விக்ரம், (ஆதித்ய கரிகாலன்) கார்த்தி (வந்தியத்தேவன் ) , ஜெயம் ரவி (பொன்னியின் செல்வன்) , ஜெயராமன்,(ஆழ்வார்க்கடியான்) பிரகாஷ் ராஜ்,(சுந்தரசோழர்) கிஷோர்,(ரவிதாசன்) சரத்குமார் (பெரிய பழுவேட்டரையர்), பார்த்திபன், (சின்ன பழுவேட்டரையர்) பிரபு (பெரிய வேளார்) , நிழல்கள் ரவி,(சம்புவரையர்) விக்ரம் பிரபு ,(பார்த்திபேந்திரன்), ரியாஸ்கான் (சோமன் சாம்பவன்) , லால்(மலையமான்), ரகுமான்(மதுராந்தகர்) ,அஷ்வின்(சேந்தன் அமுதன்), நாசர் (வீரபாண்டியன்) , மோகன் ராமன் ( அநிருத்த பிரும்மராயர்)
ஐஸ்வர்யா ராய்,(நந்தி) திரிஷா(குந்தவை) , ஐஸ்வர்யா லக்ஷ்மி,(பூங்குழலி) சோபிதா துலிபாலா,(வானதி) , ஜெயசித்ரா (செம்பியன் மாதேவி) , சாரா (நந்தினி -இளம் வயது)
இசை: ஏ ஆர் ரகுமான்
திரைக்கதை – மணிரத்னம் , ஜெயமோகன், குமரவேல்
வசனம் : ஜெயமோகன்
இயக்கம் : மணிரத்னம்
——————————————————————————————————–
பொன்னியின் செல்வன் திரை விமர்சனம்:
பத்து வருடத்திற்கு முன் நான் கூறியது அப்படியே நனவாகியிருக்கிறது!
மணிரத்னம் அவர்கள் பொன்னியின் செல்வனை எடுக்க முயற்சிப்பதாகத் தகவல் வந்ததும் நான் யூ டியூபில் போட்ட கற்பனை விமர்சனம் ! கிட்டத்தட்ட அப்படியே பலித்திருக்கிறது ! நடிகர்கள் தேர்வைத் தவிர!
இந்தப்படம் தமிழ் பேசும் மக்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது. உலக அளவில் பேசப்படும் படமாக ஆகிவிட்டது. வசூலில் சாதனை! 167 நிமிடப்படம் எந்த இடத்திலும் போராடிக்கவில்லை. இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பை அழகாகக் கூட்டியுள்ளார்கள் ! அதிக கிராபிக்ஸ் கலக்காமல் யதார்த்தமாகக் கொண்டு போகும் பாங்கு சிறப்பு! கல்கியின் வரிகளும் ஜெயமோகனின் வரிகளும் அளவோடு இருக்கின்றன.
