ஆய்ப்பாடியில் அதிகாலை!
காரிருளும் போய்மறையும், கதிரும் வெல்லும்,
கன்னியரின் மத்தொலியும் மனைகள் துள்ளும்;
பேரழகன் புகழ்பாட இன்பம் மன்னும்;
பிறைநிலவு வெண்முத்துப் பற்கள் மின்னும்;
சீரொலிசெய் கைவளைகள் தாளம் போடும்;
சிற்றிடையும் நனிவருந்தி வணங்கி ஆடும்.
ஆரமுத இசைபருக அமரர் கூடி,
அதிகாலை ஆய்ப்பாடி வருவர் தேடி!
( வணங்கி – வளைந்து)
(ஸ்ரீ லீலா சுகர் சமஸ்கிருதத்தில் எழுதிய “ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதத்தின் பாடலைத்(2-100) தழுவி எழுதியது)
கோகுலத்தில் கண்ணன் நிகழ்த்திய திருவிளையாடல்
1) காலை நேரக் குறும்புகள்
அண்ணலின் குறும்பைக் கேளீர்:
அடுக்களைப் பொருள்கள் எல்லாம்
மண்ணிலே உருட்டித் தள்ளி
வண்டியாய் ஓடச் செய்வான்
வெண்ணெயும் பாலும் கீழே
வீசியே ஒளிந்து கொள்வான்
பெண்களின் பின்னால் சென்று
பின்னலைப் பிடித்தி ழுப்பான்
மாடுகள் கறக்கும் முன்னர்
வைகறை மறைந்து செல்வான்
ஓடுநீ கன்றே என்பான்
உறுபிணை அவிழ்த்தல் செய்வான்
தேடியே வீடு தோறும்
திருடவே நண்ப ரோடு
கூடியே உறியில் வெண்ணெய்
கோலினால் உடைத்துக் கொள்வான்.
( உறு பிணை,- கட்டியிருக்கும் கயிறு)
2) மண்ணுண்ட மதலை
கண்ணன் மண்ணுண்டான் என்று நணபர் முறையிடுதல்
தெருவினிலே விளையாடும் கண்ணன் ஓர்நாள்
தின்றுவிட்டான் மண்ணென்று நண்பர் கூற
வெருவியதால் யசோதையவன் கையைப் பற்றி
வீட்டிற்கு வந்தவுடன் அதட்டிக் கேட்டாள்
திருமனையில் வெண்ணெயுடன் பாலும் உண்டு
தின்பண்டம் பலவுண்டு குழந்தாய் நீயோ
அருமையெனத் தெருமண்ணை உண்ண லாமா?
அன்னைமனம் கலங்கிடவே பண்ண லாமா?
(வெருவியதால் – நோய் வரும் என்று அஞ்சியதால்)
கண்ணன் மறுத்தலும் வாயைத் திறந்து காட்டுதலும்
அம்மம்மா நான்மண்ணைத் தின்ன வில்லை
ஆர்சொன்ன பொய்யென்று கண்ணன் கேட்டான்
இம்மண்ணும் கடல்வானும் அண்டம் யாவும்
இயற்றியவன் தலையசைத்து மறுத்துச் சொன்னான்
இம்மென்னும் முன்னேநான் அறிந்து கொள்வேன்
இப்போதுன் வாய்திறவாய் காண்பேன் என்றாள்
அம்மன்னன் குறுநகையை முகத்தில் தேக்கி
ஆவென்று சிறுவாயைத் திறந்தான் மெல்ல.
யசோதை கண்ட காட்சி
செம்பவளச் சிறுவாயின் உள்ளே சுற்றித்
திரிகின்ற கோள்களெல்லாம் மிதக்கக் கண்டாள்.
அம்புவியும், விண்வெளியும், கடல்ம லையும்,
அசைகின்ற, அசையாத, பொருள்கள் கண்டாள்.
உம்பரவர் மூவருடன் முனிவர், சித்தர்,
ஒளிர்பரிதி, நிலவுடனே உடுக்கள் கண்டாள்.
வம்புமலர் வாய்திறந்து காட்டு கின்ற
மதலையுடன் தன்னையுமே அங்கே கண்டாள்.
(மதலை – குழந்தைக் கண்ணன்)
அன்னை வியத்தலும் பின்னர் மறத்தலும்
கற்பனையா, பகற்கனவா, மயக்கம் தானா?
காண்கின்ற காட்சியதன் பிழையே தானா?
அற்புதமா, ஆறறிவின் திரிபே தானா?
அறியாத விஞ்சையர்கள் செயலே தானா?
இற்பிறந்த என்செல்வன் ஆற்றல் தானா?
என்மனத்தில் உருவான தோற்றம் தானா?-
சொற்பிறழ்ந்து தாயுரைத்த எல்லாம் கேட்ட
சூழ்முகிலும் யாவுமவள் மறக்க வைத்தான்.
