தஞ்சை அரண்மனையில் தன் மாளிகையின் மேல்மாடத்தில் ஒரு விசாலமான அறையில் ஓர் இருக்கையில் சாய்ந்து படுத்திருந்தார் வல்லவரையர் வந்தியத்தேவர். அறையின் ஒரு மூலையில் எரிந்து கொண்டிருந்த விளக்கிலிருந்து வந்த சிறிய வெளிச்சத்தில் பிராயம் தொன்னூறைக் கடந்து விட்டது அவர் தேகத்தில் சில இடங்களில் தெரிந்தாலும், முகத்தின் பொலிவும் கண்களில் ஒளியும் இன்னும் குறைந்துவிடவில்லை என்பதும் தெரிந்தது. உப்பரிகையின் ஒரு புறத்திலிருந்த சாளரத்தின் வழியே வீசிய மெல்லிய மார்கழிக் குளிர் காற்று, மார்பின் மீது போர்த்தியிருந்த மெலிதான ஆடையை விலக்கிய போது அவர் மார்பின் அகலமும் தோள்களின் வீக்கமும் இன்னமும் வீர அடையாளங்கள் அவர் உடலில் மிச்சமிருந்ததை பறைசாற்றின.
தொலைவிலிருந்து வந்த கோவில் மணியோசையைக் கேட்டு, மெதுவாக எழுந்து நின்று சாளரத்தின் அருகே வந்தார் வல்லவரையர். தூரத்தில் பெருவுடையார் கோவிலின் வானளாவிய விமானம் முழுமதிக்கு இரு தினங்கள் காத்திருக்கும் நிலவின் ஒளியில் ஒளிர்ந்து கொண்டிருந்தது. இன்று பிரதோஷம். அர்த்த ஜாம பூஜைக்கான மணியோசை. சாளரத்தின் அருகில் நின்றபடியே கைகூப்பி தொழுது நின்றார் வல்லவரையர். சட்டென்று திரும்பிப் பார்த்த போது, பின்னால் நின்று கொண்டிருந்தார் குந்தவை தேவியார்.
“இன்று மாலை தாங்கள் பெருவுடையாரைத் தரிசிக்கச் செல்லவில்லையா?”
“இல்லை தேவி! அதனால்தான் இங்கிருந்தே இறைவனைத் தொழுது கொண்டிருக்கிறேன்”
“ஏன்… உடல் நலமில்லையா?”
“அதுவும் இல்லை. தொன்னூறு வயதுக் கிழவனுக்கு இருக்க வேண்டிய தேக நலத்துடன்தான் இருக்கிறேன்”
“பின்னர் ஏன்…?”
வல்லவரையர் மறுமொழி எதுவும் கூறாமல், மெல்ல தன் இருக்கையை நோக்கிச் சென்று அதில் சாய்ந்து கொண்டார். பின்னாலே வந்த தேவியும் அவர் அருகே வந்து இன்னொரு இருக்கையில் அமர்ந்து கொண்டார். சிறிது நேரம் அவர்கள் இருவரும் ஒன்றும் பேசவில்லை. பிறகு குந்தவை மெதுவாகப் பேசத் தொடங்கினார்.
”உங்கள் உள்ளத்தில் ஏதோ ஒன்று அரித்துக் கொண்டிருக்கிறது என்பது எனக்குப் புரிகிறது. இன்று இரவு நீங்கள் வழக்கம் போல பிரதோஷ விரதமிருந்து உணவும் எடுத்துக் கொள்ளவில்லை. உடலையும் உள்ளத்தையும் இப்படிச் சோர்வாக்கிக் கொண்டால் என்ன ஆவது?”
“பயப்படாதே தேவி! ஒரு வேளை உணவருந்தாவிட்டால் என் உடலுக்கு ஒன்றும் ஆகிவிடாது”
“சரி! உங்கள் உள்ளத்தில் இருக்கும் சோர்வுக்கு என்ன காரணம்? அதைச் சொல்லுங்கள்”
வந்தியத்தேவர், குந்தவை தேவியை ஒரு முறை உற்றுப் பார்த்தார். பிறகு மெதுவாகப் பேசத் தொடங்கினார்.
