தவம் – தீபா மகேஷ்

ஒவ்வொரு தந்தையும் தன் மகனுக்கு தவறாமல் கற்றுக் கொடுக்க வேண்டிய வாழ்க்கை  பாடங்கள்..!

சங்கரனுக்கு சந்தோஷத்தில் தலை கால் புரியவில்லை.

“சித்தப்பா, நானும் அம்மாவும் குழந்தைகளைக் கூட்டிண்டு அடுத்த மாசம் வரோம். நம்ம வீட்டிலதான் ரெண்டு வாரம் தங்கி , கோவிலுக்கு எல்லாம் போகப் போறோம்.” நளினா ஃபோனில் சந்தோஷம் பொங்க பேசினாள்.

“இந்த வருஷம்  கண்டிப்பாக ஊருக்கு வரணும். வேண்டுதல் எல்லாம் இருக்கு”, என்று சொல்லிக் கொண்டுதான் இருந்தாள் . ஆனால் இன்று சட்டென்று டிஸைட் பண்ணி, டிக்கெட்டும் புக் பண்ணி ‘வாட்ஸ் அப்’பில் அனுப்பி விட்டாள்.

எத்தனை வருடங்கள் ஆயிற்று அவளைப் பார்த்து?  கல்யாணம் முடிந்தவுடன் கலிஃபோர்னியா போனவள். அப்புறம் அவளுடைய டெலிவரிக்காக மன்னிதான் அமெரிக்கா போனாள். அப்போது அவளுக்குப் பிடித்த லட்டு, மைசூர்பாக் எல்லாம் செய்து செய்து கொடுத்தது இப்போதும் நன்றாக ஞாபகம் இருக்கிறது.

முதல் பெண் அனன்யா பிறந்த பிறகு அவளுக்குத் துணையாக மன்னி அங்கேயே தங்க வேண்டியதாயிற்று.  அப்புறம், அனிருத் பிறந்து இப்போது அவனுக்கும் மூன்று வயதாக போகிறது. நாட்கள்தான் எத்தனை வேகமாக ஓடி விடுகின்றன.

இத்தனை வருடங்களில், வாட்ஸ் அப்பில் பேசுவதும், வீடியோ காலில் பார்ப்பதோடு  சரி. லாக்டௌன் சமயத்தில் அடிக்கடி வீடியோ கால் பண்ணி பேசுவார்கள். அதுவும் சில சமயங்களில் குட்டிப் பையன் தானே ஃபோன் பண்ணி, “தாத்தா, நீ என்ன பண்ற, என்ன சாப்பிட்ட , எப்போ தூங்குவே, சாந்தி பாட்டி என்ன பண்றா”  என்று கதை அடிக்க ஆரம்பித்து விடுவான்.

அவன் வரப் போகிறான், அவனை நேரில் பார்க்கப் போகிறோம் என்ற சந்தோஷத்தில்  சங்கரனுக்கு அன்று இரவு நெடு நேரம் தூக்கம் வரவில்லை. “ஐ.பி.எல் கௌண்ட்டௌன்” போல மனம் நாட்களை எண்ண ஆரம்பித்தது. சோர்வாகவோ, சோகமாகவோ இருக்கும் போது, தூக்கம் ஒரு மருந்து போல தேவைப்படுகிறது. ஆனால், மனம் சந்தோஷமாக இருக்கும் போது, அதற்கு தூக்கம் தேவைப் படுவதில்லை. சங்கரனுக்கு அன்று அப்படிதான் இருந்தது.

சங்கரா, அவன் சாப்பாடு விஷயத்துல அப்படியே உங்கண்ணாதான்டா, ஸ்வீட் இல்லாம சாப்பிட மாட்டான். எந்த பண்டிகை ஆனாலும், ஃபர்ஸ்ட் வந்து என்ன ஸ்வீட் பண்ணுவேன்னு கேட்டுட்டு போவான்.  ஸ்வீட் பண்ணினதும் அவனுக்குத் தெரியாம கொஞ்சம் ஒளிச்சு வைப்போம். இல்லைனா, யாருக்கும் கொடுக்காம அவனே காலி பண்ணிடுவான்.

