;இரண்டு மடக்குதான்.காலியாகி விடும்.உள்ளங்கையில் சிறிது சர்க்கரையை வைத்து வாயில் போட்டுக் கொள்வாள். அல்லது வெல்லக் கட்டியை நாக்கில் ஒதுக்கிக் கொண்டு சூரிய ஒளியில் உட்கார்ந்து நிதானமாக சப்பிக் கொண்டிருப்பாள்.
தன் இடுப்பில் பாக்கு அல்லது சில சப்பாத்தித் துண்டுகள் ஆகியவற்றை சேர்த்துக் கட்டியிருப்பாள்.அவள் நீண்ட ஆடை அது பார்வையில் படாதபடி மறைத்திருக்கும். அதை மென்று கொண்டும், வழக்கம்போல முனகிக் கொண்டுமிருப்பாள். எல்லோருக்கும் இது தெரிந்திருந்தாலும் யாருக்கும் இதைப் பற்றி எதுவும் சொல்லத் தைரியமில்லை; முதலாவதாக அவள் கைகள் மின்னல் வேகத்தில் வேலை செய்யும், சந்தர்ப்பத்திற்கு ஏற்றபடி வாயிலிருப்பது முழுவதையும் விழுங்கியும் விடுவாள்; இரண்டாவதாக யாரும் அவளை லேசாகச் சந்தேகப் பட்டாலும் எதற்கு அப்படிச் செய்தோம் என்று நினைக்குமளவிற்கு ஆர்ப்பாட்டம் செய்துவிடுவாள்.தான் அப்பாவியென்றும் குர் ஆனின் மீது சத்தியம் செய்யவும் தயார் என்றும் பயமுறுத்துவாள்.பொய் சொல்லும் ஒருவரை குர் ஆனின் மீது சத்தியம் செய்யச் சொல்லி யார் தன்னை இழிவுபடுத்திக் கொள்வார்கள்?
பாட்டி கோள்சொல்லி, ஏமாற்றுக்காரி மட்டுமில்லை சிறந்த பொய் சொல்லியும்தான்.அவள் எப்போதும் அணியும் புர்கா அவளுடைய பெரிய பொய். முன்பு அதில் முகத்திரையிருந்தது.அந்தப் பகுதியில் வாழ்ந்த முதியவர்கள் ஒருவர் பின் ஒருவராக இறந்த பிறகு,அல்லது அவர்களின் பார்வை மங்கிய பிறகு அவள் தன் முகத்திரைக்கு விடை கொடுத்து விட்டாள்.ஆனால் புர்காவின் மேலிருக்கும் தொப்பியின்றி அவளைப் பார்க்கமுடியாது.மிக நாகரிகமான முறையில் தலையைச் சுற்றியிருக்கும் படி அதை அணிந்திருப்பாள்,அது மண்டையோடு சேர்ந்திருப்பது போல இருந்தாலும் முகப்பகுதி திறந்திருக்கும்.அது அரசனின் அங்கி போல பின்னால் தொங்கிக் கொண்டிருக்கும். இந்த புர்கா அவள் தலையை பணிவோடு மறைப்பற்காக மட்டுமில்லை.அதைச் சாத்தியம்,சாத்தியமற்றது என்று எல்லா வழிகளிலும் பயன்படுத்தினாள்.அது படுக்கை, ஆடை, தலையணை,சில சமயங்களில் துண்டு என்று பலவகைகளிலும் பயன் பட்டது.ஐந்து தடவைகளிலான அவள் தொழுகையில் அது பாயாகவும் பயன்படும். தெருநாய்கள் அவளைத் தாக்க வரும் போது அது பாதுகாப்பு கவசமாகவுமிருக்கும்.நாய் அவள் மேல் பாய்ந்து கடிக்க வரும் போது அதிலுள்ள பல மடிப்புகள்தான் அதன் முகத்தில்படும்.அந்த புர்காவின் மேல் பாட்டிக்குத் தனிக் காதலுண்டு.ஓய்வுநேரங்களில் அது மிகவும் பழைய தாகிவிட்டதை எண்ணிப் புலம்புவாள்.அது கிழியும்போது கிடைக்கிற எந்தத் துணியையும் வைத்து தைத்து சரிசெய்வாள். அது இல்லாமல் போய்விடும் நாளை நினைத்துப் பார்ப்பது அவளுக்கு நடுக்கம் தருவதாக இருந்தது. புதியது தைக்க எட்டு முழம் வெள்ளைத் துணி வேண்டும் .அவள் எங்கே போவாள்? இறந்தபிறகு அவளுக்குத் தேவையான அளவு சவத்துணி கிடைத்தால் அவள் அதிர்ஷ்டசாலிதான்.
அவளுக்கென்று நிரந்தர வாசஸ்தலமில்லை.ஒரு சிப்பாயைப் போல எப்போதும் அணிவகுப்பில்—இன்று ஒருவரின் வராந்தாவில்,நாளை மற்றொருவரின் கொல்லைப்புறத்தில்.எது தனக்கு வசதியானது என்று நினைக்கிறாளோ அங்கு முகாமிட்டு விடுவாள்.பாதி புர்கா அவளைச் சுற்றியும் மீதிப்பாதி அவள் கீழுமிருக்க வசதியாகப் படுத்திருப்பாள்.