“தேவி! நான் இந்த தஞ்சைக் கோட்டைக்கு வந்து அறுபது வருடங்களுக்கு மேலாகிறது. தங்களின் தமையனார் ஆதித்த கரிகாலரின் ஓலையை எடுத்துக் கொண்டு வந்து தங்கள் தந்தை சக்ரவர்த்தியிடம் கொடுக்க உள்ளே நுழைந்தேன். அன்று முதல் என் வாழ்வின் போக்கே மாறிவிட்டது. சக்ரவர்த்தி, மகாராணி இருவரின் அன்புக்கும் பாத்திரமானேன். பின்னர் பழையாறையில் தங்களைச் சந்தித்தேன். தங்களின் அன்பையும் முழுமையாகப் பெற்றேன். இலங்கை சென்று அருள்மொழி வர்மரின் உற்ற நண்பனானேன்”
“இதெல்லாம் எனக்குத் தெரிந்ததுதானே? இப்பொழுது அதற்கு என்ன?”
“சொல்கிறேன் தேவி! உத்தமச் சோழர் அரியணை ஏறியவுடன், நானும் அருள்மொழி வர்மரும் ஒரு பெரிய கடற்படை அமைத்துக் கீழைக் கடலில் சுதந்திரமாக உலவி வந்த கடற் கொள்ளைக்காரர்களையும் அராபியர்களையும் வென்று அவர்களின் கொட்டத்தை அடக்கினோம். பின்னர் எங்கள் வெற்றிப் பயணம் இலங்கையை நோக்கித் திரும்பியது. சோழ அரசுக்கு அடிபணியாமல் பாண்டியருக்குத் துணை நின்ற இலங்கை அரசை முழுவதுமாக வீழ்த்தினோம்”
“அருள்மொழியோடு நீங்கள் தோளோடு தோள் நின்று போரிட்டதை இந்த நாடே அறியுமே?
”அருள்மொழி வர்மர் சோழ அரசின் மன்னராக முடி சூடிய பின்னர், அவர் என்னைப் சோழத் தளபதியாக்கினார். நாங்கள் காந்தளூர்ச் சாலையையும், வேங்கியையும் வென்றோம். அதுமட்டுமல்ல. ராஜராஜர் பின்னர் சோழ அரசின் தனாதிகாரியாகவும் என்னை நியமித்திருந்தார். அவரின் இறுதிக் காலம் வரை நானே அந்தப் பதவியில் இருந்தேன். அப்போது, இந்தத் தஞ்சைக் கோட்டையில் மட்டுமல்ல இந்த சாம்ராஜ்யம் முழுவதும் என் அதிகாரம் எங்கும் பரவியிருந்தது. என் செவிக்கு எட்டாத எந்த விஷயமும் இருந்ததில்லை. என் அனுமதியின்றி எந்தச் செயலும் நடந்ததுமில்லை”
”அதுவும் எல்லோருக்கும் தெரிந்ததுதானே? இதையெல்லாம் இப்போது எதற்கு…”
”கொஞ்சம் பொறுமையாயிருங்கள் தேவி!”
வந்தியத்தேவர் தன் பார்வையை வேறு எங்கோ செலுத்தத் தொடங்கினார். அவரின் எண்ண ஓட்டம் பல்வேறு திசைகளில் செல்வதை அவரின் முக அசைவுகளிலிருந்து தெரிந்து கொண்டார் குந்தவை தேவியார். சற்றுப் பொறுத்து வந்தியத்தேவர் தொடர்ந்து பேசலானார்.