மன்னி குழந்தையைப் பற்றி சொல்லியது எல்லாம் மனதில் விரிந்து, ராமு அண்ணாவைப் பற்றிய நினைவலைகளை எழுப்பின.

சங்கரனுக்கு எல்லாமே ராமு அண்ணா தான். இருவருக்கும் வயசு வித்தியாசம் அதிகம். தவிர, சிறு வயதிலேயே, அப்பாவும், அம்மாவும் ஒருவர் பின் ஒருவராக போய் சேர்ந்து விட்டதால், ராமு அண்ணாதான் அந்த ஸ்தானத்தையும் எடுத்துக் கொண்டார். மன்னியும் தாயில்லாத பிள்ளையிடம் அளவற்ற அன்பையும் பாசத்தையும் பொழிந்தாள்.

ராமு அண்ணா என்கிற ராமகிருஷ்ணன் மிகச் சிறந்த சமையல் கலைஞர். நள பாகம். கும்பகோணம் மட்டும் அல்லாமல், திருவாரூர், மன்னார்குடி, தஞ்சாவூர் என்று மற்ற ஊர்களிலும் அவர் சமையல் பிரசித்தம். கல்யாண சமையல்  ராமு அண்ணாதான் பண்ணனும் என்று கல்யாண தேதி மாற்றி வைத்த குடும்பங்கள் உண்டு. அவர் ஒரு ஸ்வீட் ஸ்பெஷலிஸ்ட். லட்டுவும், பாதுஷாவும், ஜாங்கிரியும் அவர் கை பட்டு வரும் போது, ஒரு தனி சுவையோடு இருக்கும்

ராமு அண்ணா எவ்வளவோ ஸ்வீட் செய்தாலும் அவருக்கு மிகவும் பிடித்தது சர்க்கரை பொங்கல் தான். அதனாலேயே, சங்கரனுக்கும் அது ரொம்பப் பிடிக்கும்.

ஆடி வெள்ளி, தை வெள்ளி, நவராத்திரி, ஊர்த் திருவிழா, பிறந்த நாள், பண்டிகை  என்று ஏதாவது ஒரு காரணம் காட்டி வாரம் ஒரு முறை சர்க்கரை பொங்கல் செய்து விடுவார். அடிக்கடி செய்கிறோம் என்பதற்காக ஏனோ தானோ என்றெல்லாம் செய்ய மாட்டார். உண்மையான பக்தன் தன் இஷ்ட தெய்வத்திற்க்குச் செய்யும் பூஜை போல, ரசித்து,ரசித்து செய்வார்.

பயத்தம் பருப்பை முதலில் வறுத்து, பிறகு அரிசியுடன் சேர்த்துக் களைந்து, வேக வைப்பார். அது வேகும் நேரத்தில், ஒரு வாணலியில், நெய்யை ஊற்றி (கொட்டி என்று கூட சொல்லலாம்) முந்திரியை இளம் சிவப்பாக வறுத்து, திராட்சையும் சேர்த்து, எடுத்து வைப்பார். வெல்லம் நன்றாகக் கொதித்தவுடன், வேக வைத்த அரிசியையும், பருப்பையும் கலந்து, இன்னும் கொஞ்சம் நெய் ஊற்றி நன்றாக கொதிக்க விடுவார். அந்த வாசனை வீடு முழுவதும் பரவும் போது, பொடி செய்த ஏலக்காயையும் , முந்திரி திராட்சையும் அதன் மேல் தூவுவார்.

செய்து முடித்தவுடன் சுடச்சுட  கொஞ்சம் சக்கரைப் பொங்கலை கிண்ணத்தில் எடுத்து, சமையல் அறையில் இருக்கும், அன்னபூரணி படத்தின் முன் வைத்து, நைவேத்யம் செய்வார். உடனே கொஞ்சம் வாயில் போட்டுப் பார்த்து “ம்ம், ஸ்வீட் சரியா இருக்கு. சங்கரா , ஆ காட்டு,” என்று இவன் வாயிலும் கொஞ்சம் போடுவார். உருகிய நெய்யின் வாசனையும், ஏலக்காயின் மணமும் சேர்ந்து, அவர் கொடுக்கும் அந்த சக்கரைப் பொங்கல் ஒரு அசாத்தியமான சுவையோடு இருக்கும்.

