அடுத்து நாங்கள் டோக்கியோவிலுள்ள கபுகிசா எனும் கலையரங்கிற்கு, ‘கபுகி’ (Kabuki) எனும் ஜப்பானியப் பாரம்பரிய நாட்டிய நாடகத்தைக் காணச் சென்றோம். ‘கபுகி’ என்பது ஜப்பானின் 400 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த பாரம்பரிய இசை-நாட்டிய -நாடகம். (க – இசை; பு – நாட்டியம்; கி – நாடகம்.) இந்த 400 ஆண்டுகளில் கபுகி, மற்ற கலைகளிலிருந்தும், நவீன நாகரிகங்களிலிருந்தும் அவசியமானவற்றைத் தன்னுள் இணைத்துக் கொண்டு, அசுரத்தனமான வளர்ச்சியை அடைந்து விட்டது என்கின்றனர்.
1600களில், ஆற்றங்கரைகளில், இசை நாடகமாக வளர ஆரம்பித்தது கபுகி. முற்றிலும் பெண்களே ஆண், பெண் இருவரின் பாத்திரங்களையும் ஏற்று நடித்தனர். அரசவையில் நடிக்கப் பெற்று, வெற்றிகரமான கலைநிகழ்ச்சியாக உருவான கபுகி நாட்டிய நாடகங்கள், பல்வேறு குழுக்களால் நடிக்கப் பெற்று பிரபலமாயின. ஆனால், அது பிரபலமானதென்னவோ, அதில் கண்ணியமற்ற ஆபாசமான முறையில் சித்தரிக்கப்பட்ட கருத்துக்களினாலும், அதனை நடித்த கலைஞர்கள் விபசாரத்தில் ஈடுபடுபவர்களாகவும் இருந்ததினால்தான். இதனாலேயே கபுகி அக்காலத்தில் ‘விபசாரிகளின் ஆடல் பாடல்’ என அறியப்பட்டது என விக்கிபீடியா கூறுகின்றது!
இருந்தாலும் கணிசமாக வளர்ச்சியடைந்து, இவ்வாறு சிவப்பு விளக்குப் பகுதியாகப் பதிவு செய்யப்பட்ட ‘ஈடோ’ எனும் நகரில் பிரபலமான இக்கலை, பலவிதமான மக்களையும் கவர்ந்து ஓரிடத்தில் கூடச் செய்தது. நவீன நாகரிகங்களையும் நாட்டு நடப்புகளையும் விசேஷ அம்சங்களாகக் கொண்டிருந்த கபுகி என்ற இக்கலை வடிவம், புதுப்புது விதமான இசை, ஆடையணிகள், புகழ் பெற்ற கலைஞர்கள் எனக் கொண்டு மக்களை மகிழ்வித்தது. கபுகி கலையரங்குகளைச் சுற்றிலும் தேநீர் அருந்தகங்கள் அமைந்து, உணவு, சிற்றுண்டி, நண்பர்கள் சந்திப்பு என நிகழ ஏதுவாயின என்கின்றனர்.
(ஆம்! இவற்றையெல்லாம் படித்து ஒரு சிறு அளவாவது நம்மைத் தயார் செய்து கொண்டு போனால் தான் ஒரு நாட்டின் பாரம்பரியமாக விளங்கும் கலை, இசை வடிவங்களைப் பற்றிச் சிறிதாவது புரிந்து கொள்ள இயலும் அல்லவா?)
1800களில் பலவிதமான கலாச்சார மாறுதல்கள் ஜப்பானில் நிகழ்ந்தன. சாமுராய்கள் ஒழிக்கப்பட்டனர்; ஜப்பான் மேற்கத்திய கலாச்சாரத்தினை வரவேற்றது; இக்காலத்தில், கபுகி திரும்பப் புது வடிவம் எடுத்தது. பழைய வடிவங்களை விடுத்துப் புதுமையான வடிவம் எடுத்தாலும் ஜப்பானின் பாரம்பரியக் கலாச்சாரத்தின் இசை நாடக வடிவமாகவே கபுகி அறியப்படுகின்றது. பெண்களும் இவற்றில் நடிகர்களாக அவ்வப்போது பங்கேற்க ஆரம்பித்தனர். இதன் ஆபாசமான பெயர் மாறியது.
