விட்னஸ்
மனக்கழிவுகளின் நெடி
என் பத்து வயதில் சென்னையிலிருந்து வேலூருக்கு எங்கள் குடும்பம் குடிபெயர்ந்தபோது தான் அந்தக் கொடுமையை அதிர்ச்சியோடு பார்த்தேன். ஒவ்வொரு வீட்டின் முன்பும் காலை ஏழு மணி போல ஒரு பெண்மணி டிரம் வைத்த சிறு வண்டி ஒன்றை உருட்டிக் கொண்டு வருகிறார். ஒவ்வொரு வீட்டின் முன் கட்டில் இருக்கும் கழிவறைக்கு வெளிப்பக்கச் சுவரில் இருக்கும் சிறு தகர மூடியை உயர்த்தித் துடைப்பத்தால் கூட்டிப் பெருக்கி முறத்தில் சேகரித்து எடுத்து டிரம்மில் நிரப்பியபடி அடுத்த வீட்டுக்கு நகர்கிறார். மூக்கைப் பிடித்துக் கொண்டு போகும் மனிதர்கள் இவர் சாம்பல் தூவி மூடுகிறாரா என்பதை மட்டும் கண்காணித்துக் கொள்கின்றனர். அதிலும் ஆண்கள், தாங்கள் பெற்ற குழந்தைக்குக் கால் கை கழுவி விடவும் (இடக்கரடக்கல்) மனைவியை அழைப்பவர்கள். கழிப்பறை சுத்தம் செய்யும் பெண்ணோ, ஆணோ இதே தெருக்களில் தங்களுக்கு சோறு கேட்டு வருவதையும் என்னால் மறக்க முடியவில்லை. அந்தத் தூக்கு போணிகள் அதே டிரம் வண்டியின் கைப்பிடிகளில் தான் தொங்கியபடி போக வேண்டியிருக்கும்.
பின்னாளில், தகழி சிவசங்கர பிள்ளை அவர்களது மகத்தான ‘தோட்டியின் மகன்’ (தமிழில்: சுந்தர ராமசாமி) வாசித்த போது இரண்டு மூன்று நாட்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தேன்.
இந்த டிரம் வண்டிக்கு எல்லாம் கதியற்ற இடங்களில் காலகாலமாக மூங்கில் கூடைகளில் வைத்துச் சுமந்து போகும் பெண்களைப் பற்றி எழுத்தாளர் ச தமிழ்ச்செல்வன் ஒரு முறை எழுதி இருந்தார். ஒரு மோசமான மழை நாளில் அப்படியான கூடையைச் சுமந்து போகும் சிறுமி, கழிவுகள் யாவும் கரைந்து வழிந்து அவள் தலையிலிறங்கி, முகத்தில் பரவி, உடையிலும், உடலிலும் தன்னை நிறைத்துக் கொண்டு விட, அந்தக் குழந்தை படும் பாட்டை… …மேலே எழுதவே முடியவில்லை. காலம் நம்மை மன்னிக்குமா என்ன, இந்தக் கயமைக்கு நாமும் அல்லவா மௌன உடந்தை?
அறிவொளி இயக்கப் பணிகளின் போது, சிற்றூர்களில் அருந்ததியர் இல்லம் ஒன்றில் தாகத்திற்குத் தண்ணீர் கேட்டபோது, ‘அய்யா எங்க வீட்ல எல்லாம் தண்ணி வாங்கி யாரும் குடிக்க மாட்டாங்க, பிரச்சனை ஆயிரும்’ என்று அந்த வீட்டுப் பெண்களே தயங்கிய கண்ணீர்க் கதையை ‘இருளும் ஒளியும்’ புத்தகத்தில் கொண்டு வந்திருப்பார் தமிழ்ச்செல்வன். அடுத்தவர்களது அழுக்குகளைத் தூய்மைப் படுத்தும் ஒரு சாதி தான் எப்படி தீண்டாமைக்குத் தள்ளப்படுகிறது….
மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனியுண்டோ
மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனியுண்டோ
என்றான் மகாகவி. மனித மலத்தை மனிதர் சுமக்கும் கொடுமை இனியுண்டோ என்று சொல்லும் அரசியல் திறனற்ற சுதந்திரம் தான் நமது. அதனால் தான், நீதிமன்றத்தில் சத்தியம் செய்து சொல்கின்றனர், மனிதர் கழிவை மனிதர் எடுத்துத் தூய்மைப் படுத்தும் பணிகளை அறவே ஒழித்து விட்டோம் என்று. கேட்டால், ‘ஒருவருமில்லை’ என்று மாநிலங்கள் எழுத்துருவில் கொடுத்த அறிக்கைகளை ஆதாரம் ஆக்குகின்றனர். பெஜவாடா வில்சன் எனும் செயல்வீரர் இந்த அவலத்தை அம்பலப்படுத்திக் கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கிறார்.
இன்னொரு பக்கம் நகர்ப்புறங்களில் உணவகங்களில், பெரிய குடியிருப்புப் பகுதிகளில், அலுவலகங்களில் செப்டிக் டேங்க் அடைப்புகளைச் சீர் செய்ய அப்போதும் குறிப்பிட்ட சாதியினரே ஈடுபடுத்தப் படுவதைக் காண்கிறோம். செய்யாறு தி தா நாராயணன் அவர்களது ‘எச்சங்கள்’ சிறுகதை, தனது மகன் இந்தத் தூய்மைப் படுத்தும் பணிக்கு வராததால் கோபமுறும் தந்தை, இறங்கிக் கழிவைத் தூய்மைப்படுத்தும் போது அபார்ட்மெண்ட் ஆட்கள் கழிவறையைப் பயன்படுத்தும் அராஜகத்தால் மூச்சு முட்ட அவன் வெளியேறும் அவதி இன்னவற்றைப் பேசும். (செம்மண் விஜயன் அதைக் குறும்படமாக எடுத்திருந்தார்). அவலம் மட்டுமல்ல பிரச்சனை, அபாயம் தான் உரத்துப் பேச வேண்டியது.
கழிவறைத் தொட்டியைத் தூய்மைப் படுத்த இறங்கி மூச்சு விட முடியாது மூழ்கி மரித்துப் போகிறவர்கள் கதை, ஐந்தாறு வரிகள் செய்தி அடுத்த நாள் தினசரிகளில். ஒரு உச் கொட்டிவிட்டு அடுத்த செய்தி, அடுத்த பக்கம், அடுத்த வேலை, அடுத்தடுத்த சொந்தக் கவலைகளில் மாநகர மக்கள் கலைந்து போய்க்கொண்டே இருக்கிறோம். வெளியே வராதவரைத் தேடி இறங்கிய அடுத்த ஆளும் மேலே வராமல் ஒன்றுக்கு மேற்பட்டோரையும் கொல்லும் மரணக்குழிகளாக மலக்குழிகள் மாறிக் கொண்டிருக்க, மக்களின் உயிர் வாழ்தலுக்குப் பொறுப்பேற்க முடியாத அரசுகள் மரணத்திற்கு மட்டும் எப்படி பதில் சொல்லும்?
அங்கே தான் கேள்விகளை முழக்கமாக முன் வைக்கிறது விட்னஸ் திரைப்படம் (சோனியா லைவ்: ஓடிடி).
நீச்சல் வீரன், இனிய சுபாவமிக்க துடிப்பு மிக்க கல்லூரி மாணவன், காதல் கணவனைப் பறிகொடுத்துவிட்டு வாழ்வாதாரத்திற்கு மாநகரின் குப்பைகளை அள்ளிக் கொட்டிக் கொண்டிருக்கும் தூய்மைப் பணியாளரான அன்புத் தாயின் வெறித்த வாழ்க்கையில் ஒற்றை நம்பிக்கை என்று முதல் காட்சியிலேயே அடையாளப்படுத்தப் பட்டுவிடும் இளைஞன் அடுத்த காட்சியிலேயே இல்லாது போய்விடுகிறான்.
