பதினான்கு வயது முடியும் தருணத்தில் சைத்ரையை எனக்கு அறிமுகம் செய்தது பேருந்தில் பரிச்சயமான ஒரு திருநங்கை. இந்த திருநங்கை பக்கத்தில் உட்கார மறுத்து கேலியாகப் பேசிய மற்றப் பயணிகளைக் கடுமையாகக் கண்டித்தேன். அப்படி அறிமுகம் ஆகியிருந்தோம்.
தனித்துவம் பெற்ற திருநங்கை மோனா, சைத்ரையை அழைத்து வந்த காரணத்தைக் கேட்டு வியந்தேன். சைத்ரை பிரபல தொழில் அதிபரான அசோக்கின் மகன். எட்டு வருடங்களாக அவனை மோனாவின் இருப்பிடத்தில் அசோக் விட்டுப் போய்விடுவானாம். காரணம் கேட்டால், அசோக் பயமுறுத்துவானாம். சைத்ரையின் நல்ல சுபாவத்தினால் மோனா, மற்ற திருநங்கைகள் அவனுக்கு உணவு அளித்து அசோக் வரும்வரை அன்பாகப் பார்த்துக் கொள்வார்களாம். அசோக் சைத்ரையை தகாத வார்த்தைகளைச் சொல்லி, அடித்து, நீயும் திருநங்கை என ஏளனமாகக் கூறிக் கூட்டிச் செல்வானாம். சாராயம் வாடை அடிப்பதாலும் மறு வார்த்தை பேசினால் சைத்ரையை மேலும் அடிப்பான் என்பதாலும் மோனா, மற்றவர்கள் அமைதி காத்தார்கள்.
இப்படி நடப்பதை எவ்வாறு கையாளுவது என்று திருநங்கைகளுக்குப் புரியவில்லை. அசோக் இருக்கையில் சைத்ரை வித்தியாசமாக நடந்து கொள்வதாலும் கடந்த ஏழு மாதமாக சைத்ரையின் உடல் காயங்கள், முகபாவங்கள், உடல்மொழி குழப்பத்தை ஏற்படுத்தியதாலும் என்னிடம் அழைத்து வந்தார்கள். சைத்ரையின் உடைகள் ஆண்மகன் அணிவது போல இல்லை.
சைத்ரையை தனிமையில் பார்ப்பேன் என அறிந்து வெளியேறியவர்களை, “ஏய்” எனக் குரல் கொடுத்தான் சைத்ரை. பேசு என உடல்மொழியில் சொல்லிவிட்டு திருநங்கைகள் சென்றார்கள். அழைத்தவிதம் அவர்கள் உறவின் நெருக்கத்தைக் காட்டியது.
நான் ஸைக்காட்ரிக் ஸோஷியல் வர்கர், சிகிச்சை உரையாடல் மையமாக இருக்கும், பகிர்ந்து கொள்வதின் ரகசியம் காப்பேன் என்பதையெல்லாம் சைத்ரைக்குத் தெரிவித்தேன். தன்னைப் பற்றி விவரிக்க ஊக்குவித்தேன்.
சைத்ரை, பெற்றோருக்கு முதல் மகன். பரம்பரைப் பணக்கார குடும்பம். வசதிகள் அந்தஸ்து இத்யாதிகள். அசோக் க்ளப் உறுப்பினர், தொழில் மற்றும் மேல்தட்டு சமூகத்தில் பிரபலமானவன்.
பலர் அசோக்கைச் சந்திக்க வருவதுண்டு. அவர்களுக்கு அறிமுகம் செய்யும் போது சைத்ரை ஏதேனும் தவறு செய்து விட்டால் அசோக் அங்கேயே அவனை அடிப்பான். மீண்டும் மீண்டும் ஆனதால் அப்பாவைக் கண்டால் பயமானது. அசோக்கிற்குப் பிடித்த மாதிரி இயங்க முயல்வதைச் சொல்லும்போது சைத்ரையின் கண்கள் ஆறாக ஓடியது.
தழுதழுத்த குரலில் சைத்ரை சொன்னான், பிறந்ததிலிருந்தே பிடிக்கவில்லை என. பெண் குழந்தைக்கு ஆசைப்பட்டார்கள், பிறந்ததோ சைத்ரை. இதனால் சைத்ரையைப் பெண் குழந்தை போல அலங்காரித்து, பெண் பெயரால் அழைப்பது. சைத்ரையின் பெண் பாவனைகளுக்கு அசோக் சிரிப்பான். அதற்காகவே பெண் போல இருக்கப் பார்ப்பான் சைத்ரை. வளர, வளர அம்மாவை நெருங்கினால் தள்ளி விடுவாளாம். “நான் யார்” என்று அல்லோலப் பட்டான்.
