ராஜேந்திரன் (தொடர்ச்சி)
பட்டியல்
ஈழநாடு கொண்ட பின் அடுத்தது என்ன செய்யலாம்?
இராஜேந்திரன் போட்டு வைத்த பட்டியல் மிகப் பெரியது.
பட்டியலில் முதலில் ஈழம்.
அது முடிந்தது.
அடுத்தது – சோழர்களின் பரம்பரை வைரியான பாண்டியர்!
அப்படியே சேரனையும் விட்டு வைக்கலாமா?
வருடம் 1018:
ராஜேந்திரன் அரசு கட்டில் ஏறி ஆறு வருடங்களாகியது.
அவனது திக் விஜயம் தொடங்கியது!
‘திக் விஜயம்’ என்றால் என்ன என்று அப்பாவித்தனமாகக் கேட்கும் வாசகர்களே!
திக் விஜயம் என்றால், பல திசைகளிலும் பயணப்பட்டு – எதிரிகளை வென்று – பொருள் சேர்த்து வருவது!
ஒளிந்து திரிந்த பாண்டியர்களின் மீது ராஜேந்திரனின் பார்வை படிந்தது.
சரித்திரத்தை நன்கு படித்து உணர்ந்திருந்த ராஜேந்திரன், தலைநகரத்தைக் காக்க வேண்டியது எவ்வளவு இன்றியமையாதது என்பதை நன்கு உணர்ந்திருந்தான்.
தஞ்சையைக் காக்க பெரும் படையை அமர்த்தி விட்டே அவன் போருக்குப் புறப்பட்டான்.
பாண்டியத் தாக்குதல் தொடங்கியது.
பாண்டியன் தோற்று உயிர் பிழைக்க, அகத்தியர் வாழ்வதாகக் கூறப்படும் மலய மலைக்குச் சென்று தஞ்சமடைந்தான். ராஜேந்திரன் மதுரையில் பாண்டியனின் முத்துக்குவியல்களைக் கைப்பற்றினான். தன் மகனை ‘சோழ பாண்டியன்’ என்ற பட்டத்துடன் மதுரையை ஆள பட்டம் சூட்டினான். அவனுக்கு பாண்டியர்களின் பட்டப்பெயரான ‘ஜடாவர்மன்’ என்ற பட்டமும் அளிக்கப்பட்டது.
சேரமன்னர்கள் பொதுவாக, தங்கள் நாடு இயற்கை அரண்களால் காக்கப்பட்டது. இதனால், யாரும் தங்களை அணுக முடியாது என்று நம்பியிருந்தனர். ஆனால், ராஜராஜனின் படையெடுப்பு அவர்களை ஆட்டி விட்டது. சேரர்கள், அதிலிருந்து மீண்டு மறுபடியும் கேரளத்தில் ஆதிக்கம் செய்யத் தொடங்கும் நேரம். ஆனால் ராஜேந்திரன் பட்டியலில் பாண்டியர்களுக்கு அடுத்தபடியாக எழுதப்பட்டிருந்த பெயர்:
‘சேரன்’!
சேரநாடு மீண்டும் கைப்பற்றப்பட்டது. சேரமன்னர்கள் பரம்பரையாக அணிந்திருந்த முடியும், செங்கதிர்மாலையும் பறிக்கப்பட்டது. ‘சோழ பாண்டியன் ஜடாவர்மன்’ – சேர நாட்டுக்கும் பிரதிநிதியாக்கப்பட்டான்.
பட்டியலில் அடுத்து வந்தது ‘பழந்தீவுகள்’!
அது கடலால் காக்கப்பட்டிருந்தது.
அங்கு சங்குகளின் ஒலி என்றும் கேட்டுக்கொண்டேயிருக்கும்.
பழந்தீவுகள் அனைத்தும் கைப்பற்றப்பட்டன!
பட்டியலில் அடுத்தது ‘சாந்திமத்தீவு’!
அதன் அரண்மனை, எதிரிகள் எவரையும் நெருங்க விடாமல் அமைக்கப்பட்டிருந்தது.
‘காற்றுக்கென்ன வேலி.. கடலுக்கென்ன மூடி!’
ராஜேந்திரன் படை காற்றைப்போலப் பரவியது.
அங்கு உலக மன்னர்களை இருபத்தோரு முறை வெற்றி கண்ட பரசுராம முனிவரால் வைக்கப்பட்டிருந்தது ‘செம்பொன் முடி’!