தேவாமிருதம் என்று ஒன்று நிஜமாகவே இருந்தால், அது ராமு அண்ணா செய்யும் சர்க்கரை பொங்கல் போலதான் இருக்கும் என்று சங்கரனுக்குத் தோன்றும். வீட்டில் என்ன  விசேஷமானாலும் , இலை போட்டவுடன், அதில் முதலில் இந்த தேவாமிருதம்தான் பரிமாறப்படும்.

 

எப்படி இவர் செய்யும் சக்கரைப் பொங்கல் மட்டும் இவ்வளவு சுவையோடு இருக்கிறது ? சங்கரனுக்கு அது ஒரு புரியாத புதிராகவே இருந்தது. ஒரு நாள், கேட்டே விட்டான்.

ராமு அண்ணா, நேத்து சேகர்க்குப் பிறந்தநாள்ன்னு, அவன் வீட்டுக்குப் போயிருந்தேனா, அவங்க அம்மா, கொஞ்சம் சக்கரைப் பொங்கல் குடுத்தாங்க. ஆனா, அது நம்ம பண்ற மாதிரி இல்ல. நீங்க பண்றது மட்டும் எப்படி அண்ணா இவ்ளோ  நல்லா  இருக்கு?

அதுவா, நான் எப்போ சமைக்க ஆரம்பிக்கற போதும், ஒரு மந்திரம் போடுவேன் – என்று சொல்லிக் கண் சிமிட்டினார்.

சங்கரன் அவரையே  கண் கொட்டாமல் பார்த்தான்.

ஆமாம்டா, நான் இந்த அடுப்படில, சூட்டுல  நிந்து  சமைக்கறது கல்யாணத்துக்கோ, விசேஷத்துக்கோ இல்லை. அந்த அன்னபூரணிக்கு. புராணத்துல எல்லாம் ரிஷிகள் தவம் பண்ணினான்னு நீ கதை கேட்டுருப்பியே , அது மாதிரி இந்த சமையல் பண்றது எனக்கு ஒரு “தவம்”. உடனே பலன் கொடுக்கற தவம்.

அந்த சிறு வயதில் அவர் சொன்னது கொஞ்சம் புரிந்து, நிறைய புரியாமல் இருந்தது.

அப்போ, நான் என்ன தவம் பண்ணனும் அண்ணா?

பெரியவன் ஆக ஆக நீயே தெரிஞ்சுப்பே, புரிஞ்சுப்பே.

ஆனால் அவன்  வாழ்க்கையைப் புரிந்து கொள்ளும் முன்பே, அவர் அவசர அவசரமாக போய் சேர்ந்து விட்டார். திடீரென்று வந்த ஒரு விஷ ஜுரம் ஒரே வாரத்தில் அவர் உயிரை கொண்டு சென்று விட்டது.

நடுக்கடலில் அமைதியாய் போய்க் கொண்டிருந்த படகை, பெரும் புயல் வந்து புரட்டிப் போட்டது போல ஆனது வாழ்க்கை. முதலில் சுதாரித்துக் கொண்டது மன்னி தான்.

சங்கரா, நான் எங்கண்ணாவோட சென்னை போகலாம்னு இருக்கேன். அவன் ரொம்ப வற்புறுத்திக் கூப்படறான். எனக்கும் ஒரு மாறுதலா இருக்கும். நளினா  ஸ்கூல் ஃபைனல், காலேஜ்னு மேல படிக்கறதுக்கும் வசதியா இருக்கும்.

ஏன் மன்னி, சாந்தி ஏதாவது சொன்னாளா?

சே, சே, அதெல்லாம் இல்லடா. இங்கயே இருந்தா உங்கண்ணா ஞாபகம் ரொம்ப வரும். அங்க ஒரு மாறுதல், அவளோதான்.

