1968ல், குடியிருந்த கோயில் படத்திற்காக , அந்தப் பாட்டு ஒலிக்கிறது. பிறகுதான் அது கோவையைச் சார்ந்த புலமைப்பித்தனின் கவிப் புனையல் என்று பரவுகிறது.
நான் யார் நான் யார் நீ யார்
நாலும் தெரிந்தவர் யார் யார்
தாய் யார் மகன் யார் தெரியார்
தந்தை என்பார் அவர் யார் யார்
உறவார் பகையார் உண்மையை உணரார்
உனக்கே நீ யாரோ ?
வருவார் இருப்பார் போவார்
நிலையாய் வாழ்வார் யார் யாரோ ?
உயிரார் பறப்பார் உடலார் கிடப்பார்
துணை யார் வருவாரோ ?
நரியார் நாயார் கடிப்பார் முடிப்பார்
நாளைக்கு யார் யாரோ ?
தொடர்ந்து, *டி.எம்.எஸ்-ஏ.எல்.ராகவன்* இருவரதுக் கூட்டு தயாரிப்பில் உருவான, *’கல்லும் கனியாகும்’* படத்திற்காக ,
எங்கே நான் வாழ்ந்தாலும்
என் உயிரோ பாடலிலே
பாட்டெல்லாம் உனக்காக
பாடுகிறேன் எந்நாளும்
பாடுகிறேன் என்னுயிரே.
மனிதன் எங்கே மனிதன் எங்கே
இறைவனை நான் கேட்டிருந்தேன்
படைத்து வைத்தும் கிடைக்கவில்லை
அவனும் இங்கே தேடுகிறான், என்று அற்புதமாக தந்தவர்.
அரசவைக் கவிஞராக, பின்னர் தமிழக சட்டமன்றத்தின் துணைத் தலைவராக, தொடர்ந்து அரசியலிலும் பயணித்தவர்.
அவர் புனைந்த பாடல்கள தான் எத்தனை எத்தனை !
- அழகென்னும் ஓவியம் இங்கே – *ஊருக்கு உழைப்பவன்*
ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா – *அடிமைப் பெண்*
கங்கை நதியோரம் ராமன் நடந்தான் – *வரப்பிரசாதம்*
அமுத தமிழில் எழுதும் கவிதை – *மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்*
தென்றலில் ஆடும் கூந்தலில் – *மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்*
புல்லாங்குழல் மொழி தமிழ் தமிழ் தமிழ் என – *ஊரும் உறவும்* - இன்பமே உந்தன் பேர் பெண்மையோ – *இதயக்கனி*
இன்று சொர்க்கத்தின் திறப்பு விழா – *பல்லாண்டு வாழ்க*
பூமழை தூவி – *நினைத்ததை முடிப்பவன்*
எங்கே அவள் என்றே மனம் தேடுதே ஆவலால் ஓடிவா – *குமரிக்கோட்டம்* - உன்னை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை – *நீயா*
உனது விழியில் எனது பார்வை – *நான் ஏன் பிறந்தேன்*
நீ என்னென்ன சொன்னாலும் கவிதை – *நேற்று இன்று நாளை*
பாடும் போது நான் தென்றல் காற்று – *நேற்று இன்று நாளை*
சிரித்து வாழவேண்டும் – *உலகம் சுற்றும் வாலிபன்*
நாளை உலகை ஆளவேண்டும் – *உழைக்கும் கரங்கள்*
இந்த பச்சைக்கிளிக்கொரு *நீதிக்குத் தலைவணங்கு* - இனியவளே என்று பாடி வந்தேன் – *சிவகாமியின் செல்வன்*
எத்தனை அழகு கொட்டிக்கிடக்குது – *சிவகாமியின் செல்வன்*
அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே – *கோவில் புறா*
இனங்களிலே என்ன இனம் பெண்ணினம் – *நல்ல பெண்மணி* - முத்து முத்து தேரோட்டம் என்னை மோகம் தாலாட்டும்- *ஆணிவேர்*
நானொரு பொன்னோவியம் கண்டேன் – *கண்ணில் தெரியும் கதைகள்*
பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே – *தீபம்*
ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா ஏனடி நீராடுது – *மதனமாளிகை*
ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ – *தங்கமகன்*
கண்மணியே பேசு மெளனம் என்ன கூறு – *காக்கிச்ச்சட்டை*
முத்தமிழ்க் கவியே வருக முக்கனிச் சுவையே தருக – *தர்மத்தின் தலைவன்*
புஞ்சை உண்டு நஞ்சை உண்டு – *உன்னால் முடியும் தம்பி* - உன்னால் முடியும் தம்பி – *உன்னால் முடியும் தம்பி*
சாதிமல்லிப் பூச்சரமே- *அழகன்
கோழி கூவும் நேரம் ஆச்சு – *அழகன்*
சங்கீத ஸ்வரங்கள்- *அழகன்*
மான் கண்டேன் மான்கண்டேன் – *ராஜரிஷி*
அந்தப்புரத்தில் ஒரு மகராணி – *தீபம்*
சங்கத்தில் பாடாத கவிதை – *ஆட்டோ ராஜா*
நீ ஒரு காதல் சங்கீதம்- *நாயகன்
அடி வண்ணக்கிளியே – *மிருதங்க சக்கரவர்த்தி*
உச்சி வகுந்தெடுத்து – *ரோசாப்பூ ரவிக்கைகாரி
இப்படிப் பல பாடல்கள் தந்தவர்.