ராஜேந்திரன் அதையும் கைக்கொண்டான்!
சோழநாட்டுக்குத் தென் திசை முழுதும் ராஜேந்திரனின் வசப்பட்டது.
இனி வடமேற்குப் பகுதி.
பட்டியலில் அடுத்தது :‘சாளுக்கிய நாடு’.
1021-22: முன்பு தோற்கடிக்கப்பட்ட சாளுக்கியம் தான்!
மறுபடியும் அதன் மீது போர்.
ஏன்?
ஐந்தாம் விக்கிரமாதித்தனின் சகோதரன் ‘ஜயசிங்கன்’!
1016ல் அவன் முடிசூட்டிக்கொண்டான்!
சோழர்களிடம் முன்பு இழந்த பகுதிகளை மெல்ல மெல்ல மீட்கத் தொடங்கினான். 1019 ல் ஜயசிங்கன், சோழரையும், சேரரையும் வென்றதாகத் தன் கல்வெட்டில் பதித்தான்.
இந்தச்செய்திகளால், ராஜேந்திரனின் பட்டியலில் ‘மீண்டும் சாளுக்கியம்’ – என்று எழுதப்பட்டது.
அப்புறம் என்ன!
சோழப்படையெடுப்பு தான்!
சுருக்கமாக அதைச்சொல்வோம்!
‘இரட்டபாடி கைப்பற்றப்பட்டது.
அளவற்ற செல்வமும் ராஜேந்திரன் வசப்பட்டது.
முசங்கியில் நடந்த இந்த யுத்தத்தில் ஜயசிங்கன் புறமுதுகு காட்டி மறைந்து கொண்டான்’.
ராஜேந்திரன், தலைநகரம் திரும்புமுன், மண்ணைக் கடகம் (மானியகேடா), கல்யாணி அனைத்தையும் வென்று திரும்பினான்.
இங்கு, வாசகர்கள் ஒன்றைக் கவனிக்க வேண்டும்!
தொலைவு நாடுகளில் படையெடுத்தால் அதை ஆள எண்ணுவது சிரமமாகும். அதனால் அதை வென்று அதன் செல்வத்தை மட்டும் கவர்ந்து, தலைநகரம் அடைவதே அரசர்களின் குறிக்கோளாக இருந்தது. இது அசோகர், அலெக்ஸாண்டர், சமுத்திரகுப்தன் அனைவரும் கையாண்ட கொள்கையாகும். குப்தர்கள் தொலைவிலிருந்த காந்தாரத்தை ஆளமுடியாமல் ஹூணர்களால் அடைந்த தொல்லை நாமறிந்ததே!
ராஜேந்திரன் தலைநகரம் திரும்பிய உடன், ஜயசிங்கன் மெல்ல மெல்ல, துங்கபத்திரை ஆற்றின் வடக்குப் பகுதிகளை மீண்டும் கைப்பற்றி சிறு சோழப்படைகளையும் வென்று ஆண்டான்.
மீண்டும் ராஜேந்திரனின் பட்டியலுக்கு வருவோம்.
இப்பொழுது ‘வேங்கி’ என்று சிவப்பு எழுத்துக்களால் எழுதப்பட்டிருந்தது!
வேங்கியின் கதை, சரித்திரம் சொல்லும் கதை.
வேங்கியில், முதலாம் சக்திவர்மனின் ஆட்சி முடிந்ததும், அவன் தம்பி விமலாதித்தன் அரியணை ஏறினான். அது ராஜராஜன் ஆட்சிக் காலத்தில் போட்ட ஒப்பந்தத்தின் விளைவு.
விமலாதித்தன், ராஜராஜனின் மகள் குந்தவியை மணந்திருந்தது அனைவரும் அறிந்ததே!
விமலாதித்தன்- குந்தவிக்கு ஒரு மகன் இருந்தான்.
அவன் பெயர் என்ன தெரியுமா?
உங்கள் ஊகம் சார்தான்!
தாத்தா பெயர் தான்.
அவனும் ராஜராஜனே!
முழுப்பெயர் ‘ராஜராஜ நரேந்திரன்’!
விமலாதித்தன் ஆட்சிக்குப் பிறகு ராஜராஜ நரேந்திரன் முடிசூட்டிக்கொள்ள நாள் குறித்தான்.