ஊரையெல்லாம் கூட்டிப் பெருக்கி, மேஸ்திரிகளின் ஜாடை மாடை அருவருப்புப் பேச்சுகளும் சேர்த்து அள்ளிக் கொட்டிவிட்டு வீடு திரும்புகிறவளுக்கு, தனது மகன் எங்கே இருக்கிறான் என்பது கூடப் பிடிபடுவதில்லை. அவனுக்கு அடிபட்டிருக்கு ஆஸ்பத்திரிக்கு வாங்க என்ற தகவலை மகனின் நண்பன் கூறுகிறான். மகனைத் தேடிப் போகும் அரசு மருத்துவமனையில் பரிசோதனையில் இருக்கிறது அவனது பிரேதம்.
அபார்ட்மெண்ட் ஒன்றில் கழிவறைத் தொட்டியைத் தூய்மைப் படுத்த அறிந்தவர்கள் அழைத்துப் போன இடத்தில் மனம் ஒப்பாமல் திரும்பியவனை வற்புறுத்தி இறக்கி விட்டதில் அவன் மேலே திரும்புவதே இல்லை. மேல் தட்டு வர்க்க மனிதர்களுக்கு அசோசியேஷன் இருக்கிறது. செல்வாக்கு இருக்கிறது. முக்கியமாகப் பணம் இருக்கிறது. அதைவிட பிரச்சனையைப் பெரிதாக்கி விடக்கூடாது என்கிற எச்சரிக்கை அறிவு இருக்கிறது. எப்போதும் பாதிக்கப்பட்டவன் பக்கம் இருப்பதை விட, நிகழ்வின் கோரத்தைக் காசாக்கிக் கொண்டு எல்லாவற்றையும் மூடி மறைத்துக் கழுவித் துடைத்துத் தடயமே இல்லாது செய்யவே பழகி இருக்கும் அதிகார வர்க்கத்தின் துணை இருக்கிறது. ‘நம்மால் என்ன போராடி என்னத்த நியாயம் கேட்டுவிட முடியும்’ என்று ஒடுங்கிப் போய்விடும் ஒடுக்கப்பட்டோரது இயலாமை இருக்கிறது.
‘விட்னஸ்’ இந்த இடத்தில் தான் உரையாடலை மாற்றி முன்வைக்கிறது. ஓடப்பராயிருக்கும் ஏழையப்பரை உண்மைகளுக்காகத் துணிந்து பேசும் உணர்வப்பராக முன் வைக்கிறது. கழிவுகள் எங்கோ தொட்டிகளுக்குக் கீழ் அடைத்துக் கொண்டிருக்கவில்லை, சாதீய மரபணுக்களுக்குள், அதிகாரப் படிநிலைகளுக்குள், வர்க்கப் படிமானங்களுக்குள் தான் நாறிக் கொண்டிருக்கிறது என்பதை அம்பலப்படுத்துகிறது.
நீதிக்கான போராட்டத்தை இடதுசாரி தொழிற்சங்கத் தலைவர் முன்னெடுக்கிறார். அவரை உள்ளே பிடித்துப் போட்டு விடுகிறது அதிகார வர்க்கம். மகனுக்கு நீதி கேட்கிறவளை வம்புக்கு இழுத்து அவளை வேலையை விட்டு நிற்கவைத்துப் பணியாளர்கள் பட்டியலில் இருந்தே இல்லாமல் செய்து விட முடிகிறது. கழிவறை விவகாரத்தில் நடந்த கொடுமையின் முக்கிய சாட்சியமாக சிசிடிவி காட்சியை ஆதாரமாக்கித் தரும் அந்த அபார்ட்மெண்ட் இளம் பெண் சொந்தக் குடியிருப்பிலிருந்தே விரட்டப்படுவது நடக்கிறது. அதிகம் படித்தவர்களது திமிரும் வில்லத்தனமும் நேர்பட வெளிப்படாது பூடகமாகவே அரங்கேறிவிடுகிறது. நீங்கள் சொல்வது, கேட்பது, மெய்ப்பித்திருப்பது எல்லாமே சரி தான், ஆனால், தீர்ப்பு எதிர்ப்பக்கம் தான் என்று சாமானிய மக்களை வாயடைக்க வைக்கும் இடத்தில் சமூகத்தின் பொது புத்தி மீது பெரிய கோடரியை வீசி முடிகிறது திரைப்படம்.