ஜெமினி ஸ்டுடியோ தயாரித்த, எல்லோரும நல்லவரே என்ற படத்தில் வரும்,
பகை கொண்ட உள்ளம் துயரத்தின் இல்லம்
தீராத கோபம் யாருக்கு லாபம்
வீட்டுக்கு வெளிச்சம் வருவதற்காக
கூரையை எரிப்பாரோ
வேதனை தன்னை
விலை தந்து யாரும்
வாங்கிட நினைப்பாரோ
இதயத்தை திறந்து நியாயத்தை பேசு
வழக்குகள் முடிவாகும்
இருக்கின்ற பகையை
வளர்த்திடத்தானே
வாதங்கள் துணையாகும்!
என்ற வாழ்வியல் கருத்து மிக அபாரம்.
அதேபோல, நாயகன் படத்தில்,
நீயொரு காதல் சங்கீதம்
வாய்மொழி சொன்னால் சங்கீதம்
தேனை ஊற்றும் நிலவினில் கூட
தீயினை நீ ஏன் ஊற்றுகிறாய்
என்ற காதல் வரிகள் கொள்ளை அழகு.
வாலியைப் போலவே, இவரின் பாடல்களும், எம்ஜிஆரின் புகழுக்கும், அரசியலுக்கும் உதவியாக இருந்தது.
நீங்க நல்ல இருக்கணும் நாடு முன்னேற, புவி அரசர் குலமும் வணங்கும் புகழின் புரட்சித் தலைவன் நீ, நீ என்னென்ன சொன்னாலும் கவிதை, உனை எங்கெங்கு தொட்டாலும் இளமை என்று எம்ஜிஆர் புகழ் பாடி , எழுதிய பாடல்கள் பல.
தென்னகமாம் இன்பத் திருநாட்டில் மேவியதோர்
கன்னடத்துக் குடகுமலைக் கனிவயிற்றில் கருவாகி
தலைக்காவிரி என்னும் தாதியிடம் உருவாகி
ஏர்வீழ்ச்சி காணாமல் இருக்க சிவசமுத்திர
நீர்வீழ்ச்சி எனும் பேரில் நீண்ட வரலாறாய்
வண்ணம் பாடியொரு வளர்த்தென்றல் தாலாட்ட
கண்ணம்பாடி அணைகடந்து ஆடுதாண்டும் காவிரிப்பேர் பெற்று
அகண்ட காவிரியாய்ப் பின் நடந்து, கல்லணையில் கொள்ளிடத்தில் காணும் இடமெல்லாம்
தாவிப் பெருகி வந்து தஞ்சை வளநாட்டைத்
தாயாகிக் காப்பவளாம் தனிக்கருணை காவிரி,
என்ற வரிகள் காவிரியின் பெருமையைச் சொல்லும்.
எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே
பின் நல்லவராவதும் தீயவராவதும்
அன்னை வளர்ப்பதிலே,
என்று வரும் வரிகளை மறக்க முடியாது.
“நாளை உலகை ஆள வேண்டும்” என்று தொடங்கும் (உழைக்கும் கரங்கள் ) பாடலில், பொது உடைமை வெளிப்படும்.
ஏர் பூட்டி தோளில் வைத்து
இல்லாமை வீட்டில் வைத்து
போராடும் காலமெலாம் போனதம்மா
எல்லோர்க்கும் யாவும் உண்டு
என்றாகும் காலம் இன்று
நேராக கண்ணில் வந்து தோன்றுதம்மா
விடியும் வேளை வரப்போகுது
தருமம் தீர்ப்பை தரப்போகுது
என்றும் நியாயங்கள் சாவதில்லை
கவிச்சக்கரவர்த்தி கம்பன்,
சீரை சுற்றித் திருமகள் பின்செல,
மூரி விற்கை இளையவன் முன்செல,
காரை ஒத்தவன் போம்படி கண்ட, அவ்
ஊரை உற்றது உணர்த்தவும் ஒண்ணுமோ?
என்று அழகாக வருணிப்பார்.
