மூன்றாவது தினம் மழை கொட்டி எங்கள் திட்டங்களைக் குளறுபடி செய்து விட்டது. அப்படியும் மாலையில் ஜப்பானின் புகழ் வாய்ந்த சென்சோ-ஜி (Senso-Ji) என்ற பழமையான புத்தர் கோவிலைக் காணச் சென்றோம். அவலோகிதேஸ்வரா என்னும் புத்தருக்கு இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. டோக்கியோவிலேயே மிகவும் பழமையான புத்தர் கோவில் இதுவாம்.
கோவிலை நோக்கிச் செல்லும் வழியில் ஒரு குறுகிய தெருவின் இருபுறமும் கடைகள், நானாவிதமான பொருட்களையும் விற்பனை செய்கின்றன. பரிசுப் பொருட்கள், பாரம்பரிய ஜப்பானிய உணவு வகைகள், ஜப்பானியர்களின் புகழ் வாய்ந்த சிவப்பு பீன்ஸ் கேக்குகள், விரித்து மூடும் ஜப்பான் விசிறிகள், ஆடைகள், அணிமணிகள், டி- ஷர்ட்டுகள், இன்ன பிற!! பாரம்பரிய பீன்ஸ் கேக்குகளைத் தயாரிப்பதையும் பக்கத்தில் நின்றே பார்க்கலாம். அவர்கள் கொடுக்கும் சாம்பிளை ருசித்துப் பார்த்து விட்டு தேவைப்பட்ட அளவு வாங்கிக் கொள்ளலாம்! என்ன வாங்குவதென்று தான் திண்டாட்டம். எங்கள் பெட்டிகள் சிறியவை. எத்தனை சாமான்களைத் திருப்பி எடுத்துச் செல்வது என மலைத்தோம்!
கோவிலுக்குள் புகும் முன்பு, ஒரு பெரிய கணப்பு – அடுப்பு போன்ற ஒன்றில், வாசனைப் பொருட்களை வாங்கி எரிய விடுகிறார்கள் – குங்கிலியம், சாம்பிராணி போல இருந்தது. இன்னும் உள்ளே சென்றால், ஒரு செயற்கை நீரூற்று – பல குழாய்களுடன். நாம் கோவிலுக்குள் செல்லும்போது கால்களை நீரில் சுத்தம் செய்து கொள்வதைப் போல் இங்கு, இந்த நீரில் கைகளைக் கழுவிச் சுத்தம் செய்து கொள்கின்றனர். ஆனால், கோவிலுள் செல்லும்போது காலணிகளைக் கழற்றுவதேயில்லை. இதன் கருத்து நமக்கும் புரியவில்லை. ஆயினும், நாங்களும் கைகளைக் கழுவிக் கொண்டோம்.
உள்ளே சென்று புத்தரைக் கண்டு வழிபடுகிறோம். காலணிகளுடன் உள்ளே செல்லக் கூசத்தான் செய்கின்றது. எல்லாரும் சில நாணயங்களை கருவறையின் உட்புறமாக வீசுகின்றனர் – ஆஹா! இதுவும் நம்மூரில் செய்வது போலவே இருக்கிறதே என வியக்கிறோம்! நிறைய வெளிநாட்டுப் பயணிகள் வந்து காணும் இக்கோவிலில் ஓரிடத்திலும் ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்ட விளக்கங்கள் காணவில்லை என்பதுதான் வருத்தம் தருகிறது.
வெளியே வரும் வழியில், நூறு யென் (ஜப்பானியப் பணம்) கொடுத்தால் நமக்குத் தேவையான தாயத்து போன்றவைகளைக் கோவில் கடைகளிலிருந்து வாங்கிக் கொள்ளலாம். குடும்பத்தினரின் மகிழ்ச்சிக்கு, உடல் நலத்திற்கு, பத்திரமாகக் கார் ஓட்டுவதற்கு, குழந்தைப் பேற்றுக்கு, என்றெல்லாம் வைத்திருக்கிறார்கள். மிகுந்த துழாவலின் பின்பு, நாமும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து வாங்கிக் கொள்கிறோம்.
