அக்டோபர் (2022) மாத சிறுகதைத் தேர்வு
_____________________________________________________________________________________________________
இம்மாத சிறந்த கதை :
அனாதை மரங்கள்
விவரம் கீழே:
அக்டோபர் மாதம் வந்த வாராந்திர / மாதந்திர இதழ்கள் மற்றும் மின்னிதழ்களில் வந்த கதைகளில் சிறந்த கதையைத் தேர்ந்தெடுத்து கொடுக்கும் பொறுப்பை கொடுத்ததற்கு குவிகம் அமைப்பிற்கு நன்றி.
அக்டோபர் மாதம் 69 கதைகள் வந்துள்ளன. இதில் எல்லாக் கதைகளிலும் ஏதாவது ஒரு சிறப்பம்சம் இருக்கத்தான் செய்தது. சில கதைகள் வெகுஜன ரசனைக்கேற்ப வழக்கமான பாணியில் இருந்தது. குறையாகத் தெரியவில்லை.
இப்போது சில கதைகள் குறித்து
” ஒளியின் நிழல்” – கலைச்செல்வி – சொல்வனம்
அருமையான புனைவு கதை
காந்தி – கஸ்தூரிபா- ஹரிலால் இவர்கள் மூன்று பேருக்கும் (தெ.ஆப்பிக்காவில்) இடையேயான, உரையாடல் உராய்வுகள் மற்றும் மன உணர்வுகள் பற்றி மிக அழகாக எழுத்தாளர் கலைச்செல்வி எழுதி இருக்கிறார்.
ஆனால் 34 பக்கங்கள் இருப்பதால் சிறுகதையாக பரிசளிக்க எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஆனால் நிச்சயம் படிக்க வேண்டிய புனைவு கதை என்று பரிந்துரைக்கிறேன்.
எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களின் இரண்டு கதைகள் “ஆரஞ்சு பழ விதைகள் அப்படியே இருக்கின்றன ” (அம்ருதா) “தூறலில் நனைதல் ” (உயிர்மை)
அவரது அனுபவமிக்க நடையில் மனித மன உணர்வுகளை மிக அழகாக சித்தரிக்கிறார். அதையும் வாசகர்கள் படித்து மகிழலாம்.
இதைத் தவிர்த்து மற்ற கதைகளில் சிறந்த கதையாக பரிசீலிப்பதற்கு சுருக்கப்பட்டியலாக எட்டு கதைகள்எடுத்துக் கொள்ளப்பட்டன.
- ஆயிஷா நடராஜன் அவர்கள் எழுதிய
“நான் ரோபோட் அல்ல” (குமுதம் -05/10/22)
ஒரு நல்ல கதை. நிகழ்கால மற்றும் எதிர்கால மனித வாழ்வின் இயல்பை சொல்லும் கதை.
ஒரு நிறுவனத்தில் செயற்கை அறிவுடன் மனித உணர்வுகளுடன் ரோபோக்கள் உருவாக்கப்பட்டு மனிதர்களும் ரோபோக்களும் சேர்ந்தே பணிபுரிகின்றனர். அடுத்து ஒரு கட்டத்தில் பதவி உயர்வு கொடுப்பதற்கு இரண்டு பேர்கள் (ரஞ்சன், யுவன்) பரிசீலிக்கப்படுகிறார்கள். ஒருவரைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த ஒருவர் மனிதராக இருக்க வேண்டும்.
அந்த இருவரில் யார் மனிதர் யார் ரோபோட் என்பதை ஒரு பெண் சோதிப்பார். இருவருமே மனிதர் தான் ரோபோட் அல்ல என்று நிரூபிப்பதற்காக பிரயத்தனப் படுவார்கள்.
கதையின் முடிவு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது.
இவர்கள் மனிதர்களா அல்லது ரோபோட்க்களா என்று சோதனை செய்தது ஒரு ரோபோட் தான். ரோபோட்க்களை மனிதர்கள் அளவுக்கு மேம்படுத்துவதை விட மனிதர்களையே ரோபோட்டுக்களாகிவிட ஒரு கோட்பாடு உண்டு. மனிதத் தன்மை இழந்து மனிதர்கள் இயந்திரமாக மாறி வருவதை சொல்லும் அருமையான கதை.
