
( சைவ மதத்தைச் சார்ந்த நான் சமணத்தைப் பற்றி எழுதுவதால் எனையறியாமல் துவேஷத்தைக் காட்டியிருப்பேனோ என்ற பயத்துடன் தொடர்கிறேன்)
சமணம் என்பது ஒரு மதம் என்பதை விட ஒரு வாழ்க்கை முறை என்பதே பொருத்தமானதாகும். மிகவும் கட்டுப்பாடு நிறைந்த வாழ்க்கை முறையை வலியுறுத்திய சமணம் மிகவும் தொன்மையானது. தோன்றிய காலத்தை வரையறுத்துக் கூற முடியாதது.
“வேதங்கள் எழுதப் படுவதற்கு முன்பே ஜைன தர்மம் இருந்ததென்பதில் ஐயமில்லை” எனக் கூறுபவர் தத்துவ ஞானி, முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் S. ராதாகிருஷ்ணன் என்பதால் கண்டிப்பாக அதில் ஓர் அர்த்தமிருக்கும்.
மற்றொரு நூலோ முதலாம் தீர்த்தங்கரரான ரிஷப தேவர் நம் ஆயர் பாடி கண்ணனின் பெரியப்பா மகன் என்ற வழியில் பங்காளி என்ற கூறுகிறது.
பௌத்தத்தை பரப்பியது அசோக சக்ரவர்த்தி என்றால் சமணத்தை பரப்பியது அசோகரின் பாட்டனார் சந்திர குப்த மௌரியர் ஆவார்.
சமணத்தின் 24 வது தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் கௌதம புத்தரை விட சற்று வயதில் மூத்தவர்.
ஆக மொத்தம் சமணம் நிச்சயமாக பௌத்த மதம் தோன்றுவதற்கு முன்பாக தோன்றியது. வைதீக மதத்திற்கும் முன்போ அல்லது சம காலத்திலோ தோன்றியிருக்க வேண்டுமென்பது நூலாசிரியர்களின் கருத்து.
கி. மு 4ம் நூற்றாண்டில் சந்திரகுப்த மௌரியர் பதவியை உதறி சமண குருவான பத்ரபாகு முனிவருடன் கர்நாடகத்தின் சரவணபெலகொலா வந்திறங்கினார். அங்கிருந்து சமணத்தை பரப்ப சமண துறவிகள் கொங்கு நாடு வழியாக தமிழகத்தில் நுழைந்தனர். ஒரு பிரிவு தொண்டை மண்டலத்தையும் ( திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல் பட்டு, வேலூர், நெல்லூர்) மற்றொரு பிரிவு பாண்டிய நாட்டையும் அடைந்தது.
அன்று துவங்கிய சமயப் பணி இன்றும் இவ்விறு பகுதிகளிலும் சுமார் 25 ஊர்களுக்கு மேல் சமண மதத்தினருடனும் சமண கோவில்களுடனும் தொடர்ந்து கொண்டுள்ளது.
சமணமும் பௌத்தமும் ஐம்பெரும் காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு வழியாக தமிழ் மொழிக்கு ஆற்றிய தொண்டு என்றும் மறக்க இயலாது.
சமண மத முதல் தீர்த்தங்கரர் ரிஷப நாதர் @ ரிஷப தேவர் @ ஆதி நாதர் தோன்றியது சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன்னர் எனவும் மஹாபாரதம் நிகழ்ந்த காலம் எனவும் கூறுகின்றனர். திருவள்ளுவர் முதல் குறளில் “ஆதி பகவன் முதற்றே உலகு” என வழி படுவதால் வள்ளுவர் ஆதி நாதரை வழிபடுபவராக கூறி சமணர் சொந்தம் கொண்டாடுகின்றனர். “மழித்தலும் நீட்டலும் வேண்டா” எனவும் பாடியுள்ளார் வள்ளுவர்.
ஏனைய தீர்த்தங்கரர்கள் பெயரால் அறியப் படினும் செயலால் அறியப் படுபவர்கள் கி. மு 877-777 ம் ஆண்டுகளில் வாழ்ந்த 23 வது தீர்த்தங்கரர் பார்சுவ நாதரும் அவருக்குப் பின் கி. மு 599 – 527 ஆண்டுகளில் வாழ்ந்த 24 வது தீர்த்தங்கரர் வர்த்தமான மகாவீரர் மட்டுமே.
