
‘மாமி! உங்க முகத்துக்கு ஒரு வைர மூக்குத்தி எவ்வளவு எடுப்பாக இருக்கும்?” என்றாள் அல்லிராணி.
“வைரத்துக்கு எங்கே போறது?“ அங்கலாய்த்தாள் அங்கயக்கண்ணி மாமி.
“மாமி, கவலையை விடுங்கள். புதுசா இரண்டு சேதி வந்திருக்கிறது” என்றாள்.
ஆர்வத்துடன் “என்ன என்ன என்ன” என்றாள் மாமி।
“வைரச் செய்தி தான் மாமி!
பிளாஸ்டிக் தண்ணி பாட்டிலிலிருந்து வைரம் தயாரிக்க முடியுமாம்”
“என்னடி உளறுகிறாய்?”
“அறிவியல் ஆராய்ச்சி சொல்வதைக் கேளுங்கள் மாமி.
PET (polyethylene terephthalate) என்ற பிளாஸ்டிக் தண்ணி பாட்டிலை லேசர் ஒளியால் 6,000°C வெப்பத்தில் காய்ச்சி, அதே சமயம் பத்து லட்சம் வளிமண்டல அழுத்தம் (atmospheric pressure) கொடுத்தால், சிறு வைரக்கற்கள் உருவாகுமாம்” என்றாள்.
“ரசவாதம் பிடிவாதம் கேள்விப்பட்டிருக்கேன். இதென்னது வைரவாதம்?” என்றாள் மாமி.
“இதுக்கே இப்படி அசந்து போய்ட்டீங்களே! இன்னொரு சமாச்சாரத்தையும் சொல்றேன் கேளுங்கள்” – என்றாள் அல்லிராணி.
மாமி, “அல்லி! நீ சொல்வதைக் கேட்க சுகமாகத்தான் இருக்கு. சரி. சொல்.. சொல்” என்றாள்.
“நமது சூரிய மண்டலத்தில் யூரேனியஸ், நெப்டியூன் கிரகங்கள் இருக்கிறது அல்லவா? அவை இரண்டும் பனிக்கிரகங்கள். ஆனால், அதன் அடிவயிறு பல ஆயிரம் டிகிரி வெப்பத்தில் கொதித்துக் கொண்டு இருக்கும். வெளிக் காற்று மண்டலம் மிகமிக உறைந்து போகும் குளிரில் இருக்குமாம்! இதனால் அங்குப் பெரும் புயலும் வீசுமாம். அதன் வளி மண்டல உயர் அழுத்தம், பூமியின் காற்றழுத்த மண்டல விசையை பல ஆயிரம் மடங்கு இருக்குமாம். அத்துடன் மீத்தேன் வாயுவும் சேர்ந்து அந்தப்புயலில் அங்கு ஆலங்கட்டி மழை பொழிகிறதாம். ஆலங்கட்டி வைர மழை!”
“என்ன வைர மழையா?” மாமி வாயைப் பிளந்தாள்.
“அடுத்த முறை நெப்டியூனுக்கு ராக்கெட் விடும் போது வைரத்தைக் கொண்டு வந்திடலாம்” என்றாள் அல்லி சிரித்துக்கொண்டே!
“திரும்பி வரும்போது கஸ்டம்ல மாட்டிக்கொண்டால் காலி தான்” என்று மாமியும் ஜோக்கடித்தாள்.
இருவரும் சிரித்தனர்!
https://www.science.org/doi/10.1126/sciadv.abo0617
இது ஒரு அதிசய உலகம்!