ஆவணப்படமாகவோ, பிரச்சாரக் காட்சிகளாகவோ எங்கும் சுருதி இறங்கிவிடாது திரைக்கதை, வசனம், நடிப்பு, இயக்கம் கூட்டாகச் செம்மையாக நிறைவேற்றப்பட்டிருப்பது அண்மைக் காலத்தில் மிக முக்கியமான படமாக இதனை முன் வைக்கிறது. மாநகரை உருவாக்கிய மக்கள் மையப்பகுதியில் இருந்து தொலைதூரத்திற்கு அப்புறப்படுத்தப் படுவது, பார்வை – சொல் – உடல்மொழி மூலம் சாதீய இழிவு கடத்தப்படுவது, உணர்ந்து துணிந்து காலை முன்னெடுத்து வைத்துவிட்டால் எளிய பெண்களை ஒரு போதும் பின்வாங்க வைக்க முடியாது என்பது, பொதுவெளியில் நியாயத்தின் பக்கம் நிற்போர் உண்டு என்கிற நம்பிக்கை விதைப்பு….என நுட்பமான பல விஷயங்களைப் பேசுகிறது விட்னஸ்.
சாதியில் கீழடுக்கில் இருப்போர் மீதான பார்வையும் பேச்சும் உயர்நிலை, இடைநிலை படிநிலைகளில் இருப்போரிடம் எப்படி வெளிப்படுகிறது என்பதை மிக இயல்பாகக் காட்சிப்படுத்துகிறது விட்னஸ். ‘காண்டிராக்ட் எடுத்திருப்பவன் நம்ம சாதிக்காரன், இந்த வழக்கை நீ நடத்தணுமா?’ என்று உறவினர் வந்து பேசுமிடத்தில், ‘உங்க டாய்லெட்டை நீங்க எப்போதாவது கழுவி இருக்கீங்களா, எல்லோர் மலத்தையும் சுத்தம் செய்றவங்களுக்கு யாராவது பேச வேண்டாமா?’ என்று வழக்கறிஞர் கேள்வி வைப்பது முக்கியமானது. அசோசியேஷன் வாசிகளுக்குள் தெறிக்கும் சுயநலம், ஒதுங்கிப் போதல் அரசியலும் சிறப்பாகப் பேசப்பட்டிருக்கிறது.
செத்துப் போன இளைஞனுக்கு அஞ்சலி போஸ்டர் ஓட்டுவதையோ, மக்கள் ஒன்று கூடி படத்தை வைத்து மாலை போட்டு மரியாதை செலுத்தி மரண கானா பாடுவதையோ கூட அனுமதிக்காத காவல் துறை அத்துமீறல்கள் அதிர வைக்கின்றன. நீச்சல் குளத்தில் தனது உயிரைக் காப்பாற்றிய இளைஞனா தங்கள் அபார்ட்மெண்ட் கழிப்பறையில் மரித்தது என்று அதிர்ந்து தேடிப் போகும் இளம் பெண்ணை ‘நீங்க இந்த ஏரியா ஆள் இல்லையே…இங்கெல்லாம் வராதீங்க…இவங்கல்லாம் கிரிமினல் ஆளுங்க’ என்று செம்மஞ்சேரி சூழலிலிருந்து வெளியே போகச் சொல்லும் இடம் ஆழமான சாதீய வர்க்க அரசியலைப் பேசுகிறது.
