‘தங்க மகனைப் பெற்றவள் என்று என்னை உலகம் சொல்லி மகிழும்’ என்று ஹம் செய்து கொண்டிருந்தாள் பூரணி. இத்தனைப் பழைய பாடல் இவளுக்குத் தெரியுமா என்று எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. எங்கள் மகன் அக்ஷையைப் பற்றி அவளுக்கு எப்போதுமே பூரிப்பு தான். ஐந்து வயதில் அவன் போடும் ஆட்டமும், கும்மாளமும் எங்கள் வீட்டின் புதுச் சுடரொளி.
“தங்க மகன் தானிருக்கிறானே? தேவதைப் போல் ஒரு பெண் குழந்தை” என்று நான் ஆரம்பிக்கும்போதே அவள் உடல் சரிந்து கட்டிலிருந்து கீழே ஒரு பூவைப் போல் விழுந்தாள். எனக்கு கை கால்கள் ஓடவில்லை. நான் ஏதோ உளறிக் கத்தியிருக்க வேண்டும். அப்பா ஓடி வந்தார். உடனடியாக அவள் முகத்தில் தண்ணீர் தெளித்தார். “ஒரு கை பிடிடா” என்று அவளைத் தூக்கி மீண்டும் கட்டில் நடுவில் கிடத்தினார். நல்ல வேளையாக இந்தக் கலவரத்தில் அக்ஷை விழித்துக் கொள்ளவில்லை. பூரணியின் உடலில் அசைவு வருவதற்கு முழுதாக மூன்று நிமிடங்களாயின. எங்களைப் பார்த்து மலங்க மலங்க முழித்தாள். இரட்டைப் பார்வை போல இருந்தது. சிறிது நேரத்தில் தலையைக் கைகளால் பிடித்துக் கொண்டு அரற்றினாள்.
“பூரணி, என்ன செய்கிறது உனக்கு?” என்ற அப்பாவிற்கும் பதிலில்லை, பிரமையுடன் திகைத்து நின்ற எனக்கும் பதிலில்லை. அவள் ஒக்காளிக்கத் தொடங்கவே அப்பா சட்டென்று ஒரு பிளாஸ்டிக் மக்கை அவளருகில் கொண்டு சென்றார். ஆனால், வாந்தி அதை நிரப்பி வழிந்தது. ஒன்றும் செய்வதறியாது திகைத்தோம். அரை மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு அவளை சுத்தம் செய்து, வேறொரு அறைக்கு மாற்றி, எங்கள் அறையைச் சீராக்குவதில் முழு இரவும் கழிந்து விட்டது.
“ரகு, என்னடா இது? முன்னாடி இப்படி நடந்திருக்கா?” என்றார் அப்பா. அவர் வெளி நாட்டிலிருந்த என் அண்ணனின் வீட்டிலிருந்து இரு வாரங்களுக்கு முன்னர் தான் இங்கு வந்தார். எங்கள் கல்யாணம் ஆன கையோடு கலிபோர்னியா போனவர், இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் ஒரு மாதம் இந்தியா வருவார். அண்ணாவிற்கு அவர் உதவி தேவையாக இருந்தது. அம்மா என் ஆறு வயதிலேயே இறந்துவிட்டார்.
“இல்லப்பா, அப்பப்ப தலவலின்னுவோ. ஏதோ அனாசின், ஆஸ்ப்ரின், அம்ருதாஞ்சன்னு எடுத்துப்போ. ஒரு நாள்ல சரியாயிடும். இன்னிக்குதான் இப்படி..”
“சரி, பயப்படாதே. இன்னிக்கு டாக்டர் சுந்தரத்தைப் பாத்துடுவோம்.”
“அப்பா, அவர் ந்யூராலஜிஸ்ட்டுன்னா?”
“ஆமாண்டா, அவ முழிச்ச முழி நேத்திக்கு என்னவோ போல இருக்கல? தலவலி அடிக்கடி வரதுங்கற. என்ன ஒரு வாந்தி? ஏதோ சரியில்லடா, சுந்தரத்தப் பாப்போம்.”
முதல் வாரம் மருத்துவரும் சாதாரண முறையில் மருந்து கொடுத்தார். அந்த வார முடிவில் அவள் திரும்பவும் மயங்கி விழுந்தாள், வாந்தியும் அதிகமாயிற்று.