அண்ணாவும் இல்லாமல், மன்னியும் கிளம்பி போக, தான் அனாதை ஆகி விட்டது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது சங்கரனுக்கு.

அண்ணா போனதிலிருந்து சக்கரைப் பொங்கல் சாப்பிடுவதை விட்டு விட்டான். வீட்டிலோ , விழாக்களிலோ, ஏன் கோவில் பிரசாதமே ஆனாலும் கூட சர்க்கரைப் பொங்கல் சாப்பிடுவதில்லை.

மன்னி சென்னை போனதிலிருந்து சங்கரனும் , சாந்தியும் அடிக்கடி சென்னை வந்தார்கள். விடுமுறை நாட்கள் என்றால், மன்னியும் நளினாவும் கும்பகோணம் வந்து விடுவார்கள். வெளியூர் டூர், கோயில்கள் என்று எங்கு போனாலும்  சேர்ந்தே போனார்கள்.

நளினா படித்து முடித்தவுடன் கேம்பஸ் இன்டர்வ்யூவில் ஒரு பெரிய ஐ.டி கம்பனியில் வேலை கிடைத்தது. அடுத்த ஓரிரு வருடங்களிலேயே கல்யாணமும் கூடி வந்தது.

சங்கரனும், சாந்தியும்தான் கன்னிகா தானம் செய்து கொடுத்து , கல்யாணத்தை முன்னின்று நடத்தினார்கள்.

பெரும் புயலில் சிக்கிய படகு, தட்டுத் தடுமாறி, பின் தலை நிமிர்ந்து, கடலில் இருந்து கரை நோக்கிய தன் பயணத்தை தொடர்ந்தது. வாழ்க்கை மெல்ல மெல்ல அண்ணா இல்லாத  இயல்பு நிலையை நோக்கி நகர்ந்தது.

எவ்வளவு பெரிய துன்பம் ஆனாலும், அன்பும், காலமும், அதை ஆற்றி விடுகிறது.

பல வருடங்களுக்குப் பிறகு வீடு கலகலப்பாக இருப்பது போல தோன்றியது சங்கரனுக்கு. குழந்தைகள் இருவரும் வந்த ஓரிரு தினங்களிலேயே அவர்களோடு  ஒட்டிக் கொண்டு விட்டார்கள்.

நளினாவுக்கு பிடித்த மோர்குழம்பு, பருப்பு உசிலி, வாழைப்பூ வடை , குழந்தைகளுக்கு முறுக்கு, மைசூர் பாக் என்று தினம் ஏதாவது ஒரு ஸ்பெஷல் ஐட்டம் செய்து அசத்திக் கொண்டு இருந்தாள் சாந்தி. அனன்யாவும் அனிருத்தும் கூடத்து ஊஞ்சலில் ‘ஹை, பிக் ஸ்விங்’ என்று சதா ஆடினார்கள். குட்டிப் பையன் கொஞ்சிப் பேசி எல்லோரையும் மயக்கினான்.

மன்னியிடம் முன்பு போல் சந்தோஷத்தையும் உற்சாகத்தையும் பார்க்க முடிந்தது. அவள் உலகம் அந்த இரு குழந்தைகளோடு பின்னிப் பிணைந்திருந்தது.

தினம் காலையில் கோவில், மதியம் சாப்பாடு, குட்டித் தூக்கம், சாயங்காலம் டீயோடு கொஞ்சம் ஸ்நாக்ஸ் , மறுபடி கோவில், என்று பிசியாக நாட்கள் போனதே தெரியவில்லை. இதற்கு நடுவில் ஷாப்பிங் வேறு.

அன்று பெண்கள் எல்லாரும் வெளியில் சென்று விட, சங்கரனும் அனிருத்தும் மட்டும் வீட்டில் இருந்தார்கள்.

 

“சித்தப்பா, அனிருத் நல்லா தூங்கறான். அவன் எழுந்தப்புறம் கொஞ்சம் பால் மட்டும் குடுங்கோ. நான் அதுக்குள்ள வந்துடுவேன்,” என்று சொல்லிவிட்டு நளினா வெளியில் கிளம்பினாள்.