வெளியுலகம் தெரியாத நடுத்தர வயதுப் பெண்மணி, சாதியில் பொருளாதாரத்தில் கல்வியில் அடித்தளத்தில் கிடப்பவள் எப்படி சொந்தக் கவலையை தன்னையொத்த தாய்மார்களின் ஒட்டுமொத்தக் கவலையாகப் பார்த்துத் துணிந்து போராடப் புறப்படுகிறாள், சக பணியாளரைக் கண்காணி கொச்சையாகப் பேசும்போது அருவருப்போடு கவனிக்கிறவள் மெல்ல மெல்ல ரௌத்திரம் பழகி ஒரு கட்டத்தில் எப்படி அவனை முகத்தில் அறைகிற கட்டத்திற்கு உயர்கிறாள் என்பது இயக்குனர் தீபக் பாராட்டுப் பெறவேண்டிய முக்கிய அம்சம். மக்சீம் கார்க்கியின் தாய் நாயகி பெலகேயா நீலவ்னா நம்மைத் தொடர்ந்து ஆட்கொள்ள வைக்கட்டும்.
ஒடுக்குமுறையை எதிர்த்து நிற்கும் சங்கத் தலைவனுக்கு பாலபாடம், காவல் துறைக்கு அஞ்சாது நெஞ்சு நிமிர்த்திப் பேசுவது. ஆளையே அடையாளப்படுத்திக் கொள்ளாமல் போஸ்ட் மார்ட்டம் முடித்து சும்மா முகத்தைக் காட்டிவிட்டுச் சட்டென்று ஆம்புலன்சில் சுடுகாட்டுக்கு எடுத்துக் கொண்டுபோய் எரித்துவிடும் அளவு ஒரு செயல் திட்டம் இருப்பதை உடைப்பதற்குத் தன்னெழுச்சியாக வழிமறித்து ஆட்களை அமரவைத்து எதற்கும் தயாராக அவர்களை மாற்றுவதற்கு ஒரு ஆளுமைப் பண்பு தேவைப்படுகிறது. அதனால் தான் அந்தப் பாத்திரத்தை விரைந்து பாதுகாப்பாகச் சிறையிலடைத்து விடுகிறது அதிகார வர்க்கம். ஆனால், ஒரு கம்யூனிஸ்ட் அதற்குள் பற்ற வைத்துவிடுகிற தீ, அவர் உடனிருந்து ஊதிக்கொண்டே இருக்க வேண்டிய தேவை இல்லாது பரவ விடுமளவு தாக்கத்தை முதலிலேயே ஏற்படுத்தி விட, அந்தத் தாயின் சூழலும் காரணமாக அமைகிறது.
ரோகிணியின் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக விட்னஸ் நிச்சயம் பேசப்படும். சிசிடிவி பதிவை அந்த இளம் பெண் (ஷ்ரத்தா ஸ்ரீ நாத்) சொல்லவும், ‘என் பையன் அதில் இருப்பானா, அவனைப் பார்க்க முடியுமா’ என்று கேட்கும் இடத்தில், பொறுமையாக அலைந்தும் கிடைக்காத பிராவிடண்ட் பணத்திற்காகக் குரலை எழுப்பும் இடத்தில், தனக்கான போராட்டத்தில் சிறைப்பட்ட தொழிற்சங்கத் தலைவரைச் சிறையில் சந்தித்துப் பேசும் இடத்தில்…. என்று சிறப்பாகச் செய்திருக்கிறார். மார்க்சிஸ்ட் தலைவர் தோழர் ஜி செல்வா அவர்கள், நிஜ வாழ்க்கையின் பாத்திரமே கிடைக்கப்பெற்று அதைத் திரையிலும் தீட்டி இருக்கிறார். சிறையில் வாழ்க்கை இணையரை சந்திக்கும் காட்சியில் அபாரம். வழக்கறிஞராக சண்முக ராஜா தனது பண்பட்ட நடிப்பை வழங்குகிறார். முன் திரையிடலில் நேரில் பார்த்த போது அத்தனை அமைதியாக இருந்த இளைஞர் தமிழரசன், அளவான காட்சிகளே என்றாலும் அருமையாகச் செய்திருக்கிறார். சிரித்த முகத்தோடு அம்மாவோடு அவர் உரையாடும் காட்சியும், பேருந்தில் உடன் வந்து இறங்கிப் போகும் நேர்த்தியும் மறக்க முடியாதது. நீதிபதியாக வருபவர் அத்தனை இயல்பான உடல்மொழியும், பேச்சும்! ஷ்ரத்தா ஸ்ரீ நாத், ஆர்க்கிடெக்ட் ஆக வருபவர், கழிவறைத் தொட்டிக் கொடுமைக்கு முடிவு கட்டும்படி மாற்று வரைபடம் போட்டுத் தருவதிலும், அவரது கிளைக்கதையில் வெடிக்கும் சாதி பிரச்சனையும் சிறப்பாகக் கொணர்ந்திருக்கிறார்.
