வளரும் போது நம்மைச் செதுக்கி உருவாக்குவது பல அனுபவங்களும், ஒவ்வொரு நபரும்! மணந்து கொள்ள நிச்சயமான யாஸ்மீன் அப்துல் தம்பதியரின் வாழ்வில் இது எவ்வாறு பிரதிபலித்தது என்று இங்குப் பார்க்கலாம்.
முப்பது வயதான யாஸ்மீன் உதவியாளராக வேலை செய்து கொண்டு மாலையில் மேற்படிப்பு படித்து வந்தாள். அப்துல் இவளுடைய வயதே. பட்டப்படிப்பு முடித்துவிட்டு வேலை செய்ய ஆரம்பித்து இருந்தான். எந்த வேலையிலும் சில மாதங்களுக்கு மேல் நீடிக்கவில்லை.
அப்துல் யாஸ்மீன் திருமணம் நிச்சயம் ஆயிற்று. நிச்சயதார்த்தம் முறைப்படி செய்யப்பட்டது. ஆறு மாதங்களுக்குப் பின்னர் கல்யாணம். ஆரம்பத்தில் மிக உற்சாகம் பொங்கி இருவரும் சந்தோஷமாக இருந்தார்கள். யாஸ்மீன் முதுகலைப் படிப்பு தொடங்கினாள்.
போகப் போக இருவர் மனதிலும் குழப்பங்கள் உண்டாயின. யாஸ்மீனுக்கு, அப்துல் பொறுப்பான கணவராக இருப்பானா? அப்துலுக்கு, யாஸ்மீன் தன்னையும் கவனித்துக் கொள்வாளா இல்லை வேலைக்குப் பிரதானம் தருவாளா?
இவையெல்லாம் சேர்ந்ததால், நண்பர்கள் பரிந்துரைத்ததை வைத்து என்னை ஆலோசிக்க முடிவு செய்தார்கள். என்னைச் சந்திக்கும் பொழுது அப்துல் வேலையில் இல்லை. யாஸ்மீன் சொன்னது, அவளுடைய ஆதங்கமே அப்துல் வேலை தேடாமல் இருப்பதே. அப்துல் தன்னை யாஸ்மீன் தனிமையில் விட்டு விட்டாள், முன் போலக் கவனிக்காமல் இருக்கிறாள் என எண்ணினான். இதைச் செய் அதைச் செய் என யாஸ்மீன் சொல்வதையும் துன்புறுத்தலாகப் பாவித்தான். அப்துலால் தன்னையே ஊக்குவிக்க முயலவும் இல்லை.
யாஸ்மீன் தன்னால் முடிந்த வரை கல்யாணத்திற்கு நிச்சயம் செய்த உறவைப் பலப்படுத்துவதாக எண்ணினாள். அப்துல் இதைக் கண்டு கொள்ளவில்லை என அவளுக்குத் தோன்றியது.
அவளுடைய பெற்றோருக்கு யாஸ்மீன் முதலில் பிறந்தவள். இவளுடைய பதினைந்தாவது வயதில் தந்தை தீ விபத்தில் இறந்தார். அன்றிலிருந்து தாயார் மன அழுத்தத்திலேயே இருந்ததாக இவளுக்கு ஞாபகம்.
தங்கை, தம்பிகளைப் பார்த்துக் கொள்வது, வீட்டுப் பொறுப்பு, அவர்கள் நடத்தி வந்த கடையைப் பார்த்துக் கொள்வது, என எல்லாவற்றையும் யாஸ்மீன் ஒற்றை ஆளாகச் செய்து வந்தாள். இதனுடன் தன் படிப்பில் முழு கவனத்தை செலுத்தினாள். படித்தால்தான் நல்ல வேலை, சம்பாத்தியம் கிடைக்கும் என்று.
அப்துலின் அம்மா தனி ஆளாக ஒரே மகனான அப்துலை வளர்த்தாள். ஏதோ ஒரு வாக்குவாதத்தில் அவன் அப்பா அவர்களை விட்டுச் சென்று விட்டதால்.
அம்மா தான் அப்துலின் உலகம். அம்மாவுக்கும் அப்படித்தான். அவனுக்குக் குறை ஏதும் இருக்கக்கூடாது என்று அம்மா இரு வேலை, பல மணிநேரம் உழைத்ததால் அவனே தன் தேவைகளைப் பார்த்துக் கொள்ள வேண்டியாயிற்று. சாப்பிடுவது, பாத்திரங்களைச் சுத்தப்படுத்தி வைப்பது, துணிகளை மடிப்பது, வெளியே அணிவதை இஸ்திரி போடுவது எனச் சகலத்தையும்.
