மலையாள சிறுகதை : மூலம் : ஜி.என்.பணிக்கர் தமிழில் : தி.இரா.மீனா

 

மலையாள சிறுகதை :
மூலம், ஆங்கிலம் : ஜி.என்.பணிக்கர்
தமிழில் : தி.இரா.மீனா

முகவரி முழுமையற்று இருந்த போதிலும்……

Ban practice of govt officers bringing kids to work, says Kerala rights  panel - The Week

 

அவள் வேலைக்கு வந்து சேர்ந்த தினத்தன்று ,அலுவலகத்தின் மரப்பலகை நடைபாதையைக் கடந்த போது ஒரு வினோதமான அறிவிப்பு பலகையைப் பார்க்க நேர்ந்தது : முழுமையான முகவரிகளற்ற கடிதங்கள்’ என்று. ஆர்வத்தோடு அவள் அந்த பலகையைப் பார்த்தாள். இல்லை.கடிதங்கள் எதுவும் அங்கில்லை.ஒவ்வொருவருக்கும் தனக்கென சொந்தமான முழு முகவரி இருக்கும்..

அவர்கள் எல்லோரும் உறுதியான முகவரி உடைய மனிதர்கள்!

சமூகத்தில் முக்கியமானவர்கள் என்று அவர் நினைக்கும் மனிதர்கள் பற்றி அப்பா பேசுவதை அவள் அடிக்கடி கேட்டிருக்கிறாள்.ஒருவரின் சமூகத் தகுதியைப் பற்றி பேசும்போது அப்பா எல்லாவற்றையும் மறந்து விடுவார். அவர் பட்டினியாக இருந்தாலும் குடும்பத்தின் கடந்தகால மதிப்பு, பெருமைகளைச் சொற்பொழிவாற்றி சலிக்க வைத்துவிடுவார்.

அவள் தன் வேலை நியமனக் கடிதத்தை அரசு செயலாளரிடம் தந்தாள்.
அவர் கையெழுத்திட்டபடியே சொன்னார்.
“இது ஆறுமாதம் மட்டும்தான்…”

அவள் தலையாட்டினாள்.அவளுக்குத் தெரிந்ததுதான். அது ஓர் ஆறுமாதம் தான் என்றாலும் பெரிய வரம்… தற்கொலையைப் பற்றி ஆறுமாதங்களுக்கு யோசிக்க வேண்டியதில்லை. அவள் வருத்தத்தோடு நினைத்துக் கொண்டாள்.அரசு செயலாளார் சொன்ன விவரங்களை கவனமாகக் கேட்டுக் கொண்டாள்.
“உண்மையாக முயற்சி செய்தால் எல்லாவற்றையும் இரண்டொருநாளில் புரிந்துகொண்டு விடலாம்”

“நான் கவனமாகக் கற்றுக்கொள்கிறேன் சார்..”

அவர் பியூனைக் கூப்பிட்டு பிரிவு அதிகாரியிடம் அழைத்துப் போகச் சொன்னார் அந்த அதிகாரி அதிகம் பேசவில்லை.அவளைக் காலியான இருக்கையில் உட்காரச் சொன்னார்.

“இது உங்கள் இருக்கை.கோப்புகளை முழுவதுமாகப் படியுங்கள்.கவனமாகப் படியுங்கள்.ஏதாவது சந்தேகமிருந்தால் என்னிடம் வாருங்கள். சரியா?”

“நீங்கள் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வருகிறீர்களா?” அருகில் உட்கார்ந்திருந்த இளம்பெண் கேட்டாள்.

“ஆமாம்”.

“உங்கள் பெயர்?”

“சாந்தா..”

”சாந்தா.. ஒரு நிமிடம்..இதை முதலில் முடித்து விடுகிறேன்…”

சில பக்கங்களாக இருந்த கடிதத்தை அவள் படிப்பதைச் சாந்தா பார்த்தாள்.! பெரிய கடிதம்தான்.அவள் பெயர் என்ன?கேட்க அவளுக்கு தைரியமில்லை.

சாந்தாவிற்கு செய்ய எதுவுமில்லை.என்ன செய்ய வேண்டுமென்றும் தெரியவில்லை.அவள் மேஜையில் கோப்புகள் மலையாகக் குவிந்திருந்தன. கோப்புகளில் குறிப்பு எழுதுவது, கடிதங்களை டைப் செய்வது, கோப்புகளை அடுக்குவது, காணாமல் போயிருந்த தாள்களைத் தேடுவது என்று மற்றவர்கள் தங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.கடிதத்தை மிக உற்சாகமாக தன் அருகில் உட்கார்ந்திருந்த பெண் படித்துக் கொண்டிருந்ததை அவளால் உணர முடிந்தது.

“சிசிலி..சிசிலி..” பிரிவு அதிகாரியின் குரல் கேட்டது.

கடிதத்தைப் படித்துக் கொண்டிருந்த அவள், அது தடைப்பட்ட நிலையில் தலையை உயர்த்தி “என்ன சார்…? என்று கேட்டாள். “சிசிலி.. சி-3 கோப்புகள் பற்றி அந்தப் புதிய உதவியாளருக்குச் சொல்லுங்கள்.அந்தப் பிரிவில் முடிக்கப்படாமல் ஏராளமாக வேலை உள்ளது.”

“சரி.சார்..”

சிசிலி மீண்டும் கையிலிருந்த கடிதத்தில் ஆழ்ந்து தன்னை மறந்தாள். வார்த்தைகளுக்கு மணமும், இனிமையும் சில சந்தர்ப்பங்களில் உண்டு என்பது உண்மைதான் சாந்தாவுக்கு பழைய நினைவுகள் வந்தன. மற்றொரு இருக்கையிலிருந்து விமர்சனம் கிளம்பியது.