தன் புர்காவைப் பற்றி கவலைப்படுவதைவிட அவளுக்கு தன் ஒரே பேத்தி டைனி பற்றிய கவலை அதிகமாக இருந்தது.அடைகாக்கும் வயதான கோழி போல எப்போதும் அவளைத் தன் கண்பார்வையில் பத்திரமாக வைத்திருக்கிறாள். அந்தப் பகுதி மக்கள் பாட்டியின் சாதுர்யத்திற்கு நன்கு பழகிப் போனதால் அவள் செருப்புச் சத்தம் கேட்டு ஜாக்கிரதையாக தங்களைப் பாதுகாத்துக் கொண்டனர்;அவளுடைய ஜாடைகள் விழுவது அவர்களின் செவிட்டுக் காதுகளில்தான்.அதனால் பாட்டியால் ஒன்றும் செய்ய முடியவில்லை தன் பரம்பரை வழக்கப்படி டைனியை வீடுகளில் கூலிவேலை செய்ய வைக்கத்தான் முடிந்தது.நீண்ட யோசனைக்குப் பிறகு உதவி அதிகாரி வீட்டில் வேலை வாங்க முடிந்தது. சாப்பாடு, உடை, ஒரு மாதத்திற்கு இரண்டு ஷில்லாங் சம்பளம்.அவள் ஒருபோதும் டைனியை விட்டு வெகு தொலைவில் இல்லை.அருகில் நிழல் போலவேயிருந்தாள். டைனி கண்பார்வையிலிருந்து மறைந்து விட்டால் அக்கப்போர்தான்.
ஆனால் ஒரு ஜோடி வயதான கைகளால் ஒரு மனிதனின் எழுதப்பட்ட விதியை மாற்றிவிடமுடியாது.அது ஒரு மதியப் பொழுது. அதிகாரியின் மனைவி தன் மகள் திருமண விஷயமாக சகோதரனைச் சந்திக்கப் போயி ருந்தாள்.மரநிழலில் பாட்டி உட்கார்ந்தபடியே கண்ணயர்ந்தாள்.அருகில் இருந்த அறையில் அதிகாரி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.சீலிங் பேனை கயிற்றால் தொடர்ந்து இழுத்துக் கொண்டிருக்க வேண்டிய டைனி கண்ணயர்ந்து விட்டாள்.பேன் நின்றுவிட்டது, கண்விழித்த அதிகாரிக்கு உணர்ச்சிகள் எழ,டைனியின் விதி நிர்ணயிக்கப் பட்டுவிட்டது.
தங்கள் முதுமை காரணமாக ஹக்கிம்களும் ,வைத்தியர்களும் தாங்கள் கொடுக்கும் மருந்துகள் பலனளிக்காத போது தோல்வியை விரட்ட கோழி ரசத்தை பரிந்துரைப்பார்கள்.—ஒன்பது வயதான டைனி தானே கோழி ரசமாகிவிட்டாள். பாட்டி எழுந்தபோது டைனியைக் காணவில்லை. அவள் அந்தப் பகுதி முழுவதும் தேடியும் டைனியைக் கண்டு பிடிக்க முடிய வில்லை.எல்லா இடங்களிலும் பார்த்து விட்டு தன்னிடத்திகுத் திரும்பிய போது அங்கு டைனி சுவறோடு ஒட்டியவளாக காயப்பட்ட பறவையைப் போல உட்கார்ந்திருந்தாள்.அவளைப் பார்த்ததும் பாட்டிக்கு பேசமுடிய வில்லை.சோர்வு ஆட்கொண்டது.சிறிதுநேரத்திற்குப் பின்பு,“எங்கே போனாய்? எல்லா இடங்களிலும் உன்னைத் தேடி கண்கள் பூத்துவிட்டன. நான் அதிகாரியிடம் சொல்லி உன்னை நையப் புடைக்கிறேன் பார்.இனி நீ அவ்வளவுதான்!” என்றாள்.
ஆனால் தனக்கு என்ன நேர்ந்தது என்பதை பாட்டியிடம் மறைக்க டைனியால் முடியவில்லை.பாட்டி கண்டுபிடித்து விட்டாள். அடுத்த வீட்டுப் பெண்மணி எல்லாவற்றையும் சொல்ல, பயத்தில் தலையைப் பிய்த்துக் கொண்டாள்.அதிகாரியின் மகன் அப்படிச் செய்திருந்தால் ஏதாவது சொல்லமுடியும்.ஆனால் அந்தப் பகுதியில் அவர் மிகப் பிரபலமான மனிதர், மூன்று பேரக் குழந்தைகளின் தாத்தா,மதச்சார்புள்ள ஒரு மனிதன் நாளில் ஐந்துமுறை தொழுகை செய்பவர் அங்குள்ள மசூதிக்கு பாய்களும்,தண்ணீர் குடங்களும் கொடுத்தவர் –இப்படிப்பட்டவருக்கு எதிராக யாரால் குரலெழுப்ப முடியும்?