என்னுடன் பல ஸெஷன்களில் இவையெல்லாம் வெளிவந்தபோது எனக்குத் தெளிவாயிற்று, இவர்களின் குழப்பங்கள் எல்லாவற்றின் மூல காரணம் அவரவர் வளர்ச்சிகால அனுபவங்களின் தாக்கம் என்று. இதை அவர்கள் உணரச் செய்வது எப்படி? எங்களது படிப்பு, பயிற்சியில் வருவோரின் உடல் – உளவியல் – சமூக ரீதி, அன்று-இன்று என்பதையும் முழு அளவில் ஆராய்ந்து, புரிந்து, புரிய வைப்பது ஓர் அங்கம். இதை எங்கள் பாஷையில், ஹோலிஸ்டிக், ஸிஸ்டமிக் அணுகுமுறை என்போம்.
அவர்களின் பகிர்தலை வைத்து ஆரம்பித்தேன். யாஸ்மீன் அப்துல் இருவரையும் அவர்களது கடந்த காலங்களை நினைவு கூர்ந்து கவனிக்கச் செய்ய பலவகையான வழிகளை அமைத்தேன். முக்கியமாக எவ்வாறு வளர்ந்து வந்த பருவம் இப்போதைய நிகழும் நிலையுடன் ஒத்துப் போகிறது என்ற பாதையை நினைவு கூறும் வகையில் அமைத்தேன். நிகழ்ந்த காலத்தைப் போல இப்போது நேர்கிறதோ என்று யோசிக்க, ஆராயத் தூண்டினேன். முதலில் இது அவர்கள் மனதிற்குப் பிடிக்கவில்லை. பல ஸெஷன்களுக்குப் பிறகே தங்களை அறியாமல் அப்படித்தான் நேர்கிறது என உணர்ந்தார்கள்.
யாஸ்மீன் பார்க்க ஆரம்பித்தாள். வளரும் போது நடந்ததைப் போல மறுபடி இப்போதும் பல விதமான சந்தர்ப்ப அழுத்தங்களின் சந்திப்பில் தான் நின்று கொண்டிருப்பதைப் போலத் தோன்றுகிறது என்றாள். அப்துலுடன் உறவை மேம்படுத்த வேண்டும், சம்பாதிக்க வேண்டும் எனப் பல்வேறு.
அன்று, அம்மாவின் மன அழுத்தத்தினால் அவர்களிடமோ மற்ற யாரிடமோ தன்னுடைய சங்கடங்களைப் பகிர்ந்து கொள்ளவில்லை. கூடப் பிறந்தவர்களை அரவணைத்துப் பாதுகாப்பாகப் பார்த்துக் கொள்வதில் கவனம் போனது. கண்ணீர் முட்டும், மனம் குமறும், எனினும் யாரிடமும் சொல்லவில்லை. இப்போது அப்துல் வேலை இல்லாமல், வேலை தேடாமல் இருப்பதனால் சோகம் ஏற்பட்ட போதிலும், பழக்க தோஷம் அந்த உணர்வைப் பகிரத் தடுத்தது.
அதனால் யாஸ்மீனுள் பயம் துளிர்த்து வந்தது. தான் வளர்ந்த போது சந்தித்த, அனுபவித்த ஏறத்தாழ அதே இன்னல்களைச் சந்திக்க நேரிடலாம் என. இவையெல்லாம் ஸெஷன்களில் உணர்ந்து அடையாளம் காண முடிந்தது.
யாஸ்மீன் இவற்றை மேலும் ஆழமாக ஆராய்ந்து பார்க்கையில் அடக்கி வைத்திருந்த வேதனையை வெளிப்படுத்தச் செய்தாள். ஸெஷன்களில் அப்துலும் இருந்ததால் அவனுக்கும் தெளிவாயிற்று, எதற்காகத் தன்னை மணப்பவள் தன்னைப் பற்றி இவ்வளவு வேதனை அடைகிறாள் என்று. அப்துல் தான் நடந்தது கொள்ளும் விதத்தினால் அவளுடைய நிகழ்காலத்தில் பயம் உருவாக்கி வருவதைப் புரிந்து கொண்டான்.
நேருக்கு நேராக, மனம்விட்டுப் பகிர்வதின் பயனாக இருவரின் உறவு நெருக்கமாகியது!
அடுத்தபடியாக, இருவரையும் அவர்கள் நிச்சயம் ஆனதிலிருந்து ஒருவரையொருவர் பற்றிக் கவனித்ததைப் பட்டியலிடப் பரிந்துரை செய்தேன். முதலில் மேலோட்டமாக எழுதினார்கள். அவற்றை ஸெஷனில் எடுத்துக் கொண்ட போது அதில் பயனில்லை எனப் புரிந்து கொண்டு, மேலும் ஆழ்ந்து பார்த்தார்கள். எழுதியதைப் பற்றி உரையாடுகையில், யாஸ்மீனின் முதுகலைப் படிப்பு தொடங்கியபோது அப்துலின் உணர்ச்சிகளில் மாற்றம் ஆரம்பித்தது எனத் தெளிவாயிற்று.