அடுத்தநாள் காலையிலேயே கிளம்பி விட்டோம். எங்கு தெரியுமா?
நான் நீண்ட நாட்கள் முன்பே ஹச்சிகோ (Hachiko) என்ற எஜமான விசுவாசம் மிகுந்த ஒரு ஜப்பானிய நாயின் நிஜக்கதையைக் கேள்விப் பட்டிருந்தேன். அதற்கு டோக்கியோவில் ஒரு சிலை இருப்பதாகவும் அறிந்திருந்தேன். அதைக் காணும் ஆவலில் தான் கிளம்பினோம். இந்த நாயின் கதை மனதைத் தொடும் ஒன்று.
சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் டோக்கியோ பல்கலைக் கழகத்தில் இருந்த ஒரு பேராசிரியரிடத்தில் ஒரு நாய் இருந்தது. அது தான் ஹச்சிகோ. மிகவும் எஜமான விசுவாசம் கொண்ட அது தினமும் பேராசிரியர் வேலையிலிருந்து திரும்பும் போது காத்திருந்து அவரை ஷிபுயா (Shibuya) ரயில் நிலையத்தில் எதிர் கொள்ளுமாம். நீண்ட நாட்களாக இது நடந்து வந்தது. ஒரு நாள் பேராசிரியர் திரும்பவில்லை. ஏனெனில் அவர் மூளையில் உண்டான ரத்தப் பெருக்கினால் பல்கலைக் கழகத்திலேயே இறந்து விட்டார். ஆனால் ஹச்சிகோ அவருக்காகக் காத்திருந்தது. அதன்பின்னும் அடுத்த ஒன்பது வருடங்கள், ஒன்பது மாதங்கள், பதினைந்து நாட்கள் ஆகிய ஒவ்வொரு நாளும் ஹச்சிகோ அவருக்காகவே, மாலையில் அவருடைய ரயில் வரும் நேரத்தில் ரயில் நிலையத்தில் காத்திருக்குமாம்! என்னவொரு எஜமான விசுவாசம். உள்ளத்தைத் தொடும் ஆச்சரியமான உண்மைக்கதை.
மற்ற பயணிகள் இந்த நாயை நாள்தோறும் பார்ப்பார்கள்; அதன் முழுக்கதையையும் அறிந்தவர்கள், அதன் மேல் இரக்கமும் அன்பும் கொண்டு அதற்கு உணவு முதலியவற்றை நாள் தோறும் கொண்டுவர ஆரம்பித்தனர். ஹச்சிகோவைப் பற்றிப் பத்திரிகைகளில் பல கட்டுரைகள் வெளிவந்தன. விசுவாசத்தின் பிரதிநிதியாகக் கருதப்பட்டு
அது ஜப்பானில் தேசிய அளவில் புகழ் பெற்றது.
ஹச்சிகோ 1935-ல் நீண்ட நாள் கான்சரினால் இறந்தது. இதன் சமாதி பேராசிரியரின் சமாதியினருகே உள்ளதாம். இதன் உடலும் பாடம் செய்யப்பட்டு டோக்கியோ மியூசியத்தில் உள்ளதாம். 1934-ல் ஹச்சிகோவிற்கு ஒரு வெண்கலச் சிலை வடிக்கப்பட்டு அது ஷிபுயா ரயில் நிலையத்தில் திறந்து வைக்கப்பட்டது. இதன் திறப்பு விழாவிற்கு ஹச்சிகோவே உயிருடன் இருந்ததாம். இந்தச் சிலை இருக்கும் ஷிபுயா ரயில் நிலைய வாயில் ‘ஹச்சிகோ வாயில்’ (Hachiko entrance) எனவே அழைக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 8-ம் தேதி நாய்ப்பிரியர்கள் ஒன்று கூடி, ஹச்சிகோவைப் பெருமைப்படுத்தும் வண்ணம் இங்கு ஒரு நிகழ்ச்சியை நடத்துவார்களாம். அதனால் தானோ என்னவோ, நாங்கள் சென்றிருந்த ஜூன் மாதத்தில் அதன் கழுத்தில் ஒரு பிளாஸ்டிக் மலர்மாலை கூட காணப்பட்டது.