அதனால் மற்றவர்களின் தயவில் வாழவேண்டிய பாட்டி தன் சோகத்தை மறைத்துக் கொண்டு டைனிக்கு ஒத்தடம் கொடுத்து, இனிப்புகள் தந்து முடிந்தவரை அவளைச் சமாதானப் படுத்தினாள்.ஓரிருநாட்கள் ஓய்விற்குப் பிறகு டைனி சரியாகி இது எல்லாவற்றையும் மறந்து விட்டாள்.
அப்பகுதியிலிருந்த பெண்கள் அது போல மறக்கவில்லை. அவளை அழைத்து எல்லாவற்றையும் கேட்பார்கள்.
“இல்லை.. பாட்டி கொன்றுவிடுவாள்..”அந்த இடத்திலிருந்து போய்விட டைனி முயற்சிப்பாள்.
“இந்த வளையல்கள் உனக்குத்தான். பாட்டிக்கு இதைப் பற்றியெல்லாம் தெரியாது” அந்தப் பெண்கள் இனிமையாகப் பேசிச் சம்மதிக்க வைப்பார்கள்.
“என்ன நடந்தது?எப்படி நடந்தது ? ”எல்லாவற்றையும் விசாரிப்பார்கள். அவர்கள் நோக்கத்தைப் புரிந்து கொள்ளாத சிறியவளான ,அப்பாவியான டைனி தன்னால் முடிந்தவரை சொல்ல அவர்கள் தங்கள் முகத்தை மூடிக்கொண்டு சிரிப்பார்கள்.
டைனி மறந்துவிடலாம். ஆனால் இயற்கை. மொட்டைப் பறித்து அது தயாராவதற்கு முன்பே அதை மலரச்செய்தால் அதன் இதழ்கள் உதிர்ந்து தண்டு மட்டும் நிற்கும்.எத்தனை அப்பாவி இதழ்களை டைனியின் முகம் உதிர்க்க வேண்டியிருந்தது என்று யாருக்குத் தெரியும்?டைனி குழந்தை, சிறுமியாகாமல் ஒரே பாய்ச்சலில் பெண்ணாகிவிட்டாள்,இயற்கையான ரீதியில் அனுபவமான நிலையில் இல்லாமல்.. குயவன் களிமண் பொம்மையைச் செய்யும் போது அது உறுதியாவதற்கு முன்னால் தடித்து வீங்கியிருப்பது போல.
ஒரு துணி அழுக்காகவும், எண்ணெய்ப்பசையோடும் இருக்கும் போது யாராவது அதை வீணாக்கினால் அதுபற்றி யாரும் கவலைப்படுவதில்லை. தெருவில் பையன்கள் அவளைக் கிள்ளி இனிப்பு தருவார்கள்.டைனியின் கண்கள் கூத்தாடும்… இப்போது பாட்டி அவளை இனிப்புகள் தருவதி்ல்லை. அதற்கு பதிலாக அவளை அடித்து நொறுக்குகிறாள்.ஆனால் எண்ணெய்த் துணியில் ஒட்டிக்கொண்ட தூசியை உதறமுடியாது.டைனி ரப்பர்பந்து; தாக்கினால் உங்களை நோக்கி பதிலுக்கு எம்பும்.
சிலவருடங்களுக்குள் டைனியின் ஒழுக்கமின்மை அப்பகுதியில் அவளை பீடையாக்கி விட்டது.அதிகாரியும்,அவர் மகனும் அவளுக்காக சண்டை போட்டுக் கொண்டதாக வதந்தியும்…அதற்குப் பிறகு ராஜ்வா- பல்லக்கு தூக்குபவர் சித்திக்கின் மருமகன் -மல்யுத்தக்காரன் என்று தொடர்ந்தது. ஒழுக்கம் கெட்டு நடக்கும் பெண்களின் மூக்கை அரியும் தண்டனைக்கு அருகேயும் அவள் வந்துவிட்டாள்.[ ஒழுக்கம் கெட்ட பெண்களின் மூக்கை அரிவது பாரம்பர்ய தண்டனை ]
அந்தப் பகுதி முழுஎதிர்ப்பான இடமாகிவிட்டது. அவள் பத்திரமாக அங்கு தங்குவதற்கு இடமில்லை.டைனி ,சித்திக்கின் மருமகன் தொல்லை அங்கிருப்பவர்களுக்கு பொறுக்கமுடியாமல் போனது.பம்பாய்,டில்லி போன்ற நகரங்களில் இது போன்ற பண்டங்களுக்கு வரவேற்புண்டு என்று அவர்கள் பேசிக் கொண்டனர்.அநேகமாக அவர்களிருவரும் அங்கு போயிருக்க வேண்டும்.
டைனி வீட்டை விட்டு வெளியேறிய தினத்தில் பாட்டிக்கு லேசான சந்தேகம் கூட வரவில்லை.வழக்கத்தை மீறி சில நாட்களாகவே டைனி மிக அமைதி யாக இருந்தாள். பாட்டியிடம் அதிக வம்பில்லை.ஆனால் தன்னிடத்தில் உட்கார்ந்து வெகுநேரம் வானத்தை வெறித்தபடி இருந்தாள்.
