தேவியோட மறைவுக்குப் பிறகு வீடு ஒரு அமைதியான சூழ்நிலைக்கு வந்துருச்சு.
பழைய கலகலப்பு இல்லை.பணி ஓய்வுக்குப் பிறகு எனக்கு பேச அவள் ஒருத்தி தான். என் நேரமும் கூட இருப்பா.
இப்ப தேவி இல்லாததால் என்னால் யாருடன் போய் என்னத்தப் பேச முடியும்?
பெரிய பையன் ராஜா அவன் மனைவி சுஜாதா பழையபடி வேலைக்கு போக ஆரம்பிச்சிட்டாங்க.
சின்னவன் குமார் அவன் சம்சாரம் ராஜி தனிக் குடித்தனம் போக அவங்க ஆபீஸ் பக்கத்திலேயே ஒரு வீடு புடிச்சு அவங்கள அங்க தனிக்குடித்தனம் வைச்சிட்டேன். அதான் அவங்களுக்கும் சௌரியமா இருக்கும்.
எல்லாரும் ஒரு நல்ல நாள் பொழுதுமா சேர்ந்து இருக்கலாம். அவங்க எல்லாரும் சேர்ந்து இருந்தால் எல்லாருக்கும் ஒரு சந்தோசமும் ஒரு கலகலப்பும் இருக்கும்.
நான் ராஜாகூடத் தங்கிட்டேன். அப்பப்ப குமாரோட வீட்டுக்குப் போயிட்டு வருவேன். அவங்க வீட்டுக்கு போறது நடக்கிற அளவுக்குப் பக்கத்துல இருந்ததனால அங்க போயி ஒரு நாள் இருப்பேன்.
என்னுடைய முழுமனதும் என் தேவியோட வாழ்ந்த வீட்டில்தான். நான் அங்க இருந்தா எனக்கு ஒரு மன நிம்மதி கெடைக்கும்னு நினைச்சேன்.
கொஞ்ச நாளைக்கு அப்புறம் தேவி பொழுதுபோகப் படித்து வைத்திருந்த புத்தகங்களை தூசுதட்டி அடுக்க ஆரம்பிச்சேன் .அடித்தட்டில் பழைய டைரிகள். ஒரு பையில் இருந்தது தூசி தட்டி அவைகளை அடுக்கும்போது இரண்டு போட்டோக்கள் கீழே விழுந்தது.
கல்யாண போட்டோக்கள். குரூப் படங்கள். யார் யாரென்று ஞாபகப்படுத்திப்பார்த்தேன் ஆச்சரியமா இருந்தது. தேவி ரொம்ப சின்னப்பொன்னு!
அவளுடைய இளமை வாழ்க்கையில் கல்யாணத்துக்கு முன்னாடி என்ன மனநிலையில் அவ இருந்தா! சின்ன வயசிலே கல்யாணம் செஞ்சு கொடுத்தாங்க.
அவளுடைய ஆசைகளுக்கு ஏத்தபடி நான் இல்லைன்னு சில நேரங்களில் மனக்குறைப்பட்டு இருந்தாக் கூட அதை வந்து என்னால முதல்ல புரிஞ்சிக்க முடியல. ஆனா அவள் மறைவுக்கு பிறகு தான் உண்மையிலேயே அவ கஷ்டம் என்ன? எதனால என்கிட்ட, கற்பனையான சினிமாக்களில் நடப்பதுபோன்ற வாழ்க்கையை விரும்பி இருக்கா. அவ மனசிலே இருந்ததை நான் பூர்த்தி பண்ண முடியாமல் போனது இப்போ புரியுது.
நான் அம்மாவுக்கு ஓரே பையன், கூடப் பிறந்த பையன் பொண்ணுங்க கிடையாது. பிடிக்கல், பிடுங்கல் இல்லாத குடும்பம். தேவியை மிகவும் சந்தோசமாக வைத்துக்கொண்டேன். அம்மாவும் தனக்கு ஒரு மகள் இல்லை அப்படின்னு சொல்லி தேவியை மகளாக நடத்தினார்.