- இதழில் விக்னேஷ் எழுதிய ” தனித்த வனம்” (சொல்வனம்)
சென்னையில் இருந்து கோவைக்கு அப்பாவின் உடல்நிலை சரியில்லை என்று செல்கிறான். அப்பா மரணித்து விடுகிறார். அலுவலகத்தில் மூன்று நாள் தான் லீவு தருகிறார்கள். சென்னையில் இருந்து மனைவி வர முடியவில்லை. அவனுடைய மகனும் இவனை உடனே புறப்பட்டு வரும்படி சொல்கிறான். அப்பாவின் இறந்து போன செய்தியை இவன் சொன்ன பொழுது எதிர்முனையில் சிறிது நேரம் மௌனம்.
இந்த மௌனம் எதற்காக, என் அப்பாவை கற்பனை செய்து பார்க்கவா, உடனே பேசினால் நன்றாக இருக்காது என்று காலம் கடத்துகிறார்களா ?
வெளிநாட்டில் இல்லாமல் உள்நாட்டிலேயே வேறு வேறு ஊர்களில் இருந்தாலும் வாழ்வுக்கு ஆதாரமாக இருந்தவர்களின் மரணத்தில் கூட முழுமனதோடு உணர்வுபூர்வமாக கலந்து கொள்ள முடியாத நிலையில் மாறிவரும் வாழ்க்கை நிலையும், சிதைவுறும் சமூக மதிப்பீடுகளும் அழகாக சொல்லப் பட்டிருக்கின்றன
- எம்.எம்-தீன் எழுதிய “கரகம்” (ஆனந்தவிகடன் 05/10/22)
கொரோனா தொற்று காலத்திற்குப் பிறகு நெருக்கடியான வாழ்விற்கு உள்ளான கரகாட்ட கலைஞர்களின் கதை. சரோஜா கரகாட்டக்காரி. அவள் துணைக்காக, துணைக் கும்பமாக வாணி என்ற இளம் பெண்ணையும் கூடவே அழைத்துச் செல்வாள். கொரோனா காலத்திற்குப் பிறகு அன்றாட வாழ்வை நடத்துவது பெரிய போராட்டமாகி விட்ட நிலையில் நல்ல நிகழ்ச்சிகளுக்கு மட்டும் இல்லாமல் சாவுக்கும் கரகம் ஆட செல்கிறாள். சாவு வீட்டில் இழிவாகப் பார்க்கப்படுகிறார்கள்.
அது மட்டுமல்லாமல் பாலியல் தொந்தரவுக்கும் உள்ளாகிறார்கள். வாணியும் சரோஜாவும் ஒரு பணக்காரியின் சாவிற்கு கரகம் ஆடச் செல்கிறார்கள். அங்கு இழிவான பேச்சுக்கும், பாலியல் துன்புறுத்தலுக்கும் ஆளாகிறார்கள். சவடக்கத்திற்குப் பிறகு உறவினர்களிடையே சொத்து தகராறு ஏற்பட்டு, இவளுக்கு யாரும் பணம் கூட கொடுக்க வரவில்லை. ஆடியதற்கான கூலி கூட பெறாமல் தனியாக இருக்கும் அம்மாவிற்காக வீட்டுக்கு திரும்புகிறாள். கரகம் போன்ற கலைகளையே தங்கள் வாழ்வின் ஆதாரமாக கொண்டுள்ள மக்களின் சுமையான வாழ்க்கையை சொல்லும் அருமையான கதை.
- நர்சிங் எழுதிய “ஓவியன்” ஆனந்த விகடன் (12.10.22)
சந்தனமாரி ஒரு ஓவியன். காளிதாசனும் கதை சொல்பவனும் சந்தன மாரியும் நண்பர்கள்.
ஒரு முறை மூன்று பேரும் ஒன்றாக இருக்கும் பொழுது அங்கு வந்த காளிதாசனின் பெரியப்பா மகள் பொற்கிழியைப் பார்த்து அவளுடைய அழகான தோற்றத்தை பார்த்துப் பிரமிக்கிறான் சந்திரமாரி.
சில நாட்கள் கழித்து மேல மாச வீதியில் ஒரு நகைக்கடை விளம்பரத்திற்கு படம் வரைந்து கொடுக்கிறான் சந்தனமாரி.
அதில் இருப்பவள் அச்சு அசல் பொற்கிழியைப் போலவே இருக்கிறாள். இது பெரிய பிரச்சனையாகிறது. வேற்று ஜாதி என்பதால் காளிதாசும் அவன் உறவினர்களும் சந்தன மாரியை நையப் புடைத்து விடுகிறார்கள். பொற்கிழியையும் அவள் அப்பா துபாயில் இருப்பதால் அங்கு கூட்டி சென்று விடுகிறார்கள்.