நேர்த்தியான திரைக்கதை முத்துவேல், ஜெ பி சாணக்யா இருவரும் (சாணக்யா வசனத்திலும் உதவி இருக்கிறார்) அருமையான பணி. காட்சிக்கும் கதைக்குமான பாடல்கள் கபிலன் எழுத, படத்தின் சிறப்பான பின்னணி இசை ரமேஷ் தமிழ்மணி. ஒளிப்பதிவையும் கச்சிதமாக செய்திருக்கும் இயக்குனர் தீபக் அவர்களின் முதல் படம் இது என்பது உள்ளபடியே வியக்க வைப்பது.
வேலூர் கட்டை சுபேதார் தெருவில் கழிவறைகளைத் தூய்மைப் படுத்த வந்து நின்ற அந்த எளிய மனிதர்கள், முதன்முதல் பார்த்த அதே அதிர்ச்சித் துடிப்பு நீடிக்க இன்னும் நெஞ்சில் நிற்கின்றனர். அவர்களுக்குமான நியாயத்தையும் சேர்த்தே பின் தேதியிட்டுப் பேசும் படம் தான் விட்னஸ்.
இந்தப் படத்தின் டிரைலர் :
படத்தை பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது
T Dhanapal.
LikeLike
ஆழமான ஆய்வுநோக்கிலான சிறந்த மதிப்புரை …. தமிழ் இலக்கியப் பரப்பில் கழிவறைத் தொழிலாளிகளின் வாழ்வியல் பேசப்பட்டிருப்பதை விரிவாகப் பேசியிருப்பது வெகு கச்சிதம்…
நெஞ்சம் நிறைந்த இனிய பெருமிதச் செவ்வாழ்த்துக்கள் தோழர் …! – முனைவர் சு.மாதவன்
LikeLike
அருமை தோழர். உங்களின் ஒவ்வொரு வரிக்குள்ளும் என்னால் செல்ல முடிந்து. படித்துப் பல நிமிடங்கள் என்னால் அசைய முடியவில்லை. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல் ட்ரெய்லர் பார்த்தேன். வாயடைத்துப் போனேன். இப்படத்தை பார்க்கும் வசதி எங்கள் வீட்டில் இல்லை. விரைவில் தேடிச் சென்று பார்ப்பேன். வாழ்த்துக்கள் தோழர்.
LikeLike
சமூகத்திற்கு சரியான சாட்டையடி.
LikeLike
செவாவாய்க்கிரகத்திற்கே விண்கலம் அனுப்பும் மனிதனால் பாதாளச்சாக் கடையை ச்சுத்தம் செய்ய ஒருஇயந்திரத்தைக் கண்டுபிடிக்க முடியாதா?.
விஞ்ஞான வளர்ச்சி மேல்நோக்கித்தான் போகுமா? கீழே பார்க்காதா?
LikeLike
அம்மா! மனசெல்லாம் வலிக்கிறது; தலை சுற்றுகிறது. தங்கள் உள்ளத்தைத் தொடும் விமரிசனத்தால். தேடிச்சென்று படத்தைப் பார்க்க வேண்டும்.
இதற்கு என்ன தான் விமோசனம்?
LikeLike