ஒரு நாய் நம்மிடம் வைக்கும் பிரியமும் விசுவாசமும் எத்தகையது என்று நாய் வளர்த்து அதனிடம் அன்பு செலுத்தியவர்களுக்கே தெரியும். எங்களுடைய அபிமான நாயைப் பற்றி நினைந்து நாங்கள் உள்ளம் நெகிழ்ந்தோம்.
ஆகக் கூடி, அந்த இடம் ஷிபுயா என்ற உலகப் புகழ் பெற்ற சந்திப்பின் நடுவில் அமைந்திருப்பதை தற்செயலாகத்தான் அறிந்தோம். அவரவர்களுக்கு அவரவர் எண்ணங்கள் தாம் முக்கியம் என இதிலிருந்து புலப்படவில்லையா?
ஷிபுயா சந்திப்பைக் (Shibuya crossing) காணவும், அந்தக் கூட்டத்தினோடு கலந்து நாமும் நிற்கவும், சந்திப்பைக் கடக்கவும் கிளம்பி விட்டோம்.
அதென்ன ஷிபுயா சந்திப்பு?
இது உலகப் புகழ் வாய்ந்தது. நான்கு குறுக்குத் தெருக்கள் கூடுமிடம். நெரிசல் நிறைந்த போக்குவரத்து. அத்தனை வாகனங்களும் சிறிது நேரத்திற்கொருமுறை நின்று, மக்கள் அந்தச் சாலைகளைக் குறுக்காகக் கடக்கும் வரை காத்து நிற்கின்றன.
இங்கு ஒரே தடவையில் நாலாயிரம் பேர் மொத்தமாகச் சாலைகளைக் கடக்கின்றனர் எனப் புள்ளி விவரங்கள் கூறுகின்றனவாம்!!!
கிட்டத்தட்ட தொண்ணூறு நொடிகள். மக்கள் ஆவலாகக் காத்திருக்கின்றனர். புற்றீசல் மாதிரி, நிதானமாகப் பதற்றமேயின்றி, உலகின் புகழ் வாய்ந்த சந்திப்பைக் கடக்கின்றோம் என்ற நினைப்பில் அந்த நிமிடத்தை அணுவணுவாக அனுபவித்து ரசித்த வண்ணம் கடக்கின்றனர்! நிறைய பேர் நீண்ட செஃல்பி ஸ்டிக்குகளில் பொருத்திய தங்கள் கைபேசிகளில் அந்தத் தருணத்தைப் பதிவு செய்தபடி கடப்பது பார்க்கும் நமக்கு வேடிக்கையாக இருக்கின்றது. நாமும் அந்தத் தருணத்தை ரசித்த வண்ணம் அவர்களுடன் கலந்து ஷிபுயா சந்திப்பினைக் கடக்கிறோம்.
சரித்திரப் புகழ் வாய்ந்த ஷிபுயா சந்திப்பில் நமது காலடிகளையும் பதிவு செய்தாகி விட்ட திருப்தியில் நாம் அடுத்துச் செல்ல வேண்டிய இடத்தை நோக்கி நடையைக் கட்டுகிறோம்.
இந்த இடம், Technology- எனப்படும் தொழிற்கலை விஞ்ஞானத்தின் அடுத்த கட்டமாகச் செயல்படும் ஒரு உணவகம்! உள்ளே செல்லலாமா?
