தென்காசி கணேசன் அவர்களின்
நாளாம் நாளாம் திருநாளாம்
புத்தக விமரிசனம்
தென்காசியிலிருந்து ஒரு தஞ்சாவூர்க் கதம்பமாலை புத்தக வடிவில் நம் கைகளில் தவழ்கிறது.
என்றென்றும் நம் அறிவில் மணம் வீசிக் கொண்டிருக்கும் பூக்கள் கொண்ட மாலை இது.
பகவத் கீதையிலிருந்து ஸ்லோகங்களை எடுத்து மனித மனத்தில் எத்தனை உணர்ச்சிகள் உள்ளதோ, அத்தனையையும் பொருத்தமான, கச்சிதமான சிறு தலைப்புக்களாக்கி, 30 அத்தியாயங்களைப் படைத்திருக்கிறார்.
தலைப்புக்கள் சிறிதாக இருந்தாலும் அவை சொல்லும் விஷயங்கள் மிகப் பெரிது, ஆழமானது. எந்தத் தலைமுறைக்கும் ஏற்றது.
பெரியோரின் உரைகள், உபதேசங்கள், குட்டிக் கதைகள், பாடல்கள் என்று தகுந்த இடங்களில் இணைத்து அருமையாக , தெளிவாக, எல்லோருக்கும் படிப்பினையாக, சுவாரசியமானதாகவும் இந்த படைப்பினை வழங்கியிருக்கிறார் நூலாசிரியர் தென்காசி கணேசன்.
கீதை உரைத்த கண்ணன், வால்மீகி, ஆதி சங்கரர்,ஆண்டாள், அபிராமி பட்டர், காஞ்சி மா முனிவர், சிருங்கேரி மகா ஸ்வாமிகள் என்று தெய்வங்களின் அருளுரைகளை மெய்சிலிர்க்கப் படிக்கிறோம்.
திருவள்ளுவர், பாரதியார், கண்ணதாசன், கம்பன் என்று தம் கவிதைகளில் வாழ்வியலை வைத்த பெரு மக்களின் பாடல்களை பொருத்தமான இடத்தில் உணர்கிறோம்.
விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர்,சுவாமி சுத்தானந்தா, மஹாவீரர் போன்ற மகான்களின் உபதேசம், குட்டிக் கதைகள் மனதில் அமர்கின்றன.
இந்தக் கதம்பத்தில் விஞ்ஞானச் செய்திகளும் இருக்கின்றன. மெய்ஞ்ஞான தத்துவங்களும் நிறைந்திருக்கின்றன.
இன்றைய ராணிமேரி கல்லூரி இருக்கும் இடத்தை அன்று கல்விக்காக தானமாகத் தந்தவர் திரு. சுப்பிரமணிய அய்யர் என்பது போன்ற வரலாற்று உண்மைகளும் இந்த தலைமுறைக்கு தெரிய வருகின்றன.
ஓவியர் பிகாசோ, விஞ்ஞானி எடிசன் ,சிவாஜிகணேசன், ஸ்ரீனிவாச சாஸ்திரி, டிவிஎஸ் சுந்தரம் ஐயங்கார், ஏழைக் குடும்பத்தில் பிறந்து மாணவர்களின் மனம் கவர்ந்த, இந்திய நாட்டின் ஜனாதிபதியான, விண்ணியல் விஞ்ஞானி அப்துல் கலாம், போன்ற பிரபலங்கள், அந்த உயரம் தொட வாழ்க்கையில் எவ்வளவு உழைத்திருப்பார்கள் என, அவர்களை வணங்க வைக்கும் உழைப்பின் வலிமை கூறும் செய்திகள் இருக்கின்றன.
துளசிதாசரின் இளமை வாழ்க்கையில் நடந்த பிரமிப்பான சம்பவம், பாண்டிய மன்னனின் படைத் தளபதி தௌஹித் இப்ரஹீம் அவர்களின் நாட்டுப் பற்று, ஜெயகாந்தன், நா.பார்த்தசாரதி போன்ற எழுத்தாளர்களின் எழுத்து வலிமை, மூதறிஞர் ராஜாஜி அவர்களின் சமயோசிதம், டால்ஸ்டாய் சொன்ன பேராசைக் கதை, ஷேக்ஸ்பியரின் கிங் லியர் போன்றவை தொய்வில்லாமல் படிக்க வைக்கின்றன. சிந்திக்க வைக்கின்றன.
கணுக்கள் நிறைந்த கரும்பு போல தடங்கல்கள் இருந்தாலும் வாழ்க்கையின் இனிமையை உணர வேண்டும் என்பது போன்ற உவமைகளும் உள்ளன.
நிம்மதியான வாழ்க்கைக்கு நம் பெருமை வாய்ந்த இதிகாசங்கள், ஐம்பெரும் காப்பியங்கள் மட்டுமா வழி காட்டுகின்றன?
நம் முன்னோர்கள் மற்றும் அறிஞர்களின் சாதனைகளை, போதனைகளை உணர்ந்து நம்மை செம்மைப் படுத்திக் கொள்ளலாம் என்பது நூலாசிரியரின் ஆணித்தரமான வாதம்.
அதற்கு கண்ணன் காட்டும் கீதையின் ஸ்லோகங்களையும், அவற்றின் பொருளையும் விளக்கி, சிறப்பான நூலாகத் தந்திருக்கிறார் தென்காசி கணேசன்.
இளைய தலைமுறை அவசியம் படிக்க வேண்டிய நூல்.