பல வருடங்கள் கழித்து மீண்டும் சந்தனமாரி ஊருக்கு வந்திருக்கிறான். மூவரும் சந்திக்கிறார்கள். சந்தனமாரி இப்பொழுது திரைப்படத் துறையில் பல வெற்றி படங்களுக்கு ஸ்டோரி போர்டு வரைந்து கொடுக்கிறான். நல்ல நிலைமையிலும் இருக்கிறான்.
‘காளிதாஸ் கிட்ட நீ பேசி இருக்கலாம் இல்ல அப்பவே’ என்று சொன்ன பொழுது, நான் பொற்கிழியை ஒரு முறை தான் பார்த்திருக்கிறேன். பிறகு அவளோடு பேசியதோ பார்த்ததோ இல்லை. அந்த முகம் என் மனதில் பதிந்து விட்டது. அவ்வளவுதான் என்றான். சந்தனமாரி காளிதாசுக்கும் வருத்தமாக போய்விட்டது. அடுத்ததாக சந்தனமாரி இந்தியா முழுவதும் வெற்றி பெற இருக்கும் என்று உறுதியாக நம்புகின்ற அடுத்த படத்திற்காக தான் வரைந்த ஸ்டோரி போர்டு படங்களை காட்டுகிறான். அதில் கதாநாயகனின் முகம் காளிதாசன் முகமாக இருந்தது.
ஜாதியப்போக்குகளும் வதந்திகளும் நல்ல நட்பையும் உறவையும் எப்படி பாதிக்கும் என்று சொல்லப்பட்ட நல்ல கதை.
- சோ.சுப்புராஜ் எழுதிய “தற்செயல்களின் கடவுள் ” (சிறுகதை)
ஒரு பெரிய கட்டிடம் கட்டும் வேலை நடக்கிறது. கார் பார்க்கிங் பகுதிக்கு போடப்பட்டிருந்தது. பீமும், சிலாபும் திடீரென இடிந்து விழுந்து விடுகிறது. நல்ல வேலையாக யாருக்கும் அடிபடவில்லை.
காண்ட்ராக்டருக்குத் தெரியப்படுத்த, வந்து எல்லோரையும் திட்டுகிறார். சைட் இன்ஜினியரிடம் காரணம் கேட்க, சைட் இன்ஜினியர் வேறு ஒரு கட்டுமானப் பணி நடக்கும் இடத்திற்கு போன சமயம், அவசரகதியில் மேஸ்திரி மேற்பார்வையில் செய்த வேலை.
பூஜை போடுவதில்லை. அதனால்தான் இப்படி எல்லாம் நடக்குது. ரத்த பலி வாங்காம விடாது என்று அச்சத்தோடு வேலைக்காரர்கள் பேசிக் கொள்கிறார்கள்.
விழுந்ததற்கான தொழில் நுட்பக் காரணங்களை இன்ஜினியர் காண்ட்ராக்டருக்கு விளக்கிச் சொன்ன பிறகு இன்ஜினியரைத் தனியாக அழைத்து ‘எனக்கு இதெல்லாம் தெரியும்பா, நீ என்ன பெரியார் கட்சியா? இருந்தாலும் தப்பில்லை. எனக்கும் இந்த பூஜை எல்லாம் நம்பிக்கை இல்லை. ஆனால் நாம் என்ன சொன்னாலும் இந்த வேலைக்காரங்க ஏத்துக்க மாட்டாங்க. அவங்களுடைய நம்பிக்கையை நாம மதிக்கணும் கௌரவிக்கணும் அவங்க பயமில்லாமல் அப்பத்தான் வேலை பார்க்க முடியும். அதனால அடுத்த வாரத்தில் இருந்து பூஜை போட சொல்லுங்க’ என்று சொல்லிவிட்டு போகிறார்.
சமூகமோ அல்லது பணி செய்யும் இடமோ எல்லோருடைய நம்பிக்கைக்கும் மதிப்பும், இடமும் இருந்தால் தான் அச்சம் இன்றி இயங்க முடியும் என்பதை அழகாக சொன்ன கதை.
