என் கல்லூரி சகா, ‘நிழல்கள்’ திருநாவுக்கரசு திரைப்படத்துறைக்கு வெளியிலிருந்தபடியே, அந்தத் துறைக்கு பல நல்ல விஷயங்களை பல ஆண்டுகளாகச் செய்து வருகிறார். எழுத்தாளரும் இசை ஆர்வலரும் பதிப்பாளருமான அவரது ‘நிழல்கள்’ இதழ் தொடர்ச்சியான நல்பங்களிப்பு. பல நல்ல வித்துகளை இட்டு வரும் அவர் சமீப ஆண்டுகளில் ஆவணப்பட இயக்குனராகவும் ஆகியுள்ளார்.
பல்லாண்டுகளாக காத்திரமாக எழுதிவரும் முதுபெரும் கவிஞர் எஸ். வைத்தீஸ்வரன் பற்றி எந்தப் பதிவும் இல்லாத ஒரு சூழலில், அவரைப் பற்றிய, அவர் படைப்புகளைப் பற்றிய ஒரு உரையாடலை ’குவிகம் இலக்கிய வாசல்’ தயாரித்துள்ள ‘கிணற்றில் விழுந்த நிலவு’ ஆவணப்படத்தின் மூலம் முன் வைத்துள்ளார் அரசு. அந்த வகையில் இது ஒரு முக்கியமான படம்.
தமிழிலக்கிய வரலாற்றில் எஸ். வைத்தீஸ்வரன் போல கவிதை, ஓவியம், நடிப்பு, மற்றும் இசைப் பரிச்சயம் என இத்தனை துறைகளில் ஈடுபட்ட நபர்கள் யாரும் இல்லை. அதுவும் வானூர்தியில் வேலை பார்த்த தமிழிலக்கியவாதிகள் இல்லவே இல்லை. இப்படி ஒரு அபூர்வ சேர்மானத்தை அவரது ஆளுமையில் மட்டுமல்ல; அவர் கவிதைகளிலும் நாம் காணலாம். ஆனால், ’கார்பன்’ அடிப்படையில் கண்டுபிடிக்கப்பட்டு இப்போதுதான் அதெல்லாம் வெளியே வருகிறது. இப்போது அவரது ஆவணப்படம் பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டியிருப்பதால் நான் அதற்குள் செல்லவில்லை.
”எப்போது என் மனக்குளத்தில் சூரியன் தெரியும்
எப்போது என் கைமுனையில் தாமரை முளைக்கும்”
என்று கவிதையில் வைத்தீஸ்வரன் கேட்கும் கேள்விகளுக்கு அதை அருமையான பாடலாக்கி காட்சி ரீதியாக, இசை ரீதியாக அவருக்கு சூரியனைத் தெரியவைத்து, தாமரையையும் மலர வைத்து அவர் கையில் தந்துவிட்டார் அரசு. இப்படி சேராததையெல்லாம் ஒன்று சேர்ப்பவர்கள்தானே கலைஞர்கள். ஸாரி… நீங்கள் இதில் அரசியல் அர்த்தங்கள் எல்லாம் கொள்ளக்கூடாது.
அந்தப் பாடலில் வரும் கடற்கரை, புறாக்கள், இயற்கைக் காட்சிகள் வைத்தீஸ்வரனின் முக பாவங்கள், அவரது பீஷ்ம நடை, இயற்கையாய் அமைந்த ஒளி, பாடலின் இனிமை எல்லாமும் சேர்ந்து ஒரு மோன அனுபவத்தைத் தந்துவிடுகின்றன நமக்கு. இந்த ஆவணப்படத்தின் மிக முக்கியப் பகுதி இது. எல்லாவற்றையும் சேர்த்து ஒரு வகையில் வைத்தீஸ்வரன் பற்றி அரசு, திரையில் எழுதிய கவிதையின் ஒரு பகுதி என்று இதைச் சொல்லலாம். ஒரு நல்ல டாக்குமென்ட்ரிக்கான லட்சணமான பகுதி இது.
ஒளிப்பதிவாளர் பல சமயங்களில் தன் பணியை சிறப்பாகச் செய்துள்ளார். வைத்தீஸ்வரன் விஷுவல் போல, ஆர். ராஜகோபாலன், அழகியசிங்கர், ரங்கராஜன், விட்டல் ராவ், கிருஷாங்கினி ஆகியோர் பேசும்போது எடுத்த காட்சிகளின் சட்டகங்களும் சிறப்பானவை. ஆனால், சில இடங்களில் மட்டும் கேமராவை அப்படியே ஒரே ஷாட்டில் நிறுத்திவிட்டு டீ குடிக்கப் போய்விடுகிறார். அப்பறமா போனா என்ன தினேஷ்குமார்..?!