“சாப்பிட வா ,டைனி.” பாட்டி சொல்வாள்
“எனக்குப் பசியில்லை ,பாட்டி”
“நேரமாகிறது டைனி.படுக்கப் போ”
“எனக்கு தூக்கம் வரவில்லை ,பாட்டி.”
அன்றிரவு அவள் பாட்டியின் கால்களைப் பிடித்துவிட்டாள்.” பாட்டி… பாட்டி நான் ’சுபானஹல்லா ஹம்மா ’வை சரியாகச் சொல்கிறேனா பார்” என்றாள் [ ஐந்து முறை நடக்கும் தொழுகையின் போது சொல்லும் வார்த்தைகள் ]
கேட்டுவிட்டு பாட்டி டைனியை முதுகில் தட்டிக்கொடுத்தாள்.
“போதும் கண்ணே,வெகு நேரமாகிவிட்டது .போய்ப் படுத்துக் கொள்” சொல்லி விட்டு பாட்டி திரும்பிப் படுத்துக்கொண்டாள்.
சிறிது நேரத்திற்குப் பிறகு டைனி முற்றத்தில் நடப்பது தெரிந்தது.”என்ன செய்கிறாள் இவள்?”என்று முணுமுணுத்தாள்.இப்போது என்ன பிரச்னையைக் கொண்டு வந்திருக்கிறாளோ? ஆனால் கொல்லைப்புறம் போக பாட்டி எழுந்தபோது வியப்பிலாழ்ந்தாள்.டைனி ஈஷா வழிபாட்டைச் சொல்லிக் கொண்டிருந்தாள்.அடுத்த நாள் காலை அவள் போய்விட்டாள்.
பயணத்திலிருந்து திரும்பிவருபவர்கள் அவளைப் பற்றிய செய்திகளைக் கொண்டு வருவார்கள்.அவள் ஒருவரின் வைப்பாட்டியாக மிக நல்ல நாகரிகமாக வசதியாக வாழ்வதாக ஒருவர் சொன்னார்.வேறொருவர் அவளை ’டயமண்ட் மார்க்கெட்டில்’பார்த்ததாகச் சொன்னார். இன்னும் சிலர் பராசாலையில் பார்த்ததாகச் சொன்னார்கள்.
ஆனால் பாட்டியின் விளக்கம் டைனிக்கு திடீரென காலரா வந்து யாருக்கும் தெரிவதற்குள்ளாக இறந்துவிட்டாள் என்றுதான்.
பேத்தியின் சாவிற்காக சில காலம் துக்கத்திலிருந்துவிட்டு பாட்டி திரும்பவும் வழக்கம் போல சுற்றத் தொடங்கி விட்டாள்.அவளைக் கடந்து செல்பவர்கள் பலவிதமாக அவளைக் கேலி செய்தனர்.“பாட்டி ,நீ ஏன் திருமணம் செய்து கொள்ளக் கூடாது”? என் சகோதரி சொல்வாள்.
“யாரைத் திருமணம் செய்து கொள்வது .உன் கணவனையா?”பாட்டி வெறுப்பாகக் கேட்பாள்.
“ஏன் அந்த அந்த முல்லாவை திருமணம் செய்து கொள்ளக்கூடாது? அவருக்கு உன்னை மிகவும் பிடிக்கும்”.
பாட்டி பொறுக்க முடியாத வகையில் வசைபொழிய ஆரம்பிப்பாள்.
“அவனா! கையில் கிடைத்தால் பிய்த்து விடுவேன்.அப்படிச் செய்யாவிட்டால் என் பெயரை மாற்றிக் கொள்கிறேன்” என்பாள்.
ஆனால் நீங்கள் நம்பினாலும், நம்பாவிட்டாலும் அவள் முல்லாவை எப்போது பார்க்க நேர்ந்தாலும் வெட்கமடைவாள்.
அங்குள்ள சிறுபிள்ளைகள் தவிர, பாட்டியின் ஆயுட்கால எதிரிகள் குரங்குகள் தான்,குழம்ப வைக்கும் குரங்குகள்.அவை பலதலைமுறைகளாக அந்தப் பகுதியிலிருப்பதால் அங்கிருக்கும் ஒவ்வொருவரைப் பற்றியும் அவைகளுக்குத் தெரியும்.ஆண்கள் அபாயமானவர்கள்,குழந்தைகள் போக்கிரிகள்,ஆனால் பெண்கள்தான் தமக்கு பயப்படுவார்கள் என்று தெரிந்துகொண்டவை. ஆனால் பாட்டியும் அவைகளோடு பலகாலம் இருந்தவள்.குழந்தையின் கவட்டையைக்காட்டி அவைகளைப் பயமுறுத்து வாள்.காயம் இருக்கும்போது புர்காவை டர்பன் போல தலையில் சுற்றிக்கொண்டு அதன்மேல் கவட்டையை வைத்துக்கொள்வாள். குரங்குகள் ஒரு நிமிடம் பயந்து போய்,பின்பு அவளிடம் தம் வேலையைக் காட்டும்.
