‘மணி எட்டாகப் போறது இன்னமும் இந்த அஞ்சலையைக் காணோமே. நேற்று சாயந்திரமும் மட்டம் போட்டு விட்டாள்’ என்று எட்டி எட்டிப் பார்த்தேன்.
கடைசியில் ஒன்பது மணிக்கு வந்து எப்போதும் போல ஒரு கதை சொல்ல ஆரம்பித்தாள். ‘அம்மா கார்த்திகா வீட்டில் விருந்தாங்களிகள் வந்திருக்கு (ஒருமை பன்மை, பால், இலக்கணம் எல்லாம் பார்க்கக் கூடாது அவள் பேச்சில்) அதான் நிறைய பர்த்தன் (பாத்திரங்கள்) இருந்தன. அதனால் லேட் (குஜராத்திக்காரர் வீட்டிலும் அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்தவர்கள் வீட்டிலும் வேலை செய்வதால் நடு நடுவில் ஹிந்தி, ஆங்கிலம் எல்லாம் சரளமாக வரும். நாமதான் ஜாக்கிரதையாகப் புரிந்து கொள்ள வேண்டும்). ‘சரி சரி மேலே பேசாமல் பாத்திரங்களை பிசுக்கு போகத் தேய்’ என்று சொல்லி விட்டு நகர்ந்தேன் .
இப்படி நான்கைந்து நாட்கள் ஓடின. திரும்பவும் புதன் கிழமை அவளைக் காணவில்லை. மறு நாள் வந்து ஒரு கதை. குடித்து விட்டு வந்த இவள் கணவன் இவளை அடிக்கவும், ஜுரம் வந்து படுத்து விட்டதாகவும். மறுபடியும் பத்து நாட்கள் கழித்து விடுமுறை. இப்போது ‘வீட்டாலுங்க வந்ததாக’. இவள் கை சுத்தத்திற்காகவும் வேலை செய்யும் நேர்த்திக்காகவும் இதை எல்லாம் பொறுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.
ஆயிற்று. எந்த பிரச்சனையும் இல்லாமல் ஒரு மாதம் ஓடி விட்டது. இப்படி நினைத்த போதே அஞ்சலையைக் காணவில்லை. கையைப் பிசைவதற்கு பதிலாக பாத்திரத்தையாவது தேய்த்திருக்கலாம். வேலையாவது முடிந்திருக்கும். ஆனால் சிறிது நேரத்திலேயே வாசல் மணி அடிக்கப்பட்டது. அஞ்சலையைக் காணும் அவசரத்திலேயும், ஆர்வத்திலேயும் கதவைத் திறந்தால் அழகாக புதிய புடவை உடுத்தி, தலை நிறைய மல்லிகைப் பூ வைத்து ஒரு பெண்மணி நின்றிருந்தாள்.
‘வாங்கோ என்ன வேணும்’ என்று விசாரித்ததேன்.
‘அம்மோவ் நான்தான் அஞ்சலைம்மா’ என்று நாணினாள்.
‘இதென்னடி கோலம்! ஏதாவது விசேஷத்திற்குப் போயிருந்தாயா? சரி புடவையை மாற்றி விட்டு சீக்கிரம் வேலை செய்’ என்று புவனா கூறவும், ‘அம்மா அதன்ன சொல்வாங்க இம் சாரி, நான் இனி வேலைக்கு வர மாட்டேன், வர முடியாது’ என்றாள்.
‘இதென்னடி கூத்து, வேலை செய்யாமல் எப்படி சம்பளம் தருவது?’
‘அம்மா சம்பளம் எல்லாம் பிசாத்து. போன மாச சம்பளம் கூட நீ தர வேணாம். நீயே வெச்சுக்கோ’ என்றாள் அஞ்சலை பதறாமல்.
‘ஏன் ஏதாவது லாட்டரி கீட்டரி அடித்தாயோ’ என எகத்தாளமாக நான் கேட்க ‘அம்மோவ் உனக்கு என்ன ஜோசியம் கீசியம் தெரியுமா! எங்களுக்கு லாட்டரி தான் அடித்துள்ளது. பரிசு மழை கொட்டுகிறது. அதுவும் எவ்ளோ தெரியுமா! பத்து லக்ஷம். சுலுவா (சொளையா) பத்து லக்ஷம்! லக்ஷாதிபதி எப்படிம்மா உன் வீட்டிலே பத்து பாத்திரம் தேக்க முடியும்!’ என்று என் எதிரே பெரிய சவால் வைத்து நாணிக்கோணி நின்றாலும் அவள் நிற்கும் தோரணையில் இப்போதே பணக்காரத்தனம் தெரிந்தது.
உடனே சுதாரித்துக் கொண்டு ‘சரி சந்தோஷம், பணம் பத்திரம். வேணுமானால் இவரை விசாரித்து நல்ல இடத்தில் அதைப் போடு. அல்லது அதை மூலதனமாக வைத்து நல்ல ஒரு தொழில் செய். உனக்கு எதில் ஆர்வம்?’ உனக்கு வீட்டு வேலை தான் தெரியும் ஆகையால் சிலரை வேலைக்கு வைத்துக் கொண்டு அவர்களைத் தேவை பட்டவர்களுக்கு அனுப்பலாமே’ என்று என் கஷ்டத்தை மெதுவே அவள் முன் இடைச்சொருகலாக வைத்தேன்.
