ரிய(ரீ)ல் போலீஸ் கமிஷனர்!
நண்பன் சேகர் வீட்டிற்குச் சென்றிருந்தேன். என் மகள் மிதிலாவும் உடன் இருந்தாள்.
ஹாலில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.
பேச்சின் நடுவே, ‘இன்னிக்கு நம்ம போலீஸ் கமிஷனர் ·பாமிலியோட டின்னருக்கு வரேன்னு சொல்லியிருக்கார்..’ என்றான் சேகர்.
கேட்டுக் கொண்டிருந்த மிதிலா, ‘அங்கிள்.. போலீஸ் கமிஷனர் உங்க ·ப்ரன்டா.. அவரை நல்லாத் தெரியுமா..’ என்றாள்.
‘ஆமாம்மா.. நல்லாத் தெரியும்.. அவர் எங்க ·பாமிலி ·ப்ரன்ட்.. எதுக்கு கேட்கறே..’ என்று அவளைப் பார்த்தான் சேகர்.
‘அங்கிள் அந்த வில்லி வாசுகி, வருணுக்கும், பூமிக்கும் தொடர்ந்து டார்ச்சர் கொடுத்துட்டே இருக்கா.. இவங்க போலீஸ் கிட்டே கம்ப்ளெய்ன் பண்ணினா அந்த இன்ஸ்பெக்டர் பணத்தை வாங்கிண்டு வாசுகிக்குத்தான் ஹெல்ப்
பண்ணற மாதிரி எல்லாம் பண்ணறார். கமிஷனர் கிட்டே அந்த இன்ஸ்பெக்டரை கண்டிச்சு வைக்கச் சொல்லணும். வாசுகியை அரெஸ்ட் பண்ணச் சொல்லணும்’ என்றாள் மூச்சுக் கூட விட மறந்து.
‘ஆமா.. யாரது வருண், பூமி, வாசுகி… உங்க பக்கத்து வீட்டுக் காரங்களா..’ என்றார் சேகர் குழப்பத்தோடு.
‘அதாங்க.. சன் டி.வி. சானல்லே ‘அன்பே வா..’ன்னு ஒரு ஸீரியல் வறதே.. அதிலே நாயகன் வருண், நாயகி பூமி, வில்லி வாசுகி… ‘ என்று சொல்லியபடி சிரித்துக் கொண்டே வந்தாள் சேகரின் மனைவி. நாங்களும் அவள் சிரிப்பில் கலந்து கொண்டோம்.
சிரிப்பினூடே, ‘மிதிலா.. அங்கிளுடைய ·ப்ரன்ட் ரியல் போலீஸ் கமிஷனர். அந்த ஸீரியல்லே ஒரு போலீஸ் கமிஷனர் வருவாரில்லையா.. அவர்கிட்டே சொன்னாத்தான் அந்த வாசுகி மேலேயும், இன்ஸ்பெக்டர் மேலேயும் ஆக்ஷன்
எடுக்க முடியும்’ என்றேன் சிரித்துக் கொண்டே.
சிறிது சங்கடமும், வெட்கமும் ஒருசேர மிதிலாவும் எங்கள் சிரிப்பில் கலந்து கொண்டாள்.
‘அடக் கடவுளே..! நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்? டி.வி.யில் வர ஸீரியல்களையெல்லாம் பார்த்துப் பார்த்து நமக்கும் ரியலுக்கும், ரீலுக்கும் உள்ள வித்தியாசம் மறந்து விடுமோ..’
திக் ப்ரமையடைந்து உட்கார்ந்திருந்தேன்.