”அதற்குப் பின்னால், அமரபுஜங்க பாண்டியரை நாங்கள் வெற்றி கொண்ட போதும், போர் முடிந்ததும் நந்தினியை சந்திக்க என்னையே அனுப்பினார் அருள்மொழி வர்மர்”
“நல்ல வேளை, அப்போது தங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டது” என்று சற்றுக் கேலியாக இடைமறித்தார் குந்தவை தேவி. வந்தியத்தேவரின் முகத்தில் சிறு புன்னகை தோன்றியது அந்த சிறிய விளக்கொளியில் நன்றாகத் தெரிந்தது.
“அருள்மொழி வர்மருக்கு என் மீது இருந்த நம்பிக்கை கூட என்னைக் காதலித்து திருமணம் செய்து கொண்ட அவர் தமக்கைக்கு இல்லை போலிருக்கிறது”
“நந்தினியின் உள்ளத்தை நான் நன்றாக அறிவேன். அவள் விருப்பம் என்ன என்பதும் எனக்குத் தெரியும். நிகழ்வுகள் வேறு வகையில் இருந்திருந்தால், ஒருவேளை தாங்கள் நந்தினியை மணந்து கொண்டு பாண்டிய மன்னராக இருந்திருப்பீர்கள். அருள்மொழியையே எதிர்த்துப் போர் புரிந்திருப்பீர்கள். பெருவுடையாரின் கருணையால்தான் அப்படியெல்லாம் நடக்காமல் போனது”
வந்தியத்தேவர் இப்போது சற்று பலமாகவே சிரித்தார்.
“சோழ அரச குமாரியை எனக்கு மணம் செய்து கொடுத்து, என்னைத்தான் வீட்டு மாப்பிள்ளையாக ஆக்கி விட்டார்களே? சரித்திரத்தில் பொன் எழுத்துக்களால் எழுதப்பட வேண்டிய பெரும் பேரரசனாக ஆக வேண்டுமென்று கனவு கண்டு கொண்டிருந்தேன். ஆனால் சரித்திரத்தில் முதன் முதலாக, இப்படி வீட்டோடு மாப்பிள்ளையாக ஆவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை”
குந்தவையும் இப்போது அவரோடு சிரிப்பில் சேர்ந்து கொண்டார்.
“ஓ! அதுதான் இப்போது இந்த மனச் சோர்வுக்குக் காரணமோ?”
வல்லவரையரின் முகம் சட்டென்று மாறியது.
“இல்லை தேவி! காரணம் அதுவல்ல. பேச்சு திசை மாறிவிட்டது”
“சரி! மேலே சொல்லுங்கள்”
வந்தியத்தேவர் சிறிது நேரம் மௌனம் சாதித்தார். பிறகு மீண்டும் பேசத் தொடங்கினார்.
“இலங்கையில் அனுராதபுரத்தை சோழப்படை கைப்பற்றிய போது, இளவரசர் ராஜேந்திரர் வாலிபர். என் தலைமையில் அந்தப் போரை நாங்கள் நடத்தியபோது அவரை எனக்குக் கீழே செயலாற்ற அருள்மொழிவர்மர் பணித்திருந்தார். ஆயுதப் பயிற்சியையும் போர் நுணுக்கங்களையும் என்னிடமிருந்தே கற்றார் ராஜேந்திரர்”
“ஆமாம்… ராஜேந்திரனே என்னிடம் பலமுறை இதைச் சொல்லி இருக்கிறான்”
“ராஜேந்திரர் ஆட்சிக்கு வந்த பிறகு, பாண்டிய மணி முடியும் வாளும் இரத்தின ஹாரமும் இலங்கை மலையில் ஒளித்திருந்ததை தேடிக் கண்டு பிடிக்கப் பெரும் படையுடன் போனார். அப்போதும் என்னை அவருடன் கூட்டிச் சென்றார். நான் சொல்லிக் கொடுத்த வழியிலே சென்றுதான் அந்த மணி முடியையும் ஹாரத்தையும் மீட்டுக் கொண்டு வந்தார்”
குந்தவை தேவியாருக்கு இன்னும் வல்லவரையரின் உள்ளத்தில் இருப்பதை தெளிவாக அறிந்து கொள்ள முடியவில்லை. ஆனாலும் பொறுமையுடன் கேட்கத் தீர்மானித்தார்.