சாளுக்கிய மன்னன் ஜயசிங்கன் இதை எதிர்த்தான். அவன், ராஜராஜ நரேந்திரனின் ஒன்று விட்ட சகோதரன் ‘விஷ்ணுவர்த்தன விஜயாதித்தனை’ அரியணையின் அமர்த்தப் போராடினான். ஜயசிங்கன், விஜயாதித்தன் இருவரும் கலிங்க, மற்றும் ஒட்டர் நாடுகளுடன் கூட்டணி அமைத்துக் கொண்டானர். அந்தப் படைகள் வேங்கியைத் தாக்கின. விஜயாதித்தன் அரியணையில் அமர்ந்தான்.
ராஜராஜ நரேந்திரன் – தாய் மாமன் ராஜேந்திர சோழனிடம் சென்று முறையிட்டான்.
ராஜேந்திரன் காஞ்சியிலிருந்த தனது படைத்தளபதி ‘விக்கிரம சோழிய வரையன்’ என்பவனுக்கு ஓலை அனுப்பி உடனடியாக வேங்கியைத் தாக்குமாறும் சோழப்பெரும்படை தஞ்சையிலிருந்து விரைவில் வந்து சேரும் என்றான். சோழர் படைத்தலைவன் விக்கிரமன் வருவதை அறிந்த விஜயாதித்தன், வேங்கி அரண்மனையைக் காலி செய்து விட்டு ஓட்டம் பிடித்தான். படைத்தளபதி விக்கிரமன் – ஜயசிங்கன், கலிங்கன், ஒட்டர் அனைவரையும் புறங்கண்டான்.
ராஜேந்திரனும் தனது பெரும் படைகளுடன் முதலில் வேங்கியை அடைந்தான். தன் தங்கை மகன் ராஜராஜ நரேந்திரனுக்கு முடிசூட்டினான். அதற்குள், விக்கிரமன், ஜயசிங்கனைத் தொடர்ந்து கோதாவரி நதிவரை சென்று துரத்திவிட்டான்.
ராஜேந்திரன் கோதாவரிக்கரை வந்து சேர்ந்தான். வெற்றி கண்ட விக்கிரமனை ஆரத் தழுவிக்கொண்டான். அவனுக்குப் பல பட்டங்கள் அளித்தான். அந்தப் பட்டங்கள் :
- நால்மடி வீமன்,
- சோழனச்சக்கரன்,
- சாமந்தாபரணம்,
- வீரபூஷணம்,
- எதிர்த்தவற்குக்காலன்,
- ஜயசிம்மன் குலகாலன்!
அன்று இரவு கோதாவரிக்கரையில், பௌர்ணமி நிலவு அந்த நதிக்கரையை ரம்மியமாகச் சாயம் பூசியது. சோழக்கூடாரங்களில் வெற்றிக் களிப்புடன் ஆட்டம், பாட்டம், கூத்து எல்லாம் நடந்தது. ராஜேந்திரன் தனது மஞ்சத்தில் இருந்து தளபதி விக்கிரமனிடம் தனது பாராட்டுதல்களைத் தெரிவித்தான்.
ராஜேந்திரன் கண்கள் கனவுலகில் மிதந்தன.
“விக்கிரமா! என் மனத்தில் என்ன ஓடுகிறது தெரியுமா?” என்றான்.
“சக்கரவர்த்தி! ஆணையிடுங்கள்! இந்த அகில உலகையும் தங்கள் காலடியில் கொண்டு வருவேன்” – அவனும் கனவுலகில் மிதந்தான்.
“விக்கிரமா! உனது வீரம் மட்டுமல்ல, உனது போர்த்திட்டங்களும் என்னை மிகவும் கவர்ந்தது. அது, உன் மீது எனக்குப் பெரும் நம்பிக்கையையும் கொடுத்திருக்கிறது. இந்த வேங்கிப் போர் உனக்கு ஒரு பிள்ளையார் சுழி போலத் தான். இனி மேல் நீ செய்யப்போவது இந்தியச் சரித்திரத்தில் தங்கத்தில் எழுதப்படும்.” என்றான்.
விக்கிரமனின் தோள்கள் தினவெடுத்தன.
மன்னவன் ஆணையிட்டான்.
‘மன்னர் மன்னா! என் பாக்கியம் தான் என்னே!” என்று விக்கிரமன் ராஜேந்திரன் பாதங்களைத் தொட்டு வணங்கினான்!
அது என்ன ஆணை!
சற்றுப் பொறுத்திருந்தால் நமக்கும் தெரியும்.
பொறுத்திருப்போம்!
Wow, This is more interesting than Ponniuin Selvan.
LikeLike