1. சூரியனார் கோயில் (சூரியன்)
ஒரு சமயம் காலவ முனிவர், தனக்கு தொழுநோய் ஏற்பட இருப்பதை அறிந்தார். நவக்கிரகங்களை வழிபட்டால் இந்த நோயிலிருந்து விடுபடலாம் என்பதை அறிந்து அவர்களை நோக்கி தவம் இருந்தார். தவத்திற்கு இரங்கி முனிவருக்கு காட்சி தந்த நவக்கிரகங்கள், நோயிலிருந்து அவரைக் காத்தனர். இதை அறிந்த பிரம்மதேவன் கோபம் அடைந்தார். நவக்கிரகங்கள், ஒவ்வொருவரின் முற்பிறவி பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப பலனைத் தரவேண்டுமே தவிர, வரம் கொடுக்கும் உரிமை கிடையாது என்று கூறி, ‘முனிவரைப் பிடிக்க வேண்டிய தொழுநோய் நவக்கிரகங்களை பீடிக்கட்டும்’ என்று சாபமிட்டார்.
தங்கள் தவறை உணர்ந்த நவக்கிரகங்கள், பிரம்மதேவனை வேண்டிக் கொண்டனர். அவரும், திருமங்கலக்குடி அருகே உள்ள வெள்ளெருக்கு வனத்தில் தங்கி, பிராணநாதேஸ்வரரையும், மங்களாம்பிகையையும் வணங்கி வழிபட்டு, பிரசாதமாக வெள்ளெருக்கு இலையில் தயிர் சாதம் சாப்பிட்டால் சாபம் நீங்கும் என்றும் தெரிவித்தார். நவக்கிரகங்களும் அவ்வாறே செய்து சாபவிமோசனம் பெற்றனர். நவக்கிரகங்கள் தங்கியிருந்த வெள்ளெருக்கு வனமே இன்றைய ‘சூரியனார் கோயில்’.
மயிலாடுதுறை – கும்பகோணம் சாலையில் உள்ள ஆடுதுறை என்னும் ஊரை அடைந்து அங்கிருந்து சுமார் 2 கி.மீ. தூரம் சென்றால் இக்கோயிலை அடையலாம்.
நவக்கிரகத் தலங்களில் முக்கியமானதும், முதன்மையானதுமான இக்கோயிலின் மூலவராக ‘சூரியபகவான்’ இரண்டு கரங்களிலும் செந்தாமரை மலர் ஏந்தி நின்ற கோலத்தில் மேற்கு நோக்கி காட்சி தருகின்றார். இவருக்கு இடதுபுறத்தில் உஷாதேவியும், வலதுபுறத்தில் பிரத்யுஷா (சாயா) தேவியும் நிற்க, தனது ஒற்றைச் சக்கரம் பூட்டிய இரதம் இல்லாமல் அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலிக்கின்றார்.
ஆனால் சுவாமி சன்னதியின் எதிரில் அவர்களது வாகனங்கள் இருப்பதுபோல் இவருக்கு எதிரே இவரது வாகனமான குதிரை உள்ளது. மேலும் சூரிய பகவானின் ஒளியின் தன்மை அதிகம் என்பதால் அதன் கிரணங்களைத் தனிக்கும் பொருட்டு சூரிய பகவானுக்கு நேர் எதிரில் குருபகவான் தரிசனம் தருகின்றார். இந்த மண்டபத்தில் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் சன்னதியும் உள்ளது.
மீதமுள்ள எட்டு கிரகங்களுக்கும் தனித்தனி சன்னதிகள் உண்டு. இவர்கள் அனைவரும் அனுக்கிரக மூர்த்திகளாக பக்தர்களுக்குக் காட்சி தருகின்றனர். அதனால் அவர்களுக்கும் வாகனங்கள் இல்லை. மற்ற கோயில்களில் இவர்கள் பரிவாரத் தேவதைகளாகவே காட்சி தருகின்றனர். இத்தலத்தில் மட்டுமே மூலவர்களாக அருள்பாலிக்கின்றனர் என்பது சிறப்பு
நவக்கிரக தோஷம், சனி தோஷம், செவ்வாய் தோஷம், சூரிய தசை உள்ளிட்ட பிற தசாபுத்திகள் நடக்கும் காலங்களில் இக்கோயிலுக்கு வந்து இங்குள்ள அந்தந்த மூர்த்திகளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் அதன் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கை. நவக்கிரகங்களுக்கும் பொதுவான தலமாதலால் இத்தலத்து வந்து பிரார்த்தனை செய்துக் கொண்டாலே அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.
திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி சுற்றியுள்ள பரிவாரத் தேவதை கோயில்களுள் நவக்கிரகங்களுக்கான கோயிலாக இக்கோயில் விளங்குகிறது என்பது சிறப்பு.