“பத்தாண்டுகளுக்கு முன்னால், ராஜேந்திரர் சோழத் தலைநகரைத் தஞ்சையிலிருந்து சோழபுரத்துக்கு மாற்றிக் கொண்டார். கொள்ளிடத்துக்கு வடக்கே தலைநகர் இருந்தால், வடதிசை நோக்கி படையெடுப்பதற்கு வசதியாக இருக்கும் என்று காரணம் சொல்லப்பட்டது”
“உண்மைதானே? அங்கிருந்து சென்றுதான் சோழப் படைகள் இன்று வேங்கியைக் கடந்து, கலிங்கத்தை வென்று, கங்கைக் கரை வரை சென்று வெற்றி வாகை சூடி வந்திருக்கின்றன. மேலும், சோழ மன்னர்கள் தலைநகரை மாற்றுவது ஒன்றும் புதிதல்லவே? மனுநீதிச் சோழர் காலத்தில் ஆரூரில் இருந்த தலைநகர், பின்னர் உறையூருக்குச் சென்று அங்கிருந்து பழையாறை மாறி வந்து, என் தந்தை காலத்தில் தஞ்சைக்குப் பெயர்ந்தது. இப்போது சோழபுரத்துக்குப் போயிருக்கிறது. இதில் என்ன குறை?”
“தலைநகரை மாற்றியதில் எனக்கு வருத்தம் இல்லை. ஆனால் மாமன்னர் இந்தத் தஞ்சையையும் அதில் இருப்பவர்களையும் முழுவதுமாக மறந்து போனதுதான் வருத்தமாயிருக்கிறது.”
குந்தவைக்கு ஏதோ சற்று புரிவதுபோலத் தோன்றியது.
“வடதிசை நோக்கிப் போர்ப் படை புறப்படுவதற்கு முன்னால், நம்மிடம் ஆசி பெற ராஜேந்திரர் தஞ்சைக்கு வந்திருந்தார். அப்போது என்னையும் அவருடன் அழைத்துப் போவார் என்று எதிர்பார்த்தேன். அப்படி நடக்கவில்லை. எனக்குப் பதில் அரையன் ராஜராஜனைத் தளபதியாக்கி அழைத்துப் போனார். எனக்குப் போர் புரியும் பிராயம் கடந்துவிட்டதென்று நினைத்துவிட்டார் போலிருக்கிறது”
“அதுவும் உண்மைதானே?’
“தேவி! நெஞ்சில் உரமும் தோளில் திணவும் இன்னும் மிச்சம் இருக்கின்றன” என்று பதில் சொன்ன வல்லவரையர் தொடர்ந்து, ”அது போகட்டும். மன்னர் தலைநகரை மாற்றிக் கொண்டு போன பின்னர், தன் மனத்தையும் மாற்றிக் கொண்டு விட்டார் போலிருக்கிறது. நம்மைக் காண இங்கு வருவதேயில்லை. தன, தான்ய பண்டாரங்கள், அரசாங்க அலுவலர்கள், படை வீரர்கள் எல்லோரும் அங்கேயே போய் விட்டார்கள். நம்மைப் போல பிராயம் முதிர்ந்த கிழவர்களும் கிழவிகளும் மட்டும் இங்கே தனித்து விடப்பட்டு விட்டோம்” என்றார் வருத்தம் தோய்ந்த குரலில்.
”அதனால் என்ன? நாம்தானே இனி தஞ்சையிலேயே இருப்பதென்று தீர்மானித்தோம்?”