பாட்டியிடமிருக்கும் மிச்சமீதி உணவுக்காக நாள் முழுவதும் குரங்குகள் அவளோடு சண்டைபோடும்.அப்பகுதியில் திருமணம், சாவு, குழந்தையின் நாற்பது நாள் விழா நடைபெறுகிறதோ அப்போது மிச்சமிருக்கும் உணவை கான்ட்ராக்ட் எடுத்தது போல பாட்டி அங்கிருப்பாள். இலவச உணவு வழங்கப்படும் போது நான்கு தடவை வந்து தன் பங்கைப் பெற்றுக் கொள்வாள்.இப்படியாக உணவைக் குவித்து அதை வருத்தத்தோடு பார்த்துக் கொண்டிருப்பாள். கடவுள் தனக்கு ஒட்டகத்தைப் போல வயிற்றைக் கொடுத்திருந்தால் நான்குநாள் உணவு ஒரேதடவையில் உள்ளே போய்விடும் ஏன் அப்படி கொடுக்கக் கூடாது?அவளுக்கான உணவு ஏடாகூடமாக இருக்க வேண்டும் என்று கடவுள் விதித்து விட்டார். ஒரே நேரத்தில் இரண்டு வேளை உணவுண்ணும் சக்தியை கடவுள் அவளுக்கு ஏன் தரக் கூடாது?அதனால் அவள் என்ன செய்வாளென்றால் அந்த உணவை பரப்பிக் காயவைத்து துண்டுகளாக்கி ஒரு குடத்தில் வைத்து விடுவாள்.பசிக்கும்போது குடத்திலிருந்து சிறிய அளவு எடுத்து பொடி யாக்கித் தண்ணீர் விட்டு உப்பு,பச்சை மிளகாய் சேர்த்து சாப்பிடுவாள். ஆனால் கோடை, மழைக் காலங்களில் இது கடுமையான வயிற்றுப் போக்கை ஏற்படுத்திவிடும்.அதனால் இந்த வகையான தன் உணவு கெட்டு விடும்போது,அதை அவள் ஆடுகள்,நாய்கள் வைத்திருப்பவர்களுக்கு விற்றுவிடுவாள். பொதுவாக ஆடுகள்,நாய்கள் ஆகியவற்றின் வயிறு பாட்டியின் வயிற்றை விடச் சக்தியானது என்பதால் அதை வாங்கிக் கொள்ளும் மனிதர்கள் பாட்டி தரும் பரிசாக அதை ஏற்காமல் காசுகொடுத்து வாங்கிக் கொள்வார்கள். துண்டுகளும் ,துணுக்குகளுமான இந்த உணவு பாட்டிக்கு வாழ்க்கையை விடப் பெரிய வரப்பிரசாதம்..பலவித வசைகள்,சாபங்களுக்கிடையே பெற்று ,காய வைத்து எதிரியான குரங்குகளிடமிருந்து பாதுகாத்து வைப்பது ஒரு போர் தான்.அவள் உணவைப் பரப்பும்போது வயர்லெஸ் மூலமாகச் செய்தி போவது போல குரங்குகளுக்குத் தெரிநதுவிடும்.அவைகள் கூட்டமாக வந்து சுவர் அல்லது அங்குள்ள கற்களில் உட்கார்ந்து அந்த வழியில் போகிறவர்களைப் பார்த்து உறுமிக் கொண்டிருக்கும். பாட்டி அவைகளுக்கு எதிராகப் போராடுவாள். புர்காவைத் தலையில் சுற்றிக் கொண்டு,கையில் கவட்டையை வைத்துக் கொண்டு அவள் நிற்பாள்.திரும்பத் ,திரும்ப அவைகளை விரட்டிக்கொண்டு இந்தப் போர் நாள் முழுவதும் தொடரும். மாலையில் அவற்றின் கொள்ளையிலிருந்து தப்பியதை எடுத்துக் கொண்டு அடிமனதிலிருந்து அவைகளுக்கு சாபம் தந்துவிட்டு தன் இடத்திற்குத் தூங்க வந்துவிடுவாள்.
குரங்குகளுக்கும் பாட்டியிடம் தனிப்பட்ட பகையிருக்க வேண்டும்.உலகம் தங்களுக்குத் தரும் எல்லாவற்றையும் புறக்கணித்து விட்டு பாட்டியின் உணவுத் துண்டுகளையே குறிவைக்கும்.அவற்றின் தாக்குதலை என்னவென்று சொல்ல முடியும்?தன் வாழ்க்கையை விட அவள் பெரியதாக நினைத்த தலையணையைப் பறித்துக் கொண்டோடிய அந்தப் பெரிய குரங்கின் செயலை எப்படி விளக்க முடியும்?டைனி போனபிறகு பாட்டிக்கு உலகில் மிக நெருக்கமான தாக இருப்பது இந்தத் தலையணை தான்.தன் புர்காவைப் பற்றிக் கவலைப் படுவது போல அவள் இதற்கும் கவலைப்பட்டாள்.பெரிய தையல்களால் அதை எப்போதும் சரி செய்து கொண்டிருப்பாள்.ஒரு சிறு குழந்தை தன் பொம்மையோடு விளையாடு வதைப் போல அவள் தலையணையோடு நேரம் கிடைக்கும் போதெல்லாம் விளையாடுவாள்.இந்த்த் தலையணையைத் தவிர அவளுக்கு தன் கவலைகளைப் பகிர்ந்து கொள்ள வேறு யாருமில்லை.அது அவள் சுமையைக் குறைதிருக்கிறது.பெரிய தையல் போட்டு அதன் மடிப்புகளை வலிமையாக்குவது அவளுக்கு மிகவும் பிடித்தது.
