என் பிரிய நண்பனே
நீதான் எவ்வளவு நல்லவன்
நான்தான் உணராதவனாயிருக்கிறேன்
யார்யாருக்கோ நன்மைகள் செய்யும்போதும்
பாராதிருந்தவன் நான்தான்
நீ அறிவுறுத்தியபோதெல்லாம்
கேளாதிருந்தவன் நான்தான்
உன் அலங்காரச் சொற்களுக்கெல்லாம்
தவறாக பொருள் கொண்டவன் நான்தான்
உன் நயம்பாராட்டலில் கூட
நம்பிக்கை கொள்ளாதவன் நான்தான்
உன் சாகசங்களில் அனைவரும்
மயங்கிப் போற்றியபோது
மௌனித்திருந்தவன் நான்தான்
என் நன்மைக்காக நீ செய்த
துரோகங்களைப் புரிந்துகொள்ளாதவன் நான்தான்
மேன்மை பொருந்தியது உன் குறியென
அவர்கள் வியந்தோதும்போதெல்லாம்
காது பொத்திக்கொண்டவன் நான்தான்
சேர்ந்து பயணிக்க அழைத்தபோதெல்லாம்
கைகொடாதவன் நான் தான்
எல்லோருக்கும் நல்லவனாகும் சூட்சுமம்
தெரியாதவன் நான்தான்
நாம் அருகருகே இருந்தாலும்
சேர்ந்திருக்கமுடியாது நண்பா
உனக்கும் எனக்கும்
வெவ்வேறு கொதிநிலைகள்