கவிஞர் புலமைப் பித்தன், இராமன் முன் செல்ல, சீதை பின் தொடர்ந்த காட்சியை ‘வரப்பிரசாதம்’ என்ற படத்தில்,
கங்கை நதி ஓரம் ராமன் நடந்தான்,
கண்ணின்மணி சீதை தானும் தொடர்ந்தாள்,
மெல்ல நடந்தாள்….
மங்கை அவள் சீதை முள்ளில் நடந்தாள்,
மன்னனவன் கண்ணில் கங்கை வழிந்தாள்,
உள்ளம் நெகிழ்ந்தான்,
என்று அழகான தமிழ்நடையில் வார்த்தைகளை தெளித்து இருப்பார்.
தீபம் என்ற படத்தில்,
பூவிழி வாசலில் யாரடி வந்தது
கிளியே கிளியே இளம் கிளியே கிளியே
அங்கு வரவா தனியே மெல்ல தொடவா கனியே
இந்த புன்னகை என்பது சம்மதம் என்று
அழைக்குது எனையே என்றும்,
தென்பாண்டி சீமையில தேரோடும் வீதியில
மான் போல வந்தவனே யாரடிச்சாரோ
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ என்றும்,
புஞ்சை உண்டு நஞ்சை உண்டு
பொங்கிவரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்ல –
எங்க பாரதத்தில் சொத்துச் சண்ட தீரவில்ல
வீதிக்கொரு கட்சியுண்டு
சாதிக்கொரு சங்கமுண்டு
நீதி சொல்ல மட்டும் இங்கு நாதியில்ல –
ஜனம் நிம்மதியா வாழ ஒரு நாளுமில்ல –
இது நாடா இல்ல வெறும் காடா –
இதைக் கேட்க யாரும் இல்ல தோழா என்றும்,
பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங் கீற்று
நான் வரும் போது ஆயிரம் ஆடல்
ஆட வந்ததென்ன நெஞ்சம் ஆசை கொண்டதென்ன, என்றும்,
புலவர் எழுதிய பாடல்கள் நீரில் கலந்தழியும் அலைகளைப் போலல்லாமல் தனித்து உறைகிற பவளப் பாறைகளாகவே ஒளிர்ந்தவை.
`நான் தாயுமானவன்’ என்று தொடங்கும் தாம்பத்யம் ஒரு சங்கீதம் படத்தின் பாடல் எம்.எஸ்.வி. இசையில் , மற்றும் சங்கர் கணேஷ் இசையில் `பட்டு வண்ண ரோசாவாம்’ என்ற பாடல்கள் கருத்து செறிவு மட்டுமல்ல , கவி நயமும் கூட.
மௌனம் சம்மதம் என்ற படத்தில், கண்ணதாசனைப் போலவே, ஒரு சொல் அழகு தெரியும்,
கல்யாண தேன்நிலா
காய்ச்சாத பால் நிலா
நீதானே வான்நிலா
என்னோடு வா நிலா
அந்த கறந்த பால் இயற்கை அப்படியே கொடுத்த தன்மை காய்ச்சாதது. இது தான் அர்த்தம்!
தேயாத வெண்ணிலா
உன் காதல் கண்ணிலா
ஆகாயம் மண்ணிலா
தென்பாண்டி கூடலா
தேவார பாடலா
தீராத ஊடலா
தேன் சிந்தும் கூடலா
என் அன்பு
காதலா எந்நாளும்
கூடலா பேரின்பம்
மெய்யிலா நீ தீண்டும்
கையிலா
பார்ப்போமே
ஆவலா வா வா என்னும் வரிகள் மிக அழகு.
ஊருக்கு உழைப்பவன் படத்தின் பாடலில் வரும்,
காய்ச்சிய பாலில் தானே ஆடை
காமத்துப்பாலில் ஏனடி ஆடை
என்ற வரிகளையும், அடிமைப்பெண் பாடலில் வரும்
பொய்கை என்னும் நீர்மகளும்
பூவாடை பார்த்திருந்தாள்
தென்றல் எனும் காதலனின்
கை விளக்க வேர்த்திருந்தாள்!
என்ற வரிகளை, கவியரசு மகிழ்ந்து பாராட்டினாராம்.
தேசத்தினைத் துன்பங்கள் ஆள்கின்றன
வெறும் தேர்தல்களே இங்கு வாழ்கின்றன, மற்றும்,
பாசங்கள் பந்தம் எல்லாம்
மனிதர்க்குத் தானடா
பதவிக்கு வாழ்க்கைப் பட்டால்
அவையெல்லாம் ஏதடா
எனது வீடு எனது வாழ்வு
என்று வாழ்வது வாழ்க்கையா
இருக்கும் நான்கு சுவருக்குள்ளே
வாழ நீ ஒரு கைதியா
தேசம் வேறல்ல தாயும் வேறல்ல ஒன்றுதான்
என்ற சமுதாயச் சாட்டையும் இவரின் வரிகளில் உண்டு.