நடை பாவனை பெண்ணின் சாயலில் இருக்கும் போதெல்லாம் அசோக் இவனிடம் ஆசையாகப் பேசுவதால் அவ்வாறே செய்தான். எட்டு வயதானதும் இவன் இவ்வாறு செய்வதைத் “திருநங்கை” என அசோக் அழைப்பது சைத்ரைக்குப் புரியவில்லை. குழம்பியதால் திருநங்கைகள் (மோனா) இருப்பிடத்தில் அசோக் இவனை விட்டான். வீட்டில் கடுமையான கண்டிப்பு. அம்மாவும் உதறித் தள்ளி விட்டாள். சைத்ரை குழம்பிப் போனான். பயம் அதிகரித்தது.
எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தாலும் தவறு நேர்ந்து விடும். அசோக்கிற்கு எல்லாவற்றையும் தவறில்லாமல் செய்ய வேண்டும். உடையோ, செயலோ சரியாக இல்லையேல் சைத்ரை மற்றும் மனைவி ஜெயலட்சுமி மீது கையில் கிடைத்ததை அசோக் வீசி எறிவான்.
ஜெயலட்சுமி சட்டப் பட்டதாரி, இல்லத்தரசியாக இருந்தாள். அசோக்கை ஒட்டியே இருப்பாள். கணவருக்குப் பிடித்ததையே செய்வாள். மேஜையைச் சரியாகத் துடைக்கா விட்டாலோ நாற்காலிகள் வரிசையாக இல்லை என்றாலோ அசோக் அவளை அடிப்பதைப் பார்த்திருக்கிறான்.
பெற்றோர் இவ்வாறு. ஆதரவான மது பெரியப்பாவை நெருங்க விட மாட்டார்கள் என வருத்தத்துடன் சொன்னான்.
மேற்கொண்டு ஸெஷன்கள் தேவை என்று மோனாவிடம் பகிர்ந்தேன். நல்லெண்ணத்தில் மோனா அழைத்து வந்த போதிலும் சைத்ரையின் இன்னல்கள், வயதினால் பெற்றோர் வரவேண்டியதை விவரித்தேன். அசோக் கோபம் கேரண்டீ. சைத்ரை நலனுக்காகச் செய்வது நிச்சயம் என்றார் மோனா. இந்த வரிகள், சொன்ன விதத்தில் சைத்ரை மனம் நெகிழ்ந்தான். இதுவல்ல பந்தம்!
மறுமுறை மோனா அழைத்து வந்த போது விவரத்தைக் கேட்டு அறிந்தேன். பெற்றோர் வேலை இருப்பதாகவும் நேரம் கிடைக்கும் போது வருவதாகதவும் தெரிவித்தார்கள். ஸெஷனைத் தொடர்ந்தேன்.
சைத்ரை பள்ளியில் தன் மதிப்பெண்கள் சரிந்தாலும் அதைப்பற்றிக் கவலைப் படாததைப் பற்றிப் பேசத் தொடங்கினான். படிக்கும் பள்ளிக்கூடத்திற்கு அப்பா நன்கொடை தருவதால் இவனுக்குச் சலுகைகள். இதனால் வகுப்பில் நண்பர்கள் என்று யாருமில்லை. இது மனதை வாட்டியது.
இது கேள்விகள் எழுப்பும் பருவம், உறவு, வளர்ப்பு பற்றியும். சைத்ரைக்கு கேள்விக்குறிகள் மட்டுமே சூழ்ந்தது. அதுவும் அவனைப் பெண் போலப் பாவித்து ஆமோதித்து, பிறகு அதை நிராகரிப்பதின் விளைவு, குழப்பத்தை ஏற்படுத்தியது.
வகுப்பு அனுபவத்தை எடுத்துக் கொண்டு, ஸெஷனில் அங்கு நடப்பதை ஒளிச்சித்திரம் போல எழுதிப் பேசினோம். ஒவ்வொரு ஸெஷனிலும் சைத்ரைக்கு தன்னுடைய தன்மையைப் பற்றி புதிதாக ஒன்றை அறிய முடிந்தது. ஸெஷனின் கடைசி பத்து நிமிடங்களில் அழைத்து வந்த திருநங்கையோடு இந்தக் கண்டறிதலைப் பகிர வேண்டும். பரிச்சயமானவர்களாக இருப்பதால் சைத்ரையால் செய்ய முடிந்தது. இப்படி வெளிப்படையாகத் திறனைப் பற்றிக் கூறியதில், மனதில் நின்று வேலை செய்யத் துவங்கியது.
வகுப்பில், பெற்றோர் இல்லாததால் இயல்பான நிலையைப் பார்க்க முடிந்தது என்றதை உணர்ந்தான். பெண் போன்ற வேஷம் தேவைப்படவில்லை. சுதந்திரத்தை உணர்ந்தான். தன்மேல் கடுகு அளவு பாசம் பிறக்க ஆரம்பித்தது!