திரைக்கதை மூலக் கதையோடு ஒத்துப் போனாலும் சில இடங்களில் வித்தியாசமாக மாறுபடுகிறது. அதுவும் ஒரு புது ரசனையாக மிளிர்கிறது. (ராஷ்டிரக்கூடப் போர், இலங்கை மன்னன் தர்பார், குந்தவை பழுவேட்டரையர் குளத்தில் கல் எறிவது, கடல் போர் இப்படி எத்தனையோ )
பாடல்கள் அத்தனையும் ரஹ்மான் மந்திரம் பொன்னி நதி பாடல் துள்ளல் ! அலைகடல் பாடல் மயக்கம், ராட்சச மாமனே – கிறக்கம், சோழா சோழா – மறம் ! குரவைக்கூத்து – பயங்கரம்! சொல் சொல் பாடல் இல்லையே என்ற வருத்தம்
நடிகர் தேர்வில் இன்றைக்கு மணிரத்னம் செய்தது போல கச்சிதமாக யாரும் செய்திருக்கமுடியாது. அனைவரும் பாத்திரங்களாகவே மாறிவிட்டனர். நந்தினி- குந்தவை பனிப்போர் அழகான மலர் விரிவதைப்போல் விரிகிறது. கார்த்தி – திரிஷாவைவிட வந்தியத்தேவன்-குந்தவை பாத்திரத்திற்கு இவ்வளவு அழகாக வேறு யாரும் உயிர் கொடுத்திருக்க முடியாது. முதல் சந்திப்பில் அவர்கள் பேசிக்கொள்ளும் காட்சி ரவிவர்மா ஓவியம் போல மின்னுகிறது ! பொன்னியின் செல்வனின் கம்பீரம் ஜெயம் ரவியிடம் உடல் மொழியில் குடிகொண்டிருக்கிறது. நந்தினியின் மோகனாஸ்திரம் படத்திற்கு பெரும் அளவில் உதவும்.( வைரச் சுரங்கம்) பூங்குழலியின் அழகு ,வானதியின் நடனம் எல்லாம் படத்தை எங்கோ கொண்டுபோய்ச் சேர்க்கின்றன. பெரிய பழுவேட்டரையரின் சாமர்த்தியம் , சின்னப் பழுவேட்டரையரின் கோபம், ரவிதாசனின் வெறி, சோமன் சாம்பவனின் ஆத்திரம். சிற்றரசர்களின் ஆசை, இலங்கை மன்னனின் துடிப்பு , ராஷ்ட்டிரகூட மன்னனின் வெறுப்பு அத்தனையையும் நறுக்கென முதல் காட்சியிலேயே புலப்படுத்துகிறார் இயக்குனர்.
ஒரு தமிழ்ப்படத்திற்கு அதிக அளவில் வாசகர்கள் விமர்சனம் எழுதியது இந்தப்படத்திற்குத் தான் இருக்கும்.
அவர்களை இந்த ஆறு வகைகளில் சேர்க்கலாம்.
- நாவலைப் பலமுறை படித்து கதையோடு உயிரெனக் கலந்துபோன கல்கி பக்தர்கள்
- நாவலை நாவலாகப் படித்தவர்கள்
- புத்தகம் படிக்காத ஆனால் கதையை மற்றவர் மூலம் கேள்விப்பட்டவர்கள்
- சுத்தமாகப் படிக்காதவர்கள் – இன்றைய பெருவாரியான இளைஞர் கூட்டம்
- மணிரத்னத்தின் தீவிர ரசிகர்கள்
- மணிரத்னத்தின் தீவிர எதிர்ப்பாளர்கள்
இந்தப்படம் மைசூர்பா(க்) மாதிரி. 1,2 ,3 வகை மனிதர்களுக்கு அந்தக் காலத்து செங்கல் போன்ற கரகரப்பான மைசூர்பாக்தான் பிடிக்கும் .
4, 5 வகையினருக்கு கிருஷ்ணா மைசூர்பா (வாயில் போட்டதும் கரையுமே ) அதுதான் பிடிக்கும்.
முதல் குரூப் இப்போது மைசூர்பா சாப்பிட்டு அதையும் ரசிக்கத் தொடங்கிவிட்டனர்.
6 வது வகையினர் சுகர் வியாதினால் அவதிப்படுபவர் . எதுவும் பிடிக்காது.
அதனால் ஒட்டுமொத்தமாக உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு மணிரத்னம் குழுவினரின் படம் மிகவும் பிடித்திருக்கிறது. அதிலும் முதலில் குறை கூற ஆரம்பித்த அனைத்து மக்களும் (1-5) இரண்டாம் தடவை பார்த்ததும் மணிரத்னத்தைப் பாராட்ட ஆரம்பிக்கிறார்கள். இதில் நானும் அடக்கம்.
மணிரத்னம் சார்! எங்கள் கனவை நனவாக்கிய உங்களுக்கு 500 கோடி வந்தனங்கள் ! பொன் தனங்களும் கூட!
நடுநிலையான விமர்சனம். அருமை.
LikeLike