வைத்தீஸ்வரனின் சமூகப் பிரக்ஞையுடன் எழுதப்பட்ட ‘மயிலாய்’ கவிதையும் அதன் காட்சி அமைப்பும் டாக்குமென்ட்ரிக்கான தன்மையுடன் சிறப்பாக வந்திருந்தது. அது போலவே சில ஆர்க்கேவ்ஸ் காட்சிகள், அபூர்வமான சில புகைப்படங்கள் இந்த ஆவணப்படத்துக்கு கூடுதல் பலம்.
அவருடைய கவித்துவம் பற்றி ஆர். ராஜகோபாலன், பா. ரவி, இந்திரன், மாலன், வெளி ரங்கராஜன், விட்டல்ராவ், அம்ஷன்குமார், பாவண்ணன், க்ருஷாங்கினி, எஸ். சண்முகம், லதா ராமகிருஷ்ணன், ஓவியர் நாகராஜன், ஜி முருகன், அழகியசிங்கர் அடங்கிய பதிணென் கீழ்க் கணக்குக்கு நாலு குறைவான என் நண்பர்கள் குழு ஒரு மணி நேர சொச்ச ஆவணப்படத்தில் பலபடப் பேசியிருக்கிறது. இலக்கியப் பேச்சுக்கும், சுருக்கமான ஆவணப்பட பைட்டுக்கும் ஆராய்ச்சிக்கும் கிரிட்டிக்கல் அனாலிஸிசுக்கும் என்ன வித்யாசம், இந்தப் படத்தில், என்ன அவகாசத்தில் என்ன தேவை என்று, முதலில் நாம் பலருக்குச் சொல்லிவிட்டுத்தான் ஆடியோ பைட்டே எடுக்க வேண்டும் என்பது என் விழுப்புண் அனுபவங்கள். இதிலும் சிலர் விதிவிலக்காக கரெக்ட்டாகப் பேசியுள்ளனர்.
உச்சத்தில் இருக்கும்போது, நல்ல ஓடியாடும் பருவத்தில் அல்லது நடைஉடையாக இருக்கும்போது தமிழ் எழுத்தாளருக்கு பெரும்பாலும் டாக்குமென்ட்ரி லபிப்பதில்லை. ஒரு எழுத்தாளன் பற்றி படம் வரவேண்டுமென்றால் அவன் கண்டிப்பாக ரிட்டையராக வேண்டியிருக்கிறது. அல்லது கம்பு ஊன்றி நடக்க வேண்டியிருக்கிறது. ஜெயமோகன், ராமகிருஷ்ணன் போன்றவர்கள் இதில் அதிர்ஷ்டக்கார விதிவிலக்குகள். ’லாபமற்ற’ இது போன்ற படங்களை யார் தயாரிக்க முன் வருவார்கள். சாகித்ய அகாடமி விருது பெற்ற தகுதிக்காக அவர்கள் எவ்வளவு பெரிய கோடீஸ்வரராக இருந்தாலும் அவர்களுக்கு இலவச வீடு தந்தே தீருவோம் என்று தமிழ் எழுத்தாளர்களை, தமிழை கெளரவிக்க விரும்பும் தமிழக அரசுதான் இதையும் செய்ய வேண்டும். ஊருக்கு ஊர் வீதிக்கு வீதி ஏகப்பட்ட சிலைகளை நிறுவி மாலைகள் போட்டு, பிறகு என்னென்னவோ மாலைகள் போடப்பட்டதால், அரசு செலவிலேயே அவர்களுக்கு சிறைக்கூண்டு போட்டு, பின் அதற்காகப் பாதுகாப்பு போட்டு விடிவே இல்லாமல் போய்க்கொண்டிருக்கும் இந்த விபரீதங்களுக்குப் பதிலாக அந்தச் செலவில் அந்த இடத்தில் சிறு சிறு நீர் குட்டைகளையாவது அமைக்கலாம்; அசோகமித்திரன் நினைவாக அவர் பிள்ளைகள் செய்தது போல. திராவிட மாடலில் சுற்றுச்சூழலுக்குத் தக்க இப்படியெல்லாம் நிரல்களைச் சேர்த்துக்கொள்ளலாம். இதையெல்லாம் யார் அவர்களுக்குச் சொல்வது. ’இடிப்பாரை’ இடிக்காமல் கேட்கும் காதுகள் அரசுக்கு இருந்தால் தேவலை. சற்று கண்ணயர்ந்தேன் / அதற்குள் பூமி / எங்கோ சென்றுவிட்டது / என்றெல்லாம் வைத்தீஸ்வரன் கவிதைகளைப் படித்ததால் இதையெல்லாம் சொல்லத் தோன்றுகிறது.
