எழுத்தாளர், டாக்டர் ஜெ. பாஸ்கரன் குவிகம் மின்னூலில் ஜனவரி 2020 முதல் ஜூன் 2021வரை மாதாமாதம் எழுதிவந்த முப்பது கட்டுரைகளின் தொகுப்பாக இந்த நூல் வெளியாகியிருக்கிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு தலைப்பில் எழுதப்பட்டது. தான் பார்த்த, அனுபவித்த அனுபவங்களை மிக அழகாக வாசகர்களுடன் பகிர்ந்திருக்கிறார். சந்தித்த ஆளுமைகள், பயணித்த வெளியிடங்களின் விபரங்கள் என்று படிப்பவர்களுக்குச் சுவை குறையாமல் எழுதும் கலையை ஆசிரியர் நன்கு கற்றிருக்கிறார்.
தேஜஸ் பௌண்டேஷன், பி.எஸ். கல்விக்குழுமமும் இணைந்து நடத்திய இந்திய இலக்கியங்களில் ராமர் என்ற தலைப்பில் இரண்டு நாட்கள் நடைபெற்ற நிகழ்ச்சியை ராமன் எத்தனை ராமனடி என்ற தலைப்பில் உள்ள கட்டுரையில் வால்மீகி ராமாயணம், கம்பராமாயணம், துளசி ராமாயணம் என்ற தலைப்பில் உரை நிகழ்ந்ததாகவும், அதில் துளசி ராமாயணம் பாமரர்களை எப்படிக் கவர்ந்ததென்றும், கொகலாயர்கள் காலத்தில் இந்து மதத்தை மீட்டெடுத்த ராமாயணம் எப்படி வால்மீகி, கம்பனில் இருந்து மாறுபட்டிருக்கிறது என்று பேராசிரியர், கவிமாமணி வ.வே.சுப்பிரமணியன் விளக்கியதைப் பதிவு செய்திருக்கிறார்.
கனடாவின் தலைநகரான ஒட்டாவாவிற்குச் சென்ற பயணத்தைப் படிக்கும் போது நாமும் அங்கு அவருடன் இருப்பதுபோல உணரமுடிகிறது. அந்த நகரத்தின் கலை, கலாச்சாரம், ஊரின் அழகு என்று விளக்கி நம் மனத்தில் இனிதாகப் பதிவு செய்துவிடுகிறார்.
கொரானா காலத்தில் உலகம் பட்ட துன்பத்தை, அதில் இருந்து கற்றுக் கொண்ட பாடத்தை, பாரதம் எப்படி அதை எதிர்த்து ஜெயித்து மற்ற நாடுகளுக்கும் எப்படி உதவி செய்தது என்று ஒரு மருத்துவரின் கண்ணோட்டத்தில் மிகச் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறார். Pandemic – உலகின் பலநாடுகளிலும் ஒரே சமயத்தில் பரவிடும் தொற்று, Epidemic – ஓரிடத்தில் திடீரெனப் பரவிடும் தொற்று (ஒரு நாடு. ஒரு மாகாணம் என்பது போல்) Endemic – ஒரு வியாதி ஓரிடத்தில் மிகப் பரவலாக எப்போதும் இருப்பது. (மலேரியா – பிரேசில், ஆப்ரிக்கா, ஆசியா) என்று குழந்தைகளுக்குப் பாடம் எடுப்பதுபோல எழுதியிருப்பது சிறப்பு.
ஆரஞ்சு கலர் சான்யோ ட்ரான்சிஸ்டெர் என்ற கட்டுரை ஒரு சிறுகதை போல இருக்கிறது. கான்செர் நோயுடன் வரும் ரஹீம் என்ற சிறுவனுக்கு மருத்துவம் பார்த்த நேரம். ஒரு நாள் இரவில் அவன் தலைமாட்டில் ஆரஞ்சு கலர் சான்யோ ட்ரான்சிஸ்டெர் வைத்துக் கொண்டு கேட்கும் ஹிந்திப் பாடலைத் தானும் சுவற்றில் சாய்ந்து கொண்டு மெய்மறந்து கேட்டு விட்டு அவனுக்குத் தொந்தரவு தராமல் தனது அறைக்குத் திரும்பி விடுகிறார். ரஹீம் தனக்கான ஹீமோ மருத்துவத்தை முடித்துக் கொண்டு ஊர் திரும்பும் பொழுது தனக்கு ஒரு புதிய ஆரஞ்சு கலர் சான்யோ ட்ரான்சிஸ்டெரைப் பரிசாகத் தந்ததை நெகிழ்ச்சியாகச் சொல்கிறார். மீண்டும் ஒரு திங்கட்கிழமை காலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்த ரஹீம் நோயில் கடுமையால் சிரித்தபடி விடைபெற்றான் என்கிறார் சென்னை கான்செர் இன்ஸ்டிடூட் மருத்துவர் சாந்தாவின் சீடர் என்று பெருமை கொள்ளும் ஆசிரியர்.
மழைத்துளிகள் என்று ஒரு கட்டுரையில் மக்களை வாட்டி எடுக்கும் வருடாந்திர மழையின் கொடுமைகளையும் அதற்கான சரியான தீர்வை இன்று வரை எடுக்காத அரசையும், ஏன் என்று கேட்காத மக்களையும் மனக்குமுறலோடு கேள்வி கேட்கிறார்.
பேராசிரியர், கவிஞர், தமிழறிஞர் கனாடா பசுபதி அவர்களைப் பற்றிய அருமையான கட்டுரை இந்த நூலுக்கு ஒரு மகுடம். கனாடாவில் ஒருநாள் பேராசிரியர் பசுபதியைச் சந்தித்து சுமார் ஒருமணி நேரமே உரையாடுகிறார். தனது எண்பத்திரண்டு வயதிலும் அவர் செய்து வரும் தமிழ்த் தொண்டினை வியக்கிறார். சமீபத்தில் அவர் எழுதிய கவிதை இயற்றிக் கலக்கு என்ற புத்தகம் தமிழ் மரபை விரும்புவோருக்கு விருந்து. பேராசிரியர் பசுபதி அவர்களின் வலைத்தொகுப்பில் குவிந்து கிடக்கும் தமிழ்ச் சுரங்கத்தை வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ள சிறந்த கட்டுரை.
இன்னும் இதுபோல் கொட்டிக் கிடக்கிறது இந்த “கடைசிப் பக்கம் – 2”நூலில்.
*
இந்த குவிகம் இதழை சுமார் இரண்டாண்டுகளாக வாசித்து வருகிறேன். வித்தியாசமான முறையில் உள்ள மின்இதழ். மருத்துவர் பாஸ்கர் அவர்களின் கட்டுரையை படித்து மகிழ்ந்திருக்கிறேன்
LikeLike
எத்தனை முறை படித்தாலும் திகட்டாத எழுத்து மரு. ஜெ பா அவர்களின் கடைசிப் பக்க எழுத்து. அநேகமாக அதைத்தான் குவிகம் மின்னிதழின் முதல்பக்கமாகப் படிப்பதாக நிறைய நண்பர்கள் இரகசியமாகப் பேசிக்கொள்வதை நான் ஒட்டுக் கேட்டிருக்கிறேன்!
LikeLike