உலகில் பலி பாவங்கள் மிகுந்ததால் 2500 ஆண்டுகளாக வேறு தீர்த்தங்கரர்கள் அவதரிக்க வில்லை என்கின்றனர் சமணர். இருப்பினும் எவ்வளவோ மதப் போராட்டங்களுக்கு இடையே பாசுவ நாதரும் மகாவீரரும் வகுத்த கொள்கைகளை சமணர்கள் இன்றும் சிரத்தையுடன் கடைப் பிடித்து வருகிறார்கள் என்பது உண்மையே.
பாசுவ நாதர் துவக்கி மகா வீரர் கடுமையாக்கிய கொள்கைகள் எளிதானவையே. ஆனால் அதைக் கடைப்பிடிப்பதுதான் அன்றும் இன்றும் சற்று சிரமமானது. சமண துறவிகளுக்கென கூறப்பட்ட 28 அடிப்படை விதிகளில் சிலவற்றை காண்போம்.
1. கொல்லாமை. புலால் உண்ணாமை. கள்ளுண்ணாமை
2. வாய்மை. பொய்யே பேசாதிருத்தல்
3. பிறர் பொருளுக்கு ஆசைப் படாதிருத்தல்.
4. மிகுதியான பொருளுக்கு ஆசைப் படாதிருத்தல்.
5. பிரமச்சரியம்
எல்லோரும் கூறுவதுதானே? பின்னர் சமணம் எப்படி வைதீக மதத்தையும் புத்த மதத்தையும் பின் தள்ளி முன்னேற முடிந்தது எனக் கேட்டால் சமணர்களின் முதல் கொள்கை மக்களை கவர்ந்ததே அதற்கு காரணம்.
அன்றைய நாளில் நாம் முன்பே கூறிய படி வைதீக மதத்தினர் கோழி, ஆடு, மாடு, குதிரை என தூக்கிப் போட முடிந்த உயிர்களையெலாம் வேள்வியில் தூக்கிப் போட்டு பலி கொடுத்தனர். இறைவனுக்கே பலி கொடுக்கும் பொழுது தாம் அவற்றின் புலால் உண்ணாதிருந்தால் பாவம் எனக் கூறி வேள்வி செய்வோரும் செயப் படுத்துவோரும் இணைந்து புலால் உண்டனர். இறைவனுக்கு பிடித்த பாணம் என வகைப் படுத்தி இறைவன் முன் கள்ளைக் காட்டி தாம் பருகிக் களித்தனர்.
அழகை முருகனாய், மலையை சிவனாய், காடுகளை திருமாலாய் வழி பட்டு வந்தனர் தமிழர். அவர்களை இறைவன் பெயரைச்சொல்லி பலியிட்டு, புலால் உண்டு கள்குடித்து ஆடும் பழக்கம் ஒவ்வாததாய், மனதிற்கு பிடிக்காமல் வாடி நிற்க வைத்தது. அச்சமயம் வடக்கிருத்து வந்த சமணர் பௌத்தர்கள் அன்பை போதித்தனர். அவர்களின் கொல்லாமை, புலால்-கள் உண்ணாமை போன்ற கொள்கைகள் வீடு பேற்றை கொடுக்கும் என நம்ப வைத்தது.
பௌத்த பிக்குகள் கொல்லாமை, கள்ளுண்ணாமை மதத்தின் முக்கிய கொள்கைகளாக வலியுருத்தினாலும் புலால் உண்ணாமையை வலியுருத்த வில்லை. பிறர் கொன்று தரும் புலாலை அல்லது இறந்த விலங்குகளின் புலாலை ஏற்பது தவறன்று என்பது அவர்கள் கொள்கை.
ஆணால் சமணமோ ஓர் உயிரை கொன்றால் பாவம், ஒரு உயிரை கொன்று உண்டாலோ கொடிய பாவம். கள் குடித்தல் அதை விட பாவம் என்பதில் உறுதியாய் இருந்தது. இயற்கையிலேயே சாத்வீக குணம் கொண்ட தமிழர் சமணரின் இக் கொள்கை பிடித்ததில் ஆச்சரியமில்லை.
இருளில் உணவு அருந்தினால் அறியாமல் சிறு உயிர்களுக்கு தீங்கு நேரலாம் என இரவில் உண்பதை தவிர்த்தனர் சமணர்.
