
பொண்ணுக்கு மாப்பிள்ளை நிச்சயம் பண்றதுக்குள்ள பெரிய பாடாய்ப் போயிருச்சு. மாப்பிள்ளை தேடிச் சம்மந்தம் பேசி முடிக்கிறது
சாதாரண வேலை இல்லை.
பல இடங்களில் இருந்தும் ஜாதகம் வந்தது. இன்ஜினியரு, விவசாய ஆபீஸர், பாரஸ்ட் ஆபீஸர் அப்படின்னு பல பேரோட ஜாதகம் வந்தது. ஆனால் எனக்குத்தான் மனசுக்குப் பிடிக்கல. இவர்கள், எல்லாம் கொஞ்ச காலத்துக்கு பிறகு இடம் மாறுதலாகி ஊர் ஊரா போய்கிட்டே இருப்பாங்க. குடும்பமும் கூடவே போய்கிட்டே இருக்கணும். நாளைக்குப் புள்ள குட்டி ஆகிப் போச்சுன்னா அதுக படிக்கிற ஒரு பள்ளிக்கூடத்தில் நிலைச்சி நின்னு படிக்க முடியாது.
போகிற ஊர்ல, கிடைக்கிற பள்ளிக் கூடத்தில் தான் சேர்க்கணும். தண்ணீர் மாறும், பேச்சு, பழக்க வழக்கம் மாறும். நான் துவண்டு போயிட்டா என்னால புள்ளையப் பாக்கறது கூடக் கஷ்டம்.
இதையெல்லாம் யோசித்துப் பார்த்தப்பந்தான் பக்கத்து ஊர்ல உள்ள பெரிய பள்ளிக்கூடத்துல பெரிய வகுப்பு வாத்தியார் ஜாதகம் வந்தது.
அந்த ஜாதகத்தைப் பார்த்தேன். ஜாதகம் பொருந்தி இருந்தது. நல்ல குடும்பமா தெரிஞ்சது. புண்ணியமான வேலை. ஒரே ஊர்ல குடும்பம் நிக்கும்.
பேசும்போது அது வேணும் இது வேணும்னு கேட்கல. ஒரே பொண்ணு, பெரியவங்க காலத்துக்குப் பிறகு யாருக்கு அப்படின்னு நினைச்சி இருக்கலாம். மாப்பிள்ளை பையனத் பத்தி விசாரிச்சேன். எந்தப் பழக்கவழக்கமும் கிடையாதுன்னு தெரிஞ்சது .
இந்த காலத்துல அதுதான் ஐயா பெரிய விஷயம்! வீட்டுக்கு வந்து சம்சாரத்தை கிட்ட சொன்னேன். அவளுக்கும் சந்தோசம்தான்.
“ஆனால் உங்க அக்கா மகனை நினைத்தால் ஈரக்குலை நடுங்குது.
அவன் நம்ம வீட்டுக்கு முன்னாடி குடிச்சிட்டு வந்து ஆடுன ஆட்டம் தாங்கல.
மாப்பிள்ளை பாக்குறீங்களா? மாப்பிள்ளை எவன் வாரான்னு பாத்துடறேன். அசல் ஊர்ல மாப்பிள்ளை பாக்குறீங்க! பாக்கிறேன் எவன் வந்தாலும் இவள் எனக்குத்தான்னு” கூப்பாடு போட்டுட்டு போயிட்டான்.
நாங்கள் வீட்டைக் பூட்டிட்டு உள்ளே இருந்தோம்.
ஊர்ல என் கூடப் பிறந்த அக்காவும் இருக்கா. மச்சினர் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி காலமாயிட்டார்.
எல்லாம் இந்தப் பையனைப் பத்தின கவலைலதான் அவரு காலமாயிட்டாரு.
எங்க அக்காவுக்கு அவனைப் பத்தி நல்லா தெரியும். தறி கெட்ட கழுதையா இருந்தாலும் அவளுக்குப் புள்ள தானே!