சரி, ஆவணப்படம் சார்ந்த கன்ஸ்ட்ரக்டிவான விமர்சனத்துக்கு வருகிறேன். அரசு (திருநாவுக்கரசு) இசையின் மேல் ஆர்வம் உள்ளவர். சில இசைக்கலைஞர்கள் பற்றி புத்தகம் எழுதியவர். அதற்காக சில பரிசுகளும் வாங்கியவர். படிக்கிற காலத்தில் கொஞ்ச காலம் இசையும் படித்தவர்தான். அதற்காக டாக்குமென்ட்ரியில் பேட்டி காணப்படுபவர்கள் பேசிக்கொண்டே இருக்கும்போது, இசையின் மேல் ஆசை உள்ளவனே சங்கடப்படும்படியாக இப்படியா இசை தொந்தரவாக வர வேண்டும்?
பேட்டியின்போது மட்டுமல்ல, வாய்ஸ் ஓவரிலும் வருகிறது. தாழ்வான அமெரிக்கையில் நன்றாக வந்தால் பரவாயில்லை. ஏற்கனவே நம்ம இலக்கியவாதிகள் பேசுவது கிளுகிளுவென்று புரியும். இதில் பொருத்தமில்லாத சத்தமான மியூசிக் வந்தால், என்ன ஆகும். நான் ஹெட்ஃபோனில் வலது பக்கத்தை மட்டும் காதில் வைத்து அந்த ஆடியோ முழுவதையும் கேட்டேன். இடது பக்கம் ஹெட்ஃபோனையும் சேர்த்து காதில் வைத்தால் அது உபாதையாக இருந்தது. ஒலிப்பதிவு ஒலிக்கலவை படத்தின் சிலபஸ்ஸிலேயே இல்லாது போய்விட்டது.
’சொல்லுதல் யார்க்கும் எளிய’ என்பதால் பல கல்லூரிகளில் பேசும்போது நான் வலியுறுத்திச் சொல்லும் விஷயம். ஆவணப்படம் என்பது அடுக்கடுக்கான வெறும் நேர்காணல்களின் தொகுப்பு அல்ல. அதன் சதவிகிதம் மினிமலாக இருந்தால் நல்லது. ‘ஆவணப்படம் என்பது ஆராய்ச்சிக் கட்டுரை அல்ல; சிலதை காட்சி ரீதியாக பிரமிப்பாய் சொல்லி பலதை அறியத் தூண்டுவது’ என்றெல்லாம் சொல்வேன். என்ன.. அதை இப்போது பாடம் எடுக்கும் வாத்தியார்களுக்கும் சொல்ல வேண்டியிருக்கிறது.
ஒருவர் பேசும் காட்சி செல்லும்போதே, அதன் பக்கத்திலேயே கொண்டுபோய் போஸ்ட்டர் ஒட்டுவது போல, அப்படி இமேஜை ஒட்டி ஒட்டிக் காமிக்கணுமா அரசு? பேசும்போது அவர்கள் முகத்திலிருந்து மாறுபட்டு வேறு காட்சிகளை பொருத்தமாக வைக்கக்கூடாதா? அது படத்தின் இசை போலவே வரும் இன்னொரு இடையூறு. மாலன் பேசும்போது மட்டும் வேறு விஷுவல் வந்தது. அதுவும் ஒரே விஷயம்தான் ட்ரெயின் ஒன்று வேகமாக இடதிலிருந்து வலது செல்கிறது, அப்பறம் வலதிலிருந்து இடது செல்கிறது… பத்தாதா..?
மூச்சுவிட முடியாமல் ஏன் அப்படி அடுக்கடுக்கான நேர்காணல்கள்..? நான் பிரதியில் படிக்க வேண்டிய அல்லது வானொலியில் கேட்க வேண்டிய விஷயத்தை ஏன் ஆவணப்படக்காட்சிகளில் கேட்க வேண்டும்..?
உமையாள்புரம் சிவராமன் பற்றி ராஜீவ் மேனன் எடுத்தபடம், காருக்குறிச்சி அருணாசலம் பற்றி ஆர். ஆர் சீனிவாசன் எடுத்தது, ஆர். வி. ரமணி எடுத்த ’ஓ… தட்ஸ் பானு’ படம் எல்லாம் இதே காலகட்டத்தில்தான் வந்துள்ளன.
சமையலில் மட்டுமல்ல; ஆவணப்படத்திலும் எது எது என்னென்ன அளவில் இருக்கவேண்டுமென்பதும் முக்கியம். இல்லையென்றால் ருசியும் பதமும் மாறிவிடுமில்லையா..? இதையெல்லாம் நான் அரசுக்கு மட்டும் சொல்லவில்லை; எனக்கும் சேர்த்துத்தான் சொல்லிக்கொள்கிறேன்.
ஆலையில்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை என்பது போல, பல சமயங்களில் பல விதமான இடர்ப்பாடுகளோடு, மன நெருக்கடிகளோடு, பொருளாதாரச் சங்கடங்களோடு கையில் கிடைத்த கேப்பையில் செய்த களியென ஏதோ இதையாவது நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம் என்ற சமாதானத்தில்தான் நாங்களெல்லாம் தப்பித்துக்கிடக்கிறோம்.