ஆனால் அவள் போன உடனேயே குட்டிப் பையன் எழுந்து விட்டான்.

எழுந்து வந்தவன் கொஞ்சமும் அழாமல் ஓடி வந்து சங்கரனைக் கட்டிக் கொண்டான். சங்கரனின்  உள்ளம் நெகிழ்ந்தது.  கள்ளமில்லாத, தூய்மையான அன்பைப் போல மனதை நெகிழ வைக்கக் கூடியது இந்த உலகத்தில் உண்டா என்ன?

அம்மா அக்கால்லாம் எங்க ?

கடைக்குப் போய் இருக்காடா செல்லம்.

சாந்தி பாட்டியும் போய் இருக்காளா? ஆமாம்டா கண்ணா.

நீ ஏன் போகலை? நான் என் செல்லக் குட்டியோட இருக்கணும்னு போகல. குழந்தை இன்னும் இறுக்கமாக கட்டிக் கொண்டான்.

அம்மா உன்னை பால் குடிக்க சொல்லி இருக்கா, தரட்டுமா ? தா..

பாலை சூடாக்கி கொஞ்சம் சர்க்கரையும், பாதாம் பவுடரும் சேர்த்துக் கொடுத்தார். அடம் பண்ணாமல் குடித்தான்.

கொஞ்ச நேரம் விளையாடியவன் , மறுபடியும் வந்து, நீ எனக்கு ஏதாவது ஸ்வீட் பண்ணித்தரியா ? என்று கொஞ்சும் குரலில் கேட்டான்.

எனக்கு எதுவும் பண்ணத் தெரியாதேடா செல்லம் என்று சொல்ல நினைத்தவன், சட்டென்று,” சக்கரை பொங்கல் பண்ணித் தரட்டுமா, உனக்குப் பிடிக்குமா?” என்று கேட்டார்.

“ரொம்ப பிடிக்கும்” என்று சிரித்தான்.

கிச்சனில் நுழைந்தவர், மனதுக்குள் அண்ணா கற்றுக் கொடுத்த “மந்திரத்தை” சொல்லிக் கொண்டார்.

பயத்தம் பருப்பு வறுத்து, அரிசியோடு சேர்த்து குக்கரில் வேக வைத்தார். ஒரு வாணலியில் வெல்லத்தை கொதிக்க விட்டார். இன்னொரு பக்கம், நெய்யில் முந்திரி திராட்சையை வறுத்து, ஏலக்காயைப் பொடி செய்தார்.

நன்றாக வெந்து குழைந்த அரிசி பருப்பு கலவையில் வெல்லதை போட்டு கிளறி, கொதிக்க விட்டு, வறுத்த முந்திரி திராட்சையும் போட்டு கிளறினார். எல்லாம் சேர்த்து ஒரு கொதி வந்ததும், ஒரு கிண்ணத்தில் வைத்து, சுவாமிக்கு நைவேத்யம் செய்தார்.

பின்பு அதை ஒரு தட்டில் போட்டு, ஆற வைத்து, கொஞ்சம் கொஞ்சமாக ஊதி அவனுக்கு ஊட்டி விட்டார்.

நல்லா இருக்காடா கண்ணா

சூப்பரா இருக்கு தாத்தா .

நீ சாப்படலயா?

இல்லடா கண்ணா

“கொஞ்சம் சாப்பிடேன் , ரொம்ப டேஸ்டியா இருக்கு” என்று சொன்னவன், அவன் பிஞ்சு கரங்களால் தட்டிலிருந்து கொஞ்சம் சக்கரை பொங்கல் எடுத்து, “ஆ காட்டு” என்று சங்கரனுக்கு ஊட்டி விட்டான். சங்கரன் அறியாமலேயே, அவன் கண்களின் மதகு உடைந்து கண்ணீர் வழிந்தோடியது.

அவனுடைய தவமும் பூரணம் அடைந்து விட்டது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.