- சிறுகதை இதழில்
நா. ஞானபாரதி எழுதிய “கோழிக்கறி சாப்பிடுபவர்களுக்கு பூஜா மண்டலைத் தெரியாது” (சிறுகதை)
ஒரு கோழிப் பண்ணை எப்படி பராமரிக்கப்படுகிறது, அதில் வேலை செய்பவர்களின் நிலை என்ன? இந்த கதையின் மூலம் நாம் தெரிந்து கொள்ள முடியும்.
கோவையில் இருக்கும் கோழி பண்ணையில், காண்ட்ராக்டர் மூலம் வங்காளத்தில் இருந்து பூஜா மண்டலும் அவள் கணவன் அசிஷ் மண்டலும் வேலைக்குச் செல்கிறார்கள். தொற்று காலத்தில் பூஜா மண்டலை கோழிப்பண்ணையில் விட்டு விட்டு பெற்றோரைப் பார்க்க ஊர் சென்ற அசிஷ் மண்டல் தொற்று வந்து இறந்து விடுகிறான்.
பெருத்த அதிர்ச்சியுடனும், மனவேதனையுடனும் பூஜா மண்டல் கோழிப்பண்ணையில் வேலை செய்யும் முத்துப்பாண்டி அவர்களுக்கு ஆறுதலாக இருக்கிறான். நட்பு காதல் ஆகி திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறான் முத்துப்பாண்டி. பல வருடங்களுக்கு முன் ஊரில் ஏற்பட்ட ஜாதி மோதலில் முத்துப்பாண்டி கொல்லப்படுவான் என அஞ்சி அவனைக் கோவைக்கு அனுப்பி விடுகின்றார் அவனது பெற்றோர். பல வருடங்களுக்குப் பிறகு இப்போது தான் ஊருக்கு போகிறான் பெற்றோர் சம்மதம் பெற்று பூஜா மண்டலை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து இருக்கிறான். முத்துப்பாண்டிக்காக பூஜா மண்டல் காத்திருக்கிறாள் ஊருக்கு போன முத்துப்பாண்டி இன்னும் வரவில்லை ஏனென்று தெரியவில்லை.
கோழிப்பண்ணை, அதன் வேலைமுறைகள் மற்றும் ஊழியர்களிடையே இருக்கும் உறவு, அவர்களுடைய மனிதம் எல்லாம் மிக அழகாக சொன்ன கதை
- மு. அரஃபத் உமர் எழுதிய ” நசீபு ” (உயிரெழுத்து)
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வாழும் முஸ்லிம் சமூகத்தில் பெண்களின் நிலையை விவரிக்கும் கதை. சுபைதா பாட்டிக்கும் செரீனா என்ற பேரனின் மனைவிக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் கதை.
சுபைதா தன் வாழ்க்கையைச் சொல்கிறார். சிறுவயதில் பண்டிகைக்குப் பட்டுத் துணியில் பாவாடை கேட்கிறார். அப்பா வாங்கி கொடுத்த துணி பிடிக்காததால் பண்டிகை அன்று கட்டவில்லை.
இந்த அறிந்த அப்பா அவர் மனைவியை பெண்ணை வளர்க்க தெரியவில்லை என்று அடிக்கிறார். அன்றோடு பிறந்த வீட்டில் தன் விருப்பங்களை அவள் பேசுவதை நிறுத்திக் கொண்டாள்.
திருமணம் ஆன பிறகு புகுந்த வீட்டில் பக்கத்து வீட்டுப் பெண்ணோடு மதார்சா செல்வதாக கணவனிடம் சொல்கிறாள். கணவன் அவளை ஓங்கி அறைந்து சுயமாக இந்த மாதிரி எல்லாம் திமிராக முடிவெடுக்கக் கூடாது என்கிறார்.
அதன் பிறகு அவள் வாழ்நாளில் “என்னங்க “, “சரிங்க ” என்ற வார்த்தைகளைத் தவிர வேறு பேசியதே இல்லை.
முஸ்லிம் சமூகத்தில் கணவனோ மனைவியோ இறக்கும் தருவாயில் இருந்தால், மற்றவர் அவரிடம் சென்று நான் ஏதாவது தப்பு பண்ணி இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள் என்று மன்னிப்பு கேட்க வேண்டும்.
சுபைதாவின் கணவர் சாகும் தருவாயில் இருக்கும்போது உறவினர்கள் இவளை வற்புறுத்த இவள் சென்று மன்னிப்பு கேட்கிறாள். அப்போது பேசும் நிலையில் இருந்த அவரது கணவர் ஆண்கள் எல்லாம் வராங்க உள்ள போ என்று தான் சொல்கிறார். நான் என்ன தவறு செய்தேன் நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற ஆதங்கத்துடனே சுபைதா வாழ்கிறாள்.