“ஆமாம், உண்மைதான். தஞ்சை மண்ணையும் ராஜராஜர் பெருமையுடன் கட்டிய இந்தப் பெருவுடையாரையும் விட்டுப் போக எனக்கு மனமில்லை தேவி”
“புதிய தலைநகருக்கு அருகில் இன்னொரு பெருவுடையார் கோவிலைக் கட்டி வருகிறான் ராஜேந்திரன். கோவில் கட்டி முடிக்கப்பட்டு விட்டது என்றும் குடமுழுக்குக்கு நாள் குறித்தாகிவிட்டது என்றும் தெரிகிறது.”
”ஆனாலும், பெற்ற தாயை இழந்தவருக்கு தாய்க்குத் தாயாய் இருந்து வளர்த்த தேவியையும், அறுபது ஆண்டுகளுக்கு மேலே இந்த சோழப் பேரரசின் உன்னததிற்காக உழைத்த இந்த கிழவனையும் ஒப்புக்கு அழைப்பதற்குக் கூட மன்னருக்கு மனமில்லை போலிருக்கிறது”
வந்தியத்தேவரின் உள்ளத்தில் மறைந்திருந்த வருத்தம் குந்தவைக்குப் புரிய ஆரம்பித்தது.
”ராஜேந்திரன் இப்படி மாறிப் போவான் என்று நானும் கூட நினைக்கவில்லை. இருந்தாலும் சக்ரவர்த்திக்கு ஆயிரம் வேலைகள், ஆயிரம் கவலைகள். படையெடுப்பு, புதிய தலைநகரை நிர்மாணிப்பது, ராஜராஜேஸ்வரம் போல ஒரு கோவிலைக் கட்டுவது இப்படி பல அலுவல்கள். இதற்கிடையே நம்மைப் பற்றி நினைப்பதற்கு நேரம் எங்கே இருந்திருக்கும்?”
வந்தியத்தேவர் சிறிதாக முறுவலித்தார். “மருமகனை விட்டுக் கொடுக்க மனமில்லை தேவிக்கு”
“ஆமாம். அவன் என் மருமகன் மட்டுமல்ல. மகனும் அவன்தான்.” குந்தவை கண்களில் சட்டென்று நிறைந்த கண்ணீரைக் கண்டு தன் மேலங்கியால் அதைத் துடைத்து விட்டார் வந்தியத்தேவர்.
அதே சமயம், வாயிற்காவலன் ஒருவன் உள்ளே வந்து இருவரையும் வணங்கி நின்றான்.
“மாமன்னர் ராஜேந்திரச் சோழச் சக்ரவர்த்தி, தஞ்சை அரண்மனைக்கு விஜயம் செய்திருக்கிறார்கள். தங்களையும் தேவியையும் காண ஒரு நாழிகைப் பொழுதில் இங்கு வருவதாக செய்தி அனுப்பியிருக்கிறார்கள்”
அடுத்த ஒரு நாழிகைக்குள் மன்னர் ராஜேந்திரர், வந்தியத்தேவரின் அரண்மனைக்குள் நுழைந்தார். வந்ததும் அவர் வருகைக்காக காத்திருந்த இருவர் கால்களிலும் வணங்கி எழுந்தார் மன்னர்.
“தந்தையே! நலமாக இருக்கிறீர்களா? தாயே! தாங்களும் நலமா?’
“நலமாக இருக்கிறோம் ராஜேந்திரா. என்ன திடீரென்று இந்த விஜயம்?”
