
திரை உலகில் மகாகவி என்று அழைக்கப்பட்டவர் கம்பதாசன். அற்புதமான கவிதைகள, பாடல்கள் தந்த கவிஞர். ஆறாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். சிறந்த பாடலாசிரியர், குரல் வளம் அமைந்தவர், வசனகர்த்தா,மற்றும் நடிகர். அந்தக் காலத்தில் திரைப்படப் பாடலுக்கு அதிக தொகை வாங்கிய ஒரே கவிஞர்.
பம்மல் சம்பந்த முதலியார், ஆரணி குப்புசாமி முதலியார், பாரதிதாசன், சுரதா என அனைவராலும் பாராட்டப்பட்டவர். எழுத்தாளர வ ரா அவர்கள், கம்பதாசன் ஒரு பிறவிக் கவிஞர் என்பார்.
1961 ஆம் ஆண்டு ‘அக்பர்’ திரைப்படத்திற்கு, நவ்ஷத் இசையில் இவர் இயற்றிய பாடல் புகழ் பெற்றது.
‘கனவு கண்ட காதல் கண்ணீராச்சே!
நிலா வீசும் வானில் மழை சூழலாச்சே!
மழை சூழலாச்சே!’
முன்பே எண்ணிப் பாராமல் நெஞ்சம் ஈந்திட்டேனே
எந்தன் ஆசையே இன்று என்னைக் கொல்லலாச்சே
உந்தன் காதலின் கனவெல்லாம் கண்ணீராச்சே
ஆச்சே
மறைத்தே நான் வாழ்கின்ற மார்கம் கெடாதே
ஜெகம் வாழ்கிறேன் வாழ்க்கையே கண்ணீராச்சே
ஆச்சே
நிலா வீசும் வானில் மழை சூழலாச்சே
மழை சூழலாச்சே
காதலரின் பிரிவுத் துயரத்தை இதைவிடச் சிறப்பாக யாரால் கூற இயலும்? பாடலுக்குடல் அடிகள் திரும்பத் திரும்ப வந்து இதயத்தின் துயரத்தை மிகுதிப்படுத்திக் கொண்டேயிருக்கும்.
அகப்பாடல்கள் மட்டுமல்லாமல், சமுதாயப் பாடல்கள், இறையுணர்வுப் பாடல்கள் என எல்லாவற்றிலும் அவர் முத்திரை பதித்தார். 1948ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஞானசௌந்தரி’ படத்தில் இவர் எழுதிய மேரி மாதாப் பாடல் கேட்டவர் செவிகளில் இன்னும் ஒலித்துக் கொண்டே யிருக்கிறது.
அருள் தாரும் தேவ மாதாவே
ஆதியே இன்ப ஜோதியே ஆதியே இன்ப ஜோதியே
ஜெதமீதிலே ஈடில்லா நிலையே என் கதியே
ஆதியே இன்ப ஜோதியே ஆதியே இன்ப ஜோதியே
திருவேதுணை நீயே திருவே துணை நீயே
தேவதாயே இனியா நினைத்தாய் கண் பாராய்
ஆதியே இன்ப ஜோதியே
ஆதிதேவதையே அருள் வாய் மதியே
தேனினும் மேலாம் பதனிச ஜீவாதாரமே நல்
ஆதியே இன்ப ஜோதியே
என்னும் இந்தப் பாடல், பி ஏ பெரியநாயகி குரலில் மிக அழகு,
கம்பதாசனைப் பற்றி கவிஞர் வாலி எழுதுவார் –
“வில்லியம் வேர்டஸ்வொர்த் , கீட்ஸ் போன்ற மேல்நாட்டுக் கவிஞர்களுக்கு இணையான சிந்தனை வளம், கற்பனை நயம் கொண்டவர். சிவந்த மேனி – தீரககமான நாசி – தீட்சண்யமான கண்கள் – வேஷ்டி ஜிப்பாவில் ஒரு சிற்பம் நடந்து வருவது போலிருக்கும்.”