கணவனுக்கு சினிமாவில் இருக்கிற மாதிரி டை கட்டி விடுறது, சூ போடுறது, இப்படியே எல்லாம் கற்பனை பண்ணி அப்படி ஒரு வாழ்க்கை தனக்கு அமையும்னு நினைச்சுகிட்டு இருந்திருக்கா!
காலையில எந்திரிச்சி காபி கொண்டு வந்து கொடுக்க வேண்டியது, டிபன் பண்ணி, கணவனை ஆபீசுக்கு அனுப்பிவிட்டு ஏதாவது நாவல் படிக்கிறது, இல்லைன்னா கொஞ்ச நேரம் தூங்குவது, மாலையில ஆபீஸ் விட்டு கணவன் வந்த பிறகு காபி குடுக்க வேண்டியது.
ஜாலியா கடைவீதிக்கு போறது டைம் இருந்தா சினிமா போறது பீச்சுக்கு போறது இப்படி சில ஆசைகளை எல்லாம் மனசுல போட்டு வளர்த்துஇருக்கா.
அவங்க வீட்ல ஒரே பொண்ணு வாழ்க்கையில் அப்படியெல்லாம் இருக்கணும்னு நினைச்சு இருக்கா.
ஆனா எங்க வீடு நான் சொன்ன மாதிரி நானும்என் தாயாரும்தான். சின்ன வயசிலேயே அப்பாகாலமாயிடாங்க. அதனால் எங்க அம்மா என்னை ரொம்பக் கண்டிப்பா வளர்த்திருக்காங்க.
எனக்கு வேற பழக்க வழக்கமும் இல்லை. சாயங்காலம் ஆறு மணிக்கு மேல முடிஞ்ச அளவு வெளியில போக மாட்டேன். ஆபீஸ்ல இருந்து வந்தா நேரா வீடு.
என்னுடைய பக்கத்துத் தெருவுல லைப்ரரி இருக்கு. அதுல போய் நாவல்களை வாங்கிட்டு வருவேன். இப்படி என்னுடைய பழக்கம் வந்து வீட்டோடதான்.
படிக்கிற காலத்தில் அதிகமா பிரண்ட்ஸ் கிடையாது.
போட்டோக்களை ஒருடைரியில் வைத்தேன். டைரிகள் நம்பர் போட்டு இருந்ததால் நம்பர்படி அடுக்கினேன்.
முதல் டைரியைப் பிரித்தேன்.
அவளுடைய டைரியில் சொன்ன மாதிரி “உன்னுடைய முதலிரவு அன்று கணவன் வந்து உன்னைக் கைபிடித்து உட்கார வைப்பார் பால் செம்பு எடுத்து கொடுத்து குடிக்கச் சொல்லுவார்”
இப்படி சில கற்பனைகளை வச்சிருந்திருக்கா.
நிஜ வாழ்க்கையில்அப்படிக் கிடையாது என்று புரியாத பொண்ணு எனக்கு கிடைச்சிருக்கா. தேவியோட ஆசைகள் வேற மாதிரியா இருந்திருக்கு.
அவளே எழுதியிருந்தாள்.”நெனைச்சது ஒன்னு நடந்தது வேற “
” சினிமாவுல மாதிரியே நிஜ வாழ்க்கையிலும் நடக்கும்னு கற்பனைகளை வளர்த்திருக்கா!”
அப்புறம் ஒரு நாள் அவளோட டைரியை எடுத்துப் படிக்க ஆரம்பிச்சேன். ராஜாவும் சுஜாதாவும் வெளியில் போன நேரத்தில படிக்க முடிந்தது.
அவளுக்கு இனம் புரியாத ஒரு மன நோய் இருந்திருக்கு அந்த மன நோய்க்கு காரணம் அவளுடைய இளமையிலே நினைத்து ஏங்கிய கனவு வாழ்க்கைதான்.