“ஓ..மேகம், அது இன்று சீக்கிரமாகவே வந்துவிட்டது.!”

அடுத்து இன்னொன்று.

“இல்லை.அது மேகமில்லை. மயில்தான்… மயில் செய்தி .. தபால்காரர் மயிலாக இருக்கலாம்…. காளிதாசனின் நாட்களிலான மேகமில்லை.”

சிசிலி இதையெல்லாம் கேட்டிருக்க வேண்டும்.சக பணியாளர்களின் விமர்சனத்தைப் பொருட்படுத்தாமல் சில நிமிடங்களுக்கு முன்னால் தபாலில் வந்த கடிதத்தைப் படித்துக் கொண்டிருந்தாள்.பதட்டம்,ஒருவித ஈர்ப்பு,வெட்கம், மகிழ்ச்சி என்று அவள் முகத்தில் பாவங்கள் மாறிக் கொண்டிருந்தன.

அது காதல் கடிதமா?அவள் திருமணமானவளா?அவள் கணவனிடமிருந்து வந்த கடிதமா?அவள் கணவன் வெகுதொலைவில்,வெளிநாட்டில் வேலை செய்கிறாரா? இல்லை. அப்படியானால் சிசிலி இந்த மாதிரியான உணர்வுகளை வெளிப்படுத்த மாட்டாள்.திருமணமான பிறகு காதலனிடமிருந்து வரும் கடிதத்தைப் படிக்கிறாளா ?இல்லை.அவளைப் பார்த்தால் திருமணமானவள் போல இல்லை என்ற முடிவுக்கு சாந்தா வந்தாள்.

“தாமஸ், தபால் இலாகா மனிதர்கள் மடையர்கள்.அவர்கள் தங்களுக்கு வரும் கவர்களின் கனத்தைப் பற்றிக் கவலைப்படுவதில்லை….”

“இல்லை,இல்லை.அவர்கள் மிகவும் கவனமானவர்கள்.அதைப் பற்றி உங்களுக்கு என்ன சந்தேகம் பாலன்?”

“பதினைந்து ,இருபது பக்கங்களிலான வழக்கத்தை மீறிய எடையில் கனமான கடிதங்கள் எப்படிச் சரியான முகவரிக்கு வருகின்றன. அபராதம் கூட இல்லையே!”

“பொறாமைப்படாதீர்கள்.பல பக்கங்கள் எழுதுகிற மாதிரி எல்லாருக்கும் கடிதங்கள் வராது.சிலருக்கு,சில ஆண்கள் ,பெண்களுக்கு மட்டும்தான் அப்படி ஓர் அதிர்ஷ்டம்!.”

சிசிலி இந்த வகையான மோசமான விமர்சனங்களைக் கேட்டிருப்பாளா? அல்லது அவளைப் பொறுத்தவரை இது ஒரு சாதாரணக் கடிதம் என்று இவர்கள் பேசுவதை எல்லாம் பெரிதுபடுத்தாமல் இருப்பாளா? ஒன்று மட்டும் நிச்சயம். அவள் தன் கையில் இருந்த கடிதத்தில் மிக ஆழ்ந்து போயிருந்தாள்.

கடிதத்தைப் படித்து முடித்த பிறகு கவனமாக மடித்து அதைத் தன் கைப் பையில் வைத்தாள்.சாந்தாவைப் பார்த்து மலர்ச்சியாகச் சிரித்தாள்.

“சாந்தா.. உங்கள் பெயர் சாந்தா என்றுதானே சொன்னீர்கள்?”

“ஆமாம்…”

“இதற்கு முன்னால் எந்த அலுவலகத்திலாவது வேலை செய்து இருக்கிறீர்களா?’

“இல்லை..இதுதான் என் முதல் வேலை.பல வருஷங்களுக்கு முன்னால் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் என் பெயரைப் பதிவு செய்திருந்தேன்…”

“சரி. நீங்கள் நன்றாக வேலையை கற்று முடிக்கும் போது வேலையை விட்டுப் போகும் சமயமாகிவிடும்…”அவள் அந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு வரும் அந்த நாளை நினைத்துப் பார்க்கத் தயாராக இல்லை.

எத்தனை பேர் திருமணப் பேச்செடுத்து வந்தார்கள்..ஒன்றும் கை கூடவில்லை. பேச்சு வார்த்தை எங்கேயோ நின்று போய்விட்டது. சாந்தாவின் பல தோழிகள், கூடப்படித்தவர்கள்,என்று எல்லாருக்கும் திருமணமாகி விட்டது.இரண்டு, மூன்று குழந்தைகளுக்கும் தாயாகி விட்டனர் !அவர்கள் அவளைப் பார்த்துச் சிரிக்கும்போது நொந்து போவாள். தன் கூடப்படித்தவர்களின் குழந்தைகளுக்கு அவள் ட்யூஷன் எடுக்கிறாள். தனக்குப் பிறக்காத குழந்தைகளைப் பற்றி அவள் நினைத்துப் பார்ப்பாள். இங்கு எல்லாருக்கும் தெளிவான,குறிப்பிட்ட தேவை இருக்கிறது.
ஐம்பது அல்லது அறுபது பவுன்…

ஐம்பதாயிரம் ரூபாய் ரொக்கம்….

மாடியோடு கூடிய வீடு…

“இந்த கோப்பையும் சரிபாருங்கள்.. முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை… குறிப்பு புத்தகத்தையும்,கடிதப் போக்குவரத்து கோப்பையும் சேர்த்துப் பாருங்கள், அவை இரண்டும் இதோடு தொடர்புடையவை..”