விதி இப்போது அவளிடம் எப்படி விளையாடுகிறது பாருங்கள்.அவள் புர்கா உடலைச் சுற்றியிருக்க ,கைப்பிடிச் சுவரில் சாய்ந்து உட்கார்ந்தபடி இடுப்புக் கயிற்றில் இருந்த பேனை எடுத்துக் கொண்டிருந்த போது திடீரென ஒரு குரங்கு அவள் தலையணையைத் தட்டிப் பறித்துக் கொண்டு ஓடிவிட்டது யாரோ பாட்டியின் மார்பிலிருந்து அவள் நெஞ்சைப் பிய்த்து விட்டார்கள் என்று நீங்கள் நினைத்திருக்கலாம். அவள் கத்தி அழுதது அப்பகுதி மக்கள் எல்லாம் கூட்டமாக ஓடி வரும்படி செய்தது.
குரங்குகள் எப்படிப்பட்டவை என்று உங்களுக்குத் தெரியும்.யாரும் பார்க்காத நேரத்திற்காகக் காத்திருந்து ஒரு டம்ளரையோ அல்லது உலோகப் பாத்திரத் தையோ இரண்டு கைகளாலும் எடுத்துக் கொண்டு ஓடி கட்டைச் சுவற்றில் உட்கார்ந்து அதைச் தேய்க்கும்.அந்தப் பொருளுக்குச் சொந்தமானவர் கையில் ரொட்டித் துண்டு அல்லது வெங்காயத்துடன் அதைப் பார்த்து கெஞ்சிக் கொண் டிருப்பார்;ஆனால் குரங்கு வேடிக்கையாக அதைப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு தனக்குத் தோன்றும் போது அதைத் தூக்கிப் போட்டுவிட்டு தன்பாட்டிற்குப் போய்விடும்.பாட்டி தன் குடத்திலுள்ள முழுவதையும் கொட்டினாலும் அந்தக் குரங்கு தலையணையின் மீதுதான் கண் வைத்திருந்தது. தன்னால் முடிந்த வரை பாட்டி அதனிடம் கெஞ்சிப் பார்த்தாள். ஆனால் அதன் மனம் உருகவில்லை.அது வெங்காயத்தின் தோலை வெற்றிகரமாக உறிப்பது போல –பாட்டி ஒன்றன் மேல் ஒன்றாக தைத்து வைத்திருந்த மடிப்புகளை உரித்து எறிந்தது.பாட்டி கீழே விழும் அவற்றை ஒன்றொன்றாகப் பிடித்துக் கொண்டிருந்தாள்.ஒவ்வொரு உறையும் வரவர அவள் குரல் பெரிதாகி அலறலாக வெளிப்பட்டது.இப்போது கடைசி உறையைத் துண்டு துண்டாக பிய்த்து பொருட்களை ஒவ்வொன்றாக எறிந்தது-அதில் பஞ்சு மட்டுமில்லை.பல பொருட்கள்.. ஷப்பானின் ஜாக்கெட்,..பன்னு–தண்ணீர் தருபவனின் இடுப்புத் துணி,ஹசீனாவின் பாடி ,குட்டி முன்னாவின் பொம்மையிலிருந்த சிறிய டவுசர்..ரகமத்தின் சிறிய துப்பட்டா.. கைராதியின் நிக்கர் கைராதியின் மகனுடைய பொம்மைத் துப்பாக்கி.. முன்ஷியின் தொப்பி..இப்ராகிமுடைய சட்டையின் கைப்பகுதி அமீனாவின் பாட்டில், பதாபன்னின் மைடப்பா.. சகினாவின் ஜிகினாகிளிப் பெட்டி.. முல்லாவின் ஜெபமாலை மணிகள்…பகீரின் வழிபாட்டுப் பலகை.. பிஸ்மில்லாவின் தொப்புள்கயிறு, டைனியின் முதலாண்டு பிறந்த நாள் விழாவின்போது பயன்படுத்தப்பட்ட மஞ்சள் பொட்டலம் ..ஒரு வகை அதிர்ஷ்ட புல்,ஒரு வெள்ளி மோதிரம்,போரிலிருந்து வெற்றிகரமாக மீண்ட பஷீர்கானுக்கு அரசு கொடுத்த தங்கமுலாம் பூசப்பட்ட பதக்கம்.