”தாயே! வெகுநாட்களாக, ஏன் சில வருடங்களாகவே நான் தஞ்சைக்கு வரவில்லை. தலைநகரை மாற்றிய பிறகு அதன் கட்டுமான பணியிலும், வடதிசை நோக்கிய படையெடுப்பை ஆயத்தப் படுத்தி அதைக் கொண்டு செல்வதிலும் பல வருடங்கள் கடந்து விட்டன. இன்று கங்கைக் கரை வரையிலும் சென்று சோழப் படை வெற்றி பெற்றுத் திரும்பி விட்டது. அந்த வெற்றியை பெற்றுத் தந்த எல்லாம் வல்ல அந்த ஈசனுக்கு ஒரு திருமாளிகை கட்டத் தீர்மானித்தேன். சோழபுரத்தில் பெருவுடையாருக்கு ஒரு சிறந்த கற்றளி கட்டப்பட்டு வருகிறது ”
“தெரியும் ராஜேந்திரா! அது உன் தந்தை இங்கே தஞ்சையில் கட்டிய கோவிலை விட சிறந்ததாக இருக்கும் என்பதில் எனக்கு ஐயமில்லை ”
“இல்லையம்மா! பேரரசர் ராஜராஜருக்கு இணையான அரசர் நம் சோழக் குடியிலே இதுவரையில் இருந்ததில்லை. இனி இருக்கப் போவதுமில்லை. அதனால் அவர் கட்டிய பெருவுடையார் கோவிலுக்கு இணையாக புதிய கோவில் இருக்கப் போவதில்லை. அதை விட சற்று உயரமும் வீச்சும் குறைவாகவே இருக்க வேண்டுமென்று தீர்மானித்துள்ளேன்”
இதைக் கேட்ட குந்தவை மகிழ்ச்சியுடன், “நல்லது ராஜேந்திரா. உன் தந்தையைப் போலவே உன் பெயரும் புகழும் ஓங்கி வளரட்டும். சரி! இன்று நீ தஞ்சை வந்ததின் நோக்கம்?”
“தாயே! திருக்கோவிலின் கட்டிட வேலைகள் ஒருவாறு முடிந்து விட்டன. தைத் திங்கள் பிறந்தவுடன், அடுத்த பௌர்ணமி அன்று குடமுழுக்கு நடத்துவதற்கு புரோகிதர்கள் நாள் குறித்துக் கொடுத்திருக்கிறார்கள்.”
“மிகவும் நல்ல செய்தி. உனக்கு அந்த பெருவுடையாரின் ஆசி என்றும் நிலைத்திருக்கட்டும்.”
“அம்மா! பெருவுடையாரோடு கூட தாங்கள் இருவரும் சோழபுரம் வந்திருந்து நேரில் குடமுழுக்கில் பங்கு கொண்டு என்னை ஆசிர்வதிக்க வேண்டும்.”
இதைக் கேட்டவுடன் வந்தியத்தேவரின் முகத்தில் ஆச்சரியக் குறிகள் தோன்றியதை குந்தவை கவனிக்கத் தவறவில்லை.
“நாங்கள் அங்கு எதற்கு………….?”
“தாயே! நான் பிறந்த பின்னர் என் தாயை இழந்தேன். அவரை நேரில் கண்டதில்லை. என் நினைவு தெரிந்த நாள் முதல் தங்களையே என் தாயாகக் கருதி வளர்ந்து வந்தேன். ஒரு தாய்க்கும் மேலாக என் மீது கருணையும் பாசமும் கொண்டு என்னை வளர்த்தீர்கள். கல்வி, கேள்விகளில் தேர்ச்சி பெறச் செய்து என்னை அறிவார்ந்த மனிதனாக ஆக்கினீர்கள். வல்லவரையர் எனக்கு வாள், வேல் வீச்சு, குதிரை ஏற்றம் எல்லாம் கற்பித்து என்னை மாவீரனாக ஆக்கினார்கள். இன்று மாபெரும் வெற்றிகள் பெற்று இந்த சோழ சாம்ராஜ்யத்தின் மன்னனாக நான் திகழ உங்கள் இருவரின் அன்பும் ஆசியும்தான் காரணம்”
இதைக் கேட்ட வல்லவரையரின் மனமும் நெகிழ்ந்தது.
“குடமுழுக்கு விழாவை மிக சிறப்பாக நடத்தக் கருதியுள்ளேன். அதற்குத் தஞ்சை பெருவுடையாரின் அருளை வேண்டி இன்று அவரைத் தரிசித்தேன். விழாவிற்கு தஞ்சையிலிருந்து நூறு சிவாச்சார்யர்களையும் ஐநூறு வேத பண்டிதர்களையும் அழைத்திருக்கிறேன். நீங்கள் இருவரும் என்னோடு சோழபுரம் வந்து முன்னால் நின்று இந்த விழாவை நடத்திக் கொடுக்க வேண்டும். தாங்கள் இருவரையும் அழைத்துப் போவதற்காகத்தான் நான் தஞ்சை வந்தேன்.”