சிசிலி மேஜையில் இருந்த கோப்பை எடுத்துத் தர சாந்தா அதைப் பார்க்கத் தொடங்கினாள். தவறான மலையாளத்தில் எழுதப்பட்டிருந்தது.ஆறு குழந்தைகளுக்குத் தாயான ஒரு விதவைப் பெண்ணின் விண்ணப்பம் அது..அவளுடைய மூத்தமகன் மூட்டைதூக்கும் தொழிலாளி.அவனுக்கு இப்போது மன நிலை சரியில்லாததால் காப்பகத்தில் இருக்கிறான். பெண்கள் எல்லோரும் திருமண வயதைக் கடந்தவர்கள்.ஒருத்தி நன்றாகப் படிக்கிறவள்.அவள் படிப்பிற்கு நிதியுதவி கேட்டுத்தான் முதலமைச்சரிடம் விண்ணப்பம் கொடுக்கப் பட்டிருக்கிறது.
இரண்டு வருடங்களுக்கு முன்னால் அது தலைமைச்செயலகம் போனது; ஒரு வாரத்திற்குப் பிறகு தேவையான நடவடிக்கை எடுக்கக்கோரி அது முதலமைச்சர் சம்பந்தப்பட்ட பிரிவுக்கு வந்தது.ஆனால் அந்த முதலமைச்சர் மாறி புதிய முதலமைச்சர் இப்போது. இன்னும் அந்த கோப்பு நூற்றுக்கணக்கான கோப்புகளோடு அங்குதானிருக்கிறது.
அந்த கோப்பின் குறிப்புகளையும்,கடிதங்களையும் படித்த பிறகு சாந்தா பல பிரிவுகளுக்குப் போய் விசாரிக்க வேண்டியிருந்தது. பலதுறை தலைமை அதிகாரிகளிடமிருந்து வந்த கடிதங்கள் அந்த விதவைக்கு உதவ முடியாமல் போன தங்கள் இயலாமையை வெளிப்படுத்தியிருந்தன.சில அதிகாரிகள் அந்த மாதிரியான உதவிக்குச் சட்டத்தில் முன்னுதாரணம் இல்லை, அப்படி ஓர் ஒதுக்கீடுமில்லை எனக் குறிப்பிட்டிருந்தனர்.

இரண்டு வருடங்களுக்கு முன்னால் முதலமைச்சரை நேரில் சந்தித்து மனுக் கொடுத்த விதவைப்பெண் இப்போது உயிரோடு இருப்பாளா என்று சாந்தாவுக்கு சந்தேகம் வந்த்து.

மாலை விடுதிக்கு வந்த பிறகும் அந்த அதிர்ஷ்டமற்ற , பரிதாபத்திற்குரிய விதவைப் பெண்ணின் நினைவு அவளுக்கு வந்தது. மனப் பாதிப்பிற்கு உள்ளான மகன், திருமணமாகாத பெண்கள்…

அவள் அறைத்தோழி வெளியே கிளம்பத் தயாராக இருந்தாள்.அவளுக்கு ஏதோ வேலை இருக்கிறது.

“திருவனந்தபுரத்திற்கு இப்போது இரண்டாம் தடவையாக வந்திருக்கிறேன். முதல் தடவை தேர்வு எழுத வந்தேன்.காட்டன்ஹில் உயர்நிலைப் பள்ளியில்.தேர்வு செய்யப்பட இருபதாயிரம் கொடுக்க வேண்டும் என்று யாரோ சொன்னார்கள்.அவ்வளவு பெரிய தொகையை நான் எப்படிக் கொடுக்க முடியும்? ” என்று அவள் கேள்விக்கு பதில் சொல்லும் வகையில் சாந்தா பேசினாள்

மறுநாள் சாந்தாவை அழைத்துப் போய் ஊர்சுற்றிக் காட்டுவதாகவும்,அது அவளுக்கு உதவியாக இருக்குமென்று அறைத்தோழி சொன்னாள்.

விடுதியின் வாசல் கேட் அருகே அறைத்தோழி யாருக்காகவோ காத்திருப்பதைச் சாந்தா பார்த்தாள்.சில நிமிடங்களுக்குப் பிறகு ஓர் இளைஞன் பைக்கில் வந்து அவளை அழைத்துக் கொண்டு போனான்.

சாந்தாவுக்கு சதீஷின் ஞாபகம் வந்தது.அவன் தன் மனைவியோடு வண்டி யில் கொச்சின் நகர வீதிகளில் சுற்றிக் கொண்டிருப்பான்.இல்லை.நான் அவனிடம் குறை கண்டுபிடிக்கக் கூடாது.விதிகள் போடாமல்,பெரிய அளவு வரதட்சணை வாங்காமல் எந்த இளைஞனும் திருமணம் செய்து கொள்ள மாட்டான்…அவள் தனக்குள் சொல்லிக் கொண்டாள்.அன்புள்ள சதீஷ்.. வாழ்த்துக்கள்.. நீ என்னை மறந்திருப்பாய். குறிப்பாக உன் தேனிலவின் போது.. ஆனால் இந்த சாந்தா உன்னை மறக்க மாட்டாள்.. இல்லை. என்னால் முடியாது….நான் மறக்க மாட்டேன்…”
நகரத்தின் இந்த நெரிசலுக்குள்ளும் சாந்தா தனிமையாக இருப்பதை உணர்ந்தாள். அவள் தனியாக உட்கார்ந்தபோது மனம் அவள் குடும்பத்தை நினைத்து வருந்தியது.அவளுடைய கடிதங்களுக்காகவும் ,மணியார்டருக் காகவும் காத்திருக்கும் அவர்கள்..