திரைஉலகில் முத்திரை பதித்தவரும், மூன்று காலத்திலும் அற்புதமாகப் பாடுபவருமான மதுரை மாரியப்ப சாமிகளுக்கு நெருங்கிய உறவினர். புகழ்பெற்ற மலையாளக் கவிஞர் வள்ளத்தோலின் மருமகன. ஆனால், அவரின் உணவே மதுவானதால், மதுவே அவர் உயிரை இளம் வயதில் எடுத்க்கொண்டது. அவன் என்ற திரைப் படத்தில் சங்கர் ஜெய்கிஷன் இசையில் வெளிவந்த கல்யாண ஊர்வலம் வரும் என்ற பாடலும், அவரின் அடையாளத்தைக் காட்டும்.
கல்யாண ஊர்வலம் வரும் உல்லாசமே தரும்
மகிழ்ந்து நான் ஆடிடுவேன் ஓ
மகிழ்ந்து நான் ஆடிடுவேன் (கல்யாண ஊர்வலம்)
மாப்பிள்ளை நுதலின் திலகம் போலே
மணமகள் எழில் சிந்தவே
பார்த்திட எந்தன்
உள்ளத்தின் கனவே
பூர்த்தி பெறும் விரைவே
சிங்காரம் செய்வாள் சேடியே
மருதாணி சூடியே
மகிழ்ந்து நான் ஆடிடுவேன்
கண் சிந்தும் காரின் மழைதான்
மென்மேலும் இருள்தான்
தன்னந்தனி ஆகிடுவேன் ஓ
கல்யாண ஊர்வலம் வரும்
உல்லாசமே தரும்
மகிழ்ந்து நான் ஆடிடுவேன் ஓ
மகிழ்ந்து நான் ஆடிடுவேன்
பி யூ சின்னப்பா நடித்த, மங்கயர்க்கரசி படத்தில் இடம் பெற்று புகழ் பெற்ற – காதல் கனி ரசமே பாடலில்,
பார்த்தால் பசி தீரும்
பங்கஜ வதனத்தில்
செங்கனி வாய்ச் சிரிப்பைப்
பார்த்தால் பசிதீரும்
என்று எழுதுவார்.
இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர்களுள் பாரதி, பாரதிதாசனுக்குப் பிறகு பன்முகப் பேராற்றல் படைத்த கம்பதாசனை தமிழ்கூறு நல்லுலகம் மறந்து விட்டதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
“நண்பர் கம்பதாசன் . வாழ்வையும், கவிதையையும், காவியக் கனவையும் ஒன்றாக்கிய அவரது உள்ளத்தின் கனிவு. வறுமையூடும், செல்வத்தூடும் மனங்கலங்காது குலுங்காது அநாயாசமாகப் பறந்து செல்லும் வானம்பாடி அவர்…” என்று ச.து.சு. யோகியார் கூறியுள்ளார்.
அவரின் கவிதைகள் மிக அருமை – அழகு என்பார் பலர்.
நலமுறவே உழைப்பவர்க்கு உணவு வேண்டும்
நியாயமிது நியாயமிது நியாயமிதே!
அலவெனவே மறுப்பவர்கள் கடவுளேனும்
அடுத்தகணம் அவர்தலை எம் காலில் வீழும் – என்கிறார் க்ம்பதாசன்.
