இனியவளே என்ற 1998 ஆம் வருடம், வெளிவந்த திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இனிய கவிதாயினி தாமரை தான் இன்றைய கவிஞர்.(கூடுதல் தகவல் – இந்தப் படத்தின் இயக்குனர் யார் தெரியுமா – இன்று அரசியல் களத்தில் பரபரப்பாக இயங்கி வரும் சீமான் தான்)
வழக்கமான பாணியை விட்டு, இலக்கிய உத்திகளுடன், நவீன மொழி அழகை தரும் இந்த கவிஞர் , கோவையை சேர்ந்தவர். GCT கல்லூரியின் பொறியியல் பட்டதாரி – 5 வருடங்கள், உற்பத்தி நிர்வாகத்தில் பணி புரிந்தவர். கவிதைகள், கட்டுரைகள் எழுதியதுடன், பத்திரிகையாசிரியராகவும் பணியாற்றியவர், 23 வயதிலேயே படஉலகில் நுழைந்து, முத்திரை பதித்தவர். (தமிழ்த் திரை உலகின் இரு கவிதாயினிகளும் கொங்கு மண்ணிலிருந்து வந்தவர்கள்)
எத்தனையோ பாடல்கள் – எந்த ஒரு பாடலிலும், ஆங்கில அல்லது பிற மொழி வார்த்தைகள் கலக்காத கவிஞர் என்ற பெருமை கொண்டவர்.
வசீகரா என் நெஞ்சினிக்க .
மல்லிகையே,
இரு விழி உனது,
இவன் யாரோ,
அழகிய அசுரா,
கண்கள் இரண்டால்,
முதல் முதலாக
நான் போகிறேன் மேலே மேலே
உயிரின் உயிரே
பார்த்த முதல் நாளே
முதல் மழை
நெஞ்சுக்குள் பெய்திடும்
அனல் மேலே பனித்துளி
முன் தினம் பார்த்தேனே
அன்பில் அவள்
கண்ணான கண்ணே
ஓ சாந்தி சாந்தி
எனப் பல பாடல்கள். கௌதம் மேனன், ஹாரிஸ் ஜெயராஜ், தாமரை என மூவர் கூட்டணியாக – வாரணம் ஆயிரம்,என்னை அறிந்தால், காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம் என ஆரவாரமாக பாடல்கள் தந்தார்.
அச்சம் என்பது மடமையடா படத்தில், ரஹ்மான் இசையில் இடம்பெற்ற ராஜாளி – அழகு வரிகள் அப்படியே அனுபல்லவிக்குப் பின், அருணகிரிநாதரின் திருப்புகழ் பாணியில் அசத்தியிருப்பது மிக நேர்த்தி.
பறக்கும் ராசாளியே – ராசாளியே நில்லு
இங்கு நீ வேகமா – நான் வேகமா சொல்லு
கடிகாரம் பொய் சொல்லும்
என்றே நான் கண்டேன்
கிழக்கெல்லாம் மேற்காகிட கண்டேனே
பறவை போலாகினேன் போலாகினேன்
சிறகும் என் கைகளும் ஒன்றா
ராசாளி பந்தயமா பந்தயமா
நீ முந்தியா நான் முந்தியா
பார்ப்போம் பார்ப்போம்
முதலில் யார் சொல்வது
யார் சொல்வது அன்பே
முதலில் யார் எய்வது
யார் எய்வது அம்பை
என் தோள் மீது நீ
ஆ குளிர் காய்கின்ற தீ
எட்டுத் திசைமுட்டும் எனை பகலினில்
கொட்டும் பனி மட்டும் துணை இரவினில்
எட்டும் ஒரு பட்டுக்குரல் மனதினில் மடிவேனோ
முன்னில் ஒரு காற்றின் கழிமுகத்தினில்
பின்னில் சிறு பச்சைக்கிளி முதுகினில்
வாழ்வில் ஒரு பயணம் இது முடிந்திட விடுவேன
வெயில் மழை வெட்கும்படி நனைவதை
விண்மீன்களும் விண்ணாய் எனைத் தொடர்வதை
தூருக்கொரு காற்றின் மனம் கமழ்வதை மறவேனே
முன்னும் இதுபோலே புது அனுபவம்
கண்டேன் என்று சொல்லும்படி நினைவிலே
இன்னும் எதிர்காலத்திலும் வழியிலே மறவேன்
ஒவ்வொரு பாடல்களிலும், அவரின் தனி முத்திரை இருக்கும்.