“திருடி!,,மோசக்காரி.. கிழவி!… கிழச் சாத்தான் வெளியேற வேண்டும்… அவளைப் போலீசிடம் ஒப்படைக்க வேண்டும்! அவள் படுக்கை… அதில் பல பொருட்களை நீங்கள் பார்க்கலாம்!” சுருக்கமாகச் சொன்னால் அவர்கள் நேரடியாக இவையனைத்தையும் ,தாங்கள் நினைத்ததையெல்லாம் சொன்னார்கள்
பாட்டியின் கூக்குரல் திடீரென்று நின்றுவிட்டது.கண்ணீர் வற்றி விட்டது.தலை தொங்கிய நிலையில் பேச்சிழந்து அதிர்ச்சியோடு நின்றாள். கைகள் முழங் காலை கட்டியிருக்க அவள் அன்றிரவு முழுவதும் உட்கார்ந்தே கழித்தாள். தொடர்ந்த விம்மலால் அவள் உடல் நடுங்கியது. தன் பெற்றோர், கணவன் மகள் பிஸ்மில்லா ,பேத்தி டைனி ஆகியோரின் பெயர்களைச் சொல்லி அழுதாள். இடையிடையே சிறு தூக்கத்தில் ஆழ்ந்து, பின் விழித்து புண்ணில் எறும்புகள் கடித்தது போல அழுதாள். சில சமயங்களில் சிரித்தும், சிலசமயங்களில் அழுதும்,தனக்குள் பேசிக் கொண்டும் ,காரணமின்றிச் சிரித்துக் கொண்டுமிருப்பாள்.இரவுநேரத்தில் அவளுக்குப் பழைய ஞாபகங்கள் வர சீக்கான நாய் போல ஊளையிடுவாள். தன் அழுகுரலால் அப்பகுதி மக்களை எழுப்பி விட்டு விடுவாள்.இரண்டு நாட்கள் இப்படிக் கழிய,அப்பகுதி மக்கள் தாங்கள் நடந்து கொண்ட விதத்திற்காக வருந்தினர்.இந்தப் பொருட்களில் எதுவும் யாருக்கும் தேவையில்லை. அவை தொலைந்து பல வருடங்களாகி விட்டன. அதற்காகச் சில காலம் கவலைப்பட்டுவிட்டு அதை மறந்து விட்டனர். அவர்களில் யாரும் கோடீஸ்வரரில்லை.அந்த மாதிரி சில சமயங்களில் சாதாரண வைக்கோல் கூடத் தூண் போல உங்களைச் செயல்பட வைக்கும்.ஆனால் இந்த இழப்புகள் எல்லாம் அவர்களைக் கொன்று விடவில்லை.ஷப்பானின் ஜாக்கெட் தொலைந்து பலநாட்களாகி விட்டன.அது தொலைந்ததால் அவன் குளிருக்கு பயந்தவனாகவோ, அது வருவதற்காகக் காத்திருந்து, வளர்ந்து விடாமலில்லை.ஹசீனா பாடி அணியும் பருவத்தைக் கடந்துவிட்டாள்.முன்னியின் பொம்மை டிரவுசரால் என்ன பயன்?அவள் இப்போது பொம்மை விளையாட்டைக் கடந்து பொம்மை சமையல் பருவத்திற்கு வந்துவிட்டாள்.அப்பகுதியில் உள்ள எவரும் பாட்டியின் இரத்தத்தைக் குடிக்கும் ரகமில்லை.
பழைய காலத்தில் ஒரு ராட்சஸன் இருந்தான். அவன் உயிர் ஒரு பெரிய தேனீயிடமிருந்தது.ஏழுகடல்களுக்கு அப்பால் ஒரு குகையில் ஒரு பெரிய பேழை ,அதற்குள் மற்றொரு பேழை .அதனுள் ஒரு சிறிய பெட்டி அதற்குள் அந்தப் பெரிய தேனீ இருந்தது.வலிமையான இளவரசன் ஒருவன் முதலில் தேனீயின் ஒரு காலைக் கிழித்தான் .அதனால் ராட்சஸனின் கால்கள் உடைந்தன. பிறகு அவன் இன்னொரு காலைக் கிழிக்க ராட்சஸனின் இன்னொரு கால் உடைந்தது.பிறகு அவன் தேனீயை நசுக்க ராட்சஸனின் உயிர் பிரிந்தது.
பாட்டியின் வாழ்க்கை அந்தத் தலையணையிலிருந்தது.குரங்கு தன் பற்களால் அதைக் கிழித்து ,பாட்டியின் நெஞ்சில் பழுக்கக்காய்ச்சிய கம்பியைத் திணித்து விட்டது.
விதியால் இந்த உலகில் பாட்டி படாத துயரமில்லை, அவமானமில்லை, வெட்கக் கேடில்லை. அவள் கணவன் இறந்த பிறகு அவள் வளையல்கள் நொறுக்கப்பட்டன, தான் அதிக நாட்கள் வாழமாட்டோமென்று பாட்டி நினைத்தாள்;பிஸ்மில்லா அவளுக்குப் பிறந்த போது ஒட்டகத்தின் மேல் வைக்கப் படும் கடைசி வைக்கோல் என்று உறுதியாக நம்பினாள். டைனி அவளுக்கு பெரிய அவமானத்தைத் தந்து விட்டு ஓடிய போது இது மரண அடி என்று நினைத்தாள்.