அன்று வழக்கம் போலவே கழிந்தது.அவள் அறிவிப்பு பலகையில் இடம் பெற்றிருந்த வாசகங்களைக் கூர்ந்து பார்த்தாள்.”முழுமையான முகவரியற்ற கடிதங்கள் …’அவளை ஆச்சர்யப்பட வைக்கும் விதத்தில் சில கடிதங்கள் அங்கிருந்தன.அவள் அந்த முழுமையற்ற முகவரிகளைப் படித்தாள்.

பாலகோபாலன்..

அந்தோணி டிக்ரூஸ்..

சுரா பீவி..

சாந்தாதேவி..

அந்த நான்காவது கடிதம் அவள் கவனத்தை ஈர்த்தது.நான் வெறும் சாந்தா தான்.சாந்தா தேவியில்லை…இல்லை,இது நானில்லை.தவிர தபாலில் அனுப்புமளவுக்கு எனக்கு யாரிருக்கிறார்கள்?

மாலை ஐந்துமணி வரை அவள் அந்தக் கடித்த்தைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தாள்.அது சதீஷின் கடிதமாக இருக்குமா?.இல்லை,அவன் எழுதினால் கூட சாந்தா என்பதற்குப் பதில் அவன் ஏன் சாந்தா தேவி என்று எழுத வேண்டும்? டுடோரியல் காலேஜில் அவள் கூட வேலை செய்த மனோகரன் எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் தேவி என்று அடை மொழி கொடுத்துப் பேசுவான். ஸ்ரீதேவி அவனைக் கேலிசெய்தாள்.

“மனோகரன் சார் எல்லோரையும் தேவியாக்கிவிடுவார் !நீங்கள் தேவி உபாசகராக இருக்க வேண்டும்..”

“ஆமாம்,உண்மைதான். நான் தேவியை, ஸ்ரீதேவியை உபாசிப்பவன்..”

இந்தக் கடிதம் அவனுடைய அப்பாவி விளையாட்டா?

அலுவலகம் முடிந்து திரும்பும்போது அறிவிப்பு பலகையில் அந்தக் கடிதம் இருந்தால் அதை எடுத்துக் கொண்டுபோவது என்று அவள் முடிவு செய்தாள்.

“அந்த ஏழை விதவைக்காக நாம் ஏன் ஆயிரம் அல்லது ஆயிரத்து ஐந்நூறு ரூபாய் முதலமைச்சர் நிதியிலிருந்து பரிந்துரை செய்யக்கூடாது?”அவள் சிசிலியிடம் கேட்டாள்.

“உண்மைதான். செய்யலாம். நானும் அந்தக் கோப்பை ஒரு முறை பார்த்து இருக்கிறேன்.நீங்கள் அதைக் குறிப்பாக எழுதி அனுப்புங்கள்….ஆனால்..”

“ஏன்?…ஆனால்.. ?”

“சில கேள்விகள் கேட்டு அது திரும்பவும் வரலாம்.இரண்டு வருடங்ளுக்கு முன்னால் அந்த விண்ணப்பதைக் கொடுத்த விதவைப் பெண் இன்னும் உயிரோடு இருக்கிறாளா?அவளுக்கு இப்போதும் அந்த நிதி தேவைப்படுமா? முன்னாள் முதலமைச்சரிடம் கொடுத்த மனுவை புது முதல்வர் ஏற்பாரா..? இந்த விண்ணப்பம் முன்மாதிரியாகிவிடாதா? முதலமைச்சர் எல்லா விதவைகளுக்கும், எல்லா மனுக்களுக்கும் நிதியுதவி செய்ய முடியுமா? இம்மாதியான மோசமான முன்மாதிரியை வழங்கலாமா? இந்த மாதிரிக் கேள்விகள் வரலாம்! நீங்கள் எல்லாவற்றிற்கும் பதில் சொல்ல வேண்டும்!”.

சாந்தாவுக்கு அதிர்ச்சியாகிவிட்டது .திடுக்கிட்டும் போனாள்.

அரசின் செயல்பாடுகள் நத்தை வேகத்தில் ஊர்வது மனிதாபிமானமற்ற நிலை என்று சாந்தா நினைத்தாள்.உண்மைதான்,அவளுடைய அரசு வேலை இப்போதுதான் தொடங்கியிருக்கிறது.அரசின் உணர்வற்ற நிலைகள் பற்றி நான் நிறையக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும் என்று சோகமாக நினைத்தாள்.
அலுவலக நேரம் முடிந்த பிறகு ,ஒரு வழியாகத் தனியாகக் கிளம்பினாள் மரப்பலகை நடைபாதையை நோக்கி..

சாந்தா தேவியின் கடிதத்தை அறிவிப்பு பலகையிலிருந்து எடுத்த போது அவளுக்கு ஒரு குற்றவுணர்ச்சி ஏற்பட்டது. வேறு யாருக்கோ வந்த கடிதத்தைத் திருடுவது சரியா?அந்தக் கடிதம் தன் பெயரில் இருக்கிறது என்று தன் செயலை நியாயப்படுத்திக் கொண்டாள். சுராதேவிக்கும், பாலகோபாலனுக்கும் வந்த முழு முகவரியில்லாத கடிதங்கள் இப்போது அறிவிப்புப் பலகையில் இல்லை. அவள் சாந்தாதேவி கடிதத்தை எடுத்து விட்ட பிறகு இன்னும் ஒரு கடிதம் பலகையில் இருந்தது;அது அந்தோணி டிக்ரூஸ் கடிதம். அவர் ஆண், தனியாக இருப்பதில் தப்பில்லை என்று வேடிக்கையாகச் சொல்லிக் கொண்டாள். அந்தோணி டிக்ரூஸ் அங்கு தனியாக இருப்பதால் கவலைப்படமாட்டார். சாந்தா தனக்குள் சிரித்துக் கொண்டாள்…