கபுகி நாட்டிய நாடகங்களுக்காக விசேஷமான கலையரங்குகள் நிறுவப்பட்டன. இவற்றுள் ஒன்று தான் டோக்கியோவில் நாங்கள் சென்ற ‘கபுகிஸா’ (Kabukiza) கலையரங்கு. இதுதான் ஜப்பானிலேயே கபுகிக்காக உள்ள மிகப்பெரிய கலையரங்கு என்கின்றனர். மாதம் ஒரு கலைநிகழ்ச்சி கட்டாயம் இங்கு நடைபெற்றே தீரும். கலைஞர்களும் இங்கு பங்கேற்பதனை மிகவும் உயர்வாக மதிக்கின்றனர்.
ஆனால் நாங்கள் சென்றது ஒருமாலைநேரக் கலைநிகழ்ச்சிக்குத் தான். இது ஒரு நீண்ட கதையின் இரண்டாம் பாகம் என அப்போது அறிந்திலோம். ‘மாடினி’ (matinee) எனும் மதிய நேரத்து நிகழ்ச்சியில் முதல் பாகம் நடிக்கப்பட்டு விட்டது. சென்று கலையரங்கில் அமர்ந்த பின் தான் இது புரிந்தது.
மிக அழகாக வடிவமைக்கப்பட்ட கலையரங்கு. மூன்று முறை தீக்கிரையாகி, உலகப்போரில் குண்டு வீச்சினால் பலமான சேதமுற்று பின் திரும்பத் திரும்பக் கட்டப்பட்ட கலையரங்கு! தற்போது காணும் கலையரங்கு, கி. பி. 600-800 ஆண்டுகளிலும், 16-ம் நூற்றாண்டிலும் இருந்த கட்டிடக்கலை முறைப்படி கட்டப்பட்டுள்ளதாம். உட்புறம் பாரம்பரிய முறையில் மரத்தினால் கட்டப்பட்டுப் பார்க்க மிக அழகாக இருந்த இக்கலையரங்கு வெளிப்புறம் ஒரு அரண்மனை போன்ற அமைப்பைக் கொண்டிருந்தது.
ஃபீனிக்ஸ் (Phoenix) எனும் ஒரு பறவை எத்தனை முறை இறந்தாலும் மீண்டும் மீண்டும் உயிர்த்து வருமாம். இந்தக் கலையரங்கும் திரும்பத் திரும்பச் சேதமடைந்து ஐந்து முறை (1889; 1911; 1923; 1951; தற்போது 2013) புதுப்பித்துக் கட்டப்பட்டதால் ஃபீனிக்ஸ் பறவையின் சின்னத்தினை எங்கும் பார்க்கலாம்!
இடைவேளையில் வந்து கண்டு களிக்க அழகான தாழ்வாரங்களையும், பாரம்பரிய உணவுப் பொருட்கள், மற்றும் கலைப் பொருட்களையும் விற்பனை செய்யும் பலவிதமான கடைகளையும் தன்னுள் அடக்கிக் கொண்டுள்ள கலையரங்கு இது தான். காணும் போதே அதன் அழகும் பிரம்மாண்டமும் பிரமிக்க வைக்கின்றன. டோக்கியோவின் நடுப்பகுதியில் முக்கியமான கடைத்தெரு எனப்படும் ‘கின்ஸா’ (Ginza) எனும் இடத்தில் இது அமைந்துள்ளது.