ஒருநாளு என் வீட்டுக்கு வந்தா. பொண்டாட்டியும் மகளும் தோட்டத்துக்குப் போன நேரம். “தம்பி, உன் பொண்ணுக்கு வெளியில மாப்பிள்ளை பார்க்கிறதா கேள்விப்பட்டேன். என் மகனோ கட்டுனா இவளைத்தான் கட்டுவேன்னு ஒத்த கால்ல நிக்கிறான். நீ போய் மாமா கிட்ட பேசணும்னு அலப்பறை பண்றான்.
நீயும் யோசிச்சு பாரு ஒன்னுக்குள்ள ஒன்னு ஆயிரும். அவனுக்கும் காடு கரை இருக்கு. நான் இருக்கிற வரைக்கும் பார்த்து விடுவேன். மருமகளும் வந்த ராசியில அவன் திரிந்திட மாட்டானா அப்படின்னு நினைச்சு பார்க்கேன் . கெட்ட நேரம், இப்படி இருக்கான்.
நல்ல நேரம் கூடி வந்தா நல்லா ஆயிடுவான்! பொண்ணுகிட்டயும் பொண்டாட்டி கிட்டயும் கலந்துக்க. நானும் இப்படி இருக்கானே என்னன்னு உன்கிட்ட பொண்ணு கேட்கிறது என்று மலைச்சிக்கிட்டு இருந்தேன்.
சரி ஒரு நேரம் வந்தா நல்லாயிருவான்னுதான் சொல்றேன்.
எனக்கு நல்ல பதிலைச் சொல்லுய்யா ” என்றாள்.
நீ நினைக்கிற எதுவும் உனக்குச் சரிதான். ஆனா நீ நினைக்கிற மாதிரி நான் நினைக்க முடியாது. ஏன்னா நான் பொண்ணைப் பெத்தவன். உன் புள்ள சரியில்லைன்னு நீயே ஒத்துக்கிடுதே! அவன் திருந்து வான்னு சொல்ற.
அதுக்கு என் புள்ளையை வைச்சிச் சூதாட நான் தயார் இல்லை.
அவன் திருந்தலைன்னா எங்க குடும்பம் சிதறி போகும். என்னை இந்த விஷயத்தில் கட்டாயப்படுத்தாதே. வேறு ஏதுன்னாலும் சொல்லு
செய்றேன். “என்றேன் .
இந்த விஷயம் அவனுக்கு தெரிஞ்ச பிறகு தான் வீட்டுக்கு முன்னாடி வந்து கத்தி ஆட்டம் போட்டு இருக்கான்.
கல்யாணம் முடிகிற வரைக்கும் அவனை கண்டுக்காம இருக்கிறதுதான் நல்லது. பேசினால் பொல்லாப்பு.
கல்யாண வேலைகள் நடந்து கண்டிருந்தது. கல்யாணத்தையும் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க நடத்துறாங்க,நான் செலவில் பாதி கொடுக்கிறது என்று பேச்சு.
எனக்குத் தோரணைக்கு ஆள் பலம் போதாது. டவுனுக்கு ஒவ்வொன்னுக்கும் அலைய முடியாது.
அதுபோக எனக்கு உள்ளுக்குள்ள ஒரு ஒதறல் இருந்துகிட்டே இருக்கு. எங்கே கல்யாணத்துல கலாட்டா பண்ணிக் காரியத்தைக் கெடுத்து விடுவானோன்னு பயந்தான். முரட்டு பையன், குடிகாரன்வேற.
பயப்படாம என்ன செய்ய?
காலையில ஆறுல இருந்து ஏழரைக்குள்ள முகூர்த்தம். எல்லாரும் மண்டபத்தில் தான் இருந்தோம். எங்க மற்ற சொந்தக்காரங்க எல்லாம் உறங்கப் போயிட்டாங்க.
எனக்கு நெருக்கமான ஆளுங்களைக் கூப்பிட்டு, காலை முகூர்த்தத்தில் அவன் கலாட்டாப் பண்ணி விடக்கூடாதுன்னு “வாசல்ல நின்னுக் கோங்க கண்ணு ரோட்டு மேலேயே இருக்கணும், நகரக் கூடாது.
அவன் வந்தால் உள்ளே விட வேண்டாம். சடார்னு துண்டைப் போட்டு மூஞ்சியைக் கட்டித் தூரத்தில் தூக்கிட்டு போயிருங்க.