அறைத்தோழி தன் ஆண் சிநேகிதனுடன் வெளியே போன பிறகுதான் அவள் அந்தக் கடிதத்தை வெளியே எடுத்தாள்.ஒரு கணம் தயங்கினாள். இல்லை,நான் இதைப் பிரிக்கக் கூடாது.வேறு யாருக்கோவான கடிதம் என்னும் போது அதை நான் அறிவிப்புப் பலகையில் வைப்பது தானே சரி? அவள் கடிதத்தின் மேலுறையைச் சிறிது தண்ணீரில் ஊறவைத்தாள்.சில நிமிடங்கள் கழிந்ததும் எந்தத் தொல்லையுமில்லாமல் கடிதத்தைப் பிரிக்க முடிந்தது….
ஜன்னல் வழியாக சென்ட்ரல் ஸ்டேடியம் தெரிந்தது. பெண்கள் ஓட்டப் பயிற்சி செய்து கொண்டிருந்தனர்.பயிற்சியை முடித்துக் கொண்டு புறப்படத் தயாராயினர்.

அவள் மீண்டும் அந்தக் கடிதம் பற்றி யோசித்தாள்.,உண்மைதான்,கடிதம் எழுதுவதும்,பெறுவதும் சந்தோஷமான விஷயங்கள்.சிசிலி தினம் தபாலில் தனக்கு வரும் கடிதங்களைப் படித்து எவ்வளவு பரவசமாகிறாள்.அவள் கண்கள் மின்னும்.இரவில் அறையில் தனியாக வருந்தும் போது பாதிக்கும் எல்லாக் கவலைகளையும் எழுதுவது.. விரக்தியான மனதின் கவலைகளைக் கொட்டிவிட்ட பிறகு சுமை நீங்கி மனது அடையும் அமைதி…. இல்லை, அவளுக்கு அப்படி ஓர் அதிர்ஷ்டமில்லை.அவள் சதீஷைக் காதலித்த போது கடிதங்கள் எழுதுவதும், பெறுவதுமான ஒரு நம்பிக்கை வைத்திருந்தாள். இப்போது அந்த துறைமுக அதிகாரி என்னைப்பற்றி நினைத்துக் கூடப் பார்க்க மாட்டார்.அதுவும் அழகான மனைவி கிடைத்துவிட்ட பிறகு.. சோகமாக இருந்தது அவளுக்கு.

கடிதத்தை தொல்லையின்றிப் பிரித்த பிறகு அவளுக்குள் ஒரு விதத் துடிப்பு ஏற்பட்டது.கடவுளே என்று சொல்லிக் கொண்டாள்.

கடிதத்தைப் பார்த்தபிறகு அவளுக்குத்தோன்றிய முதல் எண்ணம்;அழகான கையெழுத்து.

“அன்புள்ள சாந்தாதேவி,
நான் இப்படிக் கூப்பிடுவதால் கோபப் படவேண்டாம். இப்படிக் கூப்பிடுவதற்கு ஒரு வழிப்போக்கனுக்கு உரிமையில்லை என்பது எனக்குத் தெரியும். ஆனாலும் வேறு வழியில்லை.தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்….
(அருமையான கடிதங்கள். ஒருவனுடைய கையெழுத்தாலே அவனுடைய குணங்களைத் தெரிந்து கொள்ளமுடியுமென்பார்கள்.இது எழுத்தழகியலா? இல்லை, இது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.கடிதம் எழுதியவர் நன்கு படித்தவர் என்று கடிதத்தைப் பிரித்தபிறகு தெரிகிறது..அவர் யார்? இளமை யானவரா?அழகாயிருப்பாரா?அவருடைய முகவரி கடிதத்தின் தொடக்கத்தில் கொடுக்கப்படவில்லை.கடைசியில் எழுதியிருப்பாரோ? இல்லை.”தேவியை ரசிக்கும் ஒருவர்’—அதிலிருந்து எதுவும் புரிந்துகொள்ள முடியவில்லை… அவள் கடிதத்தைத் தொடர்ந்து படிக்க ஆரம்பித்தாள்.)

“கடிதத்தைப் படிக்கத் தொடங்கியவுடனே நான் முட்டாள் என்று முடிவு செய்து விடவேண்டாம்.! நான் இந்த வரிகளை எழுதுவதற்கு முன்னால் சில நாட்கள் கவனமாகவும்,ஆழமாகவும் யோசித்தேன். எனக்கு உங்கள் முழு முகவரி தெரியாது.பெயர் மட்டும் எப்படித் தெரிய வந்தது என்று நீங்கள் கேட்கலாம். நீங்கள் உங்கள் சினேகிதியோடு போனபோது பின் தொடர்ந்தேன் சினேகிதி இந்தப் பெயர் சொல்லி உங்களை அழைப்பதைக் கேட்டேன்.இரண்டொரு வார்த்தைகள் பேச உங்களைத் தனியாகச் சந்திக்கப் பெரிதும் விரும்பினேன்.. துரதிர்ஷ்டவசமாக நீங்கள் எப்போதும் உங்கள் சினேகிதியோடுதான் இருக்கிறீர்கள்.

(இது எனக்கு வந்த கடிதமா ? சாந்தா சந்தேகப்பட்டாள். அப்படியும் இருக் கலாம் என்பதை ஒதுக்கி விடமுடியாது. அந்த எண்ணம் அவளை மகிழ்ச்சிப்படுத்தியது.)