எங்கள் இருப்பிடங்களில் வந்தமர்ந்து கொண்டு கட்டிடத்தின் உட்புற அமைப்பை வியந்து கொண்டிருந்தோம். உற்சாகமாக மக்கள் வந்து தங்கள் இருக்கைகளில் அமர்ந்து கொண்டவாறு இருந்தனர். பரபரப்பான ஒரு நாளின் கடைசி அம்சமாக தங்களுக்குப் பிடித்த ஒரு கலைநிகழ்ச்சியைக் காணப் போகும் உற்சாகம் எல்லாரிடத்திலும் காணப்பட்டது. நிகழ்ச்சி துவங்கிற்று. முன்பே கூறியது போல இரண்டாம் பாகமானதால் கதை புரிவதற்காக, அவர்களிடமிருந்து ஒரு மொழிபெயர்ப்புக் கருவியை வாடகைக்கு வாங்கியிருந்தோம். அது கலைஞர்கள் பேசும் ஒவ்வொரு வரியையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து நமக்கு கையடக்கமான ஒரு திரையில் காட்டும்! அதன் உதவியால், கதை ஒருவாறாகப் புரிந்தது!
‘கபுகி’ என்பது கிட்டத்தட்ட நமது இந்திய கதகளியைப் போன்றே நீண்ட நேரம் செலவழித்து முகப்பூச்சும் அலங்காரங்களும் செய்து கொண்ட கலைஞர்கள் நிகழ்த்தும் நிகழ்ச்சியாகும். ஆகவே நடிகர்களைப் பார்த்ததும் கதகளியும் அது சம்பந்தமான ஒற்றுமைகளும் தான் நினைவிற்கு வந்தன. எல்லாப் பாரம்பரிய நாட்டிய நாடகங்களும் விருப்பமுடன் நடத்தும் ஒரு ராஜா – ராணி கதை தான் இங்கும் சில திருப்பங்களுடன் நடிக்கப்பட்டது. இதில் ஜப்பானியர்களின் கலாச்சாரமும், இசையும் பின்னிப் பிணைந்து வெளிப்படுகின்றன. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் போல, மிகவும் சிரமப்பட்டு கதையைப் புரிந்து கொண்டு இந்த நிகழ்ச்சியை ரசித்தோம்.
பின்பு, இந்தியாவிற்கும் ஜப்பானிற்கும் உள்ள நான்கு மணி நேர வித்தியாசத்தினால், சிறிது களைப்புற்றதனால், உன்னிப்பாக ரசிக்க இயலவில்லை! ஆனால் என்ன?
நமக்குக் கண்டு ரசிப்பதற்கு மற்ற ரசிகர்கள் இருந்தார்களே!
‘ரசிகர்களை ரசிப்பது’ ஒரு உன்னதமான அனுபவம்!
கபுகி நிகழ்ச்சியை எவ்வாறு ரசிப்பது என்று நமக்குக் கொடுக்கப்படும் நிகழ்ச்சித் தாளிலேயே அச்சிட்டிருக்கிறார்கள்! மதிய, மாலை இரு நிகழ்ச்சிகளையும், ஒரு தொடராகக் கண்டு களிக்க எண்ணியிருப்பவர்கள், தங்களது உணவைக் கையில் எடுத்துக் கொண்டு வரலாம். இடைவேளையின் போது தங்கள் இருக்கையிலேயே அமர்ந்து உண்ணலாம். சிந்தாமல், சிதறாமல்- பின் என்ன? இத்தனை கலையழகு பொருந்திய, தங்கள் நாட்டின் பொக்கிஷமான கலையரங்கை யாராவது அசுத்தம் செய்வார்களா? ஜப்பானியர்களின் அமைதியும், அடக்கமும், தாழ்மையும், பண்பும் நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகின்றன. பின்பு வெளியில் உலாவி, நீண்ட தாழ்வாரங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் புகைப்படங்கள், சித்திரங்கள் இவற்றைக் கண்டு களிக்கலாம். ஒவ்வொரு நிகழ்ச்சியும் நான்கு மணி நேர நீளம்! ஆகவே இடைவேளையின் போது எல்லாரும் தங்கள் உணவை உண்பதைக் கண்டோம். எங்கள் கையிலும் கொஞ்சம் உணவுப்பொருட்கள் இருந்ததால் உண்டோம்.
இத்தனை கூறி விட்டுப் பின் கலை நிகழ்ச்சியைப் பற்றிக் கூறாமல் விடலாமா?