அதை வந்து ஒரு குறிப்புல புரிஞ்சுகிட்டேன். தொடர்ந்து படிக்க ஆரம்பிச்சேன்
” நான் வந்து அவரைச் சரியா புரிஞ்சுக்காம முதல்ல டைரிகள்ள எழுதிட்டேன். ஆனா வாழ்க்கையோட உண்மையான எதார்த்தம் என்னங்கறது புரிஞ்சாப் பிறகு நான் அதை உணர்ந்து விட்டேன்.
அவர்கிட்ட இதையெல்லாம் அப்படியே பேசுற ஒரு சூழ்நிலையும் அப்புறம் கிடைக்காம போயிடுச்சு . ஏன்னா குமாரோட திருமண வாழ்க்கை வந்து சரியாக இல்லை. எப்போதும் சண்டை போட்டுக்கிட்டு இருக்கிறது, இவன் வாழ்க்கை டைவர்ஸ் வரைக்கும் போக நினைச்சதுனால எனக்கு மனநிலை அதிகமாக பாதிச்சிருச்சி. உடல்நலம் போச்சி. அந்த நேரத்துல என் கணவர் வந்து என்னைக் குழந்தை மாதிரி கவனிச்சுக்கிட்டார் .
ராஜாவும் சுஜாதாவும், குமாரும் ராஜியும், நோய்வாய்ப்பட்டு இருந்த காலத்தில் நல்லவிதமா கவனிச்சாங்க. அதுவே எனக்கு கொஞ்சம் தெம்பா இருந்தது. ஆனால் உடல்நிலை நல்லா இல்லை. எனக்கு என்னுடைய இறுதிக் காலம் தெரிந்தது. கணவர் எந்நேரமும் என் பக்கத்தில் உட்கார்ந்து கைய புடிச்சு எனக்கு ஆறுதல் சொல்லிக்கிட்டே இருப்பார். நானும் அந்தக் காலத்தில் அவரைத் தப்பா புரிஞ்சுகிட்டு ஒரு கற்பனை வாழ்க்கைக்கு ஏங்கினேன்.
ஏமாற்றமா நினைச்சு டைரிலே எழுதுவது எவ்வளவு பெரிய தப்புங்கிறதை உணர்ந்தேன். என்னுடைய மனநோய் உணர்ந்து என்னை மன்னிச்சிருவாரு என்கிற ஒரு நம்பிக்கை இருக்கு.
பிள்ளைகள் அவரை நல்வழியாக கவனித்துக்கணும்.
அவரைத் தப்பா நினைச்சதுக்கு அடுத்த பிறவியிலாவது சத்தியமா அவரு மனைவியாகவும் நான் கணவனாகவும் வாழ்ந்து அவருக்கு சேவை செய்யணும்னு மனசார வேண்டுகிறேன். என்னுடைய ஆத்மாவோட ஒரே ஆசை. அவர் போல ஒரு தூய்மையான தெளிந்த மனம் கொண்ட ஆதர்ஷ புருசனை டைரியில் தப்பா எழுதிட்டேன். எனக்கு அவருடைய உண்மையான அன்பை சரியான முறையில் புரிஞ்சுக்க தெரியல.
ஆனா பின்னால யோசிச்சு பார்க்கும் போது தான் குடும்பம் நடத்துவது சினிமாத்தனமானது இல்லை, அது அன்பும் பாசமும் ஒவ்வொருவரும் பரிமாறிக் கொள்கிற ஒரு சங்கமம்.,
பலரும் ஒன்றிணைந்து வாசிக்கும், சங்கீதக் கச்சேரி. நான் புரிஞ்சுகிட்டேன் .
என்னால எதையும் வெளிப்படையா சொல்ல முடியல என்னுடைய தவறை, என்னுடைய தப்பை எப்படி ஒத்துக்கிடறது என்ற “ஈகோ” எனக்குத்தான் இருந்தது.
அவருக்கு “ஈகோ” கிடையாது.
அவரோட இத்தனை வருடங்கள் வாழ்ந்த எனக்கு அவரைத் தெரியாதா?