“உங்களுடைய தேர்ந்தெடுத்த ஆடைகள், ராஜ பரம்பரைக்குரிய நடை, உங்கள் நளினம், மென்மையான பேச்சு ,,இத்யாதி..இத்யாதி உங்களைப் பெரிய கூட்டத்திலும் தனியொருவராக அடையாளம் காட்டிவிடும். பாளையம் ஜங்ஷனிலும், பி.எம்.ஜி.ஜங்ஷனிலும் சாலையைக் கடக்க நீங்கள் காத்திருந்தபோது நான் பயத்தோடு உங்கள் அருகில் வந்தேன்.மிக அருகில் உங்களைப் பார்த்ததும், உங்கள் இனிய குரலைக் கேட்டதும்.. எனக்கு மகிழ்ச்சியளித்தது.
“என்னை ரோட்சைட் ரோமியோவாக நினைத்து விட வேண்டாம்.முதலில் நான் அந்த வயதுடையவனில்லை.இந்தியா காஃ பி ஹவுசுக்கு அடிக்கடி வருகிற கல்லூரி மாணவன் அல்லது ஆண் சிநேகிதன், அல்லது ஒரு ஹிப்பி என்று எந்த வகையறாவைச் சேர்ந்தவனுமில்லை.என்னைப் பொறுத்தவரை இது உணர்ச்சி வசப்படும் செயலுமில்லை.
“அநேகமாய் என் இளம் வயதில் நான் படித்த பல கதைகளின் விளைவாக இது இருக்க வேண்டும். ஒரு இளம் பெண் அல்லது பெண்மணி என்று யாராவது என்னை முழுவதுமாகப் புரிந்து கொண்டவர்கள் வருவார்கள் .நண்பர்களாவார்கள் என்ற எதிர்பார்ப்பு எப்போதும் என்னிடமுண்டு.அது என் அறிவு மலர்ச்சியாக இருக்கலாம்… சாந்தா, தயவு செய்து யோசியுங்கள். இந்த மாதிரியான எண்ணப் பிடிப்பு நம் எல்லோருக்கும் எல்லாக் காலத்திலும் இருந்திருக்கிறதல்லவா?இப்படி ஒரு பிடிப்பு இல்லாவிட்டால் வாழ்க்கை சலித்துவிடும் தானே?
“மன்னித்து விடுங்கள்.இது எனக்கு அடிக்கடி நிகழ்கிறது.வித்தியாசமான போக்கில் நான் சிந்தித்துக் கொண்டே போகலாம்…..

“இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ளும்போது சடங்குகள் செய்பவரின் பொய்ச் செயல்களைப் பார்த்து எனக்கு சிரிக்கத் தோன்றும்; திருமணத்தில் புதுமணத் தம்பதிகளை மற்றவர்கள் ஆசீர்வதிக்கும் போது அவர்களுக்கு என்ன வகையான எதிர்காலம் காத்திருக்குமோ என்று என் மனம் துக்கப் படும்.—இவையெல்லாம் ஒரு பைத்தியக்கார மனிதனின் குறியீடுகள் என்றால் நான் அந்த வகைதான்… நான் பைத்தியகாரன்தான்.

(இது வெறும் காதல் கடிதமல்ல; பைத்தியக்காரத்தனமானது,குப்பை என்று ஒதுக்கி விடமுடியாது என்று சாந்தா நினைத்தாள்.)

“அண்மையில் என் நண்பனின் மகன் திருமணத்திற்குப் போனேன்.நாங்கள் இருவரும் இருபது ,இருபத்தி ஐந்து வருட நண்பர்கள். திருமணம் சர்ச்சில்.. சாந்தா..அந்த வைபவத்தின் போது நான் கேட்ட வசனங்களைச் சொல்லட்டுமா?
“உங்கள் வீட்டில் நீங்கள் வாழும் வாழ்க்கை திராட்சைகள் நிறைந்த தேவதாரு தோட்டம் , உங்கள் குழந்தைகள் ஆலீவ் கன்று போன்றவர்கள்…

“உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் நான் “முட்டாள்தனம் ’என்று கத்திவிடக் கூடிய நிலையில் இருந்தேன்.
“நீங்கள் செய்யும் எதுவும் மற்றவர்களுக்கு அர்த்தமற்றதாகத் தெரியும். உங்களுக்கு அங்கீகாரம் கிடைக்காது..நீங்கள் மற்றவர்களுக்குச் செய்யும் உதவி நன்றி உணர்வாகிவிடும்…உங்கள் குழந்தைகளும் சேர்த்துத்தான் சில சமயங்களில் நன்றியுணர்வு உங்களுக்குக் கிடைக்கும் லாப ஈவாகலாம். அப்படித் தான் ஒரு புகழ் பெற்றஎழுத்தாளர் சொல்லியிருக்கிறார்…அது லாரன்ஸா ? மாயுகமா? நாம் நம் பெற்றோர்களுக்கு உண்மையாக இருக்கிறோமா? நம் குழந்தைகள் நம்மிடம் உண்மையாக இருப்பார்களா? உண்மை இதுதான்; மனிதர்கள் சபிக்கப்பட்டவர்கள்; குறிப்பாக ஆண்கள்… தங்கள் குடும்பங்களுக்குள்ளேயே வெளியாட்கள் போலத் தனியாக விடப்பட்ட விதியுடையவர்கள்.!

“எது உண்மைத்தன்மை?அது சிலசமயம் மட்டும் தங்கும் ஓர் உணர்ச்சி அல்லவா?”

“ஆண்-பெண் உறவுநிலையின் தளமென்ன? புணரின்பம் என்பது கூட குறுகிய நேரம்தான். அது சிலிர்ப்பூட்டுவதுதான். எல்லாவற்றையும் மறந்து இருவர் இணையும் போது அவர்கள் ஒருவரை ஒருவர் உணர்கின்றனர்.அது வெறும் ஓர் உணர்ச்சி.. நிலையில்லாத ,கணத்தில் மறைகிற இயல்புடைய உணர்வு. அதன் பிறகு இருவரும் இரண்டு வித்தியாசமான மனிதர்கள்தான், அவரவர் வழியைப் பார்த்தும் கொள்ளும் இரண்டு பெரிய “நான்”கள்… ஒருவருக்கொருவர் பரஸ்பர வெறுப்பு கொண்டவர்கள்.