எறும்பு போன்ற சிறு உயிர்களுக்கு தீங்கு விளையலாம் என எண்ணி இருளில் நடப்பதை தவிர்த்தனர். ஏன்? நிலத்தை உழும் பொழுது புழு, பூச்சிகள் இறக்க நேரிடும் என்பதால் உழவுத் தொழிலையே வெறுத்தனர்.
சமண துறவிகள் ஊரை விட்டு ஒதுங்கி காடுகளில் மலைக் குகைகளில் வாழ்ந்தனர். பாரையில் செதுக்கிய படுக்கைகள் . சமணர்களும் பௌத்தர்கள் போல் பள்ளியில் கூடங்கள் அமைத்து போதித்தனர். அவர்கள் அமைத்த குகை கோவில்களும், பாரையில் செதுக்கிய படுக்கைகளும் தொண்டை மண்டலம், பாண்டிய நாட்டில் மதுரையை சுற்றியும் சமணர்கள் சரித்திரம் பேசிக் கொண்டுள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில் திகம்பர ஜைன மடமும், திண்டிவனம் அருகே மேல் சீதாமூர் மடமும் சமணர் வாழ்ந்த வாழ்க்கைக்கு கட்டியம் கூறி நிற்கின்றன.
சமண துறவிகள் வாழ்ந்த வாழ்க்கையும் அன்று அவர்களுக்கு விதிக்கப் பட்ட கட்டுப் பாடுகளையும் இன்று நினைத்தால் சற்று உடம்பு சிலிர்க்கிறது. அக்கட்டுப்பாடுகளில் பெரும் பாலானவை இன்றும் சமண துறவிகளால் கடைப்பிடிக்கப் பட்டு வருகிறது.
அப்படி என்ன உடம்பை சிலிர்க்க வைக்கும் சமண துறவிகளுக்கான கட்டுப்பாடுகள் என பார்ப்போம்.
1. தலை பறித்தல். தலை பறித்தல் என்றால் ஏதோ சலூனுக்கு சென்று முடி கழித்தல் அல்ல. தலை முடி, மீசை, தாடி அனைத்தையும் கைகளால் பறித்தெடுக்க வேண்டும். நம்மால் கற்பனை செய்து கூட பார்க்க இயலாது.
2. திகம்பரர் – உடை நீத்தல். துறவிகளில் சிறு துண்டுகளை உடுத்தியவர்கள் சுவேதாரம்பர் எனப்படுவர். திகம்பரர்கள் என்றழைக்கப் படும் துறவிகள்தான் சற்று வில்லங்கமானவர்கள். உடம்பில் ஒரு பொட்டு துணியில்லாமல் கையில் மயில் தோகையினாலான விசிறியுடன் ( பீலி) நடமாடினார்கள். பாவம் மக்கள்.
3. நீராடாமை: திகம்பரரின் உடை நீத்தலையே பரவாயில்லை என கூறச்செய்யும் பழக்கம் நீராடாமை. மாதக் கணக்கில் குளிக்காமலிருத்தல் துறவிகளுக்கு பெருமை சேர்க்கும். குளித்து சுத்தமாயிருந்தால் மனம் அலை பாயுமாம். திருவண்ணாமலை, மதுரை போன்ற ஊர்களில் கற் குகைகளில் கோடை காலத்தில் மாதக் கணக்கில் குளிக்காமல் இருப்பர் என நினைத்தால் உடம்பு நடுங்காமல் வேறென்ன செய்யும்.
4. தரையில் படுத்தல்: துறவிகள் வெறுந் தரையில்தான் படுக்க வேண்டுமென்பது, ஒரு முக்கிய கொள்கை. அவர்கள் படுத்துறங்கிய கற்களால் செதுக்கப் பட்ட படுக்கைகளை குகைகளில் இன்றும் காண்கிறோம்.
5. பல்தோயாமை: பற்களை துலக்கக் கூடாது என்பது முக்கிய கொள்கைகளில் ஒன்று. பாசி படிந்த பற்களின் தீய வாசனையை மறைக்க அடிக்கடி சுக்கை கடித்துக் கொள்வார்களாம். இவற்றால் மகளிர் அருகே அணுகாமல் பிரமச்சரியம் காக்கப் படுமென நம்பினர் போலும்.