எழுத்தாளர் வல்லிக்கண்ணன் ‘கவிஞர் கம்பதாசன் வாழ்வும் பணியும்’ என்ற நூலுக்கு வழங்கிய முன்னுரையில் கம்பதாசனைப் பின்வருமாறு அறிமுகம் செய்வார்:
மகாகவி பாரதிக்குப் பின் தமிழகத்தில் தோன்றிக் கவிதையை வளம் செய்த ஆற்றல் மிகுந்த சிறந்த கவிஞர்களுள் கம்பதாசன் குறிப்பிடத் தகுந்தவர். கவிதை நயமும், கற்பனைச் சுவையும், உவமை அழகும், கருத்தாழமும் புதுமையும் மிளிரும் கவிதைகளையும் குறுங்காவியங்களையும் படைத்துள்ள அவர் திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதிப் பெயர் பெற்றிருந்தார். இசைப் பாடல்கள் எழுதும் திறம் பெற்றிருந்த அவர் நாட்டிய நாடகங்கள் ஆக்கியும் நாடகங்களில் நடித்தும் கலைப்பணி புரிந்தவர். ஏழை, எளியவர்கள், தொழிலாளர்கள் முதலியோரின் வாழ்க்கை நலனில் அக்கறை கொண்டிருந்த அவர் சோசலிஸ்ட் கவிஞராக இந்தியா முழுவதும் அறியப் பெற்றிருந்தார். .
“நித்தம் வறுமையில் நெஞ்சழிந்து – தன்னை
நேசனெனச் சொல்ல யாருமின்றி
பித்தன் இவனெனக் காட்சிதந்து – உயிர்
பிரிந்தபின் புகழைப் பெறுபவர் யார்?”
என்னும் இவர் கவிதை சிந்திக்கத்தக்கது.
வாழும் காலத்தில் வறுமையும், அன்பு பாராட்ட ஆட்கள் இல்லாத வெறுமையுமாய் வாழ்ந்தவனுக்கு மரணத்துக்குப் பின் கிடைக்கும் புகழால் பயன் என்ன என்று கவிஞர் கேட்கும் கேள்வி பொருள் பொதிந்தது.கவிஞரின் வறுமைக்குக் காரணம் அவரது திட்டமிடப்படாத வாழ்க்கை முறையேயாகும்.
1934 ஆம் ஆண்டு வெளிவந்த ‘சீனிவாச கல்யாணம்’ என்னும் திரைப்படத்திற்கு முதல் பாடல் எழுதியதாக சிலோன் விஜயேந்திரன் குறிப்பிடுகிறார். 1940இல் வெளிவந்த ‘வாமன அவதாரம்’ திரைப்படத்திற்கு இவர் எழுதிய பாடல்களே சான்றுகளாகக் கிடைக்கின்றன.
இதனைத் தொடர்ந்து வேணுகானம், ஆராய்ச்சி மணி, பூம்பாவை, உதயனின் ஞானசௌந்தரி, மங்கையர்க்கரசி, இதயகீதம், வனசுந்தரி ஆன அவன், தந்தை, வானரதம், அக்பர் ஆகிய ஏராளமான படங்களுக்கு கம்பதாசன் பாடல்களை இயற்றினார்.
1940ஆம் ஆண்டு தொடங்கிய அவரது பாடல் இயற்றும் பணி 1961 ஆம் ஆண்டு வரை தொடர்ந்தது. இப்படி பல ஆண்டுகள் திரையுலகில் புகழ்பெற்று விளங்கினார். அவர் சமதருமக் கொள்கையை வாழ்க்கையில் கடைபிடித்தவர்.
கம்பதாசன் மரணத்திற்குப் பிறகு அவரது புகழைப் பரப்பிய பெருமைக்குரியவர் சிலோன் விஜயேந்திரன். கம்பதாசனின் கவிதை மீது கொண்ட ஈடுபாட்டால் இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்து அவரது படைப்புகளைத் திரட்டி, வாழ்க்கைக் குறிப்புகளோடு பல தொகுதிகளாக வெளியிட்டார். கவிஞர் கம்பதாசன் வாழ்வும் பணியும், கம்பதாசன் கவிதைத் திரட்டு, கம்பதாசன் திரையிசைப் பாடல்கள், கம்பதாசன் காவியங்கள், கம்பதாசன் சிறுகதைகள், கம்பதாசன் நாடகங்கள் எனப் பல தொகுதிகள் வெளிவந்துள்ளன. அவை அவரது பன்முக இலக்கிய வன்மையைப் பறைசாற்றிக் கொண்டேயிருக்கும்.