பிறப்பு தொடங்கியே ஒவ்வொரு நோயும் அவளைத் தாக்கியது.சின்னம்மை முகத்தில் வடுக்களைப் பதித்து விட்டுப் போனது.ஒவ்வொரு ஆண்டும் பண்டிகையின் போது தவறாமல் கடும் காலராவால் பாதிக்கப் படுவாள்.
அவள் விரல்கள் தேய்ந்து, கைகளரித்துப் போகும் வரை பல காலம் மற்ற வர்களின் கழிவுகளைச் சுத்தம் செய்தவள் ;பாத்திரம் பண்டங்களைத் தேய்த்து கைகளில் வடுக்களும் பள்ளங்களுமாய் இருப்பவள். சிலசமயங்களில் இருட்டில் படிகளில் விழுந்து ,தானே தன் உடலை இழுத்து இறங்கிவந்து ,படுக்கையில் இரண்டு மூன்று நாட்கள் கிடப்பாள்.போன பிறவியில் அவள் நாயுண்ணியாக இருந்திருக்க வேண்டும்; அதனால்தான் சுலபமாகச் சாகமுடியவில்லை.. எப்போதும் இடையீடில்லா நிலையைக் மரணம் அவளுக்குக் கொடுத்திருக்கிறது போலும்.தன் கந்தல்ஆடைகளோடு அவள் அலைவாளே தவிர, ,இறந்து போனவர்களின் ஆடைகளை ஏற்றுக் கொண்டதோ,அவர்கள் தன்னிடம் நெருங்கி வருவதையோ ஒருபோதும் அனுமதித்ததில்லை.செத்துப் போனவன் அந்த மடிப்பில் மறைந்திருந்து பாட்டியை இழுத்துக் கொண்டு விடலாம். கடைசியில் குரங்குகள்தான் பாட்டியின் கணக்கை முடிக்கும் என்று யார் எதிர் பார்த்திருப்பார்கள்.? விடியற்காலையில் தண்ணீர் எடுக்கும் பையன் வந்த போது படியில் பாட்டி சாய்ந்திருந்தாள்.அவள் வாய் திறந்திருக்க, அரையாக மூடியிருந்த கண்களின் மேல் ஈக்கள் ஊர்ந்து கொண்டிருந்தன. ஜனங்கள் பாட்டி அடிக்கடி அப்படி தூங்குவதைப் பார்த்து இறந்து போய்விட்டாளோ என்று பயந்திருக்கின்றனர்.ஆனால் பாட்டி எழுந்து தொண்டையைச் செருமிக் கொண்டு,தன்னைத் தொல்லைக்குள்ளாகியவருக்கு வசவுகள் பாடிவிட்டுப் புறப்பட்டு விடுவாள்.. ஆனால் அன்று அவள் சாய்ந்தபடியே உட்கார்ந்திருந்தாள். உலகின் மேல் தனக்கிருக்கும் வெறுப்பை தொடர்ந்து காட்டியவள் .தன் வாழ்நாள் முழுவதிலும், அவள் ஒரு சந்தர்ப்பத்தில் கூட நிம்மதியாக இருந்த தில்லை.அவள் எங்கிருந்தபோதும் முட்களிருந்தன.எப்போதும் சாய்ந்து உட்கார்ந்திருப்பதைப் போலவே பாட்டி இருந்தாள்.அவள் உடலை இழுப்பது, கட்டுவது என்று எதுவுமே சிரமமாக இருக்கவில்லை.
தீர்ப்பு நாளில் தாரை முழங்கியது. ,இலவச உணவு வழங்கப்படுவதைக் காது கேட்டது போல பாட்டி இருமியபடி எழுந்து,தொண்டையைச் செருமி. பிச்சை யெடுக்க கிளம்பினாள்… தேவதைகளைச் சாபமிட்டபடி எப்படியோ தன்னை இழுத்துக் கொண்டு,தான் இருமடங்காகி, சிராத் பாலத்தைக் கடந்து சக்தி.. கருணை ..வடிவான கடவுளின் முன்னிலையில் அவள் …கடவுள் ,மனித இனத்தின் இழிவுநிலைக்காக வருந்தித் தலைகுனிந்து இரத்தக் கண்ணீர் வடித்தார். அந்த தெய்வீக இரத்தக் கண்ணீர் பாட்டியின் கடினமான ஈமக்குழியில் விழ ,பிரகாசமான சிவப்பு மலர்கள் காற்றில் நடனமிட்டன.
————————–
.[சிராத் இசுலாம் நம்பிக்கைப்படி சொர்க்கத்தை அடைய வேண்டுமெனில் முடியை விட மெல்லியதாகவும், வாளை விடக் கூர்மையானதாகவும் இருக்கிற ஒரு பாலத்தைக் கடப்பதாகும்]
நன்றி: Contemporary Indian Short Stories –Series 1, Sahitya Akademi

 

 

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.