‘அது சரிப்படாதும்மா, கோலினியில் இருப்பவர்கள் வேலையாளைப் பற்றிலும், வேலையாட்கள் வீட்டாலைப் பற்றியும் என்னாண்டெ வந்து புகார் பண்ணிக்கினே இருப்பாங்க’ என்று நடப்பைச் சரியாகச் சொன்னாள்.
‘சரி சமையல் செய்து எல்லோருக்கும் கொடு’
‘அது சரியான நேரத்திற்கு செய்து தரணும். பேஜாரு’.
‘சரி பூ வியாபாரம் பண்ணு’ என்றதற்கு ‘அம்மோவ் பூ தொலவுள போய் வங்கியாராணும், கட்டனும், கால் கை எல்லாம் நோவு எடிக்கும், பேஜாரான வேலை’ என்று இப்போதே பணக்காரியாட்டம் பேசினாள்.
அப்போது காலனி கீழே ஒரே சத்தம். எட்டிப் பார்த்தால் காய்கறி முருகன் கீழ் வீட்டு கமலாவுடன் வாக்குவாதம் பண்ணிக் கொண்டிருந்தான். இது தினம் நடக்கும் கூத்துதான். காய்கறி விலையும் அதிகமாகச் சொல்வது, அழுகின காயைக் கொடுப்பது, சரியாக அளப்பது இல்லை என்று முருகன் மேல் குற்றச்சாட்டுகள். உடனே நான் அஞ்சலையிடம் ‘ஏன் நீ காய்கறி வியாபாரம் பண்ணக்கூடாது’ என்றேன்.
‘முருகன் விடமாட்டான்ம்மா’ ‘நான் பார்த்துக்கறேன். எல்லோரிடமும் பேசுகிறேன். எல்லோருக்கும் முருகனிடம் அதிருப்தி இருப்பதால் உடனே ஒத்துக்கொள்வார்கள் என்று நினைக்கிறேன்’ என்றேன். அஞ்சலை ‘சரிம்மா நீ ஏற்பாடு பண்ணிட்டு கூப்பிடு’ என்று எந்த வேலையும் செய்ய மனமில்லாதது போல் நடையைக் கட்டினாள்.
நானும் எல்லோரிடமும் சொல்லி வைத்திருந்ததால் முனியம்மா வந்தாள். அவளுக்கு எல்லாம் சொல்லித்தர அதே மாதிரி செய்ய நாட்கள் பிரச்சனையில்லாமல் செல்ல ஆரம்பித்தது. ஐந்து நாட்கள் கூட ஆயிருக்காது
‘அம்மோவ்’ குரல் கேட்க அட இது ‘அஞ்சலை குரல் ஆயிற்றே, ஓ காய்கறி கொண்டு வந்துள்ளாளோ’ என்று பார்க்க பழைய மாதிரி அஞ்சலி வந்தாள்.
‘அம்மோவ் நான்தான் உன் வீட்டில் வேலை செய்வேன். எப்படி நீ வேறு ஆலை (ஆள்) வைக்கலாம்’ என்று சண்டை போடுவது மாதிரி கேட்டாள். ‘இதென்ன வம்பு, நீ தான் அன்று வர மாட்டேன் என்று சொன்னாய், நானும் உன் நலன் கருதி வேறு ஆளை வைத்துள்ளேன், இப்ப இப்படி சொல்கிறாய், என்ன ஆச்சு உன் மற்ற வேலை, அந்த பத்து லக்ஷம் லாட்டரி பணம்!’ என்று ஆச்சரியத்துடன் வினவினேன்.
‘எத்தனை பணம் வந்தாலும் உன் வீட்டில் வேலை செய்யவும், உன் காப்பியைக் குடிக்கவும் தான் இஷ்டம்’ என்று சொன்னாள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. தலை சுத்தியது. முனியம்மாக்கு வேறு பதில் சொல்லணும். எனவே மறுபடியும் கேட்டேன் ‘என்ன லாட்டரி பணத்தை கோட்டை விட்டுட்டயா?’
‘அதெல்லாம் இப்ப எதுக்கு. தள்ளு எனக்கு வேலை நிறைய இருக்கு. முனியம்மாவை நிறுத்து’ என்று கட்டளை மேல் கட்டளை போட்டு ஸ்வாதீனமாக உள்ளே நுழைந்தாள். எ
னக்கு ஒன்றும் புரியவில்லை. திரும்பவும் கேட்டேன் ‘உண்மை என்ன சொல்’.
மெதுவாக சொன்னாள் ‘அது போன வருஷத்து டிக்கெட்!’
ரொம்ப சுவையான உண்மைக்கதை! எல்லா அடுக்கு வீடுகளிலும் அடிக்கடி இம்மாதிரி ‘ஆப்சென்ட்’ ஆகும் அஞ்சலைகள் இல்லாமலா போவார்கள்? லாட்டரிச் சீட்டு மேட்டர்தான் கொஞ்சம் ஓவர் !
LikeLike