வேரொரு ஆதங்கம், மதிப்பெண் ஏதுவாயிருந்தாலும் தாய் எதுவும் சொல்வதில்லை, தந்தையோ அடிப்பது நிச்சயம். நல்ல மதிப்பெண் வாங்க மனமில்லை என்றான். மேலும் உரையாடினோம்.
படிக்கும் போது தன்னுள் நிலவும் நிலையைக் கண்காணித்துக் குறித்துக் கொண்டு, வரைபடம் செய்தான். அதைப் பற்றி ஆலோசிக்க, படிக்கவே பிடிக்காததற்குக் காரணிகள் தென்பட்டது. படிக்கும் போது, சைத்ரையை “இவன் மட்டும் பெண்ணா இருந்திருந்தா…” என்று பெற்றோர் குத்தலாகப் பேசுவார்கள். சைத்ரைக்கு வெட்கத்துடன் அழுகை வரும். இப்போது புரிந்து கொண்டான், அதனாலேயே படிப்பின் மீது வெறுப்பு வர, மதிப்பெண் சரிந்தது என.
மதிப்பெண்கள் ஆண்-பெண் தோரணையில் மாட்டிச் சிக்கியது. இதைச் சரிப்படுத்த சைத்ரையைத் தனக்குப் பிடித்தவை, முடிந்தவை, செய்ய முடியாதவற்றைப் பட்டியலிடச் சொன்னேன். முடியாதவை, பிடிக்காதவற்றை ஒவ்வொன்றாக எடுத்துக்கொண்டு, அவற்றைச் செய்வதற்கு வேண்டியவை என்னென்ன என்பதைப் பற்றி உரையாடினோம். சைத்ரை சந்தேகங்களைப் பகிர்வதில் ஆரம்பமானது. தான் பெண் என்றே நம்புவதாகக் கூறினான்.
மூன்று மாதங்கள் சென்றது. விடைகள் தென்பட, தைரியம் எட்டிப்பார்க்க சைத்ரை பெண் போலப் பேசுவது, நடந்து கொள்வது மாறியது. பத்தாவது வகுப்புத் தேர்வும் முடிந்தது.
சைத்ரையிடம் மாறுதல் கவனித்து ஆர்வத்தில் நேரம் கேட்டு அசோக், ஜெயலட்சுமி வந்தார்கள். நாயகன் நடை-உடையில் அசோக். வைரம், பட்டுச் சேலை ஜெயலட்சுமி அணிந்திருந்தாலும் கழுத்தில், கைகளில் காயங்களும், வடுக்களும் தான்.
தங்களது மகன் வந்த விவரத்தைப் பற்றி அசோக் அதிகாரத் தோரணையில் கேட்டான். அவ்வாறு வெளிப்படுத்த மாட்டோம் என்றேன். அதற்கு அவன் சைத்ரை ஆண் பிள்ளையாக இருப்பிலும் பெண்ணின் சாயல் உடையவன் எனக் கூறி, மனைவியைக் கேட்டான். அவளும் தலையை ஆட்டி ஆமோதித்தாள். இவர்களுக்கு மன நலன் பாதிப்பு உள்ளதோ என்பதைச் சார்ந்த கேள்விகள் கேட்டேன். அவர்கள் பதில்கள் எனக்கு “ஆம்” என்று விளக்கம் அளித்தது.
அசோக் சைத்ரையை ஸெஷனுக்குத் தொடர்ந்து அனுப்ப ஒப்புக்கொண்டான். தனக்குப் பொறுப்புகள் உள்ளதாகவும், ஜெயலட்சுமி இல்லத்தரசியாக இருப்பதால் அவள் பொறுப்பில் விடுவதாகவும் சொல்லிக் கிளம்பினான். ஸெஷன் வேளையை ஜெயலட்சுமியுடன் முடிவு செய்து கொண்டோம். சைத்ரை வரவேண்டிய நேரத்தையும் குறித்துக் கொண்டோம்.
ஜெயலட்சுமி பிறந்த வீட்டினரும் பிரபலமான பணக்காரர்கள். அதனால்தான் இங்கு வாழ்க்கைப் பட்டதாகக் கூறினாள். கல்யாணத்துக்கு முன் வழக்கறிஞராக இருந்தாள் பிறகு அசோக் விடச் சொன்னதால் விட்டு விட்டாள். அவளது உலகமே அசோக். என்றும் அவன் சொல்வதை மட்டுமே ஏற்றுக்கொள்வாள். கணவன் ஆண் குழந்தைக்கு ஆசை காட்டக்கூடாது என்றதால் சைத்ரையை உதறி விட்டாள். இரண்டு வயது ஆனதும் தூக்கிக் கொள்வதை, உணவைத் தருவதை நிறுத்தி விட்டு இதற்கெல்லாம் ஒரு பணிப்பெண்ணை நியமித்தாள். கணவனைக் கவர்ந்து கொள்ளவே அவன் முடிவையும் ஏற்றுக்கொண்டாள், பிள்ளையை எளிமையான பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதும், அதிகம் கண்டிப்பதும்.