கம்பதாசனின் பிற இலக்கிய வடிவங்களை விட கவிதைத் துறையிலேயே அவரது முழு வீச்சை அறிய முடியும். அவரது கவிதைகளில் சொல்லழகும், பொருளழகும் தனித்தன்மையோடு விளங்கும்.
“உலகமே ஒரு சிறைச்சாலை – இங்கே
உற்ற உயிருக்கே உடல்சிறைச் சாலை (உலகமே)
ஐயிரண்டு திங்கள் அன்னை வயிறே சிறைச்சாலை
அணிபருவம் ஏழுக்கும் ஆசையே சிறைச்சாலை
வெய்யில் தரும் பகலுக்கு இரவே சிறைச்சாலை
விதிமுடிந்தால் இங்கே பிடிமண் சிறைச்சாலை”
என்று இவர் பாடுவது மிக அழகு.
கவிதைகள், திரைப்பாடல்கள் மட்டுமின்றி, காவியங்கள் பதின்மூன்று இயற்றியுள்ளார். கனவு, காணிக்கை, காதலும் கண்ணீரும், புத்தன் புனர் ஜென்மம், சாவுக்கு விருந்து, வேளை வந்தது, இரத்த ஓவியம், கல்லாத கலை, சொல்லாத சொல், கறிகனி, மொழி முத்தம், கம்பக் குயில் என்னும் இந்தக் காப்பியங்கள் அவரது கவித்துவத்தை வெளிப்படுத்தும்.
இவரது நூல்கள் பற்றிப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாராட்டியுள்ளார்: “கம்பதாசன் எழுதும் நூல்கள் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கின்றன. அவை அவராலேயே இயற்றப்பட்டவை. அவரின் நெஞ்சினின்று தங்கு தடையின்றி எழும் ஊற்று. உண்மையில் கம்பதாசன் எண்ணம் நன்று. கவிதை உள்ளம் நன்று. நல்ல கற்பனையே புதுமையை வரவேற்கும் தன்மையே அதைப் போற்றும் ஆற்றலைக் காணுகின்றேன்” என்று கூறியுள்ளார்.
அறிஞர் வ.ரா. ‘புத்தர் புனர் ஜென்மம்’ காவியம் பற்றி பாராட்டியிருப்பது குறிப்பிடத் தக்கது “இது கம்பதாசன் கவிதையில் வரைந் திருக்கும் அற்புதச் சித்திரமாகும். தமது கவி தர்க்க சாஸ்திரத் திறமையினால் மறுபிறப்பில் நம்பிக்கை யில்லாத புத்தனைக்கூட புனர்ஜென்மம் எடுக்கும் படியாகக் கம்பதாசன் செய்திருப்பது விசித்திர மான வேலைப்பாடாகும்.”
நாடக நடிகராகத் தம் கலைப் பயணத்தைத் தொடங்கிய கம்பதாசன் தொடர்ந்து தமது இனிமையான குரல் வளத்தால் பின்பாட்டுக்காரராகவும் ஆர்மோனியம் வாசிக்கும் பக்கவாத்தியக்காரராகவும், நாடகங்களுக்குப் பாட்டெழுதும் கவிஞராகவும் வளர்ந்தார்.