சுபைதாவின் மகனும் இதே போல் தான் நடந்து கொள்கிறான். சுபைதா செரினாவிடம் உன் பையனையாவது பெண்களை மதித்து வாழ கற்றுக் கொடு என்கிறார். பேரன் ரியாஸ் சவுதியில் இருக்கிறான். அவனிடமிருந்து வரும் போன் காலில் செரினா மகிழ்ச்சியோடு பேசிவிட்டு சுபைதாவிடம் மொபைலை கொடுக்கிறார். பாட்டியும் பேரனிடம் ‘சவுதியில் போய் கெட்டுப் போயிடாத. நல்ல பிள்ளையா இரு’ என்கிறார்.
‘நீ எனக்கு எதுவும் புத்திமதி சொல்ல வேண்டாம், உன் வேலைய பாரு’ என்று சொன்ன ரியாஸ் மனைவியை அழைத்து ஏதோ பேசுகிறான்.செரினாவின் கண்களில் கண்ணீர் வருகிறது. முகம் இறுக்கமாகிறது. அதை பார்த்து சுபைதா கோபத்தோடு வெற்றிலை பாக்கு இடிக்கத் தொடங்குகிறார்.
பொதுவெளியில் அறியப்படாத பெண்களின் நிலையை மிக அழகாகவும் மிக நேர்த்தியாகவும் இந்த கதை சொல்லுகிறது. வட்டாரச் சொற்கள், உறவு முறைகள் நன்கு அறிய முடிகிறது. இதுவும் ஒரு நல்ல கதை
- கிறிஸ்டி ரத்தினகுமார் எழுதிய
“அனாதை மரங்கள்” ( கல்கி 07.10.22)
எளிமையான சுய விருப்பங்களை,எதிர்ப்புகளை மீறி செயல்படுத்தும் பொழுது, அதுவே நாம் வாழ்ந்ததற்கான அடையாளமாக மாறுவதை மிகச் சிறப்பாகச் சொல்லியிருக்கிறார்.
சத்தியனின் அப்பாவிற்கு பக்கவாதம் வந்ததால் விருப்ப ஒய்வு பெற்று அவருடைய மனைவியின் பூர்வீக சொத்தில்தான் குடும்பம் நடக்கிறது. அப்பாவிற்கும் அம்மாவிற்கும் பெரிதாக சண்டை எதுவும் வராவிட்டாலும் தொடர்ந்து உராய்வுகளும் அம்மாவின் சின்ன சின்ன விருப்பங்களுக்கும் எதிர்ப்பும், தடை போடும் போக்கும் நடக்கும்.
வீட்டில் தோட்டம் போடுவதில் அம்மாவிற்கு அதிக விருப்பம்.குறைவான பனிப் பிரதேசத்தில் வளரும் (பட்டர் ஃப்ரூட்) வெண்ணைப் பழ விதைகளை தெருவில் வந்து ஆடைகளை விற்கும் மீரான் லெப்பையிடம் பெற்று வீட்டில் நட்டு வைக்கிறார். இவன் அப்பாவும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் இது வளராது, தேவையில்லை என்றெல்லாம் சொல்லி எதிர்க்கிறார்கள்.
ஆனாலும் இவள் எடுத்த முயற்சியின் காரணமாக ஆறு விதைகளில் ஐந்து விதைகள் துளிர்விட ஆரம்பிக்கின்றன. ஆட்டுக்குட்டியின் காதை போல அதனுடைய இலைகள் நீண்டு தரையைத் தொடுகின்றன. இத்தருணத்தில் வீட்டிற்கு வந்த அவளது சகோதரன் வெண்ணெய்ப்பழ மரத்தின் வேர்கள் வீட்டின் அஸ்திவாரத்தையே பாதிக்கும் என்று பயமுறுத்துகிறான். யாரிடமும் சொல்லாமல் திரவுபதி கோவிலில் இருக்கும் முத்துலிங்கத்திடம் இந்த செடிகளை கொடுத்து கோவில் அடிவாரத்தில் நட சொல்லுகிறார்.
பிறகு சத்யனும் வெளிநாட்டில் வேலை பார்க்கச் செல்கிறான் அம்மா இறந்து 15 வருடங்களுக்குப் பிறகு தன் மகனுடன் ஊருக்கு வருகிறான்.