முகூர்த்தம் முடிஞ்சாப் பிறகு அவனை அவுத்து விட்டாப் போதும்” அப்படின்னு சொல்லியிருந்தேன்.
மணி நாலு. குளிச்சிட்டு ஆட்களை தயார் பண்ணி அஞ்சு மணிக்கு எல்லாம் வாசலில் சேர் போட்டு உட்கார வைத்து விட்டேன்.
எங்க கிராமத்து கூட்டம், சொந்த பந்தங்கள் கூட்டம், மற்றவர்கள் எல்லாம் கூட வேலை செய்ற வாத்தியார்கள் குடும்பம்னு ஏகப்பட்ட ஜனங்கள்.
எல்லாரையும் வாங்கன்னு சொல்லி உட்கார வைத்துவிட்டு அடிக்கடி வாசலையும் பார்த்துக்கொண்டிருந்தேன்.
நம்ம ஆட்கள் அசந்த நேரத்துல அவன் உள்ளே வந்துடக்கூடாது இல்லே.
பொண்ணு மாப்பிள்ளை உட்கார்ந்து சடங்குகள் நடந்தது. என்னையும் உட்கார வைத்து மந்திரங்களை சொன்னார்கள்.
எந்திரிச்சு ஒரு நடை வாசலுக்கு போயிட்டு வந்தேன். மணவரையில் நிக்கச் சொல்லிட்டாங்க.
வாசல்ல ஒரு கண்ணு, பொண்ணு மாப்பிள்ளை ஒரு கண்ணுமா இருந்தேன்.
என்னைத் தாலி எடுத்துக் கொடுக்கச் சொன்னார்கள்.
“கெட்டிமேளம், கெட்டிமேளம்”
என் குலதெய்வத்தை வேண்டிக்கிட்டேன்.
மாப்பிள்ளையின் கையில் தாலியைக் கொடுத்தேன்.
கெட்டிமேளம் முழங்க தாலியைக் கட்டினார்.
எல்லோரும் சாப்பிடப் போய்கிட்டு இருந்தாங்க.
எங்க அடுத்த வீட்டு பையன் ஓடியாந்தான்.
“சின்னையா, சின்னையா நம்ம ராமசாமி ஊரிலிருந்து பைக்ல வந்து இருக்கான். மண்டபத்துக்குத் திரும்புற முக்குல லாரியில் மோதி ரோட்டில் கிடக்கிறான்னு வெளியே வந்தப்ப வாசல்ல பேசிக்கிட்டாங்க. ஒரே கூட்டம்.
இருட்டுல அடிச்சிட்டு தப்பிச்சு நிக்காமப் போயிட்டானாம். போலீசு கூட்டமாயிருக்கு. நேராகப் போய் பார்த்துட்டு வந்தேன் .
ஆம்புலன்ஸ் வண்டியிலே ஏத்திக்கிட்டிருந்தாங்க
உடம்பெல்லாம் ஆடி போச்சு. என்ன செய்யறது ?
மண்டபத்தில் அக்காவைத் தேடினேன்.
கல்யாணத்துக்கு வரவில்லை என்று தெரிய வந்தது
ஆட்களை கூப்பிட்டு பந்தியை வேகப்படுத்த சொன்னேன்.
சம்சாரத்திடம் மண்டபத்தில் முறைகளை செய்யச் சொல்லிட்டு எல்லாம் முடிந்து மாப்பிள்ளை வீட்டுக்கு போக ஏற்பாடு செய்தேன்.
ஊருக்கு அக்காவிடமும் மற்றவர்களிடமும் தகவல் சொல்லப் பக்கத்து வீட்டுப் பையனை அனுப்பி வைத்தேன்.
மேற்கொண்டு நடக்க வேண்டிய காரியங்களுக்கு ஏற்பாடு செய்ய
ஊருக்கு சொந்தக்காரங்களை அனுப்பி விட்டுத் துணைக்கு ஆள்களைக் கூட்டிகிட்டு ஆஸ்பத்திரியை நோக்கி நடந்தேன், அவன் உடலை வாங்குவதற்கு.