4. திருவெண்காடு (புதன்)
காசிக்கு சமமான ஆறு தலங்களுள் ஒன்று. ‘ஆதி சிதம்பரம்’ என்றும் ‘சுவேதாரண்யம்’ என்றும் அழைக்கப்படுகிறது. நவக்கிரகங்களில் ஒருவரான புதன், தானும் நவக்கிரகங்களில் ஒருவரான வேண்டும் என்று இத்தலத்து இறைவனை வழிபட்டு, அப்பதவியை அடைந்தாகக் கூறப்படுகிறது. எனவே, இத்தலம் நவக்கிரகங்களில் புதன் தலமாக வணங்கப்படுகிறது. வெளிப்பிரகாரத்தில் புதன் சன்னதி தனியாக உள்ளது.
வைத்தீஸ்வரன் கோயிலுக்குக் கிழக்கே சீர்காழி – பூம்புகார் சாலையில் 11 கி.மீ. தொலைவில் உள்ளது.
இத்தலத்தில் மூர்த்தி, தீர்த்தம், தலவிருட்சம் எல்லாம் மூன்று உள்ளன.
மூலவர் ‘சுவேதாரண்யேஸ்வரர்’ என்னும் திருநாமத்துடன், சுயம்பு மூர்த்தியாக, சற்று உயரமான பாணத்துடன், லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். அம்பிகை ‘பிரம்மவித்யா நாயகி’ என்னும் திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள். பிரம்ம தேவருக்கு வித்தை கற்றுக் கொடுத்ததால் இப்பெயர் பெற்றாள். இங்கு சுவாமி சன்னதிக்கு எதிரே அம்மன் சன்னதி உள்ளது குறிப்பிடத்தக்கது. அம்பிகையின் சக்தி பீடங்களுள் ஒன்று. இது ‘பிரணவ பீடம்’ என்று அழைக்கப்படுகிறது.
மற்றொரு மூர்த்தி அகோர வீரபத்திரர். எட்டு திருக்கரங்களுடன், கையில் சூலாயுதத்துடன் சுமார் 10 அடி உயரத்துடன் கம்பீரமாக காட்சி தருகின்றார். இது சிவபெருமானின் 64 மூர்த்தங்களுள் 43வது வடிவம் ஆகும். மருத்துவாசுரன் என்னும் அசுரனை அழிப்பதற்காக சிவபெருமானின் ஈசான்ய முகத்தில் இருந்து தோன்றியவர். எதிரில் காளி தேவி சன்னதி உள்ளது.
மூன்றாவது மூர்த்தி இங்குள்ள நடராஜர். சிதம்பரத்தில் இருப்பது போன்றே சிதம்பர ரகசியமும், ஸ்படிக லிங்கமும் உள்ளது. இங்கு நாள்தோறும் ஸ்படிக லிங்கத்திற்கு நான்கு அபிஷேகங்களும், நடராஜருக்கு ஆண்டுதோறும் ஆறு அபிஷேகங்களும் நடைபெறுகின்றன.
கோயிலின் அக்னி மூலையில் அக்னி தீர்த்தமும், தெற்குப் பிரகாரத்தில் சூரிய தீர்த்தமும், வடக்குப் பிரகாரத்தில் சந்திர (சோம) தீர்த்தமும் உள்ளன. இவைகளை ‘முக்குளம்’ என்று கூறுவர்.
இக்கோயிலின் தலவிருட்சமாக வில்வம், கொன்றை, வடவாலம் என்று மூன்று விருட்சங்கள் உள்ளன.
இங்கு பித்ரு கடன் செய்வது விஷேசமாகக் கருதப்படுகிறது. குறிப்பாக பித்ரு தோஷம் உள்ளவர்கள் இங்கு பரிகாரம் செய்யலாம். இங்குள்ள சந்திர தீர்த்தத்தில் நீராடி தங்களது முன்னோர்களுக்கு வழிபாடு செய்ய வேண்டும். கயாவில் உள்ளது போலவே அழியாத அட்சயவடம் (ஆலமரம்) உள்ளது. அங்கு ‘விஷ்ணு பாதம்’ உள்ளது போல் இங்கு இந்த ஆலமரத்தின் கீழ் ‘ருத்ர பாதம்’ உள்ளது.