“இல்லை..இந்த கடிதத்தை மேலும் நீட்டிக்க நான் விரும்பவில்லை. நான் உங்களிடம் சொல்ல வேண்டியது …”
“என் முழுமுகவரியை இந்தக் கடிதத்தில் நான் குறிப்பிடாததால் நீங்கள் ஒன்று செய்யலாம். நீங்கள் என்னிடம் பேச விரும்பினால் என்னைச் சந்திக்கும் வழியைச் சொல்கிறேன். திங்கள், அல்லது புதன் அல்லது வெள்ளி.. செக்ரடேரியட்டிலிருந்து உங்கள் விடுதிக்குச் செல்லும் போது பேக்கரி ஜங்ஷனில் சில கணங்கள் நின்று யாரையோ தேடுவது போலச் சுற்றிவரப் பாருங்கள். சில கணங்களுக்குள், அரை நிமிடத்திற்குள் நான் அங்கிருப்பேன்.

திங்கள்,அல்லது புதன் அல்லது வெள்ளி ஆகிய நாட்களில் மாலை 5.30 –5.45 க்குள்.. “

சாந்தா அன்று செவ்வாய்க்கிழமை என்பதை உணர்ந்தாள்.எப்போது அவர் இந்தக் கடிதத்தை எழுதினார்?நான்கு நாட்களுக்கு முன்பு போஸ்ட் செய்திருக்க வேண்டும்.அதுவும் இந்த நகரத்திலிருந்துதான் போஸ்ட் செய்திருக்க வேண்டும். சாஸ்தமங்கலத்திலிருந்து போஸ்ட் செய்யப்பட்டு இருக்குமா? இல்லை,தபால் அலுவலக முத்திரை தெளிவாக இல்லை.ஒரு விஷயம் மட்டும் உறுதி.அவள் பாளையம் அல்லது பி.எம்.ஜி . ஜங்ஷன் பகுதிக்குப் போனதேயில்லை .அதனால் இந்தக் கடிதம் எனக்கானதல்ல என்று நினைத்தாள்.

அவளுக்கு குற்றவுணர்ச்சி ஏற்பட்டது; நான் இந்தக் கடிதத்தை படித்திருக்கக் கூடாது…அதை திரும்ப ஒட்டி மீண்டும் அந்த அறிவிப்பு பலகையில் அடுத்த நாள் வைத்து விடவேண்டும் என்று நினைத்தாள். இன்னொருவரின் கடிதத்தை நான் எடுத்தது தவறு…அது வேறு யாருக்கோ உரியது..வெட்கமின்றி, அதைப் பிரித்துப் ,படித்துப் பார்த்தது தவறு.
அறைத் தோழி ஜெயலட்சுமி வர இன்னும் நேரமிருக்கிறது.அவளும் ,ஆண் சிநேகிதனும் முடிவேயிலாத சிறு பேச்சில் ஆழ்ந்திருப்பார்கள்…அவன் வராத நாட்களில் அவள் இப்படிச் சொல்வாள்:

எஸ்.ஆர். இன்று வரமாட்டார். டூர் போயிருக்கிறார்.”

அவள் அப்போது எவ்வளவு மனம் தளர்ந்திருப்பாள். காத்திருப்பதிலான வேதனை..
நான் இன்னொரு தடவை அந்தக் கடிதத்தைப் படிக்கிறேன்.சாந்தா நினைத்தாள்.

அப்போதுதான் கீழேயிருந்த கே.பி.. என்ற இரண்டு எழுத்துக்களைப் பார்த்தாள். கே. பிரபாகரன் என்றிருக்குமா அல்லது கொச்சு பத்மநாபன்? அல்லது கே.பவுலோஸ்..?

அதை இன்னொரு முறை படித்துவிட்டு கவனமாகக் கடிதத்தை ஒட்டினாள்.

அடுத்தநாள் யாரும் அருகில் இல்லை என்று ஊர்ஜிதம் செய்து கொண்டு அந்தக் கடிதத்தை அறிவிப்புப் பலகையில் வைத்துவிட்டாள்.அது தனியாக இருந்த “அந்தோணி டிகுரூஸ் கடிதத்தோடு சேர்ந்து கொண்டது. திரும்பவும் அவருக்கு சாந்தாதேவியின் இனிய துணை கிடைத்து விட்டது.

சாந்தா தனக்குள் சிரித்துக் கொண்டாள்.என்றாலும் மனம் லேசாக வலித்தது..

கான்டீனுக்குப் போய் தேநீர் குடித்து விட்டுத் திரும்பியபோது அவள் அறிவிப்பு பலகையைப் பார்த்தாள். சாந்தா தேவியின் கவர் இன்னும் அங்கேயிருந்தது.

“உங்களுக்கென்ன ஆயிற்று? ஒரு மாதிரியாக இருக்கிறீர்களே?” சிசிலி இரண்டு மூன்று தடவை கேட்டாள்.
நீண்ட நேரச் சிந்தனைக்குப் பிறகு அந்தக் கடிதத்தை எடுத்து தன்னோடு வைத்துக் கொள்வதென்று சாந்தா முடிவு செய்தாள்.ஞாபகார்த்தமாக முகம் தெரியாத நடுத்தர வயது மனிதன்.. கே.பி…தனிமைச் சிறையாளி ….மிகவும் கொடுமையானது..

“சி-3 பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? தன்னை அணுகும் எவருக்கும் அரசாங்கம் கொடை கொடுக்க வேண்டுமா?” என்று பிரிவு அதிகாரி கேட்டார்.