சூரிய வழிபாடு நமது நாட்டில் தொன்று தொட்டு இருந்து வருகிறது. இந்தியாவில் சூரியனுக்கு இரண்டு கோயில்களே உள்ளன. வட இந்தியாவில் ‘கோனார்க்’ என்னும் இடத்தில் சூரியனுக்கு கோயில் உள்ளது. ஆனால் அங்கு உருவ வழிபாடு இல்லை. தென்னிந்தியாவில் இத்தலத்தில் மட்டுமே சூரியனுக்கு தனி கோயிலில் உருவ வழிபாடு உள்ளது.
சங்க காலக் குறிப்புகளின்படி பூம்புகார் என்று அழைக்கப்படும் காவிரிப் பூம்பட்டினத்தில் ‘உச்சிக்கிழான் (சூரியன்) கோட்டம்’ என்னும் பெயரில் சூரியனுக்கு ஒரு கோயில் இருந்ததாகவும், கடற்கோளினால் (ஆழிப்பேரலை) இக்கோயில் அழிந்து விட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தை மாதத்தில் வரும் இரத சப்தமி உற்சவம் 10 நாட்கள் திருவிழாவாக இத்தலத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இது தவிர ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று சூரிய பகவானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன. குரு பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சி, இராகு, கேது பெயர்ச்சி போன்றவையும் இங்கு விசேஷமாகக் கொண்டாடப்படுகின்றன.
இக்கோயிலின் தலவிருட்சம் வெள்ளெருக்கு. கோயிலின் தீர்த்தம் சூரிய தீர்த்தம்.
இக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
2. திங்களூர் (சந்திரன்)
நவக்கிரக பரிகாரக் கோயில்களுள் இத்தலம் சந்திரன் தலமாகும். தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலை கடைந்தார்கள். அப்போது ஆலகால விஷம் வெளிப்பட்டது. தேவர்களைக் காப்பதற்கு சிவபெருமான் அந்த விஷத்தை அருந்தினார். ஆனாலும் அந்த நஞ்சின் விஷமானது காற்றில் பரவியதால் அதை சுவாசித்த தேவர்கள் மயக்கம் அடைந்தனர். அப்போது சந்திரன் தனது ஒளியால் அவர்களின் மயக்கத்தைத் தெளிவித்தான். சந்திரன் தனது கிரணங்களைக் காட்டிய தலமாதலால், சந்திரன் பரிகாரத் தலமாக விளங்குகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு என்னும் ஊரில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவு சென்று இடதுபுறம் செல்லும் சாலையில் திரும்பிச் சென்றால் கோயிலை அடையலாம். கும்பகோணத்திலிருந்து சுமார் 33 கி.மீ. தொலைவு.
மூலவர் ‘கைலாசநாதர்’ என்னும் திருநாமத்துடன், சிறிய லிங்க மூர்த்தியாகக் காட்சி அளிக்கின்றார். அம்பாள் ‘பெரிய நாயகி’ என்னும் திருநாமத்துடன் அருள்புரிகின்றாள்.
பிரகாரத்தில் சந்திர பகவானுக்கு தனிச் சன்னதி உள்ளது.
63 நாயன்மார்களுள் ஒருவரான அப்பூதி அடிகள் அவதாரம் செய்து முக்தியடைந்த தலம். திருநாவுக்கரசு சுவாமிகள் மீது வைத்திருந்த பற்றின் காரணமாக தமது இரண்டு மகன்களுக்கு மூத்த திருநாவுக்கரசு, இளைய திருநாவுக்கரசு என்று பெயரிட்டார். அப்பர் இத்தலத்திற்கு வந்தபோது, மூத்தவனை அரவம் தீண்டியது. நிலைமையை உணர்ந்த அப்பர் சுவாமிகள் இத்தலத்து இறைவனைத் தொழுது பாட, மூத்த திருநாவுக்கரசு உயிர்ப்பெற்று வந்ததாக அப்பூதி அடிகள் வரலாறு கூறுகிறது.
இக்கோயிலின் தீர்த்தமாக சந்திர புஷ்கரணி உள்ளது.
இத்தலம் தேவார வைப்புத் தலமாகும். திருநாவுக்கரசர் தமது ஒரு பதிகத்தில் இத்தலத்தைப் பற்றி பாடியுள்ளார்.
இக்கோயில் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
3. வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய்)
நவக்கிரகங்களில் செவ்வாய் தலமாகக் கருதப்படுவது வைத்தீஸ்வரன் கோயில். ஒரு சமயம் அங்காரகனுக்கு வெண்குஷ்டம் ஏற்பட்டது. அப்போது இத்தலத்திற்குச் சென்று இறைவனை வழிபட்டால் நோய் நீங்கும் என்று அசரீரி கேட்டது. அவர் இங்கு வந்து வைத்தியநாதப் பெருமானை வழிபட்டு நோய் நீங்கப் பெற்றான்.