1956ஆம் ஆண்டு வெளிவந்த ‘நன்னம்பிக்கை’ என்னும் திரைப்படத்திற்குத் தொழிலாளியைக் கடவுளுக்கு ஒப்பிட்டு ஒரு பாடல்:
“சூரியனும் ஒரு தொழிலாளி – தினம்
சுற்றும் உலகும் தொழிலாளி
வாரி அலையும் தொழிலாளி – எதிர்
வந்திடும் காற்றும் தொழிலாளி
மாரி நதியும் தொழிலாளி – இருள்
மலரும் உடுவும் தொழிலாளி
பாரை நடத்தும் தொழிலாளி – இன்
பரமனடா கலை பிரமனடா”
“கம்பதாசன் இக்கால யுவ எழுத்தாளர், புதுக் குரலின் தெளிந்த தொனிப்பு கேட்கிறது” என்று கம்பதாசனின் பாட்டுத் திறனைப் பற்றிய கவிஞர் ஹரிந்திரநாத் சட்டோபாத்தியாயா குறிப்பிட்டுள்ளார். இவர் கவிக்குயில் சரோஜினி நாயுடுவின் சகோதரர். இவரே இந்தித் திரைப்பட இசையமைப்பாளர் நௌஷாத்திடம் கம்பதாசனை அறிமுகம் செய்து வைத்தவர்.
கம்பதாசன் அந்த நாட்களில் அகில இந்தியாவும் அறியப்பட்ட தமிழ்க் கவிஞராக, பாடலாசிரி யராகத் திகழ்ந்தார். கவியரசர் கண்ணதாசன் மற்றும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகியவர்களுக்கு இவரே முன்னோடியாக விளங்கினார். பம்பாய்க்காரர் படம் எடுத்தால், கூப்பிடு கம்பதாசனை என்பார்களாம்.
சந்திரிகா என்ற படத்தில்
நினைதிடல் உலகமே
நிழல் பொம்மலாட்டமே
நிஜம் என்பதெல்லாம்
நிராசை தாநாகுமே
என்ற வரிகள் காலத்தின் கூத்துகளை கூறும்.
கண்ணதாசன் எழுதுவார் – வசதி வாய்ந்த கவிஞராக வாழ்ந்தவர் மட்டுமல்ல – 1941, 1952, 1960 என பலமுறை தனது கவிதைத் தொகுப்புக்களை வெளியிட்டவர்.
கம்பதாசனின் பின்வரும் கவிதைத் தலைப்புகளே சொல்லும் அவரின் சமதர்மச் சிந்தனைகளை:
1. தொழிலாளி 2. செம்படவன் 3. கொல்லன் 4. ரிக்ஷாக்காரன் 5. மாடு மேய்க்கும் பையன் 6. கூடை முடைபவள் 7. ஒட்டன் 8. பிச்சைக்காரன் 9. பாணன் 10. குலாலன் 11. கையேந்திகள்.
கம்பதாசன் படைப்பாளியாக வலம் வந்த காலக்கட்டம் – ஒரு பக்கம் காங்கிரஸ் பேரியக்கம், மறுபக்கம் திராவிட இயக்கம் இரண்டுக்கும் இடையில் தனிப்பெரும் சக்தியாக ஆளுமை நிறைந்த கவிஞராகக் கம்பதாசன் தம்மை உருவாக்கிக் கொண்டார். இதுவே அவரின் பலமும் பலவீனமும் ஆகும். 1960களுக்குப் பிறகு திரையுலகில் அவர் தனித்து விடப்பட்டதன் அரசியல் பின்னணி இதுவே. அவரின் மதுப் பழக்கமும் இணைந்தன. அவர் எழுதிய
மின்னல் போல் ஆடும் இந்த வாழ்க்கையே
வானவில் போலவே இளமை ஆனதே – துன்பக் கதை உனதே
என்ற வரிகள் அவருக்கே பொருந்தியது போல, 1973ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் நாள் ஓர் அனாதையைப்போல் மரணத்தைத் தழுவினார் என்பது , சற்றே அதிர்ச்சியான தகவல்.
தமிழ்த் திரையுலகிற்கு பாபநாசம் சிவன் பாடல்கள் ஆலயமணியானது.. கம்பதாசன், கண்ணதாசன் , அந்த இசைக்கு, நீர் ஊற்றியவர்கள் என்றால் மிகை ஆகாது.