

சுஜாதா, ஞானக்கூத்தன் போன்றவர்களோடு சில விருட்சம் நிகழ்வுகள்.
நான் எதையாவது கேட்டு விட்டு, அவர்கள் தவறாக நினைத்து விடக் கூடாது என்பதை விட, அவர்கள் ஏதாவது கேட்டு நாம் விழிக்கிற மாதிரி ஆகிவிடக் கூடாதே என்ற பயம்.
அன்றைய எங்கள் சந்திப்பில் நான் அவரிடம் ஞானக்கூத்தன் கவிதைகளைப் பெரிதும் புகழ்ந்திருந்தேன்.இங்கு கோவையில் ஐந்து வருடங்களுக்கு முன் பாலகுமாரனைப் பார்த்தேன். அவரிடம் சுவாரஸ்யம் இழந்து இரண்டு மாமாங்கங்கள் ஆகிவிட்டதில் நானும் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. கார் முன்சீட்டில் தடுமாறி ஏறியவரிடம், கோவை புத்தகக் கண்காட்சி ஏற்பாட்டாளர் என்னை அறிமுகப்படுத்த, நான் அவரிடம் நானும் கரிச்சான் குஞ்சுவின் மாணவன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டேன். பாலகுமாரன் முகத்தில் தாடியைத் தாண்டிய “ஓ”!
வண்டி போய் விட்டது. அவரும் போய்விட்டார்.அசோகமித்திரனை அவர் யாராலும் தொந்தரவு செய்யப்படாமல் அநாமதேயமாக மாம்பலம் ரயில் நிலைய பெஞ்சு ஒன்றில் ஏகாந்தமாக இருந்த போது சென்று குசலம் விசாரித்தேன். அவர் சிறிய புன்னகையுடன் நான் வேலை பார்க்கும் இடம் பற்றி விசாரித்தார். அவர் மகன் வாயுதூத்தில் வேலை பார்ப்பதாகச் சொன்னதாக ஞாபகம்.
அதற்கடுத்த முறை சென்னை புதுக்கல்லூரி வாசலில்.
அதற்கு சில நாட்களுக்கு முன்பு அவருக்கு சாகித்திய அகாதமி கிடைத்து இருந்தது.
என் மனைவி வங்கி ஊழியர்கள் தவறாமல் எழுதும் CAIIB என்ற வங்கி ஊழியர்களால் மருத்துவப் படிப்புக்கு சமானமாக உதார் விடும் ஒரு பரீட்சை எழுத, நான் கொண்டு விட வந்திருந்தேன். அது புதுக்கல்லூரியில் நடந்தது.
நாங்கள் பஸ்ஸை விட்டு இறங்கவும், அவரும் ஞானியும் வேகமாக ஓடிவந்து ஏறத் தலைப்பட்டதும் ஒன்றாக நடந்தது.
கூட்டம் அதிகம் என்று அவர்கள் அந்த பஸ்ஸை விட்டு விடவும், நான் வலியப் போய் அவரிடம் “congratulations sir” என்றேன்.
அதற்கு முன் ஓரிரு முறை நானும் என் நண்பனும் ஞானி வீட்டிற்கு (பீட்டர்ஸ் காலனி) சென்றிருக்கிறோம்.
அதற்கு அசோகமித்திரன், “பஸ் போனா போயிட்டுப் போறது… இவா ரெண்டு பேர் கிட்டயும் அதைவிடப் பெரிசா கதை இருக்கும் போல இருக்கே” என்றார்.
அதற்கு அப்புறம் கிட்டத்தட்ட பதினெட்டு ஆண்டுகள் பிற்பாடு நவீன விருட்சம் இலக்கியக் கூட்டங்களுக்கு அவர் வரும்போது ஓரிரு முறை என் வாகனத்தில் அவரை அழைத்துச் சென்று அவரது முருகேசன் தெரு வீட்டில் விடும் வாய்ப்பு கிட்டியது.
அவரது கைகள் பஞ்சு போல, தொட்டால் வலிக்குமோ என்பது போல இருக்கும். அற்புதமான வயதானவர்கள் மீது வீசும் விபூதி வாசனை அவர் மேலும் அடித்தது.
கடைசி முறை நாங்கள் ஏறிக் கொண்டவுடன் வேறு ஒரு பெரியவர் தானும் வருகிறேன் என்று ஏறிக் கொண்டு விட்டார். அவர் அதை ரசிக்கவில்லை என்று அவரது மௌனம் காட்டிக் கொடுத்து விட்டது.