,
ஆண்களே , பெண்ணின் உணர்வுகள், ‘இப்படி இப்படி’ தான் இருக்கும் என்று அனுமானித்து பாட்டெழுதிக் கொண்டிருந்த நேரத்தில் தான், தமிழகத்தில் இந்தத் தாமரை மலர்ந்தது. (நான் கூறுவது இந்தக் கவிதாயினியை)
பெண்களுக்கு ஒரு சூப்பர் பவர் உண்டு. ஆண்கள் எப்படி பொய் சொன்னாலும், “ம்ம் அப்புறம்?” என்று அக்தரின் 150 கிமீ வேகப் பந்தை, டிராவிட் டொக்கு வைப்பது போல புஸ்ஸாக்கி விடுவார்கள்.
குளு குளு பொய்கள் சொல்லி என்னை வெல்வாய்
அது தெரிந்தும் கூட அன்பே
மனம் அதையேதான் எதிர்ப்பார்க்கும்.
பெண்ணின் மோகத்தை ஆண் கவிஞர்கள் பாட்டாக பாட நினைத்தாலும், கவிதாயினி பாடுவது தான் இது –
அழகிய அசுரா! அழகிய அசுரா!
அத்துமீற ஆசையில்லையா?
கனவில் வந்து எந்தன் விரல்கள்
கிச்சு கிச்சு மூட்ட வில்லையா?
இது இன்னொரு வகை வெளிப்பாடு:
மறுவார்த்தை பேசாதே
மடி மீது நீ தூங்கிடு
இமை போல நான் காக்க
கனவாய் நீ மாறிடு
மயில் தோகை போலே
விரல் உன்னை வருடும்
மனப்பாடமாய்
உரையாடல் நிகழும்
விழி நீரும் வீணாக
இமைத்தாண்ட கூடாதென
துளியாக நான் சேர்த்தேன்
கடலாக கண்ணானதே
மறந்தாலும் நான் உன்னை
நினைக்காத நாளில்லையே
பிரிந்தாலும் என் அன்பு
ஒருபோதும் பொய்யில்லையே’
(என்னை நோக்கிப் பாயும் தோட்டா பட மறுவார்த்தை பேசாதே… பாடல்)
*
இன்னொன்று :
தூரத்திலே நீ வந்தால்
என் மனசில் மழையடிக்கும்
மிகப் பிடித்த பாடல் ஒன்றை
உதடுகளும் முணுமுணுக்கும்.
பார்த்து பழகிய நான்கு தினங்களில்
நடை உடை பாவனை மாற்றி விட்டாய்
சாலை முனைகளில் துரித உணவுகள்
வாங்கி உண்ணும் வாடிக்கை காட்டி விட்டாய்
நீ நின்ற இடமென்றால் விலையேறி போகாதோ
நீ செல்லும் வழியெல்லாம் பனிக்கட்டி ஆகாதோ
என்னோடு வா வீடு வரைக்கும்
என் வீட்டை பார் என்னை பிடிக்கும்.
ஒரு சிருங்கார வகை பாடலை இப்படி கூட எழுதலாமா?
சகியே சகியே சல்லாபத் தேரின் மணியே மணியே
ரதியே ரதியே உன் ராவில் நானும் நுழைந்திடவா?
கனியே கனியே என் நாவில் உந்தன் ருசியே ருசியே
விரலோடு விரல்கள் இறுகிடவே
நகத்தோடு நடனம் தொடங்கும்
சினிமா வியாபாரத்தின் எந்த சமரசத்துக்கும் ஆட்படாமல், ஒரு பெண், கண்ணியத்துடன் பாட்டெழுதி பெயர் வாங்க முடியும் என்று திரும்ப திரும்ப நிரூபித்துக் கொண்டிருப்பது கவிதாயினி தாமரை அடைந்த வெற்றி.
இவரது சமீபத்திய பிரபலமான பாடல் ‘மல்லிப் பூ வச்சு வச்சு வாடுதே’ பாடல் ரஹ்மான் இசையில் வெந்து தணிந்தது காடு படத்தில் ! கேளுங்கள் !
அடுத்த மாதம், மற்றொரு கவிஞருடன் சந்திப்போம்.