‘ரகு, ஈ ஈ ஜி எடுக்கணும், ஃபுல், பாடி ஸ்கேனும் செய்யணும். இன்னும் சில டெஸ்ட்ஸ் இருக்கு. இதப் பொறுத்து அதைச் செய்யலாம்.’ பயாப்ஸி எடுத்துப் பார்த்து விடலாம் என்று அவர் சொன்ன போது பயம் வந்ததென்னவோ உண்மை. ‘இந்தக் கால இளைஞன் நீங்கள்; இதெல்லாம் டயானாக்ஸ்டிக் புரோசீஜர்’ என்றார்.
அதற்குப் பதினைந்து நாட்களுக்குப் பின்னர் தான் அவளுக்கு ‘ஹெமேஞ்ஜியோப்ளாஸ்டோமா’ (Hemangioblastoma) என்றார்.
‘ரவுன்ட்ஸ் போய்ட்டு வந்து வெளக்கமா சொல்றேன்.’ என்று அவர் சொன்னது கூட எனக்கு உறைக்கவில்லை.
முதலில் அவர் சொல்வது எனக்கு மொஹஞ்சதாரோ என்று கேட்டது. அவளுக்குப் பிடித்த ‘கிளிமஞ்சாரோ’ பாடலில் ‘மொஹஞ்சதாரோ அதில் நுழைந்ததாரோ?’ என்ற வரி வரும்போது தியேட்டர் என்பதையும் மறந்து அவள் உல்லாசமாகச் சிரித்ததுதான் எனக்கு நினைவில் வந்தது. ஆனால், மருத்துவர் என்னவோ ஒரு பெயர், கிட்டத்தட்ட அதே மாதிரி ஒலிக்கும் பெயரல்லவா சொன்னார்? அவளுக்கு என்னதான் வந்துள்ளது?
எங்கள் திருமணத்தின் போதே அவளுக்கு அப்பா இல்லை. அவள் அம்மா தேனியில் ஓம்காரானந்தா ஆஸ்ரமத்தில் இருக்கிறார். முழுதுமாக, ஏறக்குறைய ஒரு சன்யாசினி போல் இருக்கிறார் அவர். அவருக்கு இவள் நிலை பற்றி ஏதேனும் தெரிந்திருக்குமா? முன்னரே பூரணிக்கு இம்மாதிரி ஏதேனும் ஏற்பட்டிருக்குமா? அவரை ஃபோனில் தொடர்பு கொண்டு கேட்கலாமா? அவரோ குடும்பத்தை விட்டு விலகியிருக்கிறார். அவரை எதற்குத் தொந்தரவு செய்ய வேண்டும்? என் மனம் இரு பாதிகளாகப் பிரிந்து வாதிட்டுக் கொண்டிருந்தது. ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டன எங்கள் திருமணம் நடந்து. பூரணியுடன் வாழ்வதில் நிறையைத் தவிர குறை எங்கு கண்டேன்? தலைவலி, மயக்கம், வாந்தி எல்லாம் சாதாரணமாக எல்லோருக்கும் வருவதுதானே?
அப்பா ஆதரவாக தோளில் கைவைத்தார். எத்தனை வருடங்களுக்குப் பிறகு இந்த ஸ்பரிசம்! அவர் கைகளை இறுகப் பற்றிக் கொண்டேன். “சின்ன வயசுடா, ஒன்னும் பெரிசா இருக்காது; கவலப்படாதே” என்றார்.
‘வாங்க மிஸ்டர் ரகு, கன்சல்டிங் ரூமுக்குப் போகலாம். நீங்களும் வாங்க சார்’ என்றார் ஈஸ்வரன்.
“டாக்டர், ஏதோ பேர் சொன்னீங்க. அது என்ன? அது க்யூரபில் தானே?”
‘பேர் அவ்ளோ முக்கியமில்ல. அவங்களுக்கு மூளைல ஒரு கட்டி.’
நான் பேச்சிழந்தேன். அப்பா சுதாரித்துக் கொண்டார்.
“கட்டின்னா, டாக்டர், கேன்சர் இல்லையே?” என்று கேட்டார்.
‘இது கேன்சர்ல ஒரு வகை. ஆனா, கெட்டது இல்ல.’
“புரியல் டாக்டர்” என்றேன் நான்.
