
உண்மை சுட்டாலும்,செய்தி தவறாக தோன்றினாலும் சரித்திர ஆசிரியர்களே பொறுப்பு.
சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் பண்டைத் தமிழனின் தேவை உண்ண உணவு. மழைக்கு ஒதுங்கவும் உறங்கவும் ஒரு மேற்கூரை. குகைகளில் வாழத் துவங்கியவன் இனப் பெருக்கம் காரணமாக வெளி வந்தான்.
மலை சார்ந்த குறிஞ்சி நிலத்தை குறி வைத்தவர்கள் சீயோன் என்ற முருகனை தம் கடவுளாக்கி தேன், தினை, பழங்களை உண்டு மலை வாழ் மிருகங்களோடு போட்டியிட்டு ஓடிக் கொண்டிருந்தார்கள்.
முல்லை என்று நாம் கூறும் காடும் காட்டைச் சார்ந்த நிலங்களை தமதாக்கிக் கொண்டவர் ஆடு, மாடு, நாய் இவைகளைப் பழக்கி மால் என்ற பெருமாளை தன் தெய்வமாக்கி வழி பட்டனர். திருமாலே கிருஷ்ணனாய் மாடுகளை மேய்த்தார். ஆநிறைகள் அதிகம் கொண்டவனும், அவற்றை கவரும் திறமை பெற்றவனும் தலைவன் ஆனான்.
வயல் சார்ந்த மருதம் நிலத்திற்கு தெய்வம் சிலர் வேந்தன் என்கின்றனர், பலர் இந்திரன் என்கின்றனர்.
பண்டைத் தமிழன் முருகனையும், பெருமாளையும் தனக்கு தெரிந்த வழிகளில் ஆடிப் பாடி, படைத்து கொண்டாடினான். பின்னர் காவல் தெய்வங்களையும், குல தெய்வங்களையும் கடவுளாய் வழி பட்டான். தனி மனித வாழ்க்கையை சமூக வாழ்க்கையாக்கியது தெய்வ வழிபாடு.
தமிழனின் திணை வாழ்வியல் காலப்போக்கில் பல் வேறு கடவுள்களை ஏற்று பல பிரிவுகளானது.
திருமாலைக் கடவுளாக்கியது வைணவம்
இல்லை இல்லை விநாயகரே முழு முதல் கடவுள் என்றது காணபாத்யம்.
செய்திகளை சைககளாலும் ஓசைகளாலும் பரிமாறிக் கொண்ட மக்கள் சிறு சிறு எழுத்துக்களை உருவாக்கிக் கொண்டனர். இவை ‘வடவேங்கிடம் தென் குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகம்’ கண்ட வாழ்க்கை நெறி.
வேங்கடத்திற்கும் வடக்கே என்ன நடந்தது.
அக்னி வழி பாடு அமோகமாக நடைபெற்றது. அக்னியில் ஆடு மாடு குதிரை என தம்மால் தூக்க முடிந்த விலங்குகள் அனைத்தையும் பலியாக்கி கடவுளை நெருங்கினதாக காட்டிக்கொண்டனர் சமயப் பெரியோர்கள். அவர்களுக்கு வேண்டிய அனைத்தையும் தேடிக் கொடுத்து சற்று தள்ளி நின்று பயத்தோடு ஆசி வேண்டி நின்றனர் பாமர மக்கள்.
குருவின் வசீகரத்திற்கேற்ப சிஷ்யர்களும் பக்தர்களும் கூடினர். ஒவ்வொரு குருவும் தனக்கு தோன்றியதை மத கொள்கைகளாகப் போதித்தனர். எழுதா மறையான வேதம் அடிப்படையானது. அதை செவி வழி கற்பிக்கவும் கற்கவும் ஒரு சாராருக்கு உரிமை கிடைத்தது. வருணாசரம் கொள்கையை அனைவரும் மதித்தனர்.
சமயக்குருக்களிடம் ஒற்றுமையில்லை, தவி்ர போட்டியும் பொறாமையும் கொடி கட்டிப் பறந்தன. வேறு மாற்று இல்லாததால் வைதீக சமய வழிபாடு நாடெங்கும் பரவி தமிழகத்திலும் 5000 ஆண்டுகளுக்கு முன் கால் பதித்தது.
ஆரம்பத்தில் புரியாத மொழியில் வேதம் வாசிக்க தள்ளி நின்று கேட்டு தெய்வத்தை நெருங்கக் கூடாத தூரத்தில் நின்று வணங்கினான் தமிழன். அக்னியில் உயிர்ப் பலி கொடுப்பதையும் வேதம் உரைப்போரே அசைவம் புசிப்பதையும் பயந்து நின்று பார்த்தான்.
வடக்கே செல்வோம்.
பிராமண மதத்திற்கு மாற்றாக காட்டிக் கொண்டனர் சமணர்களும் பௌத்தர்களும்.
வைதீக மதத்தின் கொள்கைகளில் மக்களுக்கு உடன் படாத சிலவற்றை தவிர்த்து தம் கொள்கைகளாக காற்றில் மிதக்க விட்டன புதிதாக தோன்றிய மதங்கள்.
முக்கியமாக கொல்லாமை, உயிர்ப் பலி கொடாமை, கள்ளுண்னாமை போன்ற சில கொள்கைகள் மக்களை கவர்ந்தன.
கட்டுப் பாடுகளுடன் கூடிய அமைப்பும், தலை முதல் வால் வரை கடைப்பிடிக்கப் பட்ட ஒழுக்கமும் புதிதாக தோன்றிய மதங்களின் பால் மக்களின் ஈடுபாட்டை வளர்த்தன.
புத்தர் வைதீக மதத்திலே தோன்றி வைதீக மதத்தினராகத்தான் வளர்ந்தார்.
வைதீக மதத்திலிருந்து சற்று மாறுபட்ட கருத்துக்களும், ஒழுங்கு படுத்தப்பட்ட சங்கமும், மதத்தை பரப்ப அசோக சக்ரவர்த்தி போன்ற மாமன்னரும் ஒருங்கே பௌத்த மதம் உலகெங்கும் பரவ வழி வகுத்தன. தமிழ் இந்தியா தவிர இந்திய நாடு முழுதும், இலங்கை மற்றும் பல ஆசிய நாடுகளிலும் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்னரே பௌத்தம் ஓங்கி வளர்ந்தது. சமணத்தோடும் , வைதீக மதத்தோடும் போட்டி போட்டு முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டது.
இல்லறத்தார்க்கு உரிய பஞ்ச சீலம்! கொல்லாமை, திருடாமை, பெண் ஒழுக்கம், பொய் கூறாமை, கள்ளுண்ணாமை. இவையனைத்தும் பெரும்பான்மையான மக்கள் விரும்புபவைதானே. எனவே பௌத்தம் அவர்களை கவர்ந்தது.
கோபத்தை அன்பினால் வெல்க,
தீமையை நன்மையால் வெல்க
கருமியை தானத்தால் வெல்க
பொய்யை மெய்யினால் வெல்க
பௌத்த துறவிகள் கூட்டத்திற்கு சங்கம் என்று பெயர். இந்த சங்கமே கட்டுப்பாடுகளுடன் நாடெங்கும் தோன்றி பௌத்த மதம் உலகில் நிலை பெற காரணமாயின.