வரவேற்று நம் கையில் டோக்கன் போன்ற ஒரு அட்டையை அளிக்கிறார்கள். உள்ளே வரிசையாக உயரமான மேசைகள், நாற்காலிகள்; ஆனால் ‘வெயிட்டர்கள்’ என்பவர்களோ, உணவு பரிமாறுபவர்களோ கிடையாது. ஒவ்வொரு நாற்காலியின் முன்பும், சுவரில் பொருத்தப்பட்ட கணினிகள். அவற்றைத் தட்டினால், கண்முன் விரியும் ‘மெனு’; இந்தக் கணினியிலேயே ஆர்டர் செய்ய வேண்டும். சமையலறைக்குச் செய்தி அதன்வழி போய் விடும்.
ஆச்சரியம் அடுத்துக் காத்திருக்கிறது! 5 முதல் 7 நிமிடங்களுக்குள் நமது உணவு, சுடச்சுட, நாம் அமர்ந்திருக்கும் இடத்திற்கு நம்மை நோக்கி அனுப்பப்பட்டு விடும். ஆம். ஒரு தானியங்கி மேசை (conveyer belt) மூலம் அழகாகத் தட்டில் வைக்கப்பட்டு உணவு வருகை தரும்!! (உடன் உள்ள வீடியோவைப் பார்க்கவும்). நம் முன் தட்டு அழகாக வந்து நிற்கும்! இவ்வாறு நமக்கு வேண்டும் என்னும் உணவு வகைகளை ஆர்டர் செய்து சாப்பிடலாம். உணவுகளுக்குத் தேவையான பொருட்களான, உப்பு, மிளகு, நான்கைந்து வித ஸாஸ்கள், குடிநீர் முதலியன நமது டேபிளிலேயே வைக்கப்பட்டிருக்கும். வேண்டியவற்றை ஆர்டர் செய்து சாப்பிட்டோம். பின்பு வெளியே செல்லும்போது நமது டோக்கனைக் கொடுத்தால் அதில் நாம் சாப்பிட்டவற்றுக்குண்டான விலை காஷியரின் கணிணியில் தெரியும். காசைக் கொடுத்து விட்டு வர வேண்டும். அவ்வளவு தான்.
இது எப்படி இருக்கு? இந்த எதிர்கால உணவகத்தில் சாப்பிடுவதே ஒரு தனி அனுபவம்!
இன்னும் இதுபோல கண்டும் கேட்டும் களிக்க எத்தனையோ அனுபவங்கள் இருக்கும். அடுத்தமுறை வந்தால் பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டோம்.
சொல்ல மறந்து போகக் கூடாத விஷயம்- ஜப்பானியர்களின் பணிவும் அன்பும். சாலையை அடைத்துக் கொண்டு நான்கு பேர் நடந்தால், ‘எக்ஸ்கியூஸ் மி’ எனக் கேட்டுக் கொண்டு கூட செல்ல மாட்டார்கள். நீங்களாக அறிந்து வழி விட்டால் சரி. பணத்தைக் கையால் கொடுப்பதில்லை, ஒரு சின்ன ‘டிரே’யில் வைத்து நம்மிடம் நீட்டுவார்கள். நாமும் ஏதேனும் வாங்கினால், காஷியரின் முன்பிருக்கும் டிரேயில் பணத்தையோ, கிரெடிட் கார்டையோ வைத்து அளிக்க வேண்டும்.
இந்த ஜப்பான் விஸிட் அமர்க்களமாகத்தான் இருந்தது! வாய்ப்புக் கிட்டினால் இன்னுமொரு முறை செல்ல வேண்டும்.
(நிறைந்தது)
_
‘குவிகம்’ உறுப்பினர்களுக்காக ஒரு Group Tour to Japan நீங்கள் முன்னின்று ஏற்பாடு செய்யலாமே! அந்த நன்றியுள்ள நாயின் சிலையைப் பார்க்கவேண்டும்போல் இருக்கிறது!
LikeLike