அவர் என்ன சொல்கிறார் என்று சாந்தாவுக்குப் புரியவில்லை.

அவர் பேசுவதைப் புரிந்து கொண்ட சிசிலி ”சார்.. தயவுசெய்து எதுவும் எழுதி எங்கள் முயற்சியை வீணாக்கி விட வேண்டாம்..கோப்பை அமைச்சருக்கு அனுப்பி வைப்போம்…இது அந்த ஏழை விதவையின் மனு..” என்று பதில் சொன்னாள்.

முன்னாள் முதல்வரிடம் இரண்டு வருடங்களுக்கு முன்பு தன் வேண்டுதலை வைத்த விதவைப் பெண் என்று நினைத்து சாந்தா தனக்குள் சிரித்துக் கொண் டாள்.

“தேவையற்ற ,தவிர்க்கக் கூடியதான அரசின் செலவிற்கு நாம் காரணமாக இருந்தோம் என்று அரசு நம்மைக் கண்டனம் செய்யக் கூடாது..”

பிரிவு அதிகாரி அந்தக் கோப்பில் எதையோ எழுதி விட்டு பியூன் மூலம் செயலாளருக்கு அனுப்பினார்.
அன்று மாலை அலுவலகம் முடிந்து சாந்தா வெளியே வந்த போது இரண்டு கடிதங்களும் அங்கில்லாததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தாள். சாந்தா தேவி மற்றும் அந்தோணி டிகுரூஸ் இரண்டு பேரும் சேர்ந்து போய் விட்டிருந்தனர்.! கைவிடப்பட்ட அறிவிப்புப் பலகை. அந்த காலியான அறிவிப்புப் பலகை கைவிடப்பட்ட பசும்புல் நிலம்.. அல்லது பூங்கா..ஏக்கமும் ,காத்திருப்பும் நிறைந்த சாஸ்வத அடையாளம் என்று பலவற்றை எனக்கு ஞாபகமூட்டியது.
சாந்தா தன்னையே கடிந்து கொண்டாள்… முட்டாள்…. நீ அந்தக் கடிதத்தை மீண்டும் அறிவிப்புப் பலகையில் வைத்திருக்கக் கூடாது… இல்லை.. நீ திரும்பவும் வைத்திருக்கக் கூடாது..முட்டாள்!”..

திடீரென இன்று வெள்ளிக் கிழமை என்பது அவளுக்கு ஞாபகம் வந்தது… திங்கள்….புதன்…வெள்ளி…

பேக்கரி ஜங்ஷன். மாலை 5.30 –5.45 மணிக்கு இடையே.

நான் மிகத் தாமதமோ, என்று தனக்குள் கேட்டுக் கொண்டாள் வருத்தமாக..அவள் டவரின் கடிகாரத்தைப் பார்த்தாள். ஐந்து மணிதான் ஆகியிருந்தது. நேரம் நிறைய இருக்கிறது. நம்பிக்கையும்தான்..

அந்த முகம் தெரியாத மனிதனைப் பார்த்துத் தான் செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டுவிட வேண்டும் என்று சாந்தா முடிவு செய்தாள். வித்தியாசமான கடிதம் எழுதிய விசித்திரமான மனிதனைச் சந்திக்கப் போகிறோம் என்ற எண்ணம் அவளுக்கு சந்தோஷம் தந்தது. அந்த சாகசமான செயல் தரப்போகும் சிலிர்ப்பை நினைத்து மகிழ்ந்தாள்.

“ஜெயா.. பேக்கரி ஜங்ஷன் எங்கேயிருக்கிறது..?”தன்னோடு சாலையில் நடந்து வந்து கொண்டிருந்த தோழியிடம் கேட்டாள்.

“ஏன் ? எதற்காக ..?”

“என் உறவினர் ஒருவர் அங்கிருக்கிறார்… பேக்கரி ஜங்ஷன் அருகில்..”
“வீட்டின் பெயர் என்ன… ? வீட்டு எண் என்ன….?”

“எனக்குப் பெயர் மறந்து விட்டது…ஏதோ ’மந்திரம்” என்று..பார்த்தால் ஞாபகம் வந்து விடும்..”

“அந்த வழியாகப் போக வேண்டும். சில நூறு மீட்டர்கள்..பிறகு வலது புறம் திரும்பிப் போக வேண்டும்… ஐந்து நிமிடத்தில் நீங்கள் பேக்கரி ஜங்ஷன் போய்விடலாம்…”

ஜெயலட்சுமி தன் சிநேகிதனைப் பார்க்கத் தயாரவதற்கு விடுதிக்கு விரைந்தாள்.

சாந்தா தனியாக ,சீரான அடிகள் வைத்து நடந்தாள். விசனம் என்னும் பூவின் மணம் அவள் தனிமை நெஞ்சில் மலரத் தொடங்கியது.
————————————————-
மலையாள எழுத்தாளரான ஜி.என்.பணிக்கர் சிறுகதை, நாவல், கவிதை, விமரிசனம் என்ற பன்முகம் கொண்டவர் .கேரள அரசின் சாகித்ய அகாதெமி விருது பெற்றவர். கறிவேப்பிலை,,ஒரு திவசம் ஒரு யுகம்,மனசே நீ சாக்ஸி , நம்மோடேயும் அவரோடேயும் ,குன்னுகளில் மழ விழும்போல், தஸ்தாவெஸ்கியின் ஜீவசரித்ரம் ஆகியவை மிகச் சிறந்த படைப்புகளில் சிலவாகும். இக்கதை Indian Literature Sahithya Academy -Bi –Monthly Journal May—June 2014 இதழில் இருந்து எடுக்கப்பட்டது. Though The Address is Incomplete… என்பது ஆங்கிலத் தலைப்பாகும்.
——————–

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.