பெண்ணாடகத்தைச் சேர்ந்த அச்சுதக் களப்பாளர் தமக்கு குழந்தை பாக்கியம் வேண்டி, தமது ஆசிரியரான அருணந்தி சிவாச்சாரியாரை அணுகினார். அவரது அறிவுரைப்படி இத்தலத்திற்கு வந்து முக்குள நீராடி சிவபெருமானை வழிபட்டு ஆண் மகவைப் பெற்று, இக்கோயிலின் இறைவன் பெயரான ‘சுவேதவனப் பெருமாள்’ என்னும் திருநாமம் இட்டார். இக்குழந்தையே பிற்காலத்தில் சைவ சித்தாந்தத்தை இயற்றிய ‘மெய்கண்ட தேவர்’ ஆவார். இவரது சன்னதி சோம தீர்த்தம் அருகில் உள்ளது.
இத்தலத்து பெருமானின் அருளினால் தான் பட்டினத்தார் அருகில் உள்ள பூம்புகாரில் (காவிரிப்பூம்பட்டினம்) தோன்றினார். அவரது இயற்பெயர் ‘திருவெண்காடர்’ என்பதாகும். அவர் குபேரனின் அம்சமாகக் கருதப்படுபவர். இத்தலத்து இறைவனே அவரை ஆட்கொண்டார் என்பது பட்டினத்தார் வரலாறு.
சம்பந்தர் இத்தலத்திற்கு வந்தபோது ஊரெல்லாம் சிவலிங்கமாகத் தெரிய, காலால் மிதிக்க அஞ்சி நின்றார். இதைக் கண்ட அம்பிகை, பெண் உருவெடுத்து வந்து சம்பந்தரை தமது இடுப்பில் தாங்கி கோயிலுக்குள் அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. அதனால் அம்பிகை ‘இடுக்கி அம்மன்’ என்று அழைக்கப்பட்டாள். அம்மன் பிரகாரத்தின் இடது மூலையில் சம்பந்தரை இடுப்பில் இருத்தியபடி உள்ள இடுக்கி அம்மன் சன்னதி உள்ளது.
தேவேந்திரனும், வெள்ளை யானையும் பூசை செய்து வழிபட்ட தலம்.
திருஞானசம்பந்தர் மூன்று பதிகங்களும், திருநாவுக்கரசர் இரண்டு பதிகங்களும், சுந்தரர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர். மாணிக்கவாசகர் திருவாசகத்திலும் இத்தலம் இடம் பெற்றுள்ளது. சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றள்ள தலம்.
இக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 12 வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 வரையிலும் திறந்திருக்கும்.
5. ஆலங்குடி (குரு)
நவக்கிரக பரிகாரக் கோயில்களுள் இத்தலம் குரு தலமாகும். மூலவரின் கோஷ்டத்தில் உள்ள தட்சிணாமூர்த்தியே இங்கு குரு பகவானாகக் அருள்பாலிக்கின்றார். ஆலகால விஷம் வெளிப்பட்டபோது, பயந்த தேவர்களுக்கு ஞானோபதேசம் செய்த மூர்த்தியாக, குருவாக சிவபெருமான் காட்சியளிக்கின்றார். குருபெயர்ச்சி விசேஷம். இவருக்கு உற்சவங்களும் நடைபெறுகின்றன.
கருமையான நிறமுள்ள ‘பூளை’ என்னும் செடிகள் நிறைந்த வனமாக இருந்ததால் இப்பகுதி ‘இரும்பூளை’ என்று வழங்கப்பட்டது. பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய ஆலகால விஷத்தைக் குடித்து, சிவபெருமான் தேவர்களைக் காத்ததால் இத்தலம் ‘ஆலங்குடி’ என்று அழைக்கப்பட்டதாகக் கூறுவர்.
நீடாமங்கலம் – கும்பகோணம் சாலையில் சுமார் 7 கி.மீ. தொலைவு சென்று வலதுபுறம் செல்லும் சாலையில் சுமார் 1 கி.மீ. தொலைவு சென்றால் கோயிலை அடையலாம். கும்பகோணத்திலிருந்து 18 கி.மீ. தொலைவு.
மூலவர் ‘ஆபத்சகாயேஸ்வரர்’ என்னும் திருநாமத்துடன், சதுர வடிவ ஆவுடையுடன், சிறிய லிங்க மூர்த்தியாகக் காட்சி அளிக்கின்றார். இவர் ‘காசி ஆரண்யேஸ்வரர்’ என்றும் அழைக்கப்படுகின்றார். அம்பாள் ‘ஏலவார்குழலி’ என்னும் திருநாமத்துடன் அருள்புரிகின்றாள். அம்பாள் இத்தலத்தில் தவமிருந்து இறைவனைத் திருமணம் செய்துக் கொண்டதாகத் தலபுராணம் கூறுகிறது.