அவரோட அப்பழுக்கற்ற குணத்தை நான்தான் புரிஞ்சிக்கலை.
என்னுடைய கணவனைப் போலே எல்லா பெண்களுக்கும் உண்மையான கணவன்கள் கிடைக்க வேண்டும்
அவர்கிட்ட, ஒரு நடிப்பு, ஆசை வார்த்தைகள் இதெல்லாம் கிடையாது.
அவர் ஒரு ரொம்ப யதார்த்தமான ஆள். அதை வந்து நான் புரிஞ்சிக்க நாள் ஆயிடுச்சு. அதுக்குள்ள நான் டைரி எல்லாம் எழுதி என்னைவந்து வெளிப்படுத்தினேன். ஆனால் அது தப்புங்கிறத பின்னால கண்டிப்பா உணர்ந்தேன். அந்த டைரி எல்லாம் கண்டிப்பாக அவர்கள் கண்ணுல படக்கூடாது, கைக்கு கிடைக்கக்கூடாது.
கணவன் மனைவி என்கிற தாம்பத்திய உறவு குழந்தை பெற்றுக்கொள்வது மட்டும் இல்லை ஒருத்தரை ஒருத்தர் உண்மையா புரிஞ்சிக் கொள்றதுல இருக்கு. அதை உண்மையா நான் புரியவில்லை , நான் தான் சரியா செய்யலை என்கிறது என்னுடைய எண்ணமா இருக்குது.
ஒரு தடவை, குழந்தை பிறந்த ரெண்டு மாசத்துல அவரு என்ன அழைச்சிட்டு வந்தார். அப்போ எனக்கு இன்னும் கூட நாலு மாசம் அம்மா வீட்டுல இருந்தா நல்லா இருக்குமென்று இருந்தது. என்னுடைய தாயார் அப்படித்தான் நினைச்சாங்க ஆனா என்னுடைய மாமியார் உடல்நிலை சரியில்லை, அவங்களைக் கவனிக்க வேற ஆள் கிடையாது.
ஏன்னா எனக்கு நாத்தனார் ஒரகத்தி அப்படின்னு யாரும் கிடையாது . ,எனக்கு ஒண்ணுன்னா அவங்க தான் அங்க கவனிக்கணும். அப்படிங்கிற ஒரு சூழ்நிலை இருந்ததுனால அவர் செஞ்சது சரிதான். ஆனால் அந்த நேரத்தில் அவர்மேல் வெறுப்பைக்காட்டினேன் பதிலே பேசாமல் அமைதியாக இருந்தார். அதை பின்னால் நான் உணர்ந்தேன். இரண்டாவது அவருக்கு என் மேல அபரீத பாசம்.
ஒரு தடவை திருவேணி சங்கமத்தில் வேணிதானம் செய்யும்போது அவர் என்னை, மகிழச் செய்தது மறக்க முடியுமா?
நான் எப்பவுமே அவரோட இருந்தா அவர் சந்தோஷமா இருப்பார் அப்படிங்கறதை நானே பிற்காலத்தில் புரிந்து கொண்டேன். நான் மரணப்படுக்கையில் இருக்கும் போதும் அதை உணர்ந்தேன். எல்லாம் காலம் கடந்த ஒரு ஞானம், ஒன்னும் செய்ய முடியலை. இருந்தாலும் அவர் காலம் முடிகின்ற வரைக்கும் நிம்மதியா வாழனும்.
அதுக்கு என் பிள்ளைகள் உறுதுணையாக இருக்கணும் என் மருமகள்கள் வந்து நல்லபடியா கவனிக்கணும் என்னுடைய ஆசை, விருப்பம், என்னுடைய பிரார்த்தனை. அந்த எண்ணத்தில் தான் நான் நிம்மதியாகக் கண்ணை
மூடுகிறேன். ” முடித்திருந்தாள்.
(டைரியை மூடிவிட்டுக்கண்களைத் துடைத்துக் கொண்டேன்)