முத்துலிங்கம் துணையுடன் அப்பா சக்கர நாற்காலியில் வாழ்க்கையை கடத்துகிறார். அவருடைய தூண்டுதலில் சத்தியனும், பேரனும் அனைவரும் கோவிலுக்கு சென்று வெண்ணெய் பழ மரங்களை பார்க்கின்றனர். முத்துலிங்கத்திடம் சொல்லி அங்கு இருக்கும் சிறுவர்களின் உதவியால் மரத்தின் உயர இருக்கும் ஒரே ஒரு பழத்தை பறித்து இவர்களிடம் கொடுக்கின்றான்.
அந்த பழத்தை கையில் வைத்துக் கொண்டிருக்கும் சத்யனின் அப்பா தன் மனைவியை ஒரு மனுசியாகவே மதிக்காததை நினைத்து நினைவுகளில் மூழ்கி வருந்துகிறார்.
சத்தியனும் அந்த மரங்களை அம்மாவின் நினைவை சுமந்து நிற்கும் மரங்களாக பார்க்கிறான்.
ஆர்ப்பாட்டம் இல்லாமல் சலசலப்பு இல்லாத நீரோடை போல எழுதப்பட்ட கதை.
சுருக்கமாக ஒவ்வொருவரின் வாழ்வையும் சொல்லும் நடை சிறப்பாக உள்ளது. உதாரணத்திற்கு இயல்பாக இயங்க முடியாத அவனது அப்பாவின் வாழ்க்கை,
“சுழலும் இசைத்தட்டில் இளைப்பாறும் ஈயின் வாழ்க்கை அவருக்கு. அவரைச் சுற்றி வேகமாக காட்சிகள் மாறினாலும் அவருக்கோ ஒரு அங்குலம் கூட நகராத வாழ்க்கை “
இந்த ஒரு வரி ஹைக்கூ போல பல செய்திகளை சொல்கிறது.
அதேபோலநமக்கு மற்றவர்களால் ஏற்படும் நிராகரிப்பும் எதிர்ப்பும் பற்றி சொல்லும் பொழுது, “வாழ்க்கையில் தொட்டுக் கொள்ள ஒரு சோகமோ ஒரு தவிப்போ தேவை. அவற்றின் உறைப்புத் தான் வாழ்க்கையை நகர்த்த உதவுகிறது.” இதுபோல பல வரிகள் உண்டு. ஒரு சாதாரண நிகழ்ச்சி போல தோன்றியது, வாழ்வின் அடையாளமாக மாறிவிடுகிறது என்பதை அழகாக சொன்ன கதை.
எந்த ஒரு புதிய செயலும் /முயற்சியும் முதலில் எதிர்க்கப்படும், பிறகு ஏளனப்படுத்தப்படும், அதையெல்லாம் கடந்து வெற்றி பெற்ற பிறகு ஏற்றுக் கொள்ளப்படும்.
இந்தக் கதையை அக்டோபர் மாதத்தின் சிறந்த கதையாக நான் பரிந்துரைக்கிறேன்.
அக்டோபர் மாத கதைகளை படித்ததில் கவனித்த சில விஷயங்கள்.
- நகைச்சுவை கதைகள் இல்லைஉதாரணத்திற்கு (புதுமைப்பித்தன், கல்கி, தேவன், சாவி… போல.)
2.இன்றைய 30- 45 வயது வரை உள்ள உள்ளவர்களின் வாழ்க்கை நிலை பற்றிய கதைகளும் பெரும்பாலும் இல்லை இரண்டு கதைகளை தவிர.
- மிக முக்கியமான விஷயம் மிகவும்
இலக்கிய இதழ்களில் வரும் கதைகளே சிறப்பாக இருக்கும் வெகுஜன பத்திரிகைகளில் நல்ல இலக்கிய தரம் வாய்ந்த கதைகள் வராது என்ற எனது புரிதல் மிகவும் தவறானது என்ற முடிவிற்கு, எல்லா கதைகளையும் ஒருசேர படிக்கும் பொழுது வந்தடைய முடிந்தது.
இந்த அனுபவம் மிகவும் சிறப்பானது.
ராஜாமணி
இப்படித்தான் இருக்கவேண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைக்கு உரிய அங்கீகாரம்! வாழ்த்துகள் ராஜாமணி! வாழ்த்துகள் சுந்தரராஜன்!
LikeLike