நீட்டி, முழக்கி, அவசரமேயில்லாமல் பாடப்படும் பாடல்கள் போன்ற வசனங்கள். தொடர் வசனங்கள் கிடையாது. நாட்டிய அசைவுகளிலேயே புரிந்து கொள்ள வேண்டியவை மிக அதிகம். கபுகியை ரசிப்பதும் ஒரு தனிக்கலை. அதற்கும் பயிற்சி தேவை!
உதாரணமாக, ஒரு காட்சி: கதாநாயகியுடன் தப்பித்துச் சென்றுவிட்டான் கதாநாயகன்; அவனுடைய தந்தை, கதாநாயகியின் தாய், தந்தை இவர்கள் மூவரும் சந்தித்துப் பேசுவார்கள். தங்கள் குழந்தைகளின் நன்மையையும் நலனையும் எண்ணிப் பேசி அங்கலாய்ப்பார்கள். பேச்சின் இடையே அனைவரும் ஒரு விரக்திச் சிரிப்பை உதிர்ப்பதாக வரும் பாருங்கள்!! நடிகர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பாணியில் சிரிப்பை வெவ்வேறு விதங்களில் காட்டுவார்கள். இது இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் நீடிக்கும். முயன்று பாருங்களேன், பார்வையாளர்கள் முன்பு தொடர்ந்து இரண்டு நிமிடங்களுக்கு இடைவிடாது நகைப்பதென்பது (அதுவும் கவித்துவமாக) சாமானியமானதா? நடிகர்கள் ஒவ்வொருவரும் தங்கள் நகைப்புத் தொடரை விதம் விதமாகச் செய்து முடித்ததும் பார்வையாளர்கள் எழுப்பிய குதூகல வாழ்த்தொலிகள் எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தின!
இதற்கும் நிகழ்ச்சித் தாளில் விளக்கம் கொடுத்துள்ளனர்! “நிகழ்ச்சியின் இடையிடையே தாங்கள் பார்வையாளர்களிடமிருந்து எழும் வாழ்த்துக் கூச்சலைச் செவிமடுப்பீர்கள். இது தொன்று தொட்டு இருந்து வரும் ‘கபுகி’க்கே உரிய ஒரு தனி வழக்கம். நடிகர்களை வாழ்த்தி, உற்சாகப்படுத்த, அவர்கள் ஏற்று நடிக்கும் பாத்திரங்களின் பெயர்களைக் கூறிக் கூவுவது பார்வையாளர்களின் வழக்கம். இது ஒரு அதீதமான சூழ்நிலையை உருவாக்கி, நடிகர்களையும், நிகழ்ச்சியைக் காண்போரையும் பரவசப்படுத்துகிறது.”
மிகையேயில்லை. வாழ்த்தொலிகள், முன்வரிசை, பின் வரிசை என எல்லா திக்கிலிருந்தும் எழுந்த வண்ணமிருந்தன. பார்வையாளர்களின் உற்சாகம் கரைபுரண்டோடியது. பார்த்த எங்களுக்கு மகிழ்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது. அற்புதமான ரசனை. ஆகவே கபுகியை ரசிப்பதும் ஒரு தனிக்கலை என விளங்கியது.
இரண்டு மணி நேரம் கபுகி நாட்டிய நாடகத்தையும் அதனை ரசிகர்கள் ரசிக்கும் விதத்தினையும் ரசித்து விட்டு, வெளியே வந்தோம். இன்னும் இரண்டு மணி நேர நாடகம் காண்பதற்கு பாக்கி இருந்தது. வெளியே ஒரு இளைஞர் குழு (வேற்று நாட்டு மாணவர்கள் போலும்!), ‘உலகப்புகழ் பெற்ற கபுகிஸா தியேட்டரில் சிறிது நேரம் உட்கார்ந்து கண்டு களிக்கலாமே, அதற்கேற்ற குறைந்த விலை டிக்கட்டுகள் உள்ளனவா,’ என்று விசாரித்துக் கொண்டிருந்தனர். மீதி இருந்த எங்கள் டிக்கட்டுகளை அவர்களிடம் கொடுத்து விட்டு வந்தோம்.
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!!!
(தொடரும்)
நன்றி: தாரகை மின்னிதழ்
_