6. நின்று உண்ணல்: சமண துறவிகள் உணவை கைகளில் ஏந்தி நின்று கொண்டு மட்டுமே உண்ண வேண்டும். வேறு எந்த பாத்திரத்திலும் இட்டு உண்ணக் கூடாது என்பது ஒரு விதி. பௌத்த பிக்குகள் திருவோட்டில் இரந்துண்ண வேண்டும் என்ற விதியிருந்தது.
7. ஒரு போது உண்ணல்: சமண துறவிகள் ஒரு பொழுது மட்டுமே உண்ண வேண்டும். அதுவும் மாலை இருள் சூழ்வதற்குள் கிடைக்கும் உணவை கைகளில் வாங்கி உண்ண வேண்டும். பௌத்தர்களோ நன்பகலுக்கு முன்னர் சாப்பிட வேண்டுமென்பது விதி. ஆண் மக்களே வீடு பேற்றுக்குரியவர்: பெண்கள் துறவிகளாவதற்கு ஆரம்பத்தில் அனுமதியில்லை. பின்னர் அவர்களும் கடும் நிபந்தனைகளுடன் துறவிகளாக அனுமதிக்கப் பட்டனர். ஆனால் கொடுமை பெண் மகளிர்க்கு வீடு பேறு கிடையாது, கிடைக்காது என்பது சமணரின் நம்பிக்கை. பெண்களுக்கு வீடு பேறு வேண்டுமெனில் அடுத்த பிறவியிலோ அல்லது வரும் பிறவிகளில் ஆண் மகனாக பிறக்க வேண்டும். இவ்வளவு கட்டுப் பாடான கொள்கைகள் கொண்ட சமண மதம் நாடெங்கும் மக்களை கவர்ந்ததே ஒழிய பயந்து ஓட வைக்க வில்லை.
ஆழ்வார்களும், சமயக் குரவர் நால்வரும், குறிப்பாக ஞான சம்பந்தரும், திருநாவுக்கரசரும் அவதரித்திருக்கா விட்டால் இன்று நாமும் சமணராகவே வலம் வந்து கொண்டிருப்போம்.
அந்த அளவிற்கு பல்லவ மன்னர்களையும் பாண்டிய மன்னர்களையும் அவர்கள் வழியாக பெரிய தனவந்தர்களையும் தம் மதத்திற்கு கவர்ந்தனர் சமணர்கள். சோழ மன்னர்களும் பௌத்தர்களுக்கு விகாரைகள் அமைத்துக் கொடுத்தது போல சமணர்களுக்கும் கோவில்கள் கட்டிக் கொடுத்தனர். குந்தவை நாச்சியார் கட்டிக்கொடுத்த சமண ஆலயம் திருவண்ணா மலையருகே இன்றும் இடிந்த நிலையில் காணப்படுகிறதாம். குடிமக்களுக்கு வேறு வழியில்லை. பெரும்பாலானோர் சமணரானர்.
சமணர்கள் அனைவரையும் மீண்டும் சைவர்கள் ஆக்கிய பெருமை கி பி 6- 8 நூற்றாண்டுகளில் வாழ்ந்த சைவ பெரியோர்களைச் சேரும்.
பௌத்தர்களை நாட்டை விட்டு விரட்டும் பணியை சமணர்கள் எடுத்துக் கொண்டனர் .
பௌத்தர்கள் குகைகளில் வடித்த கற் படுக்கைகளில் படுத்துக்கொண்டே பௌத்தர்களின் பள்ளிகளையும் விகாரைகளையும் சமணர்கள் சுவீகரித்துக் கொண்டனர்.
சமணரை வேரறுக்கும் பணியை வைதீக மதத்தினர் ஏற்றுக் கொண்டனர்.
அதுவும் சமணரின் முக்கிய கொள்கைகளை அபகரித்தே சமணத்தை வைதீக மதம் கபளீகரம் செய்தது. அந்த கொள்கைகள் எவை என்று அடுத்த பதிவில் பார்ப்போம்.
தமிழ் நாட்டில் சமணத்தைப் பற்றி பேசும் பொழுது ஞான சம்பந்தரையோ, திருநாவுக்கரசரையோ நினைக்காமல் கடக்க முடியாது. சமணர் அனைவரையும் திருநீறு பூச வைத்து சைவராக்கியவர்கள் ஆயிற்றே.
அதைப் பற்றியும் அடுத்த பதிவில் பார்ப்போம்.