‘ரகு, ஒரு மாரியான வளர்ச்சி. திசுக்கள் கொஞ்சம் கொஞ்சமாத் திரண்டு கிட்டத்தட்ட பந்து போல ஆயிடும். இது மெதுவாகத்தான் திரளும். ஆனா, நாளடைவுல, அக்கம் பக்கம் நரம்புகளை அழுத்த ஆரம்பிக்கும். அதனாலத்தான் தலவலி, டபிள் விஷன், வாமிட் எல்லாம்.’
‘இன்னமும் புரியல, டாக்டர். ஏன் செல்லெல்லாம் சேந்துக்கணும், உருண்டையாகி நரம்பை அழுத்தணும்? அதை முன்னாடியே ஏன் தெரிஞ்சுக்க முடியல?’
டாக்டர் சிரித்தார். ‘பொதுவா, ஏன்னு கேட்டீங்கன்னா பதில் சொல்றது சிரமம்; பூரணிக்கு வந்திருக்கிறது வான் ஹிப்பல் லிண்டாவ் சின்ட்ரோம் (Von Hippel- Lindau Syndrome-VHL) முன்ன சொன்னேன் இல்லயா, ‘ஹெமேஞ்ஜியோப்ளாஸ்டோமா’ அதுதான் இதுக்குக் காரணம். இன்னும் சொல்லணும்னா, நம்ப இரத்தக் குழாய்கள்ல இருக்கற உட்பூச்சுகள்ல இருக்கற செல்கள் இப்படித் திரண்டுக்கும். அது அளவுக்கு அதிகமானா நரம்பை, நான் முன்ன சொன்னமாரி அழுத்திடும்.’
“பூரணிக்கு மூளைலயா இந்தக் கட்டி இருக்கு?” என்று கேட்டார் அப்பா.
‘ஆமா, சார். கட்டியும், புண்ணுமா சிறு மூளைல இருக்கு. தண்டுவடம் கொஞ்சம் பாதிப்ல இருக்கு.’
‘டாக்டர், என்னென்னவோ சொல்றீங்களே; என் பூரணி, என் பூரணி..’
‘ரிலாக்ஸ், ரகு. இதெல்லாம் ஈசியா நீக்கிடலாம். இதுல இருக்கறது நல்ல திசுக்கள் தான். பரவுங்கற அபாயமில்ல; நீக்கிட்டா இந்த அழுத்தம் போய்டும், மற்ற அறிகுறிகளும் போய்டும். என்ன ஒண்ணு, 14 மணி நேரம் ஆபரேஷன் நடக்கும். ஒரு வாரம் ஐ சி யுல இருக்கணும்; ஹாஸ்பிடல் அறைல பத்து நாள் இருக்கணும். சில மாத்திரகள அப்புறம் தொடரணும்.’
எனக்குத் தலை சுற்றியது. “சர்ஜரியாலதான் சரி படுத்தமுடியும்னு சொல்றீங்க இல்லையா?” என்று கேட்டார் அப்பா.
‘அத இப்பக் கரைக்க முடியாது சார். ஆபரேஷன் பண்ணலேன்னா, அது உள்ளயே வெடிச்சுடும். உயிருக்கு ஆபத்து வரலாம், ஸ்ட்ரோக் வரலாம், நரம்பு மண்டலம் இயங்காமப் போகலாம்.’
அப்பா என்னையும், நான் அவரையும் ஒரே நேரத்தில் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டோம். சம்மதித்தோம்.
இரு மாதங்களுக்குப் பிறகு டாக்டரிடம் பூரணி ஒன்றைக் கேட்டாள். “இது பரம்பரையா வருமா?”
‘70% வாய்ப்பிருக்கு.’
“இது இருக்குன்னு முன்னாடியே கண்டுபிடிக்க முடியுமா?”
‘பொதுவா, சிம்ப்டம்ஸ் வச்சு கண்டுபிடிக்கலாம். புதுசா, ஒரு டெஸ்ட் வந்திருக்கு. இந்த வி ஹெச் எல்லைக் கண்டு பிடிச்சு முன் மருந்து கொடுக்கலாம்.’
“அப்படின்னா, அக்ஷைக்கு இருக்கான்னு பாத்துடுங்கோ, டாக்டர்.” என்றாள் பூரணி.