கோயில் பிரகாரத்தில் செவ்வாய் பகவானுக்கு தனி சன்னிதி உள்ளது. செவ்வாய் தோஷம் உள்ளவர்களும், செவ்வாய் தசை நடப்பவர்களும் இங்கு வந்து வைத்தியநாதப் பெருமானையும், தையல்நாயகி அம்மனையும், முத்துக்குமார சுவாமியையும், பின்னர் அங்காரகனுக்கு அர்ச்சனையும் செய்து வழிபடலாம்.
இத்தலமானது சீர்காழிக்கு தென்மேற்கே 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. வைத்தீஸ்வரன் கோயில் இரயில் நிலையம் உள்ளது. பேருந்தில் சென்றால் கோயில் எதிரிலேயே இறங்கலாம்.
புள் – பறவை (சடாயு, சம்பாதி என்னும் இரு பறவைகள்), இருக்கு – ரிக் வேதம், வேள் – முருகன் ஆகியோர் பூசித்த தலமாதலால் ‘புள்ளிருக்குவேளூர்’ என்று இத்தலத்திற்கு மற்றொரு பெயரும் உண்டு. சிவபெருமான் இங்கு வைத்தியநாதராக எழுந்தருளியிருப்பதால் ‘வைத்தீஸ்வரன் கோயில்’ என்றும் அழைக்கப்படுகிறது.
மூலவர் ‘வைத்தியநாதர்’ என்னும் திருநாமத்துடன், பெரிய நாகாபரணம் சூடி, மேற்கு நோக்கி, லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். 4448 வகையான வியாதிகளைத் தீர்க்கும் வைத்தியநாதனாக இத்தலத்து இறைவன் அருள்புரிகின்றார். இங்கு தரப்படும் பிரசாதம் நோய் தீர்க்கும் அருமருந்தாக விளங்குகின்றது.
அம்பிகை ‘தையல்நாயகி’ என்னும் திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள். அம்பிகை சன்னதி முன் பக்தர்கள் மாவிளக்கு ஏற்றி வழிபடுகின்றனர். உப்பு, மிளகு ஆகியவற்றை சிலர் சித்தாமிர்த குளத்தில் கரைத்தும், சிலர் அம்மன் சன்னதி முன்பு கொட்டியும் பிரார்த்தனை செய்கின்றனர்.
இத்தலத்து முருகப் பெருமான் முத்துக்குமார சுவாமியாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கின்றார். சூரபத்மனை வதம் செய்வதற்காக இத்தலத்து சுவாமியை முருகப்பெருமான் பூஜை செய்து வழிபட்டார். இவருக்கு நடக்கும் அர்த்தசாம பூஜை புனுகு, பச்சைக் கற்பூரம், சந்தனம், எலுமிச்சை, பன்னீர், புஷ்பம், பால்சாதம், பால் ஆகியவற்றுடன் சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
இராமாயணத்தில் இராவணன் சீதையைக் கவர்ந்து செல்லும்போது அவனைத் தடுத்து தனது உயிரை இழந்த சடாயுவை இராமபிரான் இங்கு தகனம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு ‘சடாயு குண்டம்’ என்று பெயர். பிரகாரத்தைச் சுற்றி வரும் இந்த குண்டம் உள்ளது.
இக்கோயிலில் கிழக்கில் பைரவரும், மேற்கில் வீரபத்திரரும், தெற்கில் விநாயகரும், வடக்கில் காளியும் காவல் தெய்வங்களாக உள்ளனர். நவக்கிரகங்கள் மூலவர் சன்னதிக்குப் பின்புறம் ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளன.
இராமன், இலக்குவன், முருகப் பெருமான், ரிக் வேதம், ஏழு முனிவர்கள், சடாயு, சம்பாதி ஆகியோர் வழிபட்ட தலம்.
இத்தலத்தில் இரண்டு பிரம்மோற்சவங்கள் நடைபெறுகின்றன. பங்குனி மாதம் பிரம்மோற்சவம் சுவாமிக்கும், தை மாதம் பிரம்மோற்சவம் முத்துக்குமார சுவாமிக்கும் நடைபெறுகிறது.
திருஞானசம்பந்தர் ஒரு பதிகமும், திருநாவுக்கரசர் இரண்டு பதிகமும் பாடியுள்ளனர். அருணகிரிநாதர் இத்தலத்து முருகப்பெருமானை தமது திருப்புகழில் பாடியுள்ளார்.
இத்தல தீர்த்தமாக சித்தாமிர்த தீர்த்தம் உள்ளது. தல விருட்சமாக வேம்பு உள்ளது.
இக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 12.30 வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 வரையிலும் கோயில் திறந்திருக்கும்.
(மற்றவை அடுத்த இதழ்களில் )