திருவிடைமருதூர் மகாலிங்கப் பெருமானுக்குரிய பரிவார மூர்த்தியாக இத்தலம் தட்சிணாமூர்த்தி சன்னதியாகவும், திருவலஞ்சுழி விநாயகர் சன்னதியாகவும், சுவாமிமலை சுப்பிரமண்யர் சன்னதியாகவும், திருவாரூர் சோமாஸ்கந்தர் சன்னதியாகவும், திருவாவடுதுறை நந்திதேவர் சன்னதியாகவும், திருச்சேய்ஞலூர் சண்டிகேஸ்வரர் சன்னதியாகவும், சூரியனார் கோயில் நவக்கிரகங்கள் சன்னதியாகவும், சீர்காழி பைரவர் சன்னதியாகவும் வழங்கப்படுகிறது.
வீரபத்திரர், விஸ்வாமித்திரர், முசுகுந்த சக்கரவர்த்தி ஆகியோர் வழிபட்ட தலம்.
இக்கோயிலின் தீர்த்தம் அமிர்த பொய்கை. தல விருட்சம் பூளைச் செடிகள்.
திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார்.
இக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.
6. கஞ்சனூர் (சுக்கிரன்)
நவக்கிரகத் தலங்களுள் சுக்கிரன் தலம் இது. சிவபெருமானின் அருளால் இறந்தவர்களை உயிர் பிழைக்கச் செய்யும் அமிர்த சஞ்சீவி மந்திரத்தைப் பெற்றவர். ஒருசமயம் நவக்கிரகங்களுள் ஒன்றான இவரால் மகாவிஷ்ணுக்கு சுக்கிர தோஷம் உண்டாயிற்று. மகாவிஷ்ணு இத்தலத்திற்கு வந்து சிவபெருமானை வழிபட்டு தோஷம் நீங்கப் பெற்றார். அதனால் இங்கு சுக்கிரன் சன்னதி சிறப்பு. பலர் வந்து பூஜை செய்து பரிகாரம் செய்கின்றனர்.
‘கஞ்சன்’ என்றால் தாமரையில் இருப்பவன் என்று பொருள். அதாவது பிரம்மதேவன் வழிபட்ட தலமாதலால் இத்தலத்திற்கு ‘கஞ்சனூர்’ என்ற பெயர் ஏற்பட்டது.
மாயவரத்திலிருந்து கும்பகோணம் செல்லும் இரயில் பாதையில் உள்ள நரசிங்கன்பேட்டையிலிருந்து 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. சூரியனார் கோயிலில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் கஞ்சனூர் கைகாட்டி பார்த்து சுமார் 2 கி.மீ. தொலைவு செல்ல கோயிலை அடையலாம்.
மூலவர் ‘அக்னீஸ்வரர்’ என்னும் திருநாமத்துடன், சற்று பெரிய வடிவினராக காட்சி தருகின்றார். அம்பிகை ‘கற்பகநாயகி’ என்னும் திருநாமத்துடன் அருள்புரிகின்றாள். அம்பாள் சிறிய வடிவம். சுவாமியும், அம்பாளும் கிழக்கு நோக்கி ஒரே திசையில் காட்சி தருகின்றனர். இருவருக்கும் இடையில் சுப்ரமணியர் சன்னதி உள்ளது. இத்தகைய காட்சி சோமாஸ்கந்த தரிசனம் எனப்படும்.
இக்கோயிலில் உள்ள நந்தி ஒரு பிராமணருக்காக புல் தின்றதாக வரலாறு கூறுகிறது.
பிரகாரத்தில் கல்லால் ஆன நடராஜர், சிவகாமசுந்தரி உள்ளனர். அவருக்கு வலதுபுறம் பராசர முனிவர்க்கு காட்சிய தாண்டவ காட்சியும், இடதுபுறம் ஹரதத்தரின் சிற்பமும் உள்ளன.
ஹரதத்த சிவாச்சாரியார் தீயில் பழுக்கக் காய்ச்சிய பீடத்தின்மீது அமர்ந்து சைவ சமயத்தின் மேன்மையை உலகுக்கு உணர்த்திய தலம்.
63 நாயன்மார்களுள் ஒருவரான மானகஞ்சார நாயனார் முக்தியடைந்த தலம்.
பிரம்மா, அக்னி, கம்சன் ஆகியோர் வழிபட்ட தலம்.
இக்கோயிலின் தீர்த்தமாக அக்னி தீர்த்தம் உள்ளது. இங்கு தல விருட்சம் புரசு மரம்.
திருநாவுக்கரசர் ஒரு பதிகம் பாடியுள்ளார்.
இக்கோயில் காலை 6.30 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.