(சூழ்முகில் – மேகம் போன்ற கரிய கண்ணன்,)
3)அன்னை சொன்ன பொய்!
காளிந்தி மணற்குன்றில் ஆடப் போனான்,
கருமுகிலே! உலக்கைகொள் உன்றன் அண்ணன்.
ஆளரவம் கேட்பதற்குள் பொற்கிண் ணத்தில்,
அமுதப்பால் அருந்திவிடு, குடுமி நீண்டு,
நாளின்றே, இப்பொழுதே, வளரும் கண்ணே!
நயமாக எடுத்துரைத்தாள் யசோதை அன்னை.
வாளரவில் துயில்வோனும், குழந்தை போல
வாய்வழியப் பருகித்தன் தலையைத் தொட்டான்!
விளக்கம்:
கிருஷ்ணன் பால் குடிக்காமல் பிடிவாதம் பிடிக்கிறான். தாய் யசோதை அவனிடம்,
” உலக்கையைக் கையில் ஏந்திய உன் அண்ணன் பலராமன் காளிந்தியின் மணற் குன்றுகளில் விளையாடப் போயிருக்கிறான்.
அவன் வருவதற்குள் நீ இந்தப் பொற் கிண்ணத்தில் உள்ள பாலைக் குடித்து விடு.
அப்படிப் பால் குடித்தால் உன் குடுமி உடனே விரைவாக வளரும்” என்று சொல்லி ஏமாற்றுகிறாள்.
அதை நம்பிய கிருஷ்ணனும் பாலைக் குடித்து விட்டுத் தன் தலையைத் தொட்டுப் பார்க்கிறான்”
(ஸ்ரீ லீலாசுகர் சமஸ்கிருதத்தில் எழுதிய ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம்
சுலோகம் – 2-60- தமிழ் வடிவம்)
.4) இருவருக்கும் வெண்ணெய்!
ஆடினான் குழந்தைக் கண்ணன்,
ஆங்கொரு பளிங்குத் தூணும்
ஆடிபோல் அவனைக் காட்ட
அன்னையும் குழம்பிப் போனாள்.
தேடிடும் பிள்ளை யாரோ?
தெளிவுற அறிய மாட்டாள்,
ஈடிலா வெண்ணெய்க் கட்டி
இரண்டெனப் பிரித்துத் தந்தாள்!
விளக்கம்:
கண்ணன் நடனம் ஆடிய போது , அவனது உருவத்தை அங்கிருந்த ஒரு பளிங்குத் தூண் அப்படியே காட்டியது.
உண்மையான கண்ணன் யார் என்பதை அறிந்த கொள்ள இயலாமல் குழம்பிய தாய் யசோதை , தன் கையில் இருந்த வெண்ணெய்க் கட்டியை இரண்டாகப் பிரித்து இரண்டு கண்ணன்களுக்கும் ஊட்டி விட்டாள்.
( ஸ்ரீ லீலாசுகரின் ” ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம்”2/66 பாடலின் கருத்தைத் தழுவி எழுதியது)
5)கன்றும் பானையும்
நாடோறும் ஆய்ச்சியர்கள் இல்லம் சென்று
நறுவெண்ணெய் களவாடும் கண்ணன் ஓர்நாள்
ஓடோடிப் போவதற்குள் மாட்டிக் கொண்டான்.
‘உள்நுழைந்த காரணத்தைக் கேட்க,’ என்றன்
வீடோவென்று எண்ணிவிட்டேன் ‘ என்றான் .’ஏன்கை
விடவேண்டும் பானைக்குள் ?’ கேட்டாள் ஆய்ச்சி.
‘மாடொன்றின் காணாத கன்றைத் தேடி
மட்பானைக் குள்ளே கை விட்டேன்’ என்றான் !
விளக்கம்
தினந்தோறும் ஆய்ச்சியர்கள் வீடுகளில் வெண்ணெய் திருடி வந்த கண்ணன் ஒருநாள் கையும் களவுமாக மாட்டிக் கொண்டான்.
உடனே அவன் ,” இது என் வீடு என்று தவறாக நினைத்து நுழைந்து விட்டேன் “என்றான் .
” சரி , நீ ஏன் வெண்ணெய்ப் பானைக்குள் கையை விட்டாய் ?” என்று மடக்கினாள் ஆய்ச்சி.
அதற்கு அந்தக் குறும்புக்காரன் ,”கன்று ஒன்று காணாமல் போய் விட்டது .அது பானைக்குள் இருக்கிறதா என்று தேடிப் பார்த்தேன் ” என்று சொல்லிச் சமாளித்தான் .
(ஸ்ரீ.லீலா சுகரின் ‘ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம் ‘ பாடலைத் தழுவி எழுதியது)
( தொடரும்)
மிகவும் பிரமாதம்! கவிதையின் அழகு கண்ணனும் போல் உள்ளது.
LikeLike
Migavum Arumai
LikeLike