மனதுக்குள்ளே இருக்கும் ஆசை வல்லினம்
என் மன்னனுக்குப் பிடிதததெல்லாம் இடையினம், என்பதும்
இதழால் உடல் அளந்தான்
இவளோ தன்னை மறந்தாள் , என்பதும்
பாவை இவள் பாற்கடலில்
பள்ளி கொள்ள நான் வரவோ , என்பதும்,
இதழில் எழுதி விழியில் படிக்கும்
கவிதை நயமும் நீ
சிறு இடையில் உலகின் சுகத்தை உணர்த்தும்
விளக்க உரையும் நீ
என்பதும்,
அழகின், ரசனையின் உச்சம். மரத்தை மறைத்தது மாமத யானை – மரத்துள் மறைந்தது மாமத யானை என்பது போல, காமமும், விரசமும், உள்ளே மறைய, கவிதையும், ரசனையும், வெளியே தெரியும்.
அமுதத் தமிழில் கவிதை எழுதும்
புதுமைப் புலவன் நீ
என்ற வரிகளை எழுதியவுடன், பாடத் தயாராக இருந்த கலைவாணி வாணி ஜெயராம் , கவிஞரைப் பார்த்து, உங்களைப்பற்றி நீங்களே எழுதிய வரிகளா இவை என்றாராம்,
பாரதி திரைப் படத்திற்காக, பாரதி எழுதிய பாட்டு என்று நினைக்கும்படியான அருமையான இந்தப் பாட்டை எழுதியவர் புலமைப்பித்தன் .. அவர் கடவுள் மறுப்புக் கொள்கை உடையவராக இருந்தாலும் இப்பாட்டில் கடவுளைப்பற்றி வர்ணிக்கும் விதம் அற்புதம். கிட்டத்தட்ட, ஆதிசங்கரர் தனது குருவை முதன் முதலில் பார்த்தபோது, எழுதிய தசஸ்லோகியின் சாரம் என்றே கூறலாம்.
எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ
தவழும் நதியைத் தரித்த முடியான்
அடியும் முடியும் அறிய முடியான்
எளிய அடியர் ஓதும் வேத நாதமாகி
எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ
வரிப்புலியதள் தரித்தவன் எழில் கண்டேன்
பிறப்பெனும் பிணி அறுப்பவன் துணை கொண்டேன்
தமிழ்க்கவி தரும் எனக்கொரு வரம் தரத்திருவுளம் வேண்டும்
சகத்தினுக்கெனை தரத்தகும் நெறி வகுத்திட துணை வேண்டும்
ஆலம் கருநீலம் எனத் தெரியும் ஒரு கண்டன்
அண்டும் திருத்தொண்டன் என்னும் அடியார்க்கொரு தொண்டன்
பற்றுத் தளைக்கு நெருப்பவன் ஒற்றைக் கணத்தில் அழிப்பவன்
நெற்றிப் பிறைக்குள் நெருப்பை வளர்த்து
எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ
தொடக்கமும் அதன் அடக்கமும் அவன் வேலை
நடப்பதும் அதைத் தடுப்பதும் அவன் லீலை
உடுக்களில் சரம் தொடுத்தவன் தலை முடிக்கணியவும் கூடும்
பெருக்கலும் அதை வகுத்தலும் அதைக் கழித்தலும் அவன் பாடம்
மாறும் யுகம் தோறும் அவன் கணக்கின் படியாகும்
மண்ணும் உயர் விண்ணும் அவன் ஒரு கைப்பிடியாகும்
சட்டம் அனைத்தும் வகுத்தவன்
திட்டம் அனைத்தும் தொகுத்தவன்
முற்றப் படித்து முடித்த ஒருத்தன்
எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ, என்ற அருமையான வாழ்வியல் தத்துவத்தை, பாரதி, கண்ணதாசன் வழியில் எழுதியிருப்பது மிகச் சிறப்பு.
தன்னைப்பற்றிக் கூறும்போது, இலக்கிய நயத்தை திரைப்படப் பாடல்களுக்குக் கொடுத்தப் புலவனென்றப் பெருமை எனக்குண்டு”* எனத் தமிழ் செருக்கோடு கூறியதில் , நிச்சயம்,,உண்மையும் உண்டு என்பது அவரின பாடல்களைப் படிக்கும்போதும், கேட்கும்போதும் தெரியத்தானேசெய்கிறது?
நன்றி
மீண்டும் அடுத்த மாதம் மற்றொரு கவிஞருடன் சந்திப்போம்.