ஸெஷன்களுக்கு அசோக் தந்த வேறு வேலை குறுக்கிட, விட்டு விட்டு வந்தாள். அசோக் சைத்ரையைப் பற்றிக் கவலைப்படுவதில்லை என்பதாலும்.
ஒரு ஸெஷனைக் கூட தவறவிடாமல் சைத்ரையை மோனா அல்ல அவர்கள் குழுவிலிருந்து ஒருவர் அழைத்து வருவது வழக்கமானது. அவர்களே ஆலோசனைக்குப் பணத்தைத் தருவதும். நான் குறைத்தாலும் அதை ஏற்றுக்கொள்ள மறுத்தன இந்த நல்ல உள்ளங்கள்!
அன்று ஸெஷனில் இரு தகவல்களை சைத்ரை பகிர்ந்தான். ஒன்று பரீட்சையில் நல்ல மதிப்பெண், பெற்றோர் எதுவும் சொல்லவில்லை. கூடவே மேற்கொண்டு படிப்பது அர்த்தமற்றது என்றான். பெற்றோரிடம் துளிகூட ஆசை பாசம் இல்லை என்றான். எதிர்மறை சூழலால் தன் வாழ்வைச் சீரழிப்பதின் விளைவுகளை யோசிக்கச் செய்தேன். இருப்பிடம் மாற்றத்தை விரும்பினான்.
தனக்கென்று உள்ளவர்கள் என்று மோனா குழுவினரைப் பாவித்தான். இவர்கள், மது பெரியப்பா, மிருதுளா பெரியம்மா மீது தனக்கு உள்ள அன்பைக் காட்டத் தெரியவில்லை என்றான். அன்பைத் தெரிவிக்கும் கதை, பாடல் மூலமாகவும் ரோல் ப்ளேயும் செய்து, பயின்று, தெரிவித்தான்.
மது, மிருதுளா வந்தார்கள். சைத்ரையின் இருப்பிடம், பள்ளிக்கூடத்தை மாற்றுவதைப் பற்றிப் பேசி, செயல் படுத்தினோம். அசோக் சைத்ரையின் பொருட்களை வீசி எறிந்தான். பார்த்திருந்த மிருதுளா, சைத்ரையை அணைத்து, இனிமேல் எங்கள் வீட்டில் இரு என்றாள். என்னுடைய மாணவி நடத்தும் போர்டிங் பள்ளியில் சேர்த்தோம். அங்கு என்னுடைய “வாத்ஸல்யா ஃபார் யூமன் என்ரிச்மென்ட்” அமைப்பின் பெயரில் பல்வேறு வர்க்ஷாப் செய்தேன். ஒட்டுமொத்தமாகப் பள்ளி, சக மாணவர், ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இருந்தது. அதனால் சைத்ரைக்குப் புனர் ஜென்மம் போல் ஆனது பிரத்யேகமாகச் சொல்ல வேண்டியவை! இவர்களால் சைத்ரை ஏரோஸ்பேஸ் இன்ஜீனியர் ஆக வெளிநாடு சென்றான். முடித்து நல்ல வேலையும் கிடைத்தது.
என்னுடன் தொடர்பு வைத்திருந்ததால் ஒரு முறை இந்தியா வருகையில் தன் எண்ணத்தைப் பகிர்ந்தான். மிருதுளா வெவ்வேறு மாநிலச் சேலை கட்டிக் கொள்வதைப் பார்த்து ரசித்ததுண்டு. அப்போது ஒரு பொறிதட்டியது, நெசவுத் தொழிலை மேலும் சீர்படுத்த மோனா குழுவைச் செய்ய வைக்கலாம் என்று. அவர்கள் எதையும் எதிர்பார்க்காமல் தன்னை அரவணைப்பு தந்ததற்கு நன்றி சொல்வதாக! மோனாவை அழைத்து விவரித்து, அங்கு உள்ள அனைவரையும் சேர்த்துச் செயல்படுத்தத் தொடங்கினான். இவர்கள் வாழ்வு படிப்படியாக மேம்பட்டதைப் பார்த்துப் பூரித்துப் போனான்.
வாழ்க்கை முன்னேற்றம் நாம் செய்வதில் தான் என்று மோனா அப்போது சொன்னதை நினைவு கொண்டான் சைத்ரை.