ரவி சுப்ரமணியன் அவர்களின் ‘ தாமரை ‘ குறும்படம் பார்த்த பாதிப்பில் எழுதியது
———————————————————————————————————————————————–
அறிவுசார் வளர்ச்சிக் குறைபாடு உள்ள ‘தாமரைப் ‘ பெண்ணின் குடும்பத்தினரின் குறைகளையும் நிறைகளையும் அப்படியே எடுத்துக்காட்டி நம் கண்களை நிரப்பி விடுகிறார் இயக்குனர் ரவி சுப்ரமணியன்.
இதய பலவீனர்கள் பார்க்க வேண்டாம் என்று சில படங்களுக்குக் கொடுக்கும் முன்னெச்சரிக்கை போல் இரக்க பலவீனம் உள்ளவர்கள் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டாம் என்று சொல்லலாம். ஒவ்வொரு ப்ரேமாக அவர் எடுத்துக்காட்டும் சோகக் காட்சிகள் இரக்க குணம் உள்ளவர்களைப் பாடாய்ப் படுத்திவிடும்.
தாமரைப் பெண்ணுக்கு மன நலம் சரியாக அவள் தாயாரோடு சேர்ந்து அந்த கிராமத்துச் சாமிகளை இறைஞ்ச வைத்து விடும். இது போன்ற குழந்தைகளுக்கு மறு வாழ்வு அளிக்க வைக்கும் இல்லங்களைத் தேட வைத்து விடும். படத்தின் இறுதியில் கேட்கப்படும் அன்பை அந்தக் குழந்தைகளுக்கும் அவர்தம் பெற்றோருக்கும் கொடுக்க வைத்து விடும். படத்தின் நோக்கம் நிறைவேறிய திருப்தியை இயக்குனருக்கும் அளித்து விடும்.
ஆரம்பம் முதல் இறுதி வரை , அந்த நோக்கம் சற்றும் குறையாமல் இருக்கும்படி காட்சிகளை அமைத்திருப்பது இயக்குனரின் திறமை. அந்தக் கிராமம், அந்த வீடு என்று இயக்குனர் தேர்ந்தெடுத்த இரண்டு இடங்களும் கதையின் போக்கையும் கதை மாந்தர்களின் போக்கையும் நியாயப்படுத்தும் விதமாக அமைந்திருப்பது மிகவும் சிறப்பு.
அந்த வீட்டின் அடுப்படி, திண்ணை, அந்தக் கிராமத்தின் ஆட்டு மந்தை, தூக்கணாங் குருவிக் கூடுகள், எருக்கம் பூக்கள் எல்லாமே ஒவ்வொரு காட்சியிலும் கதையின் உணர்வுக்குத் துணை செய்யும் குறியீடுகளாய் மாறியிருப்பது கூர்ந்து கவனிப்போருக்குப் புரியும். ஒவ்வொரு காட்சியையும் விவரிப்பதை விட, பார்ப்போர் பார்த்து உணர்வதே உத்தமம்.
ஆணாதிக்க மனப்பான்மை, பெண்களைப் போகப் பொருளாக நினைக்கும் மனப்பான்மை எல்லாவற்றையும் காண்பித்ததோடு நின்று விடாமல் அதற்கு எதிராக அரிவாளோடும் , விளக்கு மாறோடும் பொங்கும் பெண்மையையும் காண்பித்து சமுதாய மாற்றத்திற்கும் வழிகாட்டுகிறார் இயக்குனர்.
ஒவ்வொரு பாத்திரமும் நம்பக் கூடிய முறையில் அமைந்துள்ளன. மூன்று குழந்தைகளுக்கு மணமுடிக்க முடியாமல் தவிக்கும் தகப்பன், அதற்குக் காரணம் என்று நம்பும் மனநலக் குறைவான நான்காவது மகளைக் கொல்ல நினைப்பதை ஒத்துக் கொள்ள முடியாவிட்டாலும் , பெண்சிசுக் கொலை செய்யும் சில மாவட்டக் கிராமச் செய்திகளை பார்த்திருக்கும் காரணத்தால் நம்பாமல் இருக்க முடியவில்லை. ஒத்துக் கொள்வதும் நம்புவதும் வேறு வேறு தானே.
அங்கே தாய்மையின் கருணையும் , கோபமும் கலந்து காண்பித்து அந்தக் கொடூரத்தைத் தவிர்த்திருப்பது ஒரு திருப்தி. கடைசியில் மூன்று பெண்களை மணமுடித்துக் கொடுத்த பின் அந்தத் தந்தையின் மனம் மாறுவதும் இயல்பு . ஆனால் கடைசியில் அவர்கள் பாதையில் பாதி தூரம் சென்று , குற்ற உணர்ச்சியில் தொடர முடியாமல் அவன் வேறு பாதையில் செல்வதும் அந்த கதாபாத்திரத்திற்கு இயல்பு.
ஆனால் படத்தின் நடுவில் , சிறுத்தை இழுத்துச் சென்று விட்டதாய் நம்மை நம்ப வைப்பதற்காகத் தாயின் கதா பாத்திரம் , தாமரையை நினைத்து வருந்துவதாக வரும் ஒரு பாடல் காட்சி , இரண்டாம் முறை பார்க்கும் போது கொஞ்சம் இடிக்கிறது என்பதையும் சொல்லத்தான் வேண்டும். ஆனால் அவள் வீட்டில் இல்லையே என்று வருந்துவதாக நினைத்து சமாதானப் படுத்திக் கொள்ளலாம். இயக்குனரின் திருப்திக்காக.
நடிகர்கள் தேர்வு மிகவும் சிறப்பு. பாத்திரமாகவே மாறியிருந்தார்கள். மிகைப்படுத்தாத இயல்பான நடிப்பு. ஒளிப்பதிவு இரவையும் , பகலையும், கிராமத்தையும் வீட்டையும் அதன் அழகோடும் , வறுமையோடும் இயல்பாகக் காட்டுகிறது. சிறுத்தை அறிவிப்புப் பலகையில் அந்த இலக்கணப் பிழைகள் மிகவும் இயல்பு.
பொருத்தமான பாடல் வரிகள் அந்தந்த நிகழ்வுக்கு ஏற்ப அமைந்துள்ளன. கடைசியில் . ‘விதி கிடக்குது விதி … ஈரக் கை பட்டு அஞ்சறைப் பெட்டியிலே கடுகு முளைக்கலையா ‘ வரிகளில் நேர்மறை சிந்தனைகள் நிரம்பி வழிகின்றன. தாமரை மலர்வாள் என்ற நம்பிக்கை பிறக்கிறது .
மிக அருமையான விமர்சனம்.
LikeLike