”இன்று உங்கள் தந்தை இருந்திருந்தால் தன் தனயனுக்காக மிகவும் பெருமைபட்டிருப்பார், சக்ரவர்த்தி” என்றார் வந்தியத்தேவர் மகிழ்ச்சியுடன்.
“ஆமாம் அரசே! இன்று என் தந்தை இவ்வுலகில் இல்லை. அவர் இடத்தில் இப்போது நான் தங்களைத்தான் பார்க்கிறேன். வடக்கிலிருந்து நாங்கள் கொண்டு வந்திருக்கும் கங்கை நீரை புரோகிதர்களிடம் புனித நீர் அபிஷேகத்துக்கு தாங்கள்தான் தங்கள் திருக்கரங்களால் கொடுக்க வேண்டும். தாயே! தாங்கள்தான் எங்கள் அருகிலிருந்து முதல் பூஜையை ஆரம்பித்து வைக்க வேண்டும். இது என் தாழ்வான வேண்டுகோள்”
அடுத்த பௌர்ணமி அன்று சோழபுரத்து பெருவுடையாருக்கு குடமுழுக்கு மிக கோலாகலத்துடன் நடந்தது. கங்கை நீர் அபிஷேகமும் நடந்தது. விழா முடிந்ததும் மாமன்னர் ராஜேந்திரர், இருவர் கால்களிலும் விழுந்து அவர் பாதங்களை தொட்டுத் தலையில் சூடிக் கொண்டார். வந்தியத்தேவர் கண்களில் நீர் பெருக ராஜேந்திர சோழரைக் கட்டித் தழுவிக் கொண்டார்.
“சக்ரவர்த்தி! மாமன்னர் கரிகாலரைப் போல் இமயத்தில் புலிக் கொடியை பறக்க விட வேண்டுமென்று தங்கள் பெரிய தந்தை ஆதித்த கரிகாலர் ஆசைப்பட்டார். ஆனால் அது நிறைவேறவில்லை. இருந்தாலும், அவரின் தீராத ஆசை இப்போது தங்கள் மூலம் நிறைவேறிவிட்டது. இமயம் வரை சென்று, கங்கை நீரைக் கொண்டு வந்து பெருவுடையாருக்கு அபிஷேகம் செய்யும் பாக்கியம் தங்களுக்குக் கிடைத்திருக்கிறது. இனி, இந்த நகரும் அதன் காரணமாகவே, “கங்கை கொண்ட சோழபுரம்” என்று அறியப்பட வேண்டும் என்பது என் விருப்பம்”
“அப்படியே ஆகட்டும் தந்தையே” என்றார் ராஜேந்திரச் சோழச் சக்ரவர்த்தி.
******
பின் குறிப்பு: வாசகர்களே! இந்தக் கதைக்கு சரித்திர சான்றுகளை, வரலாற்றுத் தரவுகளைத் தேடாதீர்கள். ஒன்றும் கிடையாது. அமரர் கல்கியின் ”பொன்னியின் செல்வன்” மீதுள்ள காதலால் அவர் சிருஷ்டித்த கதாபாத்திரங்களை பேச வைத்து எழுதப்பட்ட இந்தச் சிறுகதை முற்றிலும் என் கற்பனையேயன்றி வேறில்லை. தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்.
அருமையான கற்பனை. சுவையான வரிகள். ஆழமான செய்தி. கௌரிசங்கர்
அவர்களை மிகவும் பாராட்டுகிறேன்.
வாழ்த்துக்கள்.
LikeLike
நன்றி இராமச்சந்திரன் அவர்களே
LikeLike