இப்போது, அப்துலுடன் ஸெஷன்களை அமைத்தேன். தன் நிலையை ஆராய்ந்தான். சிறுவயதில் அம்மா வேலைக்குப் போவதனால் தனியாக இருக்க நேர்ந்தது. யாஸ்மீனின் வேலையும் படிப்பதும் இப்போது தனக்குத் தனிமையை உருவாக்கிவிடுமோ என்ற கவலை. அதே போல மறுபடி நேர்கிறதே எனத் தவித்தான். எதிலும் நாட்டம் குறைந்தது.
வளரும் பருவத்தில் அவர்கள் நன்றாக வாழ்வதற்குத்தான் தாய் இத்தனை வேலை செய்ய வேண்டி இருக்கிறது என அறிந்திருந்தும், தன்னை விட்டுப் போகிறாள் என்ற கோபம் இருந்தது. அதே கோபம் இப்போது யாஸ்மீன் மீது. யாஸ்மீன் வேலை, வேலையில் முன்னேற்றம் என்றே இருந்து விடுவாள் என நினைத்து ஆத்திரம் அடைந்தான்.
அப்துலைப் பொறுத்தவரை யாஸ்மீன் தன்னைக் கேட்காமல் மேல்படிப்புக்கு முடிவு செய்தது பிடிக்கவில்லை. இதனால் அவர்கள் உறவில் நேரக்கூடிய சஞ்சலங்களை யாஸ்மீன் எப்படி யோசிக்கவில்லை என்ற ஆதங்கம்.
யாஸ்மீனிடம் விளக்கம் கேட்க அவளை அழைத்து வந்தான். அப்துல் தன் மனதில் உருவானதை விவரித்தான். யாஸ்மீன் பதிலளித்தாள். இதுவரையில் முடிவுகளைத் தானாக எடுத்து வந்ததால் இந்த முறையும் அவ்வாறே செய்தேன் என்றாள். அதனால்தான் அப்துலுடன் கலந்து ஆலோசிக்கத் தோன்றவில்லை. அவன் தரப்பைக் கேட்ட பிறகு அவன் உணருவதைப் புரிய ஆரம்பித்தது என்றாள். அதனின் பிரதிபலிப்பு அவனுடைய நடத்தையில் தெரிந்ததைக் கூறினாள்.
இப்படி உரையாடியதில், அப்துல் யாஸ்மீன் தன் வளர்ந்தகால அனுபவங்களின் தாக்கம் ஏற்படுவதைக் கண்டு கொண்டார்கள். இப்போது அதேபோல் நேரும்போது விடை காணத் தெரியாமல் தத்தளிக்கிறோம் என்று உணர்ந்தார்கள்.
எவ்வாறு பகிர்வது என்பது இப்போது புரியவர, உறவு மேலும் நெருக்கமாகியது. இருவரும் தங்களது நிலையை, உணர்வைப் பகிர்ந்து கொள்ள, புரிதல் அதிகரித்தது.
வித்தியாசங்கள், அபிப்ராயம் பேதம் வரச் செய்யும். சுமுகமாகப் பேசி, புரியப் புரிய, உறவு மேம்படும். இருவரும் உணர்ந்தார்கள், இதற்கு உறவுக்கும் நபர்களுக்கும் மதிப்புக் கொடுப்பது தேவை. இதன் அடிப்படையில் அதற்கான வழிமுறைகளை அமைக்க எண்ணினேன்.
அப்துல் யாஸ்மீன் தங்களது நடத்தை, செயல்பாடுகளில் எதைச் சுதாரித்துக் கொண்டால் உதவும் எனப் பகிர்ந்தார்கள். இருவருக்கும் ஒப்புதலானது, உறவுக்கு நேரம் அமைக்க வேண்டும் என. கூட இருந்து பொழுது போக்க, பல செயல்களைப் பற்றி விவரித்து, எவ்வாறு செய்ய வேண்டும் என விளக்கம் அளித்தார்கள். ஆர்வம் ததும்ப இவற்றைச் செயலாற்றி வந்தார்கள்.
அப்துல் உதவி கேட்க கூச்சப் பட்டான். இதை வெல்ல ஸெஷன்களில் பல ரோல் ப்ளே வகுத்துச் செய்தோம். ஒருசில செயல் தானே செய்வதாக இருந்தவற்றை “என்னுடன் செய்” என அழைத்துக் கொண்டார்கள். அப்துல் தன் வேலை தேடுவதற்கு இதைச் செய்தான்.
இருவரின் உறவில் மாற்றங்கள் ஏற்பட்டன. பேதங்களைச் சுமுகமாக பேசி முடிவு செய்து கொள்வதும் கூடியது. உறவை மேம்படுத்த அப்துல் யாஸ்மீனின் முயற்சிகள் இன்னும் தொடர்கிறது.
*******************************